இணைய இதழ்இணைய இதழ் 69தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 16 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

நான் செய்த சொ(நொ)ந்தத் தொழில்!

சென்னைக்குச் செட்டிலாக வந்தேன் என்று சட்டெனச் சொல்லித் தொடரும் போட்டாகிவிட்டது. ஆனால் அதற்குமுன் சொல்லப்பட வேண்டியவை ஒன்றிரண்டு இருக்கிறதே என்பதைத் தாமதமாகத்தான் மூளை நினைவுபடுத்தியது. சரி, அவற்றைச் சொல்லி விடலாம். 

முன்பே சொல்லியிருந்தேன் நானிருந்த கோவை அலுவலகம் ரிமோட் மூலம் இயங்குவது என்று. அதிகாரத்திற்குடையவர் அருகிலில்லாததால் உயர் பதவியிலிருக்கும் யாவரும் அதிகாரம் செய்பவரே. உதவி ஆசிரியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல விரும்பினால் கார்டு வாங்க மாட்டார்கள், எங்கள் செக்ஷனுக்கு வந்து வடிவமைக்கச் சொல்லி ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு போவார்கள். தங்கள் தனிப்பட்ட கடிதங்களைக்கூட டைப்படித்து, ப்ரிண்ட் அவுட் எடுத்துத்தான் அனுப்புவார்கள்.

இப்படியான காலகட்டத்தில்தான் நண்பன் அர்ஜுனன் கதை எழுதுகிற ஆர்வத்தை எனக்குத் தூண்டினான். சிவனே (அ) பெருமாளே என்று வாசகனாக மட்டுமே நிறையப் படித்துக் கொண்டு ஆனந்தமாக இருந்தேனேயன்றி, நாமும் எழுதவேண்டும் என்று நினைத்ததே இல்லை. அவன் ஒரு கதைக் கருவைச் சொல்லி, இதை எழுத்தாக்க உங்களால்தான் முடியும் என்று ஐஸ் மலையையே தலையில் வைத்தான். சரி, முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று பாலகுமாரன் கொஞ்சம், ராஜேந்திரகுமார் கொஞ்சம், ராஜேஷ்குமார் கொஞ்சம் என்று மிக்ஸியில் அடித்த எழுத்து நடையில் (சொந்தமாக எழுதத் துப்பு ஏது அப்போது?) கதையை டைப் செய்தேன்- அலுவலகக் கம்ப்யூட்டரில்.

சொந்தமாக ஒன்றை வைத்துக் கொள்ள வசதியும் கிடையாது, மற்றவர்கள் செய்வதால் நாமும் செய்தாலென்ன என்ற நினைப்பு அலுவலகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் குற்ற உணர்ச்சியையும் கிஞ்சித்தும் தராது. எனவே அப்படிச் செய்தோம் நாங்கள். ஆனால் அலுவலகத்தில் இந்திய நண்டுகள் நிறைய உண்டு. அதிலொன்று இதை அந்த ‘உயர்’ ஆசாமிகளிடம் போட்டுத்தர, அவர்கள் கூப்பிட்டுக் கண்டித்தார்கள் இப்படிச் செய்யக் கூடாதென்று. எம்டியிடம் இதுபற்றிப் பேசியாகி விட்டதென்றும், இனியொரு முறை இப்படியானால் வேலையை விட்டு விலக்கச் சொல்லி விட்டார் என்றும் சொல்லப்பட்டது. (அது முழுப் பொய் என்பதைப் பின்னால் அறிந்தேன்). எது எப்படியோ… அந்த முயற்சியை அத்தோடு தலைமுழுகியாகி விட்டது. 

பிற்பாடு சென்னையில் வந்து நிலைகொண்டு, தப்பித்தவறி ஓர் எழுத்தாளனென்று பெயரும் பெற்றிருந்த காலகட்டத்தில், தாமரை பிரதர்ஸ் லிமிடெட்டிலிருந்து அழைத்து, தாங்கள் மாதநாவல் வெளியிட இருப்பதாகவும், அதற்கு நாவல் எழுதித் தரும்படியும் கேட்டார்கள். அது தினமலரின் உள்நிறுவனங்களில் ஒன்று. ஒப்புக் கொண்டு இரண்டு நாவல்கள் எழுதித் தந்தேன். சென்னை அலுவலகத்திலும், புத்தகக் கண்காட்சியிலும், கோவை மற்றும் மதுரை அலுவலகங்களின் மூலமும் விற்பனை செய்யப்பட்டது. எனக்கு மிகப்பெரும் பெயரைத் தேடித் தந்தது ‘பஞ்சு விரட்டு’ என்ற அந்த நாவல். கோவையில் அந்த நாவலை விரும்பிக் கேட்டவர்களுக்கு கோவை அலுவலகப் பொறுப்பில் (இப்போதுமிருக்கும்) என்னைக் கண்டித்த அதே ஆசாமிகள்தான் சப்ளை செய்தார்கள் என்பது தெரியவந்தபோது… காரணம் சொல்லத் தெரியாத ஒரு சந்தோஷமும், திருப்தியும் மனதிற்குள். நம்மை மதிக்காத ஆசாமிகளை நம்முடைய புத்தகத்தேயே மார்க்கெட்டிங் செய்ய வைத்தாகி விட்டதே என்றொரு அதியற்புத மகிழ்ச்சி மனதெல்லாம். 

இப்போது சென்னையில் செட்டிலாவது என்று தீர்மானித்தாகி விட்டது. அங்கே எங்கே தங்க? எங்கே திங்க? சென்ற முறையே இதெல்லாம் அமையாமல்தானே பெரும்பாடாகி விட்டது என்றொரு நினைப்பும் இருந்தது. என்னுடனேயே வேலையிழந்த என் நெருங்கிய நண்பன் சென்னையில் அதே நிறுவனத்தில் வேலைகேட்டுச் சென்றபோது உடன் சென்று ஓரிரு நாட்கள் தங்கினேன். அப்போதுதான் எங்களிருவருக்கும் பொதுவான ஒரு நண்பனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு டெலிபோன் கடை வைத்திருந்தது தெரியவந்தது. டெலிபோன் கடை என்றால் அப்போதிருந்தது போல் ஒரு ரூபாய்க் காசு போட்டு உள்ளூரும், ஓடும் மீட்டருக்கேற்ப எஸ்டிடியும் பேசுகிற போன்கள் வைத்திருந்தான். அதுதவிர, அவன் டெலிகாம் இன்ஜினியரிங் படித்தவன் என்பதால் டெலிபோன் சர்வீசும் செய்து கொடுத்து வந்தான். அவன் அலுவலகத்தைப் பார்க்கச் சென்று, அங்கே அமர்ந்து நீண்டநாள் கதைகளைப் பேசித் தீர்த்தோம். 

என் ஐடியாவைப் பற்றிப் பேச்சுவர, அவன் அலுவலகத்திலேயே இடமிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘இங்க ஒரு சேர், டேபிள் அரேஞ்ச் பண்றேன். கம்ப்யூட்டரைப் போட்டுகிட்டு உக்காந்துடு. நிறைய டைப்பிங், ப்ரிண்ட்டவுட் ஆர்டர்ஸ் வரும். எனக்கு நீ ஒண்ணும் பிகினிங்ல வாடகை தரவேணாம். நல்லா பிக்கப் ஆச்சுன்னா பின்னாடி பாத்துக்கலாம்’ என்றான் அவன். அந்த ரங்கநாதன் தெருவில் தினம் நடமாடும் ஜனக் கூட்டத்தைக் கண்டுவிட்ட எங்களுக்கு அவன் சொன்னது சிறப்பான யோசனையாகவே பட்டது. வேலை சரி, தங்குவதற்கு..? அந்த ஏரியாவிலேயே ஏதாவதொரு சேவல்பண்ணையில் (அதாங்க… மேன்ஷன்) அறை பிடித்துத் தருவதாக அவன் சொன்னதை ஏற்க வேண்டியதாயிற்று. 

அப்புறமென்ன..? ஊருக்குத் திரும்பி, ஒரு கம்ப்யூட்டரைப் புதிதாக வாங்கி, அதற்கென்று ஒரு லேஸர் ப்ரிண்டரையும் வாங்கி… இன்வெஸ்ட்மெண்ட் போட்டு, சென்னைக்கு ஒரு (அ)சுபயோக (அ)சுபதினத்தில் கிளம்பியாயிற்று. பழைய கம்பெனியிலிருந்து வெளியே வருகையில் கிடைத்த சொற்பப் பணத்தில் பாதித் தொகையை இது விழுங்கியிருந்தது. மீதியை தங்குவதற்கும், உண்பதற்குமான செலவு என்று கருதிக் கொண்டு, மேற்கொண்டு அந்தத் தொகையைப் பலமடங்காக்கும் கனவுடன்தான் ஆரம்பித்தது சென்னையில் மறுவாழ்க்கை.

ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரு புத்தகம் வெளியிடும் ஐடியா இருக்கிறது என்றொரு நிலைத்தகவல் இட்டால், வாழ்த்துகள் மழையாகக் குவிவதுடன், உடனே வாங்கிடறோம் என்றும் நிறையப் பேர் கமெண்ட் இடுவார்கள். ஆனால் புத்தகம் வெளியானபின் பார்த்தால், அதில் பத்துப் பேர் கூடப் பணம் செலுத்தி வாங்கியிருக்க மாட்டார்கள். அப்படித்தான் நிஜவாழ்விலும் நான் எதிர்கொண்ட விஷயம். தி.நகர் ரங்கநாதன் தெருவில் வெள்ளமாய் ஜனங்கள் நடமாடினாலும், நாம் இருக்கும் கடைப் பக்கம் வருவதற்கு நூற்றில் அல்ல, ஆயிரத்தில் ஒரு ஆசாமிதான் இருந்தான். அந்த ஆயிரத்தில் ஒருவனுக்காக நாளெல்லாம் ஜனக்கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு, வெறுமே கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்ததையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் நடுங்குகிறது. இப்படி ஓடியது ஆறுமாத காலம். ஓடிக் கரைந்தது காலம் மட்டுமில்லை, கையிருப்பும்தான்.

அச்சமயத்தில்தான் என் நண்பனுடன் ஏதோ விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவன் இடத்திலிருந்து காலி செய்யும் படியும் ஆயிற்று. மறுபடி கடையை மூடிவிட்டுப் புறப்பட்டுவிட வேண்டும் என்பதுதான் விதியா? என்றொரு விரக்தி தோன்றத் தொடங்கியிருந்த நேரம், அடுத்த திருப்பம் ஏற்பட்டது வாழ்வில். என்னை பூஜ்யத்தின் அருகே கொண்டுவந்து நிறுத்திவிட்டு, வேறுவிதமான விளையாட்டை ஆரம்பித்து வைப்பதென்பது விதிக்கு வாடிக்கை என்பது பலமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது என் வாழ்வில். அப்படித்தான் அதுவும்.

மேற்சொன்ன சம்பவம் நடப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன், மேன்ஷனில் என்னுடைய அறை நண்பனொருவன், அவன் வேலை பார்க்கும் சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒரு ப்ரவுச்சர் டிசைன் செய்வதற்கான வேலை இருப்பதாக அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்திருந்தான். அங்கே கலர் ப்ரிண்ட்டுக்கான வேலையை அழகாகச் செய்து தந்தபோதுதான் அந்நிறுவனத்துக்காக ப்ரிண்ட்டிங் வேலைகளைக் கவனித்துவரும் ஜாலி என்றொருவர் (வழக்கம் போல் மாற்றப்பட்ட பெயர்தான்.) அறிமுகமாகியிருந்தார். தொடர்ந்து பலமுறை சந்தித்ததில் நல்ல நண்பராகியுமிருந்தார். அவர் அடையாறில் தனியாக ஒரு ஆபீஸ் வைத்து, ப்ரிண்டிங் ஆர்டர்களை எடுத்து அங்கிருந்து எக்ஸிக்யூட் செய்து கொண்டிருந்தார்.

என் நிலைமை அறிந்தவுடன், தன் அலுவலகத்தில் வந்து இருக்கும்படியும், நிறைய வேலை கிடைக்கும் என்றும் சொன்னார். ‘மறுபடியும் ஆரம்பத்துலருந்தா..?’ என்று யோசித்துத் தயங்கிய என்னைப் பலவாறு நம்பிக்கை சொல்லி சமாதானப்படுத்தினார். என் கம்ப்யூட்டர், ப்ரிண்டர் செட்டப்புடன் அவர் சொன்ன அட்ரசுக்குப் போய்ப் பார்த்தபோது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது அவர் இருந்த இடம். ஒரு காம்ப்ளக்சினுள் ஒதுக்குப்புறமாக இருந்த மூலையில் ஓர் அறைதான் அவரது ஆபீஸ். அந்த சாம்ராஜ்யத்தில்தான் பாதியை எனக்கு ஒதுக்கித் தந்திருந்தார். மக்கள் வெள்ளம் நடமாடிய ரங்கநாதன் தெருவிலேயே கிடைக்காத பிசினஸ் இந்த ஒதுக்குப்புற மூலையில் எங்கே கிடைக்கப் போகிறது என்று மனதளவில் நொந்து போனவனாய், வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்தேன். 

ஆனால்… அதிசயமாக அங்கே பழைய இடத்திலிருந்ததைவிட நிறைய வேலை கிடைத்தது. ஜாலி எடுத்துவரும் ப்ரிண்ட்டிங் ஆர்டருக்கான வேலைகளைச் செய்து தருவது தவிர, அந்தப் பக்கம் போய்வரும் மனிதர்களும் ஓரளவுக்கு வரத்தான் செய்தார்கள். எனவே, சற்றே நிம்மதி என்று சொல்லலாம். ஆனாலும், பஞ்சப்பாட்டுப் பாடுகிற நிலைமாறியிருந்தாலும், கைக்கும் வாய்க்கும் சரியாகி விடுகிற நிலையில்தான் அப்போதும் வருமானம் இருந்தது. ‘சரி, என்றைக்குத்தான் நமக்கு கை நிறைய வருமானம் கிடைத்திருக்கிறது, இதுதான் நம் தலையில் எழுதியிருப்பது போலும்’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு அங்கே இருந்து வந்தேன்.

அவருடைய ப்ரிண்டிங் லைனில் சற்றே புழங்கியதால், பல புதிய அறிமுகங்கள் சென்னையில் கிடைத்தன என்பதுடன், சென்னையின் பல ஏரியாக்களும் பழக்கமாகத் தொடங்கியிருந்தன எனக்கு. வெளியேறிய கம்பெனியின் சென்னைக் கிளையில் வேலைகேட்டு என் நண்பனொருவன் வந்தான் என்று சொல்லியிருந்தேனே… அவன் வேலை கிடைத்து, திருவள்ளூரில் கம்பெனி செலவில் ஒரு வீடு பார்த்துக் கொண்டு தங்கியிருந்தான். மேன்ஷன் பிடிக்காதவனாய், நான் அவனுடன் போய் அங்கே தங்கத் தொடங்கினேன். அதிகாலையில் எழுந்து மின்சார ரயிலைப் பிடித்து சென்ட்ரல் வந்து, அங்கிருந்து அடையாறு வந்து வேலை செய்வது. இரவும் அப்படியே திருவள்ளூர் திரும்புதல்- இப்படியாக வாழ்க்கை மிகச்சில காலம் ஓடியது. வார இறுதியானால் திருவள்ளூரில் ஒரு தியேட்டர் இருந்தது- டிக்கெட் விலை ஐந்தே ரூபாய்தான். சல்லிசான செலவில் திரைப்படங்கள் பார்ப்பதுடன், குறைந்த விலையில் டிபனும் அங்கே கிடைத்தது. எனவே, வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டாமல் சற்றே ரிலீஃபாக இருக்க முடிந்ததால் அந்த இடத்தை விட்டு நகரும் உத்தேசமில்லாமல் போனது எனக்கு.

எதற்கும் ஒரு முடிவு உண்டு- நாம் வாழும் இந்த வாழ்க்கை உட்பட. அப்படி ஜாலியின் இடத்தில் இருந்து நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒரு முடிவு வந்தது. அதன் விளைவாக, நான் கம்ப்யூட்டர் பிசினஸைக் கைவிட்டுப் பழையபடி வேலைக்குப் போக நேர்ந்தது. ஒரு இடமல்ல… சென்னையில் மட்டும் ஐந்து இடங்களில் வேலை மாறினேன். ஒவ்வோரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தாவும்போதும் எனக்கு நிறைய சிறிய/பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றும் என்னை உரமாக்கின, வளர வைத்தன. அவற்றை இனிவரும் நாட்களில் சொல்கிறேன். இப்போது… 

-சற்றே இளைப்பாறலாம் நாம்.

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. இந்திய நண்டுகள் ! ஹா ஹா.
    வாழ்க்கைச் சவால்களைக் கூட ரசமாக சொல்வது ஒரு கலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button