கட்டுரைகள்

பாலியல் கல்வி ; ஓர் திறந்த உரையாடல்

அ.கரீம்

தமிழ் சினிமாவில் 1970 முதல் 90 வரை பெரும் ஆதிக்கம் செய்த படப்பிடிப்பு பகுதி பொள்ளாச்சி. அப்பகுதியின் பசுமையை ரசிகர்கள் திரையில் பார்த்துக் கொண்டாடினார்கள். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்த இயக்குநர்கள் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் பகுதியாக பொள்ளாச்சி மாறியது. தொடர்ந்து சுற்றலா தளமாக மாறிய பொள்ளாச்சி இன்று அச்சத்தின் பகுதியாக மாறிவிட்டது. தேசம் முழுக்க தெரிந்த பகுதியாக பொள்ளாச்சி மாற்றப்பட்டுள்ளது. இனி பொள்ளாச்சி என்றாலே எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது பாலியல் வன்முறைச் சம்பவம்தான்.

இளம்பெண்களை காதல் வலை வீசி அழைத்து வந்து தங்களது கொடூர புத்தியைக் காட்டுமளவுக்கு சீழ்பிடித்த மனநிலை உடையவர்களுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடைபெற்றுவரும் இந்த கணநேரத்தில்தான் கோவை துடியலூரில் ஆறு வயதுக் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து கொடூர கொலையை நிகழ்த்தி உள்ளனர். பொள்ளாச்சி சம்பவத்தில் “பெல்ட்டுல அடிக்காதீங்க அண்ணே வலிக்குது, நானே கழட்டிறேன்” என்று கதறிய வார்த்தைகள்  பலரது உறக்கத்தை இப்போதும் கலைத்த சூழலில் மீண்டும் இன்னொரு கொடூர நிகழ்வு.

ஒவ்வொரு கொடூர நிகழ்வு நடக்கும்போதும் பதறும் நாம் பின்னர் அதனை மறந்துவிட்டு அடுத்த வேலையை நோக்கி நகர்ந்து போய்விடுகிறோம். மீடியாக்களும் அவ்வப்போது எழும் பெரிய செய்திகளுக்குப் பின்னால் துரத்திக்கொண்டே போகும், மற்றொரு செய்தி பரபரப்பாய் வரும்போது ஏற்கனவே துரத்திக்கொண்டிருந்ததை அங்கேயே விட்டுவிட்டு புதிய செய்திகளின் பக்கம் ஓட ஆரம்பித்து விடுகிறது. ஏகதேசமாய் மீடியாவை போலத்தான் நாமும். ஆனால் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று எல்லோருக்கும் ஓர் ஆதங்கம் இருக்கிறது அதனை எங்கிருந்து துவங்குவது என்ற கேள்வியும் உள்ளது. முதலில் அது நமது சமூகம் ஆண் பெண் குறித்துக் கட்டமைத்து வைத்திருக்கின்ற சிக்கலை அவிழ்ப்பது மூலம்தான் துவங்க வேண்டியுள்ளது.

இன்று இந்தியாவில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடைபெற்றுவரும் வன்முறை என்ன மாதிரியான சூழலில் வாழ்கின்றோம் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது. கயர்லான்ஞ்சி படுகொலையெல்லாம் கொடூரத்தின் உச்ச வடிவம். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை பெண்களை ஆண் மனது இந்தியச் சூழலில் எப்படி கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தே உள்ளது. அதனைத் தகர்க்க வேண்டுமென்றால் கலாச்சார காவலர்களைத் தாண்டி கறாரான பாலியல் கல்வி முறையை கல்வி நிலையத்தில் துவங்க வேண்டியுள்ளது.

பாலியல் கல்வி குறித்துப் பேசும்போதெல்லாம் எல்லா மத அடிப்படைவாதிகளும் ஒரே குரலில் திரள்வது ஆச்சரியமாக இருக்கும். காதலர் தினத்துக்கும் இந்த குரல்கள் ஒன்று சேர்ந்துவிடும். அவர்களை பொருத்தவரை எல்லா செயலும் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது அதனை மனிதர்கள் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாதமும், எல்லோருக்கும் பெண் ஆண் குறித்த அறிவியல் பூர்வ தெளிவு கிடைத்தால் மதங்களின் அடிப்படை ஆட்டம் கண்டுவிடும் என்ற அச்சமே. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் காதலிக்கும் போது தங்களின் மத கட்டமைப்பு இன்னலுக்கு உள்ளாகுமென்ற பார்வையே காதலர் தினத்துக்கு எதிரான அவர்களின் செயல்பாடு உள்ளது.

பாலியல் கல்வி குறித்த தெளிவை மாணவர்கள் அடையும்போது எதிர் பாலின மீதான ஈர்ப்பை மாணவர்களால் உணர முடியும். அதனைப் பேசாதவரை பாலியல்ரீதியான கொடூரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். பலரும் சொல்லும் இலவச அட்வைஸ் “அந்த பொண்ணுங்க எதுக்கு பண்ணை வீட்டுக்கு போனாங்க அதனாலத்தான் இந்த நிலைமை” அவர்களிடம் நாம் கேட்கும் கேள்வி அப்படியென்றால் ஐந்து வயதுக் குழந்தை என்ன செய்தது. இங்கு வயது அல்ல பிரச்சனை சிந்தனையே.

கலாச்சார காவலர்களின் குறியே பெண்கல்வி நோக்கி. பெண் வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் செய்து கொடுத்திட வேண்டும் என்பதே. “பொம்பள புள்ளைக்கு எதுக்கு படிப்பு” என்று பெண்கல்விமீது அவர்களுக்கு எப்போதும் ஒரு ஒவ்வாமை உள்ளது. வீட்டை விட்டு எந்த பெண் வெளியே சென்றாலும் (கல்வி நிலையம், வேலை உட்பட) அவள் குடும்பத்துக்கு ஆகாதவள். இந்த பார்வைதான் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் ஏற்படும் முதல் தாக்குதல். இந்த சிந்தனை உடைய குடும்பத்திலிருந்து இருந்து வளர்க்கப்படும் ஒரு ஆண் குழந்தை அதே மனநிலையில் தான் பெண் மீது பலவந்தமாகக் கையாள்வது.

கமலா பாசின் எழுதிய “யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால்” என்ற புத்தகத்தில் கமலா பாசின் அவருடைய இளமைக்கால வாழ்வில் எவ்வகையான பாலியல் சீண்டலையெல்லாம் சந்திக்க நேர்ந்தது என்றும் இதற்கான தீர்வாக முன்மொழிந்தது பாலியல் விழிப்புணர்வு குறித்த கல்வியை, அதில் மேலும் அவர் கூறுவதாவது “ பாலியல் மட்டுமல்ல, சிலர் பாலியலைப் பற்றி பேசுவது தவறானது அல்லது அசிங்கமானது என்று கருதலாம். நமது வீடுகளும், பள்ளிகளும் இவற்றை பற்றிப் பேச வேண்டும்.விளக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்பொழுதுதான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பற்றியும், நல்ல மற்றும் கெட்ட தொடுதல் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். குழந்தைகளிடம் பாலியலைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல என்று சிலர் கருதுகின்றனர். அது மோசமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும்” என்று கூறுகிறார்.

அந்த புத்தகத்தில் மேலும் குறிப்பிடும் அவர் “குழந்தைகளுக்கு அவர்களது உடலைப் பற்றியும், பாலியலைப் பற்றியும் நாம் சொல்லித் தரும்பொழுது, சரியான முறையில் அவைகளைப் பற்றிப் புரிந்து கொள்கின்றனர். சரியான தகவல்கள் இல்லாத பொழுது தவறானவற்றை வளர்த்துக் கொள்கின்றனர். வெளிப்படையாகப் பேசும்பொழுது தேவையற்ற தகவல்கள், பயங்கள், அபாயங்கள் இவற்றிலிருந்து விடுபடுகின்றனர். பாலுறவு வாழ்கையில் முக்கியமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றிப் பேசுவது அதற்காக தயார்ப்படுத்துவது அசிங்கமானதாகவும் கெட்டதாகவும் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்வியை எல்லோரையும் நோக்கி வைக்கிறார்.

கமலா பாசின் எழுப்பிய கேள்வி மிக முக்கியமானது. அந்த கேள்வியின் மீதுதான் விவாதத்தைத் துவங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட வயதில் இயற்கையாகவே பாலுறவு குறித்து தெரிந்து கொள்ளும் இடத்துக்கு வந்து சேர்கிறான். அப்படியென்றால் அதனைக் கெட்ட மனநிலையாகக் கொள்ள முடியாது அது இயற்கை. அந்த இயற்கையான ஒன்றைப் பற்றிப் பேசத் தயங்குவதின் மூலம் மறைப்பதின் மூலம்தான் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பும் சில நேரங்களில் மோசமான அணுகுமுறையும் உண்டாகிறது. இரு பாலினத்துக்கும் ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் உடலியல் மாற்றத்தை வகுப்பிலேயே வெளிப்படையாக பேசப்படும்போது எதிர் பாலின மயக்கமும் வன்மமும் இல்லாமல் போகும்.

பாலியல் கல்வி குறித்த விவாதங்கள் எழும் பொழுதெல்லாம்  பிற்போக்கு சிந்தனையாளர்கள் கலாச்சாரம் கெட்டுவிட்டது “அய்யோ அம்மாவென்று அலறுவதை கேட்க முடிகிறது. பாலினம் குறித்தும் பாலுறவு குறித்தும் வெளிப்படையாகப் பேசாத விளைவே இன்று பாலியல் நோயும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எய்ட்ஸில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. (source; CIA world factbook 2018).

பெண்களின் மீது பாலியல் வன்முறையும் முன்பைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி இந்தியாவில் 87% பெண்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பாலியல் சீண்டல் காரணமாக பணியிலிருந்து விலகியதாகப் பதிவு செய்துள்ளனர்.

மூன்றில் ஒரு பெண் தங்களது 15 வயதுக்குள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியதாக மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது. யுனிசெவ் அறிக்கையில் உலகில் ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் ஆண் பெண் குழந்தைகள் பாலியல் தேவைக்காக மூலதனமாக்கப்படுகின்றனர் என்று கூறுகிறது. இது 2000ம் ஆண்டில் வந்த அறிக்கை தற்போது இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் பெண்கள் உலகம் முழுக்க பாலியல் முதலீட்டில் மூலதனமாக்கப் படுகின்றனர். பாலியல்ரீதியான பிரச்சனை உலகம் முழுக்க இருக்கிறது. அது இந்தியாவில் கூடுதலாகிக்கொண்டே இருக்கிறது என்பது நாம் கவனத்தில் கொண்டால் மட்டுமே இதற்கான தீர்வை நோக்கி நகர முடியும். தற்போது இந்தியாவில் இரண்டு குழந்தைக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாலியல்ரீதியான துன்பம் அனுபவிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. (53.22%). அதில் பெரும்பாலும் அருகில் குடியிருப்பவர்களால் உறவினர்களால் இப்படியான துன்பத்துக்கு உள்ளாகுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வீட்டிலிருந்து உரையாடலைத் துவங்க வேண்டியுள்ளது. குழந்தைகளுக்குத் தொடுதல் குறித்து மட்டுமே சொல்லாமல் எல்லாவற்றையும் கேள்வி கேட்கப் பழக்கப்படுத்த வேண்டியது அவசியம். கேள்விகள் மூலமாகத்தான் வெளிச்சம் நோக்கி நகர முடியும். இங்கே மிக முக்கியம் வெறும் பெண் குழந்தைகளுக்கு மட்டும் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக நினைத்தால் அது தவறு 53.22% என்பது ஆண் பெண் குழந்தைகளை உள்ளடக்கியது.

கல்வி நிலையத்தில் பாலியல் கல்வி குறித்தும், ஆண் பெண் இருவரும் சமம் என்ற சமத்துவ புரிதலை உண்டாக்க வேண்டும். பெண் குழந்தைகள் அருகில் உள்ள ஆண் குழந்தைகளிடம் பேசினால் பதறுவதை நிறுத்த வேண்டும். அந்த பதறுதல் தான் எதிர் பாலினத்தின் மீது “ஏன் நம்மை விலக்கி வைக்கிறார்கள்” என்று ஒரு மர்ம தேசம்போல தங்களுக்குள் கட்டமைக்கிறார்கள். அதனை முதலில் தகர்க்க வேண்டும். பெண்ணைவிட ஆண் உயர்ந்தவள் என்ற பிற்போக்கு கருத்தியலை ஆசிரியர் பெற்றோர்கள் முதலில் களைய வேண்டும்.

குழந்தைகளுக்கு சக மனிதர்களை நேசிக்க கற்றுத் தரவேண்டும். பாலியல் கல்வி குறித்த திறந்த உரையாடலும், அரசின் முன்னெடுப்பு குறித்த விவாதமே எதிர்காலத்தில் பாலியல் வன்முறை குறைப்பதற்கான ஒரே தீர்வு.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button