
பத்திரிகையில் என் படைப்பு!
தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்த ‘ஊஞ்சல்’ இதழ் இரண்டாண்டுகளுக்குப் பின் ஆட்டகதியில் சற்றே மாற்றம் கண்டது. பப்ளிஷர் பக்கங்களைக் குறைத்து, மற்ற மாதநாவல்கள் போல நாவலை மட்டும் வெளியிட விரும்பினார். அவர் தரப்பில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன என்பதால் எடிட்டரும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. இப்போது 96 பக்க நாவல், அதிலும் நாவல் தவிர வேறெதுவும் இல்லை என்பதால் வடிவமைப்புப் பணியும் எளிது. சப்-எடிட்டர் என்றொருவர் தேவையுமில்லை என்றாகியது. எனவே, அந்தப் பணியைத் தொடர இயலாமல் போனது.
ஓராண்டுக்கும் மேலாக ஓரிரு மாதங்கள் கிழக்குப் பதிப்பகத்தில் பணி செய்த நான் அதிலிருந்து விலகியிருந்தேன். மறுபடி வேறு எங்கும் வேலை என்று தேடியலைய மனம் விரும்பாததால், ப்ரீலான்ஸராக புத்தக வடிவமைப்பைச் செய்தால் என்ன என்று மனதுக்குத் தோன்றி, அதைச் செயல்படுத்த ஆரம்பித்திருந்தேன். மோசமில்லாத அளவு வருமானம் கிடைத்தது என்றாலும் கூடவே சில விசித்திரமான அனுபவங்களும் கிடைத்தன- அனேகமாக வேறெந்த வடிவமைப்பாளரும் சந்தித்திருக்க வாய்ப்பிராத அனுபவங்கள்.
ஒருசமயம் புத்தகம் வடிவமைக்கும் வாய்ப்புத் தந்த ஒருவர், அவரது இடத்திலேயே உள்ள கம்ப்யூட்டரில் வடிவமைத்துத் தரச் சொன்னார். வேலையை ஆரம்பிக்கலாம் என்று போனால்… அவர் வைத்திருந்த இயந்திரமானது, கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். அத்தனை மெதுவான வேகம் கொண்டதாக இருந்தது. சாஃப்ட்வேர் திறக்கவே ஐந்து நிமிடமானது. தமிழ் எழுத்துருக்கள் எதுவும் அதில் இருக்கவும் இல்லை. அவை எதற்கு அவசியம் என்பதை அவருக்குப் புரிய வைக்கவும் முடியவில்லை. நொந்து போனேன். இதுபோல் மேலுமிரண்டு அனுபவங்களுக்குப் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். இன்றைக்குக் கழுதைகளும் கம்ப்யூட்டர் (என்ற பெயரில் ஏதோவொன்று) வாங்கி வைத்திருக்கின்றன. எங்கும் போய் வேலை செய்வதில்லை என்பதே அது. அதன்பிறகு, என் கணிப்பொறியில் மட்டுமே வடிவமைக்க ஆரம்பித்தேன்.
எனக்குப் பழக்கமான பதிப்பாளர் ஒருவருக்கு பல புத்தகங்கள் வடிவமைத்திருந்தேன். வடிவமைப்புக்கான சன்மானத்தைப் பொறுத்த வரையில் நான் அதிகத் தொகை கேட்பதில்லை, மற்ற வடிவமைப்பாளர்களைவிடக் குறைவான தொகையைத்தான் கேட்பது வழக்கம். மேற்படி பதிப்பாளர் ஒருமுறை புத்தகம் வடிவமைத்தற்கான பணத்தைக் கேட்டபோது மிகக் குறைவாக நிர்ணயித்தார். ஏனென்று கேட்டால், “ஆதரே வேர்ட் பைலாக் குடுத்துடறார். உங்களுக்கு டைப்பிங் பண்ற வேலையில்லை, ஜஸ்ட் எடுத்து பேஸ்ட் பண்றதுதானே..” என்றார். அந்த ஆசாமிக்கு நான் செய்து தந்த கடைசிப் புத்தகம் அதுதான்.
-இப்படிச் சிலபல மடையர்களை இனங்கண்டு விலக்கினேன். ஓரிருவர் வேலை வாங்கியபின் பணம் தராமல் நாமம் போட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனாலும்கூட வருத்தப்பட்டுக் கொள்ளாத அளவுக்கு வருமானம் வரத்தான் செய்தது. ப்ளாக்கில் எழுதிக் கொண்டிருந்தது தவிர, ஃபேஸ்புக் என்கிற ஒன்று எனக்கு அறிமுகமாகியிருந்தது. ப்ளாகில் பதிவு எழுதினால், அதைப் படிக்க இங்கே நண்பர்களானவர்களை அழைப்பது என்கிற அளவில்தான் நான் அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். அதை மாற்றினார் ஆத்மார்த்தி என்ற கவிஞர்.
இங்கே ஒரு சின்ன ப்ளாஷ்பேக். ஒருமுறை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களைச் சந்திக்க அவர் இல்லத்துக்குச் சென்றிருந்த சமயம், அவர் தயாராகி வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படிக் காத்திருக்க நேரும் சமயங்களில் அவர் மேஜையிலிருக்கும் புத்தகங்களில் ஏதாவதொன்றை எடுத்துப் படிப்பது என் வழக்கம். அப்படி அன்று கையில் சிக்கியது ‘மனக்குகை சித்திரங்கள்’ என்ற புத்தகம். ‘ஆத்மார்த்தி’ என்பவர் எழுதியிருந்தார். ஏனோ அந்தப் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. எடுத்துப் படித்தேன்.
முதலிரண்டு அத்தியாயங்கள் மதுரை, அங்குள்ள பழைய புத்தகங்கள் என்று என்னை என் சிறுவயதுக்கே இட்டுச் சென்றன. இந்த ஆத்மார்த்தி மதுரைக்காரர் என்பது தெரியவந்ததுமே மனதுக்கு மிக நெருக்கமாகி விட்டார். அதன்பின் டிஸ்கவரி புக் பேலசில் ஒரு புத்தக வெளியீட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டேன் அவரை. அவரது புத்தகங்களை அன்பளித்தார். அடுத்தடுத்த சந்திப்புகளில் மிக நெருக்கமானவரானார் – என்னை அண்ணன் என்றே அழைக்கவாரம்பித்தார்.
ப்ளாஷ்பேக் ஓவர். ஃபேஸ்புக்கிலும் ரவிசங்கர் என்கிற ஆத்மார்த்தி என் நட்பு வட்டத்தில் இருந்தார். என்னைக் கூர்ந்து கவனித்திருக்கிறார். பரஸ்பர புத்தகப் பரிமாறலில் என் எழுத்தும் அவருக்குப் பரிச்சயமாகியிருந்தது. “அண்ணே, ஃபேஸ்புக்ன்றது பெரிய ஏரியா. ப்ளாக்ல எழுதறதை அறிவிக்கறதுக்கு மட்டும் யூஸ் பண்ணாதீங்க. சின்னச் சின்னதா ஒன்லைனர்ஸ் எழுதுங்க. உங்க ஹ்யூமர் எல்லாருக்கும் பிடிக்கும். இது பெரிய அளவுல ரீச்சாகும்” என்று அட்வைஸினார்.
‘சரி, எழுதினாத்தான் என்ன குறைஞ்சுடப் போகுது’ என்று தோன்றியது. சின்னச் சின்னதாய்ப் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். நான் ரசித்த ஜோக்குகள், ஓவியங்கள் போன்றவற்றைப் பகிர ஆரம்பித்தேன். அவையெல்லாம் பரவலான வரவேற்பைப் பெற்றது. என் நட்பு வட்டம் விரிவானது. பலப்பல பிரபலங்களும் எனக்கு நட்பானார்கள். இங்கேயும் நிறையப் பேருக்குத் தெரிந்தவனானேன் என்பதில் மிக மகிழ்ந்தேன். அதன் விளைவாக வேறொரு நல்ல விஷயமும் நடந்தது.

இந்நாளையில் பழைய அடாசு மொபைலைத் துறந்துவிட்டு நவீனமான, இணைய வசதி கொண்ட மொபைல் ஒன்றுக்குச் சொந்தக்காரனாகியிருந்தேன். அப்படி ஓர்தினம் காலையில் மொபைலில் நெட்டை ஆன் செய்தால், மெசஞ்சரில் ஒரு செய்தி காத்திருந்தது. ‘நம்ம பத்திரிகைக்கு ஏதாவது எழுதலாமே?’ என்பதுதான் அந்த செய்தி. அனுப்பியிருந்தவர் பெயரைப் பார்த்ததும் ஆச்சரியத்தின், மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனேன். ஏனெனில், அனுப்பியிருந்தவர்… ப்ரியா கல்யாணராமன்.
நெட்டில் நன்றாக எழுதுகிற பலரையும் கவனித்து, பத்திரிகையில் எழுத வாய்ப்பளித்த பெருந்தகை அவர். அவர் வாழ்ந்த காலம் வரையில் என்னை எழுதத் தூண்டிக் கொண்டே இருந்தார் என்பது நான் வாழும் காலம் வரையில் நன்றியுடன் நினைக்க வேண்டிய ஒன்று. என் போன்ற பலருக்கும் தூண்டிவிடும் கரமாக அவர் இருந்திருக்கிறார் என்பதுதான் நிஜம்.
‘ஆஹா, நா பாக்யமு. என்ன செய்யலாம்னு சொல்லுங்க செஞ்சிடறேன், கதை, கட்டுரை, நாவல்..” என்று (சற்றே அதிகப்பிரசங்கித்தனமாக) பதில் போட்டேன். ‘நகைச்சுவைக் கட்டுரை ஒன்று அனுப்புங்கள்’ என்று சுருக்கமாகப் பதில் வந்தது. குமுதமாயிற்றே என்று சின்ஸியராக யோசித்து இரண்டு நாட்களில் இரண்டு நகைச்சுவைக் கட்டுரைகள் தயார் செய்தேன். ‘சார், இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். மெயில் ஐடி தாங்க.’ என்று கேட்டேன். அவருடைய நேரடியான மெயில் ஐடியே தந்தார். அனுப்பி வைத்தேன்.
முதல் வாரம் எதுவும் பதிலில்லை. இரண்டாவது வாரம், ‘குமுதம் லைஃப் பாருங்க’ என்று மீண்டும் ரத்தினச்சுருக்கமான பதில். அப்போது குமுதம் இதழுடன் சற்றே பெரிய அளவில் (ஜு.வி. சைஸில்) இணைப்பாக வந்து கொண்டிருந்தது ‘குமுதம் லைஃப்’. அதில் என் கட்டுரை பிரசுரமாகியிருந்தது. எனக்கேற்பட்ட மகிழ்ச்சியை, ‘சென்னை நகரமே அலம்பி விட்டாற்போன்று பளிச்சென்று தெரிந்தது.’ என்று சுஜாதாவின் வார்த்தைகளைக் கடன்வாங்கித்தான் சொல்ல முடியும். இணையவெளியைத் தாண்டி, பத்திரிகையிலும் பெயர் வரும் அளவுக்கு யோக்கியதாம்சம் வந்துவிட்டதே என்ற சின்ன புளகாங்கிதம் வேறு.
அப்படியே அந்தத் திமிரை மெயின்டெயின் பண்ணியிருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பேன். ஒரு வாரத்தில் அதிலிருந்து மீண்டுவந்து இயல்பானேன். கட்டுரை வந்த விஷயத்தை ப்ளாகிலும், ஃபேஸ்புக்கிலும் ஷேர் பண்ண, நிறையப் பாராட்டுகள். பாராட்டுகள் பற்றாதென்று அந்த மாத இறுதிக்குள் குமுதத்தின் சன்மானமும் வந்து சேர்ந்தது. என் போன் நம்பரையும், பேங்க் டீட்டெய்ல்ஸையும் பெற்று, ஆசிரியர் செய்திருந்த நேர்த்தியான ஏற்பாடு அது.
அதன்பின் ஓரிருமுறை போனில் பேசவும், விழாக்களில் சந்திக்கவும் வாய்த்தது ஆசிரியரை. திடீரென்று ரத்தினச் சுருக்கமாக அவரிடமிருந்து மெசேஜ் வரும்- ‘குமுதக் கதை ஒன்று அனுப்புங்கள்’ என்று. அந்தக் குமுதக் கதை என்பதற்கான முழுப்பொருள் எனக்குத் தெரியும். அப்படி ஜாலியான இரண்டு சிறுகதைகளை நான் அனுப்பி அவையும் பிரசுரமாயின. இவையெல்லாம் பின்னாளைய சம்பவங்கள். இப்போது முதல் கட்டுரை பிரசுரமான காலகட்டத்திலேயே இருப்போம்.
நியாயமாக நான் என்ன செய்திருக்க வேண்டும்..? ஒரு கட்டுரை பத்திரிகையில் பிரசுரமானால் அது தரும் போதையில் அடுத்தடுத்து நிறைய எழுதி தொடர்ந்து பத்திரிகை அலுவலகங்களை முற்றுகையிட்டிருக்க வேண்டும். அதுதானே நியாயமாக நடக்கக் கூடியது..? ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்து கொண்டிருந்தேன். ப்ரீலான்ஸர் என்பதால் தொடர்ந்து மாதம் முழுக்க வேலை செய்தால்தான் அந்த மாதச் செலவுக்கான பணத்தைத் தேற்ற முடியும் என்பது நிதர்சனம். எனவே, அப்படியே ஓடிக் கொண்டிருந்தேன். வேறு எதுவும் எழுத்து முயற்சியில் ஈடுபடவில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு விஷயம் செய்து கொண்டிருந்தார். ஃபேஸ்புக்கில் நன்றாக எழுதுகிற, சற்று முயற்சி செய்தால் பத்திரிகை எழுத்துகளிலும் ஜொலிக்கக் கூடியவர்கள் என்று அவர் இனங்காண்கிறவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார். தினத்துக்கு ஒருவராக அறிமுகம் செய்கிற அந்தப் பகுதிக்கு நிறையவே வரவேற்பு இருந்தது. ‘இன்றைக்கு யாரைப் பற்றிச் சொல்லுவார்?’, ‘நாளை யாரை இனங்காட்டுவார்’ என்று நண்பர்களுக்குள் பரபரப்பாக ஊகங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.
ஓர் இனிய தினத்தின் காலையில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். நானே அதுவரை அறிந்திராத என் ப்ளஸ் பாயிண்ட்டுகளை அழகாகப் பட்டியலிட்டு, ‘ஃபேஸ்புக்கிலும் இன்னபிற இடங்களிலும் அனாவசியமாகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து சற்றே முயன்றால், இவரால் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது அந்த போஸ்ட் நிறையக் கவனிப்பைப் பெற்றதுடன், என் நண்பர்களும், அறிமுகமாகாத பல புதியவர்களும்கூட வாழ்த்தியிருந்தார்கள்.
இது எனக்குப் பொறுப்புணர்ச்சியை அதிகமாக்கியிருந்தது. ‘இனி நிறைய எழுத வேண்டும்’ என்று முடிவு செய்தேன். எந்தத் திசையில் நகரலாம்? என்பதில் மட்டும் நிறையக் குழப்பம் இருந்தது. ஓரிரண்டு தினங்கள் யோசனையிலேயே கழிந்தனவே தவிர, தீர்மானம் எதுவும் வரவில்லை.
நல்லெண்ணத்துடன் ப.கோ.பி. சொன்ன வார்த்தைகளுக்குச் சக்தி அதிகம் இருந்திருக்க வேண்டும். அது தானாகவே எனக்கொரு வாய்ப்பை அனுப்பி வைத்தது. அந்த வாய்ப்பினால் எனக்குப் பெரிதாக தனவரவு எதுவும் ஏற்படவில்லை என்றாலும்… அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டு எழுதியதால் என் எழுத்து பெரிதாக ரீச் ஆனது. அந்த வாய்ப்பு என்ன, அது எப்படி எனக்குப் பயன்பட்டது போன்ற விஷயங்களை…
பகிர்வேன்….