இணைய இதழ்இணைய இதழ் 56தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 5 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

பச்சை உறக்கம்.!

ந்த விளம்பரத்தைத் ‘தினமலர்’ இதழில் பார்த்தபோது அது அவர்கள் நிறுவனத்திற்காகக் கொடுத்த விளம்பரம் என்று நிச்சயம் நான் யூகிக்கவில்லை. சக வேலைதேடியான என் நண்பன் ராமனிடம் காட்டியபோது, ‘போஸ்ட் பாக்ஸ் நம்பர் குடுத்திருக்காங்கல்ல..? இது தினமலர் வேலைக்கான விளம்பரம்ஜி’ என்றான். சரி, இருந்தால் சந்தோஷம்தானே என்று இருவருமாக அப்ளை செய்து வைத்தோம். வேறென்ன… வழக்கம்போல ‘தமிழ் டைப்பிங் சிறப்பாகச் செய்யத் தெரிந்த, கம்ப்யூட்டர் கொஞ்சமேனும் தெரிந்த நபர் தேவை’-தான். தினமலர் லெட்டர்ஹெட்டில் இன்டர்வ்யூ லெட்டர் வந்தபோதுதான் ஜெயித்தது ராமன் என்பது தெரிந்தது.

போனதும், வந்திருந்த அத்தனை பேரையும் அரை மணி நேரம் தமிழ் டைப்பிங் செய்து காட்ட வேண்டும் என்றார்கள். கம்ப்யூட்டர் முன் உட்கார வைக்காமல் பச்சை நிறமான மானிட்டர் ஒன்றுக்கு முன்பாக (டேட்டா எண்ட்ரி மிஷின்) உட்கார வைத்து, அரை மணி நேரம் டைப்பியபின் எத்தனை கீ இம்ப்ரஷன் செய்தார்கள் என்று குறித்துக் கொண்டு போனார்கள். அந்த பச்சைத் திரையை அரைமணி நேரம் பார்த்ததற்கே வெளியே வந்ததும் கண்ணில் பூச்சி பறந்தது. வேலைக்குச் சேர்ந்தபின் முதலிரண்டு மாதங்கள் அதில்தான் டைப்ப வேண்டியதாயிற்று. காலை பேப்பர் என்பதால் நைட் ஷிப்டில்தான் வேலை. மாலை ஆறுமணிக்குப் போனால் பணி முடிய இரவு ஒன்றரை அல்லது இரண்டாகிவிடும். இரவில் பணி முடிந்து விடியும்நேரம் வீட்டில் போய்ப் படுத்தால் கண்ணுக்குள் பச்சை பச்சையாய்க் கோடுகள் ஊர்வலம் போகும். தூக்கம் வரவே நேரமாகும். உலகத்தோர் எல்லாம் ஆபீஸ் புறப்படும் பிஸியான நேரத்தில்தான் நான் ஆழ்ந்த உறக்கத்துக்குள் சென்றிருப்பேன்.

அன்று கீ இன் செய்தவர்களில் நான்தான் டாப். இண்டர்வியூவில் கஷ்டப்பட்டு மூளையைக் குடாய்ந்து கொள்ளும் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. சிம்பிளாக நாலைந்து கேள்விகள் கேட்டு, ‘நாளைக்கு வியாழக்கிழமை, வேண்டாம். நாளன்னிக்கு வெள்ளி முகூர்த்த நாள் ஜாயின் பண்ணிடுங்க’ என்றார் நிர்வாகி. ராமனுக்கும் இதுவே சொல்லப்பட்டதில் குஷியாகி வெளியே வந்தோம். நானும் அவனும் ஒரே ஏரியா, அவன் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் ஓனர், நான் இன்ஸ்ட்ரக்டர், சேர்ந்தே ஊரைச் சுற்றும் இளைஞர்கள், ஒரே ஏரியாக்காரர்கள். எனவே, சேர்ந்து வேலையும் பார்க்கப் போகிறோம் என்கிற குஷி.

வேலையில் முதல்நாள் நுழைந்ததுமே ‘ழே’ என்று விழிக்க வேண்டியதாயிற்று. காரணம், செக்ஷனில் இருந்தது எட்டு கம்ப்யூட்டர்கள். ஒன்று வெளிநாட்டுத் தூதுவர் மாதிரி. ஹெட்டாபீஸான சென்னையில் இருந்து ஃபைல் வாங்கவும், மற்றப் பதிப்புகளுக்குச் செய்திகள் அனுப்பவுமாக அந்த நியூஸ் ஸ்டேஷன் ஆல்வேஸ் பிஸி. எஞ்சியிருப்பது ஏழு கம்ப்யூட்டர்கள். அதில் ஒன்று டேட்டா எண்ட்ரி மெஷின். காலை ஷிப்டுக்கு நான்கு பெண்கள். மாலை ஷிப்ட்டுக்கு ஆறு ஆண்கள் இருந்திருக்கிறார்கள். புதிதாக அப்பாயிண்ட் செய்யப்பட்ட நாங்களோ ஏழு பேர். ஆக, இரவு ஷிப்ட்டில் பதின்மூன்று பேர். மெஷின்களோ ஆறு + ஒரு ஒப்புக்குச் சப்பாணி.

என்ன செய்தார்கள் என்பதைச் சொல்வதற்கு முன், ஏன் தெரிந்தே இத்தனை அதிகமான பேர்களை அப்பாயிண்ட் செய்தார்கள் என்றொரு ஐயம் எங்களைக் குடைந்தது. முதல் நாளிலேயே நன்கு பழகிய ஒரு சீனியரை டீக்கடைக்குத் தள்ளிப் போய் விசாரித்தோம். சென்னை பிராஞ்சுக்கு ஆள் தேவைப்பட்டதால், மதுரையிலிருந்து இருவரை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். சுந்தரேசன், வெற்றிவேல் என்ற அந்த இருவரும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திறமையாக விளம்பரம் வடிவமைப்பவர்கள் மற்றும் அதிவேகத் தட்டச்சு நிபுணர்கள். அவர்கள் போனபின் செக்ஷனின் செயல்திறன் குறைந்து விட்டதாக அவர்களுக்கு வேண்டியவர்கள் பேசப்போக, “ரெண்டு பேர் போனா என்னடா, அவங்களவிட பெஸ்டா ஒரு டஜன் பேரைக் கொண்டாந்து குவிக்கறேன் பாரு” என்று கத்திய நிர்வாகி, அதைச் செயலில் காட்டியதாக ரகசியத்தை அவிழ்த்தார்.

நாங்கள் இருந்தது வடிவமைப்புப் பிரிவு. அதற்கு அந்நாளில் ‘பிடிஎஸ் செக்ஷன்’ என்று பெயர். இந்நாளில் அது ‘லேஅவுட் செக்ஷன்’. பழைய பெயர்க் காரணத்தைத் தெரிந்து கொள்ள, பத்திரிகைகள் காலந்தோறும் வடிவமைக்கப்பட்ட விதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் ஆபரேட்டர் தட்டச்சு செய்ததும் ஈய எழுத்துக்கள் தலைகீழாக நீள்கம்பியால் எடுக்கப்பட்டு, ப்ளாக்கில் சேர்க்கப்படும். அவை ‘கேலி’ என்கிற டம்மி பேப்பரில் அச்சிடப்பட்டு, பிழை திருத்தியபின், நீள் காகித உருளைகள் சுழலும் பேரியந்திரங்களில் அச்சிட அனுப்பப்படும்.

அடுத்த தலைமுறை வடிவமைப்பில் ஆரம்பநிலைக் கம்ப்யூட்டர்கள் பங்கு பெற்றன. அவற்றில் ஆபரேட்டர்கள் டைப்பியது டார்க் ரூமிலுள்ள மெஷினுக்கு அனுப்பப்பட்டு, அது பேப்பரில் அச்சாகி, கெமிக்கலில் குளித்து, காய்ந்து பின் மிஷினிலிருந்து வெளியே வரும். (போட்டோக்களை டெவலப் செய்யும் அதே மெத்தட்தான்.) பின் அவற்றை வெட்டி, ஒட்டி பக்கங்கள் தயார் செய்து ஃபிலிம் எடுத்து, அதிலுள்ளவை ப்ளேட்டின் மேல் பதிய வைக்கப்பட்டு (இதுவும் இருட்டறை சமாச்சாரம்தான்) அந்த ப்ளேட்கள் அச்சியந்திரத்தில் பொருத்தப்பட்டு பேப்பர் அச்சாகும். அந்தக் கம்ப்யூட்டர்கள், இருட்டறைக்கு அனுப்பி டெவலப்பாகும் ப்ராசசுக்கு ‘போட்டோ டைப் செட்டிங்’ (Photo Type Setting) என்று பெயர். எனவே, அந்த செக்ஷனுக்கும் அதுவே பெயராயிருந்தது. அடுத்த நிலை கம்ப்யூட்டர்கள், லேசர் ப்ரிண்டர் எல்லாம் வந்துவிட்ட, நாங்கள் சேர்ந்த காலத்திலும் அந்தப் பெயர் மாறவில்லை.

ஆட்களைச் சமாளித்த விதத்துக்கு வருவோம். சீனியரில் ஒருவர் செக்ஷன் ஹெட், அவருக்கு மேல் இன்ஜினியர். இருவரும் கலந்தாலோசித்து புதியவர்கள் அனைவரையும் ஆளுக்கொரு செய்தியின் பேராகிராப் தமிழில் எழுதித் தரச் சொன்னார்கள். என் கையெழுத்தும், தலையெழுத்தைப் போலவே கோணாலாக இருக்கும் என்பதால் நான் தேறவில்லை. யாவரிலும் முத்துக் கோர்த்தது போலிருந்த கையெழுத்து ராமனுடையது. அவனை ஒரு சேரில் அமர்த்தி, லெட்ஜர் ஒன்றைக் கொடுத்து, “நியூஸ், விளம்பரம் உள்ளே வரும் நேரம், ப்ரூப் படிக்கப் போகும் நேரம், ப்ரூப் படித்து வந்த நேரம், பிழைதிருத்தி ஃபைனல் வெளியே போன நேரம் எல்லாத்தையும் நீ எண்ட்ரி போடு. இனி அதான் உன் வேலை” என்றார்கள். முதல் விக்கெட் காலி.

அடுத்த இரண்டு விக்கெட்களை அழைத்து, “ஜெய், வேலு நீங்க ரெண்டு பேரும் லேஅவுட் செக்ஷனுக்குப் போயி அவங்க கேக்கறதை இங்க வந்து ப்ரிண்ட் அவுட் வாங்கிட்டுப் போய் குடுக்கணும். ஆரம்பிங்க” என்று பத்தி விட்டார்கள். ஆக, மூன்று விக்கெட் ஓவர். செக்ஷன் ஹெட் உள்ளே போய் நான்கு கீ போர்டுகளை எடுத்து வந்தார். இரண்டு சேர்களில் இருவரை அமர வைத்து, கூடவே தமிழ் டைப்பிங்கின் கீபோர்ட் லேஅவுட்டைக் கொடுத்து, “இதப் பாத்து தமிழ் டைப் பண்ணி பழகிக்குங்க” என்றார். காரணம், தமிழ் டைப்ரைட்டரில் இருப்பது போன்ற கீபோர்ட் செட்டப் தினமலரில் கிடையாது. இன்றளவும் அவர்களுக்கெனத் தனியாக வடிவமைக்கப்பட்ட ‘மாடுலர் கீபோர்ட்’ என்பதுவே அங்கே புழங்கி வருகிறது.

செக்ஷன் ஃபுல்லாகி விட்டதால் என்னையும், என்னுடன் சேர்ந்திருந்த ஸ்ரீதரையும் வெளியே அழைத்து வந்தார். ப்ரூஃப் செக்ஷனுக்கு அருகில் ஒரு மேஜை காலியாக இருக்க, அங்கே இரண்டு சேர்களைப் போட்டு, “நீங்களும் கீ ப்ராக்டிஸ் பண்ணுங்க” என்று டைப்ரைட்டர் லேஅவுட் ப்ரிண்ட் அவுட்டைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். முதல் இருவராவது செக்ஷனுக்குள் இருந்ததால் யார் கண்ணிலும் படமாட்டார்கள். ப்ரூஃப் செக்ஷனுக்குத் தனி அறை கிடையாது. விசாலமான நடைபாதையில் நான்கு மேஜை, சேர்கள் போட்டு அவற்றில்தான் வைத்துத் திருத்துவார்கள். நாங்களும் அவர்கள் அருகில் அமர்ந்து வெள்ளைச் சுவரைப் பார்த்து, கீபோர்டில் டைப்பிக் கொண்டிருந்தோம். 

அடுத்த சில நாட்களுக்கு, டெலிப்ரிண்டிங், காமிரா ரூம், விளம்பரப் பிரிவு, லேஅவுட் செக்ஷன்… இப்படி எல்லா செக்ஷனிலிருந்தும் நடமாடிக் கொண்டிருந்தவர்கள் எங்களை வினோத ஜந்துக்கள் போலப் பார்த்தபடி கடந்து சென்றார்கள். ‘என்னடா கொடுமை இது?’ என்று விதியை நொந்தபடி டைப்பிக் கொண்டிருந்தோம். ஆனால், அந்த குருட்டுத்தனமான தட்டச்சு முறையினால் செக்ஷனில் கூடுதல் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்பட்டு எங்களுக்கு இடம் கிடைத்தபோது, எங்கள் செயல்திறன் மற்றவரைவிடக் கூடுதலாக இருந்ததை உணர்ந்தோம். ஆனால், நான் சொன்ன அந்தக் கூடுதல் கம்ப்யூட்டர், உள்ளே இடம் என்கிற ப்ராசஸ் நடக்க மாதக்கணக்கானது. ஒரு வாரத்துக்கு மேல் இப்படி வெட்டவெளி டைப்பிங்கைத் தாங்க முடியாமல் உள்ளே போய் இன்ஜினியரிடம் புகார் செய்தோம். “இன்ஜி சார், இப்டி வேலை பாக்கறதுக்கு நாங்க ரிசைன் பண்ணிடறோம் சார்” என்றதும் பதறிவிட்டார். டாப் டைப்பர்ஸாக வந்தவர்கள், சட்டென்று ரிசைன் பண்ணினால் நிர்வாகி அவரைத்தானே குடைவார்..? “இருங்கய்யா… அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க. நான் இதுக்கு ஒரு வழி செய்யறேன். நாளைலருந்து நீங்க வெளிய டைப் பண்ண வேண்டாம். செக்ஷனுக்கே வந்துடுங்க. ஓகேயா..?” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாளிலிருந்து ஒரு தற்காலிக நிவாரணத்தைக் கண்டுபிடித்தார் மிஸ்டர் பொறி(யாளர்). சுழற்சி முறை வேலை. ஒரு கம்ப்யூட்டரில் ஒரு நபர் ஒன்றரை மணி நேரம் வேலை பார்த்தால் அடுத்த ஒன்றரை மணி நேரம் ரெஸ்ட். அதுகாறும் ரெஸ்ட் எடுத்தவனுக்கு அந்த நேரத்தில் வேலை. இப்படிச் செய்ததில் ஒரே ஷிப்ட்டில் எல்லாருக்கும் வேலையும் இருந்தது, செமை ரெஸ்ட்டும் கிடைத்தது. இந்தத் தற்காலிகமும் தாக்குப் பிடித்தது ஒரே வாரம்தான். ஏன்..? வேலை பார்க்காமல் இருந்த பயல்கள் வாயை மூடிக் கொண்டிராமல் பேசிக் கொண்டும், மற்றவர்களைக் கேலி செய்து கொண்டும் கொடுத்த சத்தம்தான். சும்மா இருக்க விட்டால் சத்தம் அதிகமாகிறதே என்று இந்தத் தற்காலிக நிவாரணத்தை உதறிவிட்டு, நிரந்தர நிவாரணத்திற்கு ஒரு ஐடியா செய்தார் பொறி. அவர் செய்த ஐடியாவால் புதுமையான வேலை அனுபவம் எங்களுக்குக் கிடைத்தது. கூடவே, தொழிலில் சிறப்பாக ஜொலிக்க எனக்குச் சந்தர்ப்பமும் கிடைத்தது.

அப்படியென்ன நிர்வாணத்தை… ச்சே, நிவாரணத்தைச் செய்தார் பொறி..? ஏற்கனவே இந்தக் கட்டுரை போதுமான அளவு நீண்டு விட்டதால், அடுத்த எபிஸோடில் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்….

(சரக்கு இன்னும் உண்டு..)

balaganessh32@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. உங்கள் வார்த்தை ஜாலம் நீங்கள் பட்ட கஷ்டத்தை மறக்க வைத்து ரசிக்கத் தூண்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button