சிறுகதைகள்
Trending

துணை – ஜெயந்தி

ஜெயந்தி

சுகந்தி மீண்டும் ஒருமுறை வாட்சைப் பார்த்தாள். சரியாக 10.20 என்று காட்டியது. பத்து நிமிடத்திற்குள் அவள் கோர்டிற்குள் இருக்க வேண்டும். பஸ் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரண்டு ஸ்டாப் இருக்கிறது. இதே வேகத்தில் பஸ் நகர்ந்தாலும் பத்து நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். இருந்தும் சுகந்தி பதற்றமாகவே இருந்தாள்.

மூன்று மாதம் முன்பு வரை இப்படி இல்லை. இதே ஊரில் வேலைவாய்ப்பு வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பிரன்ட் ஆபிஸ் மேனேஜராக வேலை செய்து வந்தாள். சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவள். அந்த வேலை எளிதில் கிடைக்க அதுவே காரணமாக இருந்தது. வேலைதேடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவள் பணிபுரியும் நிறுவனத்தின் தேவை இருந்துகொண்டே இருக்கும் என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். ஒவ்வொரு மாதமும் 30 தேதியானால் அக்கவுண்டில் சம்பளம் கிரிடிட் ஆகிவிடும். உட்கார்ந்த இடத்தில் பலருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வேலை அவளுக்குச் சிரமமாகத் தெரியவில்லை. அந்த நிறுவனத்தை விட்டு விலகும் எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை.

கடந்த இரண்டு வருடமாக கதிருடன் அவளுக்கு ஏற்பட்ட மனக்கசப்புக்கள் அவளின் மனதை பெரிதும் பாதித்திருந்தது. ‘கல்யாணமாகி அஞ்சு வருசமாச்சு இன்னும் குழந்தையில்லையா’ என்ற பேச்சுக்களை தொடர்ந்து கேட்கும்போது கூட அமைதி காத்தவள், கதிர் இந்த உறவிலிருந்து விலக நினைக்கிறான், அதை மறைமுகமாக பல வழிகளில் வெளிப்படுத்துகிறான் என்று அறிந்தபோது மனம் தளர்ந்துவிட்டாள். நிதானமாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்தாள். விவாகரத்து கேட்டு மனுகொடுத்தாள்.

தெரிந்தவர்கள், அலுவலக நண்பர்கள் என்று பலரும், நாளுக்கு ஒருவர் என்று சுழற்சி முறையில் அவள் மீது அக்கறை கொண்டு “எல்லாம் சரியாகிடும். பிரிஞ்சு போக நினைக்காத. எப்படி தனியா வாழுவ?” என்று துக்கம் விசாரிக்கும் படலம் மட்டும் ஓய்ந்தபாடில்லை. வேறுவழியின்றி வேலையைவிட முடிவு செய்தாள். புறநகரத்தில் ஒரு எக்‌ஸ்டென்ஷன் ஏரியாவிற்கு வீட்டை மாற்றினாள். அங்கு புதிதாக துவங்கப்பட்டிருந்த இருசக்கர வாகன கம்பெனியின் சேல்ஸ் பிரிவில் சேர்ந்தாள். முதலில் பார்த்த வேலைக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றியது அவளுக்கு. அங்கு மனிதர்களை விற்க வேண்டும், இங்கு வாகனங்களை. அதைவிட இது எளிதாகவும் இருந்தது.

அவள் புது வீட்டிலிருந்து கோர்ட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமாகும். இன்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. பஸ்ஸைப் பிடித்து இப்போது அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாள். வழக்கமாக கோர்ட்டினுள் நுழைந்ததும் இடதுபுறம் இருக்கும் டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு பிறகுதான் உள்ளே செல்வாள். இன்று அதற்கு வாய்ப்பில்லை என்பதே தற்போது அவள் பதற்றத்திற்கு காரணம்.

அவள் எண்ணத்தை உறுதி செய்வது போல்,கோர்ட்டிற்குள் நுழையும்போது மணி சரியாக பத்து முப்பதைக் காட்டியது. மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் நடையை வேகப்படுத்தி இடதுபுறமாக திரும்பி குடும்பநல நீதிமன்றம் நோக்கி ஓடினாள்.

கடந்த ஒரு வருடத்தில் மாதம் இருமுறை இந்த மணி சத்தம் கேட்டு, அதற்கு பழக்கப்பட்டிருந்தாள். முதல்முறை இங்கு வரும்போது அச்சமும், தயக்கமுமாக வினோதமாக பார்ப்பாள்.

சரியாக 10.30 மணிக்கு மணி அடிக்கும். டவாலி குரல் கொடுக்கவும் வழக்கறிஞர்கள் அனைவரும் எழுந்து நிற்பார்கள். பின்னறையிலிருந்து நீதிபதி வெளியே வருவார். மேடைபோல் உயர்த்தி அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் அமருவார். சுகந்திக்கு இவையெல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழகிய காட்சிகள்.

படங்களைப் பார்த்து நீதிமன்றம் என்பது ஒன்றுதான் இருக்குமென நினைத்திருந்தாள். நிஜத்தில் அப்படி இல்லை. நடுவில் பெரிய நிலப்பரப்பைகொண்ட சுற்றுக்கட்டிடம். பல அறைகளைக் கொண்ட நான்கு தளங்கள். அதில் பல நீதிமன்றங்கள் இருந்தன. சில நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு சில பெஞ்சுகள் போடபட்டிருக்கும். பல நீதிமன்றங்களில் அறைக்கு வெளியே கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதைப் பார்க்க முடியும். சமயத்தில் நிற்கக்கூட இடமிருக்காது. கூட்டத்தின் சத்தத்தில் உள்ளிருந்து வரும் டவாலியின் குரல்கூட கேட்காது. ஒவ்வொரு பிரிவிலும் அது சம்பந்தமான குறைந்தது ஐம்பது வழக்குகள் விசாரணைக்கு வரும். பெரும்பான்மை வழக்குகளுக்கு வாய்தா மட்டுமே போடுவார்கள். வழக்கு போட்ட முதல் விசாரணையிலேயே கூண்டில் ஏற்றி விசாரிப்பார்கள், நம் தரப்பு வாதங்களைப் பேசி நியாயத்தை நிலைநாட்டிவிடலாம் என்று நினைத்து வருபவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்பதை வாய்தாக்கள் புரியவைத்துவிடும்.

டீ சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மூச்சிரைக்க ஓடி இரண்டாம் தளத்தில் இருந்த குடும்பநல நீதிமன்றதை வந்தடைந்தாள். அவ்வளவு பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை என்பது ஆறுதலைத் தந்தது. மணி 10.45 கடந்தும் டவாலி வரவில்லை.

“லேட் ஆகுமாம்” “12 மணி ஆகிடும்” “வருவாங்களானு தெரியல” கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்த வார்த்தைகள் அவள் காதில் விழுந்தன. யோசனையோடு அருகில் நின்ற கான்ஸ்டபிள் ஒருவரிடம் “என்னாச்சு” என்றாள்.

“இந்த வருஷம் இறந்துபோன ஜட்ஜ் எல்லாருக்கும் நினைவேந்தலாம். எல்லாரும் அங்க போயிருக்காங்க” என்றார் அவர்.

“அப்போ இன்னைக்கு லீவா?” என்றாள் மீண்டுமாக.

“இல்லம்மா, அந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் வருவாங்க. ஆனா எப்போ முடியும்னு சரியா சொல்ல முடியாது. அதுவரை காத்துக் கெடக்கனும்” என்று எரிச்சலாக பதிலளித்தார்.

வழக்கம்போல் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று நினைத்து அரைநாள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தாள் சுகந்தி. “அவ்வளவுதான். இனி போக முடியாது.ஒருநாள் சம்பளம் கட்” என்று மனதிற்குள் நினைத்து வருந்திக்கொண்டிருந்தவளின் தோளைப் பிடித்து நகர்த்தி “கொஞ்சம் தள்ளிக்கத்தா. இப்டி உக்காந்துக்கறேன்” என்றாள் ஒரு பெண். பின்னால் இருந்த ஜன்னலில் இருவர் மட்டும் அமர இடமிருந்தது. கூடையை அதில் வைத்துவிட்டு ஓரமாக அமர்ந்தாள் அந்தப் பெண்.

குள்ளமான உருவம். பழைய வாயில் சேலை. சேலைக்கும், அணிந்திருந்த ஜாக்கெட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. வெறும் கழுத்து. காதில் சிறிய பூ வடிவ கவரிங் தோடு. தலையில் எண்ணெய் தேய்த்து நேர்வகிடு எடுத்து சீவி கொண்டை போட்டிருந்தாள். கையில் ஒரு வயர் கூடை. அதில் சாப்பாட்டு டப்பாவும், கேனில் தண்ணீரும், சிறிய பர்சும் இருந்தது.

முப்பத்தி ஐந்து வயதை ஒட்டி இருக்கலாம். முகம், கழுத்து, முழங்கைக்கு மேல் பகுதி எங்கும் மிருதுவான மாநிறத் தோல் கொண்டிருந்தாள். முழங்கைக்குக் கீழ், விரல்கள் வரை கறுத்த தோலின் கடினத் தன்மையை தொட்டு பார்க்காமலே அறியமுடிந்தது. சுகந்தி தன்னை மறந்து அந்தப் பெண்ணை சில நொடிகள் ரசித்தாள்.

“உக்காரியாமா?” என்று அந்தப் பெண் கேட்டுகொண்டே கூடையைக் கையில் எடுக்கும் போது சுகந்தி நினைவு திரும்பினாள். “ம்ம்” என்பது போல் தலையசைத்துவிட்டு அருகில் அமர்ந்தாள்.

பத்து நிமிடம் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் இரு பெண்கள் ஒரு வக்கீலுடன் பேசிக்கொண்டிருப்பதை இருவரும் கவனித்தார்கள். ஒரு இளம் பெண், மற்றவள் அவள் அம்மாவாக இருக்க வேண்டும், அவர்களுடன் ஒரு சிறுவனும் இருந்தான். இரு பெண்களும் அழகான புடவையுடன் நன்றாக ஒப்பனை செய்திருந்தார்கள். அந்த சிறுவனும் புது மாடல் பேன்டும், கோட்டும் அணிந்திருந்தான். அவர்கள் உடையும், முகபாவனைகளும் நேரெதிராய் இருந்தது. எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறுவன் அழுகையை அடக்கிக்கொண்டு, அவன் அம்மாவின் சேலை முந்தானையை பிடித்துக்கொண்டு தேடலுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென அந்த இளம்பெண் உரத்த குரலில் கத்தியபடி மாடிப்படிகளில் இறங்க ஆரம்பித்தாள்.

“இந்த எழவு கேசு எப்பதான் முடியுமோ? அவேன் நல்லா ஊர் மேயிறான். இந்தப் பயல வச்சுகிட்டு கஷ்டப்படனும்னு எனக்கு மட்டும் தலையெழுத்தா என்ன” என்று கத்தியவள் தன்னைப் பின்தொடர்ந்த சிறுவனைத் தள்ளிவிட்டாள்.

“ஏன்டா என் பின்னால வார. நீயும் உங்கப்பன்டயே போ. என் உயிர ஏன் வாங்குற?” அந்த தளம் முழுதும் அவள் குரல் எதிரொலித்தது. நடப்பது என்னவென்று புரியாத சிறுவன் அழுதுகொண்டே அவர்களைப் பின்தொடர்ந்து ஓடினான்.

“என்ன பொம்பள இவ. பெத்த பிள்ளைய இப்டியா பேசுவா” சுகந்திக்கு அருகிலிருந்த பெண் கோபமாகக் கூறினாள்.

“அவங்களுக்கு என்ன பிரச்சனையோ. நமக்கு எப்படி தெரியும்?” என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றாள் சுகந்தி.

“ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும்மா. பச்சப் பிள்ளைய இப்டி பேசக்கூடாது. அவன் மனசு பாதிச்சிடாது. என்ன தெரியும் அவனுக்கு” ஏக்கப் பெருமூச்சுவிட்டாள் அந்தப் பெண்.

சில விநாடிகள் மீண்டும் ஒரு அமைதி நிலவியது. சுகந்தியின் உள்ளுணர்வில் ஏதோ ஒரு உந்துதல் அவளைத் தொடர்ந்து பேச வைத்தது “நீங்க என்ன பிரச்சனைக்காக வந்திருக்கீங்க? விவாகரத்தா? என்றாள்.

“என்னத்த விவாகரத்து வாங்க. 12 வயசுல ஒரு பையன் இருக்கான். அந்தாளு எங்களவிட்டு போயி நாலு வருஷம் ஆகிபோச்சு. இனி விவாகரத்து வாங்குனா என்ன, வாங்கலனா என்ன சொல்லு?” என்று நிறுத்தியவள் மீது கேள்விகளை ஏந்திய பார்வையை வைத்தாள்.

“எங்கூரு சமயநல்லூருத்தா. என் வீட்டுகாரருக்கு டைல்ஸ் ஒட்டுற வேல. நல்லாதான் இருந்தாரு. இந்த பாழாப் போன குடிப்பழக்கம்தான் அதிகமாகிடுச்சு. இன்னொரு பொம்பளய சேத்துக்கிட்டாரு. அப்டியே எங்களவிட்டு போயிட்டார். பக்கத்தூர்ல அவளோட நல்லாதேன் இருக்காரு. நான் என்ன பண்ண. பிள்ள இருக்கானே. ஒரு துண்டு கம்பெனில தினக்கூலிக்கு வேலைக்கு போறேன். பய சின்னதா இருந்தவர சமாளிச்சுட்டேன். வளர வளர படிப்பு செலவக்கூட சமாளிக்க முடியல. ஆசப்பட்டு எதும் கேட்டா வாங்கிக்குடுக்க முடியல” ஏக்கத்தின் மொத்த உருவாய் வெறுமை நிறைந்த கண்களோடு அமர்ந்திருந்தாள்.

“என்னயவிடு என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அந்த பயலுக்காச்சும் எதும் செய்யக்கூடாது அந்த மனுசேன்” என்று சொல்லிக்கொண்டே சேலையை வைத்து விம்மலை அடக்க முயன்றாள். மீறி வெளிவந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு தொடர்ந்தாள் “விவாகரத்து போட்டா ஜீவநாம்சம் கிடைக்கும்னு கம்பெனில சூப்பர்வைசர் அக்கா சொல்லிச்சு. அப்பறம்தான் வக்கீலப் பாத்து பேசி இங்க வந்தேன்”.

“பெட்டிஷன் போட்டு எவ்வளவு நாளாச்சு. உங்க வீட்டுகாரர் வருவாரா? வக்கீல் என்ன சொல்றாரு? எப்ப முடியுமாம்?” கேள்விகளை அடுக்கினாள் சுகந்தி.

“அது ரெண்டு வருஷம் ஆகப்போகுதுமா. அந்தாளு எங்க வந்தாரு. முன்னால ஆடிக்கு ஒருதடவ அம்மாவாசைக்கு ஒரு தடவனு வருவார். இப்ப அதும் இல்ல. எப்ப முடியும்னு ஒன்னும் தெரியல. முடிஞ்சவர முட்டி மோதிப் பாப்போம். நான் நல்லா இருக்கதுக்குள்ள என் மகனுக்கு எதையாவது செஞ்சு வைச்சிடனும் அவ்வளவுதான்” என்று அவள் முடிப்பதற்கும், ஜட்ஜ் வருவதற்கும் சரியாக இருந்தது.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்த பலரும் கதவருகே வந்து நின்றார்கள். நீதிபதி இருக்கையில் அமர்ந்தார். அவருக்குப் பின்னால் ஒருபுறம் அம்பேத்கர் படமும் மறுபுறம் காந்தி படமும் இருந்தது. டவாலி பெயர்களை அழைக்கத் தொடங்கினார்.

அந்தப் பெண் ரகசியக் குரலில் சுகந்தியிடம் “நீயும் என்ன மாதிரி விவாகரத்து கேசு தானா?” என்றாள்.

சுகந்தி சிரித்துக்கொண்டே “உங்கள மாதிரிதான். ஆனா எனக்கு பிள்ள இல்லை” என்றாள்.

“பிள்ள இல்லையா. நல்லதாப் போச்சு. சீக்கரமா இவர தீத்துவிட்டு வேற கல்யாணம் பண்ணிக்க. பாக்க சின்ன வயசா இருக்க. வயசு 25 இருக்குமா?” என்று கேட்டாள்.

மீண்டும் சிரித்தபடியே “இருபத்தி ஏழு” என்றாள்.

“அப்பறம் என்ன. வேற கல்யாணம் பண்ணிக்க. ஏன் சொல்றேன்னா ஆம்பள துணை இல்லாம பொம்பள தனியா வாழமுடியாது. மோசமான உலகம் இது” என்று அவள் கூற டவாலி உள்ளிருந்து “சுகந்தி” என்று கத்தினார்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. துணை சிறுகதை அருமை.விவகாரத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு வேதனையான சான்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button