
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கேரளத்தில் நம்பூதிரிகள் தங்கள் உயர்சாதியை காக்க பல வழிகளை கண்டார்கள். அவர்கள் பலதார திருமணம் செய்தார்கள்.
நம்பூதிரிகள் வீட்டுப் பெண்கள் காமம் சம்மந்தமாக ஏதாவது தவறு செய்தால் அதை அவர்களில் ஒரு குழுவினரே விசாரித்து தண்டனை வழங்கும் ஏற்பாடை திருவிதாங்கூர் ராஜாவின் அனுமதியோடு கொண்டுவந்தார்கள். அந்த விசாரணையின் பெயர் தான் ‘ஸ்மார்த்தவிசாரம்’. இந்த ஸ்மார்த்த விசாரணையை செய்பவர்கள் தான் ‘ஸ்மார்த்தர்’ என்கிற குழுவினர். ஒருவர் தலைமையேற்க ஆறேழுபேர் விசாரணைக்கு வருவார்கள்.
அந்தர்ஜனம் என்றழைக்கப்படும் நம்பூதிரி வீட்டுப்பெண்கள் தவறு செய்தால் அவர்களின் தந்தை இந்த விசாரணையை ஏற்பாடு செய்ய வேண்டும். பொது மக்களின் கருத்து ஏற்கப்படமாட்டாது. ஆறு நிலைகளில் இந்த விசாரணை நடத்தப்படும்.
1.தாசிவிசாரம் – குற்றம்சாட்டப்பட்ட அந்தர்ஜனத்தின் வேலைக்காரி விசாரிக்கப்படுவதின் பெயர்.
2.அஞ்சாம்புறயிலக்கல் – குற்றம் சாட்டப்பட்ட அந்தர்ஜனம் ஒரு குடிசையின் கீழ் வைக்கப்பட்டு அவருக்கு எதிரான சாட்சிகள் திரட்டப்படுதல்.
3.ஸ்வரூபம்சொல்லல் – தவறு செய்த பெண்ணைக்குறித்து ராஜாவுக்கு எழுதி ஸ்மார்த்த விசாரணைக்கு ஸ்மார்த்தனும் குழுவும் ஏற்பாடு செய்வது.
4.சாதனம் – ஸ்மார்த்தன் அந்தர்ஜனத்தின் உடல் பாகங்களை கண்டும், விசாரணை செய்தும், உண்மை கொண்டு வர அதற்காக சிறு தண்டனை கொடுக்கவும் அவர்கள் அழைக்கும் பெயர்.
5.தேகவிசேதம் – விசாரணையில் குற்றத்தையும் அந்தர்ஜனத்தை கலந்த ஆணையும் கண்டுபிடித்த பின் அந்தர்ஜனத்தை சாதி விலக்கி, வெள்ளை உடையை நீக்கி தெருவில் நிறுத்துது.
6.சுதபோஜனம் – குற்றம் சாட்டப்பட்ட அந்தர்ஜனம் தவறிழைக்கவில்லை என நிரூபணமானதால் நடக்கப்படும் விருந்து. ஸ்மார்த்தர்களும் இதில் கலந்து கொள்வர்.
இவை வரலாறு…இனி….
உண்ணிமாயா(மோகினி) ‘கிழக்கேடத்து மனை’ என்கிற படிப்பறிவுள்ள தறவாட்டை சேர்ந்த ஒரு அழகான இளம்பெண். குடும்ப வறுமை காரணமாக ‘பாலகுன்னத்து’ தறவாட்டை சேர்ந்த அறுபது வயது நம்பூதிரியின் நான்காவது மனைவியாகிறாள். நம்பூதிரியின் மூத்த மகன் குஞ்சுண்ணி(மனோஜ்.கே.ஜெயன்) பழையதை எதிர்க்கும் நவீன இளைஞன். முதல் மனைவி முன்பே இறந்துவிட மூன்று மனைவிகளோடு வாழ்ந்த நம்பூதிரி மூன்று மனைவிகளையும் எந்த ஆசாபாசம், ஆடல் பாடல் தெரியாமல் பூட்டி வளர்க்கிறார். இதை எதிர்க்கிறான் மூத்தமகன் குஞ்சுண்ணி.
மாதவன்(வினீத்)ஒரு ஏழை கதகளி நடனக்காரன். அவனது குழுவின் நிகழ்ச்சி உண்ணிமாயாவின் தறவாட்டில் நடக்க உண்ணிமாயாவுடன் அறிமுகமாகிறான். ஒரு நாள் கதகளியில் மகாபாரதம் போன்ற புராணக்கதையில் நடித்த மாதவனை தமையில் சந்தித்த உண்ணிமாயா அந்த வண்ணக்கலவையிட்ட முகத்தோடு கலந்து விடுகிறாள். தினம் இரவு நிகழ்ச்சி முடிந்ததும் சந்தித்து கலந்து காதலை வளர்க்கின்றனர். அவர்கள் கலந்த காதலின் சின்னமாக அவள் கர்ப்பமாகிறாள். நம்பூதிரி சந்தேகப்பட்டு ஸ்மார்த்த விசாரணைக்கு அழைக்கிறார்.
ஸ்மார்த்தர்கள் தனிமை சிறை போன்று அறையில் அடைத்து விசாரணை செய்கின்றனர். உண்மையை வெளியில் சொல்லாத உண்ணிமாயா மாதவனை சந்திக்க முயற்சிக்க கோழை மாதவனோ தன்னை காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சுகிறான். நொறுங்கிப் போகிறாள் உண்ணிமாயா…
தன்னை காப்பாற்றிக்கொள்ள முடிவெடுத்த உண்ணிமாயா ஸ்மார்த்தர்களின் கொடுமையான விசாரணை முடிவில் ‘நிறைய பேரோடு இருந்ததால் யார் என தெரியவில்லை’ என்கிறாள். உண்ணிமாயாவை தெருவில் இறக்கிவிடுகின்றனர். வீட்டில் இறக்கிவிட்டவர்களை அதற்கடுத்த சாதியினர் ஏலம் விட்டு தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது வழக்காம்..
வீட்டில் வேலை செய்யும் தாழ்ந்த குலத்தினர் உண்ணிமாயா அந்தர்ஜனத்தை தங்கள் தெய்வமாக போற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்துப்போகின்றனர்.
மாதவன் தான் காரணமென அறிந்த குஞ்சுண்ணி மாதவனை அழைத்து உண்ணிமாயாவுக்கு வாழ்வு கொடுக்க கெஞ்ச, தன் தவறை உணர்ந்த மாதவன் உண்ணிமாயாவை சந்தித்து வாழ அழைக்கிறான். உண்ணிமாயாவோ தன் குழந்தைக்கு ஒரு தந்தையில்லை. நிறைய தந்தைகள். சில நேரம் ராவணணாயிருக்கலாம், சில நேராம் நளனாயிருக்கலாம், சில நேரம் பீமனாயிருக்கலாம் எனச்சொல்கிறாள்.
கதகளியில் தேவருக்கு ஒரு நிறம், அசுரருக்கு ஒரு நிறம் என வண்ணசாயம் பூசுவார்கள். நளன் வேஷமிட்ட போது ஒரு நிறத்திலும், ராவணன் வேஷமிட்டபோது ஒரு நிறத்திலும், அர்ச்சுனனாக ஒரு நிறத்தில் என மாதவன் உண்ணிமாயாவோடு கலந்திருப்பான்.(கதகளி வேஷத்தில் பொதுவாக பச்சை நிறம் கிருஷ்ணர், ராமர்,யுதிஷ்டிரர், விஷ்ணு, நளன்,’அர்ச்சுனன் வேஷங்களிலும், சிவப்பு நிறம் ராவணன், துச்சாதனன், ஹிரண்யன் வேஷங்களிலும், கருப்பு காட்டினத்தவர், வேட்டைக்காரர் போன்ற வேஷங்களிலும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணம் முனிவர்கள், பெண்கள் வேஷங்களுக்கும் முகச்சாயமாக பயன்படுத்துகின்றனர்) உண்ணிமாயாவும் அதையே நினைத்து ‘என் குழந்தையின் தந்தை பீமன், நளன், அர்ச்சுனனாக இருக்கலாம்..ஆனால் சத்திமாக உன்னைப்போல் ஒரு கோழை கிடையாது’ என சொல்லி விரட்டி விடுகிறாள் … அவளைப்பொறுத்தவரை ஸ்மார்த்த விசாரணையில் பொய் சொல்லவில்லை…அவள் தன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறாள்…
1994ல் வெளிவந்த ‘பரிணயம்’ படத்துக்கு எம்.டி.வாசுதேவன் நாயர் கதையெழுத ஹரிஹரன் இயக்கி இருந்தார். மோகினி, வினீத், மனோஜ்.கே.ஜெயன் நடித்தனர். ஸ்மார்த்தனாக திலகனோம் குழுவில் ஒடுவில் உண்ணிகிருஷ்ணன், ஜெகதி போன்றோர் நடித்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. நான்கு தேசிய விருதுகளையும் பெற்றது…
இருபதாம் நூற்றாண்டின் அந்த கால பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அச்சு பிசகாமல் நம் கண் முன் காண்பிக்கிறது இப்படம். மலையாளிகள் உண்ணிமாயாவான மோகினியை மறக்கமுடியாத பாத்திரமாக்கினர். மோகினிக்கு தன் திரையுலக வாழ்வில் முதல் பாத்திரம்…
‘பரிணயம்’..சிறந்த திரைப்படம்….பெண் உணர்வு வரலாற்றின் உச்சம்….
ஆன்ட்டி க்ளைமாக்ஸ்: கடைசியாக நிகழ்ந்த ஸ்மார்த்த விசாரம் ‘குறியேடத்து தாத்ரி’ என்கிற பெண்ணுடையது. இதில் இப்பெண் மேற்கொண்ட புரட்சி நடவடிக்கையால் இம்முறை ஆங்கிலேயர்களால் நிறுத்தப்பட்டது…குன்னங்குளம் என்கிற ஊரில் இப்படி நடந்த ஒரு ஸ்மார்த்த விசாரணையில் ஒரு மேனன் பாதிக்கப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார். பாலக்காட்டுக்கு குடிபெயர்ந்த அந்த படித்த அறிவாளி அங்கு ஒரு பெண்ணை சாதி பாராமல் திருமணம் செய்து இலங்கைக்கு குடிபெயர்ந்தார். அவரது கடைசி குழந்தை வளர்ந்து பின்னாளில் மாநில முதல்வரானதெல்லாம் தனி சம்பவம்…