
சிவகாமியின் சபதம்..!
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்!!’
சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு நாவல். இந்தக் கதையைத் திரைப்படமாக்க எம்ஜிஆர் முயற்சி எடுத்து, இயக்குநர் மகேந்திரன் திரைக்கதை எழுதித் தர, அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், ஏதேதோ காரணங்களால் அந்த ப்ராஜக்ட் கைவிடப்பட்டது. அதன்பின் பலப்பல ஆண்டுகள் கழித்து, தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி அதைத் தொடர் திரைப்படங்களாக வெளியிட இருக்கிறார்.
மக்களின் மனதில் பதிந்த கல்கியின் கதாபாத்திரங்கள் திரை வடிவத்தில் அவர்கள் எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்வார்களா என்பதுதான் தற்போதைய சூடான விவாதம். அதற்கோர் முடிவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். எம்ஜிஆர் ‘பொன்னியின் செல்வன்’ ப்ராஜக்ட்டைக் கைவிட்ட சில ஆண்டுகள் கழித்து ‘சிவகாமியின் சபதம்’ நாவலைப் படமாக்கவும் முயற்சி எடுத்தார் என்பது உங்களில் பலரும் அறிந்திராத தகவலாக இருக்கும் (என்று நம்புகிறேன்).
1986-ல் கமலஹாசன் ‘விக்ரம்’ என்றொரு படத்தைத் தயாரித்து, நடித்து வெளியிட்டார். நினைவிருக்கிறதுதானே…. அந்தப் படத்திற்கான பட்ஜெட் ஒரு கோடி ரூபாய். ‘கமலின் ஒரு கோடி ரூபாய்க் கனவு’ என்று தனிப் புத்தகமே வெளியிட்டார்- படத்தின் கதையையும், ஸ்டில்களையும் கொண்டு. 1986-லேயே ஒரு கோடி என்பது பிரம்மாண்ட பட்ஜெட் என்றால், அதைப் பதினைந்து வருஷங்களுக்கு முன்பே சாத்தியப்படுத்த முயன்றவர் மக்கள் திலகம். ஆம், ‘சிவகாமியின் சபதம்’ படத்தின் பட்ஜெட் ஒரு கோடி ரூபாய்கள்!! அதிலும் தமிழில் முதல் அகன்றதிரை வண்ணப்படமாகத் தயாரிக்கத் திட்டம். (திட்டம் கைவிடப்பட்டதால் 1973-ல் வந்த ‘ராஜராஜசோழன்’ அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றது.)
ஜி.உமாபதி (மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ பட வில்லன்) தயாரிக்க, மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன் ஆகிய இரு முக்கியக் கதாபாத்திரங்களிலும் எம்ஜிஆரே நடித்து, அவரே இயக்குவதாக முடிவாயிற்று. நாகநந்தி, புலிகேசி என்ற வில்ல இரட்டையர்கள் வேடத்திற்கு ஆஸ்தான வில்லன் நம்பியார் என்பதையும், கதையின் மற்றொரு முக்கியக் கதாபாத்திரமான பரஞ்சோதி கேரக்டருக்கு முத்துராமன் என்பதையும் எளிதாக முடிவு செய்ய முடிந்த எம்ஜிஆரால் சிவகாமி கதாபாத்திரத்திற்கு ஏற்றவரைத் தேர்வு செய்ய முடியவில்லை.
மருத்துவராகவும், சிறந்த நடனமணியாகவும் விளங்கிய பத்மா சுப்ரமணியம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரைக் கேட்டார். அவர் திரைப்படங்களில் நடிக்க உறுதியாக மறுத்து விட்டதால், அடுத்த சாய்ஸ் வைஜயந்திமாலாவாக இருந்தது. எம்ஜிஆர் கேட்டபடி மொத்தமாகத் தேதிகள் தர இயலாதென்று அவரும் கை விரித்துவிட, இறுதியாக தன் ஆஸ்தான கதாநாயகியான சரோஜாதேவியையே தேர்வு செய்தார். எம்ஜிஆரின் அரச கட்டளை, கலங்கரை விளக்கம் ஆகிய படங்களில் ச.தேவியின் பரதநாட்டியத்தைப்(?) பார்த்திருந்த ரசிகக் கண்மணிகளுக்கு அவர்தான் சிவகாமி என்றதுமே பகீரடித்திருக்கும்.
சங்கர் லீ என்கிற ஓவியரைக் கொண்டு படத்திற்கான ‘ஸ்டோரி போர்ட்’கூட வரைந்து பார்த்தார் மக்கள் திலகம். (ஸ்டோரி போர்ட் என்பது கதையின் முக்கியச் சம்பவங்களை காமிரா ஆங்கிளிலிருந்து, ஆடையணிகள், ஒளியமைப்பு வரை கோட்டோவியங்களாக வரைந்து வைத்துக் கொள்வது. அதை அடிப்படையாகக் கொண்டு காட்சிகள் எடுக்கப்படும்.)
இத்தனை செய்தும், படத்திற்குப் பூஜை போடப்பட்டும் வளராமல் நின்றுபோனது ஏன் என்பது புரியாத புதிர். எம்ஜிஆரின் பல படங்கள் ஏன் கைவிடப்பட்டன என்பதற்குக் காரணங்களை பலர் பலவிதமாகச் சொல்வார்கள். உண்மைக் காரணம் என்ன என்பதை அவரே மீண்டெழுந்து வந்து சொன்னால்தான் உண்டு. எப்படியோ… படம் நின்றுபோனது மட்டும் நிஜம்.
தந்தை மகன் வேடங்களில் எம்ஜிஆர் நடிக்கவிருந்த முதல் படம் (அடிமைப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். அப்பா ப்ளாஷ்பேக்கில் இறந்தபின்தான் மகன் வருவார். இருவருக்குமான காட்சிகள், அதாவது வயதான எம்ஜிஆர் வரவே மாட்டார் அதில்.), தமிழின் முதல் அகன்ற திரைப்படம் என்றெல்லாம் பெருமைகளைப் பெற்றிருக்க வேண்டிய படம் நின்று போனது நிச்சயம் தமிழகத் திரை ரசிகர்களுக்கு பெரும் இழப்புதான்.
*
‘நீங்களறிந்த தமிழ் ஓவியர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்..’ என்று கேட்கப்பட்டால் வினுவில் துவங்கி, ஸ்யாம் வரைக்கும் கடகடவென்று சொல்வீர்கள். அதற்கும் முந்தைய தலைமுறை ஓவியர்களைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்காது – இன்றையத் தலைமுறையினரில். அத்தகைய பழைய ஓவியர்கள் சிலரைப் பற்றித் தொடர்ந்து பேச விரும்புகிறேன்.
எஸ்.ஏ.பி. அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குமுதம்’ இதழில் அட்டை ஓவியங்களை வர்ணம் வரைந்தார். பிறகு மாருதி, அதற்கும் பிறகு புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. வர்ணத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் குமுதம் அட்டைகளை வரைந்தவர்கள் ரவி, ராகி போன்றோர்.
ராகி என்கிற ராமகிருஷ்ணன் அந்நாளில் குமுதம், கலைமகள், சுதேசமித்திரன் எனப் பல இதழ்களில் வரைந்து தள்ளியவர். இவரது பெரும்பாலான ஓவியங்களில் கதாபாத்திரங்கள் புன்னகை முகத்தினராகவும், கண்கள் அரைவாசி திறந்தபடியும் இருப்பது வழக்கம். ஆனால் அனாடமி என்று சொல்கிற உடற்கட்டு மிகக் கச்சிதமாக இருக்கும் இவரது கைவண்ணத்தில். சரித்திரக் கதைக்கு வரைகிறார் என்றால் அந்த ஓவியங்கள் மட்டும் கம்பீரமும் அழகுமாக இவரது கைவண்ணத்திலேயே ஒரு தனி ரகமாகத் தெரியும். (இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க).
*
விஷ்ணு ஸாகரம் காண்டேகர் என்கிற வி.ஸ.காண்டேகர் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு எழுத்தாளர். 1950-ல் துவங்கி 70-கள் வரையில் காண்டேகர் தமிழிலும் பிரபலமான எழுத்தாளராகத் திகழ்ந்தவர். மராத்தி எழுத்தாளரான இவரது கதைகளை மூலத்தின் அழகு குறையாமல், பல சமயங்களில் மூலத்தை விடவும் அழகாக மொழி பெயர்த்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்பவர்.
காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரிய ஸ்ரீனிவாசன் என்கிற கா.ஸ்ரீ.ஸ்ரீயை, “மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழிபெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட” என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார் வி.ஸ.காண்டேகர் என்றால், அதற்கு மேல் என்ன சொல்ல..? இந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்பவர் மொழி பெயர்ப்பாளராக இருந்ததுடன் அவரே ஒரு எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பல நூல்களை தமிழில் இயற்றியிருக்கிறார்.
அந்நாளில் என் வீட்டில் தொடர்கதைகளாக வந்தவைகளைக் கிழித்து பைண்டிங் செய்த நூல்கள் நிறைய இருந்தன. பள்ளியிறுதித் தேர்வு முடிந்தபின் வரும் விடுமுறைகளில் மட்டும் கதைப் புத்தகங்கள் படிக்க அனுமதி கிடைக்கும். சாண்டில்யன், தேவன் போன்றோரின் இடையே ரமண்லால் வஸந்தலால் தேசாய், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பிறமொழி எழுத்தாளர்களின் தொடர்களும் நிறைய இருக்கும். அந்நாளில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பத்திரிகைகள் அப்படி வளர்த்தன.
அந்த வயதுக்கு என்னால் ரவீந்திரநாத் தாகூரையும் இன்ன பிற பிறமொழி எழுத்தாளர்களையும் படித்து, ஜீரணிப்பது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், தமிழிலேயே எழுதப்பட்டது போன்ற சரளமான நடையும், எளிமையான கதை சொல்லல் முறையும் காண்டேகரின் கதைகளைப் படிக்க ஈர்த்தன. மேலுக்கு எளிமையான கதைகளாகத் தோன்றியவை, பலகாலத்துக்குப் பின் மீண்டும் யோசித்து, மீள்வாசிப்பை நிகழ்த்துகையில் விஷய கனம் கொண்டவைகளாகவும் புதிய தரிசனத்தைத் தந்தன.
இந்நாளில் எண்டமூரி வீரேந்திரநாத் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்களால் அடைந்த உயரத்தைவிட வி.ஸ.காண்டேகர் அடைந்த உயரம் அளப்பரியது. எப்படியென்றால் அவரது பல படைப்புகள் தமிழில் முதலில் வெளியான பின்பே அவர் எழுதிய மராத்தியில் வெளியாகின என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வி.ஸ.காண்டேகர் தன்னுடைய ‘யயாதி’ நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதையும், ஞானபீட விருதையும் வென்றார். ‘யயாதி காமத்திற்கும் ஒழுக்கத்திற்குமான மாபெரும் ஊசலாட்டத்தைச் சொல்லும் பேரிலக்கியம்’ என்கிறார் ஜெயமோகன். தவிரவும், ‘உயர்ந்த இலட்சிய நோக்குள்ள கதாபாத்திரங்கள், இலட்சியவாதக் கருத்துக்கள் மண்டிய நடை, உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றாலானவை காண்டேகரின் படைப்புகள்.’ என்றும் குறிப்பிடுகிறார்.
யயாதி, புயலும் படகும், மனோரஞ்சிதம், வாயு கன்னிகை, வெண்முகில், வெறும் கோயில், கிரௌஞ்ச வதம் போன்ற படைப்புகள் அவரது நாவல்களில் முக்கியமானவை. ‘கிரௌஞ்ச வதம்’ என் அபிமான நூல்களில் ஒன்று.
இதுவரை நீங்கள் காண்டேகரைப் படித்து அனுபவித்ததில்லையெனில், உடன் முயற்சியுங்கள் என்பதைத் தயங்காமல் சொல்வேன். எங்கே கிடைக்கும்? என்போருக்காக… சென்னை மயிலாப்பூரிலுள்ள ‘அல்லயன்ஸ்’ பதிப்பகத்தில் கிடைக்கும்.
சரக்கு இன்னும் உண்டு…