இணைய இதழ்இணைய இதழ் 93சிறுகதைகள்

பாத்திரங்கள் – கா.ரபீக் ராஜா

சிறுகதை | வாசகசாலை

பேருந்து நிலையத்தின் அன்றைய நாள் முடிவில் நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. சுகந்தி நன்கு கால் நீட்டிக்கொண்டு போயிலை மென்று கொண்டிருந்தாள். அவளை பாபு சற்று கிண்டல் தொனியில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை குறித்த முழு சந்தேகம் சுகந்தி அறிவாள். ஆகவேதான் அலட்சியத்திற்கு உண்டான அத்தனை அசைவுகளும் அவளிடத்தில் தென்பட்டது. போயிலை கூட்டி வைத்த எச்சிலை துப்பும் போது அது பஸ்ஸ்டாண்டு தாண்டி எம்ஜிஆர் சிலைக்கு அப்பால் விழ வேண்டும் போல இருந்தது. ஆனால், அது பாபுவின் காலுக்கு அருகில் கிடந்த காலி சிகரெட் பாக்கெட்டில் பட்டு அவன் காலிலும் பட்டு தெறித்தது. அவன் கவனித்து துடைத்து விட்டான். அவளுக்கு அது பழிவாங்கிய நிறைவைக் கொடுத்தது.

சுகந்தியின் பதிலுக்குதான் பாபு இத்தனையும் பொறுத்துக் கொண்டிருந்தான். என்றாலும் அவள் குறித்த ஒரு கண்ணோட்டம் அவனுக்கு ஒருவித சிரிப்பைக் கொடுத்தது. அதுதான் சுகந்தியின் எரிச்சலுக்கும் காரணம். உதவியை நாடி வந்தவன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தாள். ஆனால், பாபு உதடு சிரிப்புக்கு திறந்து விட்டாற்போல் விரிந்தே கிடந்தது.

“இங்க பாரு, கேக்குறத கேட்டுட்டேன். இனி நீதான் சொல்லணும்!” என்றான் பாபு.

“என்ன சொல்ல சொல்ற? எப்பிடி பாத்தாலும் ஒம்மேல் எனக்கு நம்பிக்கையே வர மாட்டுதே? இன்னிக்கு கெஞ்சிட்டு கிடக்கிற, நாளைக்கு காரியம் முடிச்சு என்னய ஏமாத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்?” என்ற சுகந்தியின் பேச்சில் அப்படி ஒரு அழுத்தம்.

“இங்க பாரு, நிலம முன்ன மாதிரி இல்ல. எவனும் யாரையும் நம்புறது இல்ல. காசு எடுக்க ஆயிரம் தடவை யோசிக்கிறான். இது எனக்கு மட்டுமில்ல. உன்னோட நன்மைக்கும் சேத்துதான் சொல்றேன். சரின்னு நினைச்சா சொல்லு. நிரந்தரமாவா கேக்குறேன், பஞ்சத்துக்கு கொஞ்ச நாள். வேணாம்ன்னா சொல்லு, நான் வேற ஆள் பாக்குறேன்!” அவனது ஊன்றுகோலை எடுத்து எழ முயற்சி செய்தான்.

சுகந்திக்கும் இதில் உடன்பாடுதான். என்றாலும் இதற்கு உடனே சம்மதம் சொன்னால் தான் இன்னும் கீழ்படிந்தது போல ஆகிவிடும். கூடவே தன் மீது அதிகாரத்தை செலுத்துவான் என யோசித்தாள். இப்போது சொல்லப்போகும் சம்மதம் அவனுக்கு மெல்லிய எச்சரிக்கை சமிக்ஞை போல இருக்க வேண்டும். அதுவே தனக்குரிய பாதுகாப்பு என நினைத்தாள். இருவருக்கும் ஏற்கனவே மோசமான அறிமுகம் இருக்கிறது.

அதுதான் முதலும் கடைசியுமான அந்த சம்பவம். முற்றிலும் கசப்பான சந்திப்பில் முடிந்துவிட்டது. அது நாகூர் சந்தனக்கூடு திருவிழா. சுகந்தி, பாபு இருவரும் தனித்தனியாக யாசகத்தில் இருந்தார்கள். கார் நிற்கும் இடத்தில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைந்தது தவறில்லை. ஒரே காரின் இரு ஜன்னல் வழியே ஒரே நேரத்தில் யாசகம் கேட்டதுதான் தவறு. உள்ளே இருந்தவர் பிச்சை போடும் நோக்கில் இருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் வந்ததும் பர்ஸில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து பாபுவிடம் கொடுத்தார். “ரெண்டு பேரும் எடுத்துக்கங்க!” சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவள் அப்போதுதான் பாபுவை பார்த்தாள். மெல்லிய தேகம். கையில் கம்பு இல்லாவிட்டாலும் நடக்கும் திராணி இருந்தது என்றாலும் கம்புடன் பழகிவிட்டது இவனுக்கு. பாபு இவளைப் பார்த்தான். சேலை கட்ட தெரியாதவளால் கூட இந்தளவுக்கு மோசமாக சேலை அணிய முடியாது. அவசரத்தில் அள்ளி முடித்தாற் போல ஒரு முறையற்ற சேலை கட்டு அவனுக்கு எரிச்சலை கொடுத்தது. பட்டென்று கேட்டுவிட்டான், “ஒரு சேலை கட்டத் தெரியல. வந்துடாளுங்க பிச்சை எடுக்க!” எடுத்த எடுப்பில் இப்படி வந்து விழுந்த வார்த்தையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளும் பதிலுக்குத் தயாராக இருந்தாள். “எப்பா, மைசூர் மகாராஜா, தேவையில்லாம பேசாத. குடுத்த காச பிரிச்சு குடு. எனக்கு வேல கெடக்கு. வந்துட்டாரு சேலைய பத்தி பேச!” என்ற அவளின் குரலை அவன் காதில் வாங்குவதாய் தெரியவில்லை.

“இந்தா!” என்று நீட்டினான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்ன பத்து ரூவாய நீட்ற? அம்பதுல பாதி இருவத்தி அஞ்சுன்னு தெரியாதா?” என சீறினாள்.

“நல்லா தெரியும். ஆனா, காசை அவர் யார்கிட்ட குடுத்தாரு? பிரிச்சுக்க சொன்னாரே தவற சரிசமமா பிரிச்சுக்க சொல்லல!” என்று கம்பை ஒருவாகாக ஊன்றி அவள் பக்கம் திரும்பினான்.

அவளுக்கு அழுகையாக வந்தது. என்றாலும் அழவில்லை. இப்போது அழுதால் அது தோல்வியை ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும் என ஆவேசமாக அவன் அருகில் சென்றாள். வேகமாகச் செயல்பட்டு அவன் அருகே சென்றவளுக்கு அதன் பிறகு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன அடிக்க போற மாதிரி வந்த அப்படியே நின்னுட்ட? வா வந்து அடி பாப்போம்!” என்று சொல்லி அவன் முறைத்திருந்தால் கூட அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்க கூடும். மாறாக அவன் மீசையை ஒதுக்கி விட்டு கிண்டலாகச் சிரித்தான்.

அவளுக்கு கண்களில் தண்ணீர் கொட்டியது. “என்ன பாவமோ பிச்சை எடுக்க வந்துருக்கோம். அங்கேயும் உங்க நாசமா போன நாடுமாறித்தனத்தை காட்டுறியே நீ நல்லாருப்பியா?” என்று சாபமிட்டாள். அவன் இன்னும் பெரிதாகச் சிரித்து விட்டு, “இந்தா கூட ஒரு அஞ்சு வச்சு தர்றேன். எடுத்துட்டு அழுகாம போ!” என்றதும் அவளுக்கு இன்னும் ஆவேசம் தலைக்கேறியது. மண்ணை வாரித் தூற்ற கீழே குனிந்து கையைக் குவித்து அள்ள முற்பட்டாள். அது தார் ரோடு என்பதால் கை சென்ற வேகத்தில் கைகளைச் சிராய்த்து விட்டது. அவள் விடுவதாய் இல்லை. அருகில் சென்று கடற்கரை மண்ணை எடுத்து தூற்ற முற்படும் போது அவன் காணாமல் போயிருந்தான்.

மறுவருடத்தில் அவள் நாகூர் சந்தனக்கூடு விழாவிற்கு வந்து இவனை தேடிக்கொண்டிருந்தாள். எடுத்த மண்ணை முகத்திற்கு நேராகத் தூற்றி விட வேண்டும் என்ற ஆவேசம் அடுத்தடுத்த வருடங்களில் காணாமற் போயிருந்தது. அவன் சிரித்துக் கொண்டே மீசையை ஒதுக்கிய அந்த கணம் மட்டும் அவள் மனதில் ஆழமாகப் பதித்து விட்டது. அதன் பிறகு இந்த ஊரில்தான் இவனைப் பார்க்கிறாள். பார்த்த மாத்திரத்தில் அவனும் இவளை அடையாளம் கண்டு கொண்டது இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்தான். நடந்து முடிந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோராமல் வருத்தத்தை மட்டும் தெரிவித்தான்.

“தனியா போனா, இப்ப எவனும் காசு போட மாட்றான். நீ சரின்னா சொல்லு சேர்ந்து போய் காசு கேட்போம். வர்ற காசுல ஆளுக்கு பாதி. காச வாங்கி உங்கிட்ட கொடுக்குறேன். கடைசியா நீயே கூட பிரிச்சு குடுத்தாக்கூடப் போதும்!” என்பது பாபுவின் யோசனை.

சுகந்தி முன்பு ஒரு குழுவாகத்தான் போய் பிச்சை எடுத்தாள். அதில் நிறைய முரண்பாடுகள் எழுந்தது. பெரும் சண்டை. இப்போது அவளுக்கு வயது நாற்பத்தைந்து தாண்டி விட்டது. எந்த இடத்தில் எப்படி காசு கேட்க வேண்டும், யாரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிச்சை எடுத்த இடங்களில் எந்த கால இடைவெளியில் மீண்டும் பிச்சை எடுக்க வேண்டும் என்பது குறித்த புரிதல்கள் அவளுக்கு உண்டாகியிருந்தது. தனித்து இயங்கும் அளவிற்கு இப்போது தடைகள் ஏதுமில்லை எனத் தோன்றியது.

பாபு சொல்வது போல குழுவாக சென்று காசு கேட்பதற்கும் தனியாக போவதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இரண்டுக்கு மேற்பட்டோர் சென்றால் நிச்சயம் பணம் கொடுக்கிறார்கள். தவிர தம்பதியாக வரும்போது இனம் புரியாத உளவியல் பணம் கொடுப்பவர்களைத் தூண்ட வேண்டும். கையில் குழந்தைகள் இருந்தால் இன்னும் சிறப்பு. ஒருமுறை வாடகைக்கு குழந்தை வாங்கி சுகந்தி பிச்சை எடுத்திருக்கிறாள். அப்போதுதான் நகரத்தில் குழந்தையோடு பிச்சை எடுப்பவர்களை அதிகாரிகள் வேனில் ஏற்றி மூன்று நாள் சிறையில் அடைத்தார்கள். அதுமுதல் அவள் தனியாகவே செயல்பட்டாள்.

இப்போது பாபுவின் யோசனைக்கு அவள் இசைந்தாள். இதில் நான் வைத்ததுதான் சட்டமாக இருக்க வேண்டும் என அவளுக்குள் ஒரு முன்முடிவு எடுத்துக் கொண்டாள். ஒரு தம்பதியாக செல்லும் போது பாதுகாப்புக்கு சாத்தியம் உண்டு. கொஞ்ச நாட்களுக்கு இதனை சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம் என நினைத்தாள்.

இருவரும் அன்று இரவு தங்கிக்கொண்டு இதே ஊரில் தொழிலை ஆரம்பிப்பது என முடிவு செய்தார்கள். சுகந்திக்கு அருகிலேயே அவன் துண்டை விரித்தான். கூடவே அதே சிரிப்பு. சுகந்தி மதுரை பேருந்து நிற்கும் மார்க்கம் நோக்கி கைகாட்டினாள். அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று படுத்துக் கொண்டான். அவன் சென்று படுப்பதை இவள் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அந்த பக்கமாக சாய்த்து படுத்தாலும் இன்னும் சிரித்துக் கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. அவனது குறும்புச் சிரிப்பை அடியோடு வெறுத்தாள். எழுந்து போய் ஒரு மிதிமிதித்து விட்டு வந்து படுத்துக் கொள்ளலாம் என நினைத்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

பாபு அவளை எழுப்பும் போது அருகில் இருந்து ஒரு முருகன் கோவிலில் மங்கள இசை ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் கையில் டீ இருந்தது. அவன் முகத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தாள். நேருக்கு நேர் பார்த்தால் இந்த அதிகாலை இன்னும் எரிச்சலை ஏற்படுத்தும் என நினைத்தாள்.

“ரொம்ப நேரமா பாத்திட்டு இருந்தேன். எழுப்பலாமா வேணாமா?ன்னு ஒரு யோசனையா இருந்துச்சு!” என ஒரு குழந்தை போல ஒருவாகாகப் பேசினான். அவள் பையிலிருந்து பல்பொடியை தேடி எடுத்து உக்கார்ந்த இடத்திலேயே தேய்த்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பையில் எடுத்த தண்ணீர் பாட்டிலில் வாய் கொப்பளித்து துப்பினாள். எல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்தது. என்ன நடக்கிறது என யூகிக்கும் முன்பே பாபு கையில் இருந்த டீயை வாங்கி உரிந்தாள். 

எழுந்து போய் பஸ்ஸ்டாண்டு கழிவறை, குளியலறை வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். குளித்தது போல தலை துவட்டினாள். பாபு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன பாக்குற, மார்கழி மாசத்துல கூட குளிச்சிருவேன்!” என்றவளை “அப்புறம் ஏன் அதே துணிய போட்ருக்க?” என்றான். அதைத் தொடர்ந்து சிரிப்பான் என்பதை அறிந்தவள் அதை பார்க்கப் பிடிக்காமல் தன் பைகளை ஒன்று சேர்த்து வைத்தாள்.

“வா இங்கேயே டிபன் பண்ணிருவோம்!” என்றவனை அலட்சியமாக பார்த்து சொன்னாள். “இத்தாருப்பா நம்ம குடும்பத்தோடு கொடைக்கானல் வரல. தொழிலுக்கு வந்துருக்கோம். இந்த அன்பா பேசி இளிக்கிற வேலை வேணாம்!”

“என்னால பசி தாங்க முடியாது” என்றான். அவனை அருகில் அழைத்து சொன்னாள், “வெறும் வயித்துல போனாத்தான் மூஞ்சி வாடிப்போய் இருக்கும். பாக்குறவனுக்கும் ஏதாவது போடணும்ன்னு தோணும். மயிராண்டி கணக்கா கைக்கு காசு ஏந்துற இடத்துல தின்னுட்டு ஏப்பம் உட்டா பொழப்பு நாறிப்போயிரும்!” அவன் மேற்கொண்டு பேசாமல் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அவள் முறைத்தான், “இதுவும் இல்லேன்னா செத்துப் போயிருவேன்!” என்றவனை எதாவது பண்ணித்தொலை போல முகத்தை திரும்பிக் கொண்டாள்.

அவள் முன்னால் நடந்தாள். இன்னும் ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவு நடந்தால்தான் குடியிருப்பு பகுதியை அடைய முடியும். காலையில் கடைகளில் கையேந்தினால் அடித்து துரத்துவார்கள். அங்கு முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் கடைகளில் வலம் வரலாம் என சுகந்தி ஒரு யோசனை சொல்ல அதை பாபு அப்படியே ஏற்றுக்கொண்டான். சொன்னதும் கேட்டுக்கொண்டானே என அவளுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் தன் பிடியை எக்காரணம் கொண்டும் தளர்த்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

வெறுமையாக இருவரும் நடந்து கொண்டிருக்கும் போதுதான் பாபு அவளிடம் கேட்டான். “எதுக்கு இந்த தொழிலுக்கு வந்த?”

“ம் பொழுது போகாமாத்தான்! அட ஏய்யா, அம்மா மட்டும்தான். பிறந்ததில் இருந்தே அதுவும் பிச்சைதான் எடுத்துச்சு. என்னய ஸ்கூல்ல சேத்து விட்டா அங்க என்னய பிச்சை எடுக்குறவ மகன்னு கிண்டல் பண்ணாங்கன்னு படிக்காம வந்துட்டேன். அம்மாவும் என்னென்னமோ பண்ணிப் பாத்துட்டு அதுவும் செத்துப் போச்சு. கொஞ்சம் படிச்சு ஒரு கல்யாணம் பண்ணிருந்தா இந்நேரம் நல்லருந்துருப்பேன்!” என்றவளை கிண்டல் செய்யும் விதமாக ‘உச்’ கொட்டினான். பதிலுக்கு அவன் கதையைக் கேட்டு இதே போல அவமானப்படுத்தியே ஆகவேண்டும் என முடிவு செய்து அவன் கதையைக் கேட்டாள்.

அவன் இன்னொரு பீடியைப் பற்ற வைத்து புகையை அலட்சியமாக மேலே விட்டான். அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்பதால் காதுகளை ஆழமாகத் தீட்டி வைத்தாள். அவன் சொன்னான், “கல்யாணமாகி பதினைந்து வருசமாச்சு. புள்ள இல்ல, பொறுத்து பொறுத்துப் பாத்த மகராசி இன்னொருத்தனை கூட்டிட்டு ஓடிப்போயிட்டா. இனி உழைச்சு ஒரு மயிருக்கும் ஆகப் போறதில்லைன்னு பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டேன்!”

அவளால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. “காலு நல்லாத்தானே இருக்கு. எதுக்கு கம்பு ஊண்டி நடக்குற?”

“கை, கால் நல்லருந்தா எவனும் போட மாட்றான்னு கம்பு ஊண்டி நடந்தேன். அதுவே பழகிருச்சு. கம்பு இல்லாட்டி நடக்க முடியாம கீழ விழுந்துருவேன்!” 

இருவரும் குடியிருப்பு பகுதியை அடைந்தார்கள். அவள், “இங்க பாரு நா ஒரு வீட்ல கத்துனா, நீ ஒரு வீட்ல கத்தனும். என்னோட தோள்பட்டையில கை போட்டுக்க அப்பதான் முடியாத ஆள் மாதிரி தெரியும். அதுக்குன்னு எசகு பிசகா கை வச்சா மரியாதை நாறிப்போயிரும், சொல்லிட்டேன். முக்கியமா காசு இல்லேன்னு சொன்னா அமைதியா போயிறணும். அந்த அமைதிதான் அவங்களை அடுத்த தடவை காசு போட வைக்கும்!” என்றவளைப் பார்த்து அவனது பிரத்யேக சிரிப்பை சிரித்தான். “இந்த மாதிரி கேனைத்தனமா சிரிச்சு வைக்காதா, ஊர்பேர் தெரியாதவன்கிட்ட விளக்கமாத்துகட்ட பூச வாங்கிட்டுப் போயிருவ!” அதற்கும் சிரித்தான். “திருந்தாத சென்மம்!” என தலையிலடித்துக் கொண்டாள்.

ஒரு பெரிய காலி இடத்திற்கு அருகே இருந்த வீட்டின் வெளியே இருந்து “அம்மா” என்றாள் சுகந்தி. ஒரு பெண் வேகமாக வெளியே வந்து பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவளுக்குப் பெருமையாக இருந்தது. முதல் இடமே மறுக்காமல் கொடுத்ததால் இன்று வசூல் சற்று வலுவாக இருக்கும் என்று நம்பினாள். 

அடுத்த வீட்டில் பாபு அம்மா என்றதும் யாரும் வரவில்லை. அவன் கேட் தாழ்ப்பாளை திறக்க முற்படும் போது சுகந்தி அதை தடுத்தாள். “அறிவுகிறிவு ஏதும் இருக்கா? நீ நிஜமாவே பிச்சக்காரனா இல்ல வீடு புகுந்து களவாடுற திருட்டுப்பயலா? கூப்டுட்டும் வரலேன்னா பொத்திட்டு அடுத்த வீட்டுக்குப் போயிடணும். தாழ்ப்பாள தட்டுனா அசிங்கமா திட்டுதான் வாங்கணும்!” என அவனை அடுத்த வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

அது சுகந்தியின் முறை என்பதால் அவள் குரல் கொடுத்தாள். “அம்மா!” அந்த அம்மா எனும் குரலில் உலகில் இருக்கும் அத்தனை பணிவு மொழிகளும் இருந்தது. அதில் தனியான வாஞ்சை இருந்தது. இனி வேறு வக்கில்லை எனும் அநாதைதனம் இருந்தது. உள்ளிருந்து எந்தக் குரலும் இல்லை. பாபு அவளை அடுத்த வீட்டுக்கு அழைத்தான். சுகந்தி மறுத்தாள். அவளுக்கு மட்டும் வீட்டுக்குள் ஒரு அசைவுக் குரல் தெரிந்தது. அது அவளுக்கு மட்டும் கேட்கும். யாசகமிடத் தயாராகும் சமிக்ஞை அது.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் ஒரு பாத்திரத்தில் அரிசி, முட்டை, அதனுடன் பதினோரு ரூபாய் பணம் கொண்டு வந்து கொடுத்தான். அதை சுகந்தி சேலை முந்தானையில் மிகப் பெருமையாக வாங்கிக் கொண்டாள். பாபு அவளின் நுண்ணறிவு குறித்து இரண்டு வார்த்தை பெருமையாகப் பேசுவான் என நினைத்தாள். அவன் அதற்கும் சிரித்துக் கொண்டான்.

இரண்டு மணி நேரத்தில் கணிசமான பணம் சேர்ந்தது. ஒரு நிழலில் அமர்ந்து பணத்தை எண்ணுவோம் என சொன்ன பாபுவின் யோசனையை அவள் கடுமையாக எதிர்த்தாள். “ஆமா, தேக்கு யாவாரத்துல லட்ச ரூவா சம்பாதிச்சிட்டோம் உக்காந்து எண்ணுவோம். நல்லா கேட்டுக்க, நம்ம உக்காந்து காசு எண்ணுறத ஏதாவது ஒரு ஊர்காரன் பாத்தா அடுத்ததடவை நம்மள இந்த தெருவுக்குள்ளே நுழைய விட மாட்டாங்க. கணக்கை நைட்டு பாத்துக்கலாம்” என்றாள். அவனால் சுகந்தி சொல்வதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. அதில் நிறைய உண்மை இருப்பது போலத் தோன்றியது. அவள் குரலின் உத்தரவு மனப்பான்மையை அப்படியே ஏற்றுக்கொண்டான்.

சுகந்தி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பாபுவைதான் அவள் எதிர்பார்த்தாள். இது வேறு நாட்களில் தொடர வேண்டுமானால் தன் தலைமைப் பண்பை அவனிடம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னைப் பற்றிய பெருமை பேசவேண்டும் போல இருந்தது அவளுக்கு!

இருவரும் மற்றொரு தெருவை தேர்ந்தெடுத்துச் செல்லும் போது ஒரு நாய் குரைத்தது. கொஞ்ச நேரத்தில் அது போய்விடும் என நினைத்தார்கள். அது ஆவேசமாக இன்னும் வன்மையாக குரைத்தது. அதன் நோக்கம் பாபுவை நோக்கி இருந்தது. சுகந்தி சொல்லியபடி அவன் கையில் இருந்த கம்பை வாங்கி கீழே போட்டு எடுத்தான். நாய் பின்வாங்கி ஓடியது. “உனக்கு நாய் பாஷை தெரியுமா?” என வேடிக்கையாக கேட்டான். “தெருவுல திரியிற மனுஷனுக்கு தெருவுல திரியிற எல்லா ஜீவராசி பாஷையும் தெரியணும். இல்லேன்னா கடிபட்டுத்தான் சாகணும்!” என அவனை ஆழமாகப் பார்த்துச் சொன்னாள். அவன் முன்னோக்கி நடந்தான்.

சில குறிப்பிட்ட வீடுகளின் அமைப்பை பார்த்து அங்கு சாப்பாடு கேட்க வேண்டும் என சுகந்தி சொன்னாள். அதே போல சாப்பாடு வந்தது. இருவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். அவள் உட்கார்ந்து சாப்பிடும் முறையை பற்றி பாபு பரிகாசம் செய்து சிரித்தான். “நீ சாப்டுறது தாயம் விளையாடுற மாதிரி இருக்கு!”

அவள் ஏதும் சொல்லவில்லை. என்றாலும் தன் நாகரீக செயல்பாட்டுக்கு கிடைத்த பெருமை ஒன்றைச் சொல்லி இவன் வாயை தற்சமயம் அடைக்க வேண்டும் என யோசித்து சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள். “ஒரு வீட்ல காசு கேக்கப் போனேன். அவங்க என்னய கார்ப்பரேஷன்ல கணக்கெடுக்க வந்தவங்கன்னு நினைச்சு வீட்டுக்குள்ள கூப்பிட்டாங்க தெரியுமா?” இதற்கு அவனின் எதிர்வினை அறிய ஆவலாக இருந்தாள். அவன், “இது பரவாயில்ல, ஒருநாள் நானும் இப்படித்தான் ஒரு வீட்டுக்கு வெளிய நிக்கும் போது அவங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்த மாப்ளன்னு நினைச்சு நடுவீட்டுல உக்கார வச்சு காப்பி கொடுத்தாங்க!” அவன் முடித்ததும் கனத்த மௌனம் நிலவியது. அவன் எகத்தாளமாக சிரிக்கும் முன்பே அவள் அதை முற்றாய் நிராகரிப்பது போல தூரமாக கை கழுவச் சென்றாள். அங்கு சென்று கெட்ட வார்த்தையில் அவனை ஆசை தீர திட்டினாள்.

சுகந்தியின் திட்டம் தெளிவாக இருந்தது. தேவையற்ற அலைச்சல், ஒரே தெருவுக்குள் மீண்டும் பிரவேசிப்பதை தவிர்ப்பது போன்றவை பாபுவுக்கு புதிதாக இருந்தது. “தேவையில்லாம ஒரு தெருவுக்குள்ளே அலையக்கூடாது. குறிப்பா நமக்கு காசு போட்ட ஆளுங்க முகத்துல அடிக்கடி படக்கூடாது. அவங்க கண்ணுல பட்டா சந்தேகமாவே பாப்பாங்க. மறுதடவை காசு கிடைக்காது!”

ஒரு வீட்டு தாழ்ப்பாள் கதவை தான் வைத்திருந்த ஊற்றுகோல் மூலமாக திறக்க முயற்சித்த பாபுவை கடுமையாகத் தடுத்தாள். “என்ன மனசுல பண்ணையார்ன்னு நினைப்பா? கை என்ன ஓடஞ்சு போய் தொங்குதா? இதை வீட்டுக்காரன் பாத்தா மயிரத்தான் போடுவான்!” வழக்கத்தை விட பணம் கூடுதலாகச் சேர்ந்ததற்கு சுகந்தியின் அணுகுமுறைதான் காரணம் என்பது அவனுக்குத் தெரியும். அவளது கட்டுப்பாட்டில் இருப்பது போல இலகுவாக நடந்து கொண்டான். என்றாலும் அவனது சிரிப்பு மாறவில்லை. அவள் அதை ஒருகட்டத்தில் பழகியிருந்தாள். அவளின் வழிகாட்டல் சீராக இருந்ததால் அவனுக்கு பெரிதாய் வேலை இல்லாமல் இருந்தது. அவளுக்கு உதவியாளர் போலவே நடந்து கொண்டான்.

தான் தனியாகப் போயிருந்தால் இரண்டு கட்டுபீடிதான் காலியாயிருக்கும்; காசு வந்திருக்காது என நினைத்தான். அன்று விரைவாகவே முடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார்கள். அவள் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள். அருகில் குருவிக்காரப் பெண் ஒருத்தி விற்றுக் கொண்டிருந்த தைலத்தை காலில் தேய்த்துக் கொண்டு படுத்தாள். அதில் இருந்த மீதி தைலத்தை பாபுவிடம் கொடுத்து தேய்த்துக் கொள்ளச் சொன்னாள். “இங்க பாருய்யா, நடக்குற வரைக்கும்தான் பிச்சை கூட எடுக்க முடியும். கை கால் நல்லா இருந்தாதான் ஓடியாடி நடமாட முடியும். நல்லாருக்குறவனுக்கே நம்ம நிலைமைதான். இதுல நம்ம நிலைமை மோசமாயிட்டா நினைச்சுப் பாரு. இந்தா, நல்லா சூடு பறக்க கால்ல தேய்ச்சிட்டு படு!” என்றாள்.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளிடமும் சிறிது மாற்றம். நேற்று ஒரு ஆளாகவும் இப்போது வேறு ஒருத்தி போலவும் இருந்தாள். எங்கோ அலைந்து திரிந்த பேருந்துகள் அவர்களிடத்தில் வந்து ஆற்றுப்பட்டது போல இருந்தது. பார்ப்பதற்கு இருவரும் தம்பதி என பேருந்து நிலையம் நம்பியது. பாபுவைத் தவிர சுகந்தியும் அவ்வப்போது சிரித்தாள். இனி இருவரும் ஒன்றாவே யாசகம் கேட்போம் என்ற அவனது திட்டத்தை சொல்ல நினைத்து முழுங்கினான். அதனால் சொற்ப நாட்களுக்கு கிடைக்கும் வருமானமும் நின்று போகுமோ என தயங்கினான். நிலையம் அடங்கிய பின்னர் இருவரும் குடித்தார்கள். சுகந்திக்கு தண்ணீர் என்று எதுவும் தேவைப்படவில்லை. “மின்ன மாதிரி காட்டம் இல்ல. சாணியக் கரைச்சு ஊத்தின மாதிரி இருக்கு” எனச் சிரித்தாள். பாபு கொஞ்சமாகக் குடித்தான்.

நேரம் கூடக் கூட அவள் பேச்சின் தோரணை சற்று மாறியது. கொஞ்சம் அழுதாள். கடைசிப் பேருந்தை இயக்கிவிட்டு விட்டு அவர்களை கடந்து சென்ற ஒரு ஓட்டுனர் அவர்களை வித்தியாசமாக பார்த்துச் சென்றார்.

அந்த பேருந்து நிலையத்தில் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. அரவாணிகள் சிலர் அங்குமிங்கும் தென்பட்டார்கள். நிலையத்திற்குள் கதவே இல்லாமல் இருந்த ஒரு பெட்டிக்கடைக்குள் இருந்த ஒரு வயதானவரும் இருக்கையை கடைக்கு குறுக்காக வைத்து விட்டு ஒரு ஓரமாக சாய்ந்தார்.

சுகந்தியின் அழுகை மட்டும் அங்கு கேட்டது. அதிகம் குடிக்காத பாபு இன்னும் கொஞ்சம் ஊத்திக்கொண்டால் நிம்மதியாகத் தூங்கியிருக்கலாம் என நினைத்தான். அவளை அமைதிப்படுத்த ஏதேதோ செய்தான். அவள் கெட்ட வார்த்தையில் திட்டினாள். அவன் ஓரமாக தனது உடமையை நகர்த்தி வைத்துவிட்டு படுப்பதற்கு ஆயத்தமானான். அவனை காலால் எட்டி மிதித்தாள். “தாயொலி, என்னோட ரத்தத்தை உறிஞ்சிட்டு எங்கடா போற? பங்கு வேணும்னா பக்கத்துல வந்து படுடா!” என்ற போது அவன் மிரண்டு போனான். என்றாலும் அவள் அருகில் போனான். அவள், “நீ என்னய வேற மாதிரி நினைக்காத, பக்கத்துலதான் வந்து படுக்கச் சொன்னேன். கூட இல்ல!” அவள் கையைக் காட்டிய இடத்தில் படுக்கச் சொன்னாள். அது அவனை எளிதில் தொடர்பு கொள்ளும் படியாக இருந்தது. அவன் கால்களை குறுக்கி கைகளை தலைக்கு வைத்துப் படுத்தான்.

அவன் உறங்கிவில்லை. அவளைப் பார்க்காமலே கவனித்துக் கொண்டிருந்தான். அவள் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தாள். சுத்தமாய் போக்குவரத்து நின்று போன நிசப்தத்தில் அவள் குரல் மட்டும் கூர்மையாக ஒரு இலையை கிழிப்பது போல இருந்தது.

“பாபு” என்றாள். அவளின் குரல் கேட்டது. அவன் எழவில்லை. கண்ணை மூடிக்கொண்டான். ஏன் இப்படி இருக்கிறோம் என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. “டேய் பாபு, எனக்கு ஒரு ஆசை நிறைவேத்துவியா?” என்றாள். அவன் காதுகளை தீட்டிக்கொண்டான். விடிந்தது.

ஒருவாரத்தில் அந்த ஊர் பரிச்சயமானது. தொடர்ந்து பத்து நாட்கள் அங்குதான் கழிந்தது. அந்த சம்பவத்திற்கு பின் அவள் பாட்டில் அடிப்பதில்லை என முடிவு செய்தாள். பாபு அதிகமாகப் பேசுவதில்லை. அவன் வேறொரு ஆள் போல மாறியிருந்தான். சுகந்திக்கும் தான் இவனிடம் கடுமையாக நடந்து கொண்டிருக்க வேண்டாம் என நினைத்தாள்.

நாட்கள் ஓடியது. அவர்கள் பேசி வைத்த நாட்கள் முடிவுக்கு வந்தது. பாபு சமயபுரம் திருவிழா.. அதனைத் தொடர்ந்து ஒருவாரம் அங்கு தங்க போவதாகச் சொன்னான். சுகந்தி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாலும் அவளுக்கு இந்த ஊர் போன்று ஒரு பத்து ஊர்கள் கிடைத்தால் காலத்தை தனியாக கூட ஓட்டி விடலாம் என யோசித்தாள்.

அன்று கடைசி நாள் என்பதால் சுகந்தி ரோட்டுக்கடை ஒன்றை பார்த்து வைத்திருந்தாள். அங்கு பாபுவுக்கு பிடித்த உணவை வாங்கி கொடுத்து அவன் பங்கை கொடுக்க முடிவு செய்தாள். இருவரும் சாப்பிட்டார்கள். அவள் வெகுநேரம் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். இவனுடன் இருந்த நாட்களில் சிரிப்பில் சீண்டியது தவிர பெரிதாக எந்த தொந்தரவும் இல்லை. இப்படிப்பட்ட மேல் குணமிக்கவன் எப்படி இங்கு வந்தான் என்று ஆச்சரியமாக இருந்தது. அவள் தன்னைப் பார்ப்பதை அவனும் கவனித்துச் சொன்னான். “உனக்கு பல்லு அப்படி ஒன்னும் துருத்திக்கிட்டு நிக்கல. இதுவும் நல்லாத்தான் இருக்கு!” என்றான். அவளுக்கு சிரிப்பு வந்தது, வெளியே சிரிக்காமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளை யாரும் இப்படிச் சொல்லாமல் இல்லை. ஆனால், இவன் சொன்னது புதிதாக இருந்தது.

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். பத்து மணி பேருந்தில் ஏறினால் சரியாக இருக்கும் என சொன்னான். அவன் பங்கை அவனிடம் ஒப்படைத்து விட்டு சொன்னாள், “உழைச்ச காசு, எண்ணிப் பாத்து வாங்கு!” என்றாள். அவள் முன்பே சில்லறையை மாற்றி நோட்டாக வைத்திருந்தாள். அவளின் திட்டமிடங்கள் அவனுக்கே எப்போதுமே வியப்பாக இருக்கும். அவளுக்கும் இப்போதெல்லாம் அவனிடம் தன்னை தனித்துக் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. அவன் சிரிப்பைக் கூட ரசிக்கும் மனநிலைக்குப் பழகியிருந்தாள்.

கிளம்பினார்கள். எப்போதும் வழி நடத்தும் அவளை அன்று அவன் கூட்டிச் சென்றான். அது நிச்சயம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் பாதை இல்லை. வெகு நேரம் கழித்து கேட்டாள், “என்ன என்னய கிட்னி திருட கூட்டிட்டுப் போறியா?” அவன் சிரித்துக் கொண்டே முன்னால் சென்றான்.

நான்கு தெருக்களையும் இரண்டு பெரிய சாலையும் கடந்தது. ஊர் எல்லையில் கவனிப்பு அல்லாத ஒரு பகுதிக்கு வந்தார்கள். அவளுக்கு இவனது நோக்கம் முழுமையாக பிடிபடவில்லை. அவசரப்பட்டு வார்த்தைகளை விட அவள் தயாராக இருந்தும் மனம் இன்னும் வரவில்லை. சுத்தமாக மனித நடமாட்டம் இல்லாத பகுதி. பெரிய நீர் தேக்கத் தொட்டி. சுற்றுப்படிகட்டுகளில் குச்சியை ஊன்றியபடி மெதுவாக மேலே சென்றான். அவளை அழைத்தான். அவள் மறுத்தாள் என்றாலும் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை பார்த்து அவனும் உற்சாகமாக மீண்டும் அழைத்தான்.

அவள் பயந்து கொண்டே மேலே சென்றாள். தலை சுற்றியது. படியில் உட்கார்ந்து கொண்டு மெதுவாக மேலே சென்றார்கள். படிகளில் மது குப்பிகள் அதை கவனமாக ஒதுக்கி வைத்து அவளுக்கு பாதுகாப்பான பாதை ஏற்படுத்திக் கொடுத்தான். அவள் அவன் கைகளை விடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். சாதாரணமாக நடப்பவர்களை விட குச்சியை ஊன்றி சீராக நடந்து சென்றான்.

உச்சியை அடைந்தார்கள். வரவேற்பது போல ஒரு பலமான காற்று அவர்களை லேசாக அசைத்துப் பார்த்துச் சென்றது. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. கைகளை பறவை போல விரித்து கண்களை மூடிக்கொண்டாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவளின் துருத்திய பற்கள் கூட அழகாக இருந்தது. அந்த பெரிய தொட்டிலை சுற்றி நடப்பதற்கு வட்ட வடிவமாக பாதை இருந்தது. அதில் இருவரும் சுற்றி சுற்றி வந்தார்கள். அவன் மதுவை உடைத்து அவளிடம் நீட்டினான். அவள், “கிடைக்காத ஏக்கத்துக்குதான் அந்த சாராயத்தை குடிக்கிறேன். இப்ப எனக்கு எல்லாமே கிடைச்ச மாதிரி இருக்கு!” என்றவள் அங்கேயே அமர்ந்தாள். சுற்றிப் பார்த்தாள். வாகனங்கள், தெரு விளக்குகள், வீடுகள் எல்லாம் அவள் ஆளுகைக்கு கட்டுப்பட்டது போல இருந்தது. அவள் அப்படியே உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் கவனிக்க ஆரம்பித்தாள். கண்களை மூடிக்கொண்டு அதில் கொஞ்சம் லயித்தாள். நேரம் கூடிக்கொண்டே போனது. மனமில்லாமல் எழுந்தாள். அவளின் கைகளை பிடித்துக் கொண்டு கீழே சென்றான்.

பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். திருச்சி செல்லும் பேருந்தில் பாபு ஏறினான். அதைப் பார்க்க மனமில்லாமல் சுகந்தி வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். பேருந்து புறப்பட்டுச் சென்றது. அவள் பாட்டிலைத் திறந்து அப்படியே குடித்தாள். அன்று பாபுவிடம் போதை கிறக்கத்தில் நிறையவே உளறிக் கொட்டினாள். அவள் ஆசைகளை அடுக்கினாள். எல்லாம் நிராசைகள்தான். அதில் உயரமான கட்டிடத்தில் ஏறி ஊரைப் பார்க்க வேண்டும் என்பதும் ஒன்று. பேருந்து ஊரைக் கடந்து போனது. பாபு சுகந்தி கொடுத்த பணத்தைப் பார்த்தபடி இருந்தான். சுகந்தி ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினாள்.

*******

rabeek1986@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button