பெரிய உள்ளான்
பெரிய உள்ளான் (Great Knot) என்ற பறவை தமிழ்நாட்டிற்கு வலசை வரும் பறவையினங்களுள் ஒன்றாகும். கடற்கரையோரம் தென்படும் உள்ளான்களில் சற்றே பெரிய அதாவது சராசரியாக 26 முதல் 28 செ.மீ வரை இருப்பதால் இப்பறவைக்கு பெரிய உள்ளான் எனப் பெயரிட்டுள்ளனர்.
பெரிய உள்ளான் வாழும் இடங்கள்
ரஷ்யாவில், வடகிழக்கு சைபீரியா பகுதியில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்பகுதியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் வீசுவதால் அவை பூமியின் தெற்கு நோக்கி ஆஸ்திரேலியாவிற்கும், தென்கிழக்கு நாடுகளுக்கும் வலசை வருகின்றன.
பெரிய உள்ளான் ஆஸ்திரேலியா கடற்கரை முழுவதையும் தனது வாழ்விடமாகப் பயன்படுத்துகிறது, குறிப்பாக வடக்கு ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன; கிழக்கு சீனாவில் ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரையிலும், ஹங்காங் மற்றும் தென்கிழக்கு சைபீரியா கடற்கரைப் பகுதிகளில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலும், ஜப்பான், தென் கொரியா கடற்கரைகளில் அக்டோபர் மாதத்திலும் வலசைப் பாதையைக் கடக்கிறது பெரிய உள்ளான். ஆனால் தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவில் இந்த இனம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வலசை பயணத்தின்போது பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, கம்போடியா, வியட்னாம், மலேசியா, இந்தோனேசியா, போர்னியா, நியுகினியா பகுதிகளை ஓய்வெடுக்கப் பயன்படுத்துகிறது இப்பறவை.
மத்திய ஆசியா வழியாக குஜராத் மாநிலம், ஜாம்நகர் பகுதிகளுக்கும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில், கோடியக்கரை, இராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை இவை இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து கிட்டத்தட்ட 9000 கிலோ மீட்டர் பறந்து கேரளா கடற்கரை வரை வலசை வருகின்றன. அதுபோலவே திரும்பி ரஷ்யாவிற்கு போகும்போதும் இதே பகுதிகளில் தங்கிவிட்டுச் செல்கின்றன.
குறிப்பிடதக்க ஆய்வுப் பதிவுகள்
வலசைப் பாதைகளையும், தொலைவையும் காலில் மாட்டபட்ட வளையத்தின் மூலமே ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். சீனாவில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வளையம் மாட்டிய பறவையை, 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி இந்தியாவின் மேற்கு வங்காளத்திலலும், மகாராசுட்ராவிலும் பதிவு செய்துள்ளனர். இப்பறவை கிட்டதட்ட 3505 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்துள்ளது.
அதேபோல் ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வளையம் மாட்டிய பெரிய உள்ளானை 2019ஆம் ஆண்டு சூலை மாதம் 5ஆம் தேதி குஜராத் மாநிலம் சாம்நகரில் பார்த்துள்ளனர். கிட்டதட்ட 7732 கிலோ மீட்டருக்கு இப்பறவை பயணம் செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கோடியக்கரையில் வளையமிட்ட ஒரே ஒரு பறவையை சீனாவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பார்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
வாழ்விடத்தில் ஏற்படுத்திய சிக்கல்
கொரியாவிற்கும் சீனாவிற்கும் நடுவில் மஞ்சள் கடல் (The Yellow Sea) உள்ளது. இப்பகுதியில் cordgrass (Spartina alterniflora) என்ற மென்மையான புல் வகை செழிப்பாக வளர்ந்தமையால் வடக்கிலிருந்து தெற்குநோக்கியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வலசை செல்லும் பறவைகளுக்கு உணவும், தங்குமிடமும் நன்றாக இருந்தன. இதனைக் கடந்த காலத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம், தற்போது இவை பறவைகளுக்கான வாழ்விடமாக இல்லாமல் பொருள் குவிக்கும் இடமாக மாறிப்போயின.
மஞ்சள் கடல் மற்றும் முன்னாள் சேமன்ஜியம் முகத்துவாரம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் 1991 ஆம் ஆண்டில், தென் கொரிய அரசாங்கம் சியோலில் இருந்து தென்மேற்கே 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் கொரிய தொழில்துறை துறைமுக நகரமான குன்சானுக்கு தெற்கே இரண்டு மிகப்பெரிய நிலப்பகுதிகளை இணைக்கவும், 400 சதுர கிலோமீட்டர் விவசாய நிலத்தையும், நன்னீர் தேக்கத்தை உருவாக்கவும் கப்பல் போக்குவரத்து நடைபெறவும் ஒரு (dyke) தடுப்பு அணை கட்டப்படும் என்று அறிவித்தது. இதனால் கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாது உள்சதுப்புநிலப் பகுதிகளும் (InLandWetland) சேர்ந்தே பாதிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதனால் தற்போது கிட்டதட்ட 33 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட உலகின் மிக நீளமான தடுப்பு அணை கட்டபட்டது.
பாதிப்புகள்
கடற்கரைகளில் ஒரு குறிபிட்ட பிரிவு மக்களின் வளர்ச்சிக்காகச் செய்யப்படும் மாற்றங்களால் மற்றொரு பிரிவினர் வாழ்விடங்களை இழந்து அவர்களின் தொழிலுக்குத் தொடர்பில்லாத இடங்களுக்கு இடம் பெயர்வதால் உள்ளாகும் பாதிப்புகளைப் போல, பெரிய உள்ளான் பறவையும் தென் கொரியாவில் உள்ள செய்மாஞ்சியம் (Saemanguem) பகுதியையும், உணவையும் இழந்துவிட்டதால் மாற்று இடங்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இதனால் வலசை செல்ல உடலில் சேகரித்து வைத்திருக்கும் தேவையான சத்துக்களில் பற்றாக்குறை எற்படுகின்றது. மாற்று இடங்களில் சரியான உணவு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பயண தூரங்கள் அதிகரிப்பதால் இனப்பெருக்கம் செய்ய ரஷயாவிற்கு திரும்பிச் செல்லும் நாட்களும் மாற்றமடைகின்றன. இனப்பெருக்கம் நேரடியாக பாதிக்கப்படுகின்றது.
இதனால் உலகளவில் 2006ல் சுமார் 3,80,000 பறவைகள் இருந்தன. ஆனால் ஒரே வருடத்தில் 2007 ஆம் ஆண்டு 292,000-295,000 பறவைகளாக குறைந்தது. தென் கொரியாவில் உள்ள செய்மாஞ்சியம் பகுதியில் இருந்த அலைவாய்க்கரைகளில் கடல் நிலத்தில் 33 கி.மீ. நீளத்திற்கு கடலில் சுவர் அமைத்த பிறகு செய்யப்பட்ட கணக்கெடுப்பில் முன்பு இருந்த எண்ணிக்கையிலிருந்து சுமார் 90,000 பறவைகள் குறைந்து போயின. இந்தப் பறவைகளின் முக்கியமான வாழிடங்களின் சீரழிவினாலும், வலசை வரும் இடங்கள் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகத் திருத்தி அமைக்கப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வரும் காலங்களில் இதுபோன்ற நடவடிகைகள் அதிகமாகிக்கொண்டே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இவற்றின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும் அபாயம் உள்ளது என ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன.
தீர்வு
இயல்பான கடற்கரைக்கு மாற்றாக செயற்கையான ஈரநிலங்களை உருவாக்கலாம் எனக் கண்டறிந்திருப்பினும் இயற்கையான நீர் சுழற்சி, பல்லுயிரினங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் பெரிய உள்ளானின் எண்ணிக்கையை மீட்பதையும் பெரும் சவாலாகவே கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
(தொடரும்…)