
கம்பங்காட்டுக்குள்ள
கதிரருக்கும் வேளயில
கரவேட்டிக்கார மச்சான்
கால்நடயாப் போனீரு
உளுந்தங்காட்டு வழி
ஒழவுசெய்யும் வேளயில
ஊசித்தூரல் போட
கொடப்புடிச்சு நடந்தீரு
நீரு போனபோக்குல
உதுத்துவிட்ட கள்ளப்பார்வ
மனச உலுக்குதைய்யா
பொடம்போட்டு அடிக்குதைய்யா
அச்சு வெல்லத்த
எறும்பு மொச்சிருக்க
ஆசையில எம்மனசு
அலபாஞ்சு கெடக்குதைய்யா
சாமத்துல சேவலொன்னு
விடியுமுன்ன கூவுதய்யா
பொட்டக்கோழியுந்தான்
பஞ்சாரத்தில் தவிக்குதைய்யா
வெள்ளரிப் பழமாட்டம்
வெளஞ்சு நிக்கும் என் வயச
மேச்சல் பசுவாட்டம்
காதல் வந்து மேயுதைய்யா
மேட்டு மண்ணாத்தான்
மனசுஞ் சரியுதைய்யா
பூசிக்குளிச்ச மஞ்சள்
வெக்கத்துல செவக்குதைய்யா
சோறுதண்ணி எறங்காம
சலிப்புத்தட்டி வருகுதைய்யா
பொட்டுத் தூக்கமில்லாம
பொழுதெல்லாங் கழியுதைய்யா
விட்டத்துல கெவுலி கத்தி
வெளக்கங் கேக்குதைய்யா
பாவிமவ சொணக்கத்துக்கு
மருந்தா நீரு வாருமைய்யா
தெக்கத்தி மழபேஞ்சு
தெருவெல்லாந் தண்ணியோட
எந்தவிப்பு அடங்கலியே
தாகம் வந்து தீருமைய்யா
ஊரு ஏசுமுன்ன
பொரணிமாரி பேசுமுன்ன
சுருக்கா நீரு வந்திந்த
அல்லிப்பூவ சேருமைய்யா
கன்னியோட காதலத்தான்
கண்ணெடுத்துப் பாருமைய்யா
கனவுல நீரு சொன்ன சேதி
நேரில் வந்து சொல்லுமைய்யா
காமாலயா காதல் வந்து
கண்ணு ரெண்ட மறைக்குதைய்யா
பூமால நீரு வாங்கி வந்து
மூணுமுடி போடுமைய்யா
மொரமக்காரன் கவிதை அழகு. வாழ்த்துக்கள் நவீனா