தொடர்கள்

அடையாளம் : 2 – உமா மோகன்

 

ஒரு போராட்டம் முன்னெடுக்கப் படும்போது நடக்குமா,நடக்காதா,யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்ய என்றெல்லாம் அதன் விளைவுகள், வெற்றி,பலாபலன்கள் பற்றிக் கவலைப்படாத  செயல்பாடுதான் அதில் ஈடுபடுபவர்களின் உந்துசக்தியாக இயக்குகிறது. குறிக்கோளும் நம்பிக்கையும் மட்டுமே உயிர்நீர்.

மான்செஸ்டர் பஞ்சாலை ஒன்றில் பத்து வயதில் வேலைக்குச் சேர்ந்த தொழிலாளி அன்னி கென்னி இத்தகைய போராளியாக உருவானார். பிரிட்டனில் வாக்குரிமைக்காகப் போராடி சிறை சென்ற முதல் பெண் அன்னி.

அன்னி கென்னி

 

1905ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது தன் சகோதரிக்கு  அவர் எழுதிய கடிதமொன்று நூறாண்டுகளைக் கடந்து கனடாவில் ஆவணக் காப்பகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் இங்கிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிடவில்லை.

1918ல் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என சில விதிமுறைகளுக்குட்பட்டு வாக்குரிமை கிடைத்தது.ஆண்களைப்போல் இருபத்தொரு வயது நிறைந்தவுடன் தங்களுக்கும் வாக்களிக்க உரிமை வேண்டும் என்ற போராட்டம் 1928ல்தான் வெற்றிபெற்றது.மகாராணியாக இருந்த விக்டோரியாவுக்குப் பிடிக்காமல் போகும் என்ற காரணத்துக்காக இந்த கோரிக்கைத் தீர்மானங்களை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவர விரும்பாத நிலையெல்லாம் இருந்திருக்கிறது.

1755 ல் வாக்களிப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தை உருவாக்குவதில் கோர்சிக்காவின் இருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.ஆனால் பிரான்ஸ் 1769 ல் கோர்சிக்காவைக் கைப்பற்றியதும் பெண்கள் வாக்குரிமை பறிபோனது.

Kenny’s Letter

ஆம்! சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் என்ற முழக்கத்தை முன்வைத்த பிரான்சில் பெண்கள் வாக்குரிமை கடும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. 1780-90 களில் வாக்குரிமை இயக்கம் பிரான்சில் தோன்றியபோதும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியவில்லை.1871ஆம் ஆண்டில் பாரிஸ் நகராட்சி பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.செத்து செத்து விளையாடலாம் என்பதுபோல அந்த நிர்வாகம் கவிழ்ந்ததும் பெண்கள் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.வாக்குரிமையோடு பெண்கள் தேர்தலில் பங்கேற்கும் உரிமையும் வேண்டும் என்ற முழக்கத்துக்கு 1944ல்தான் பூரண வெற்றி கிட்டியது.

 விடுதலைக்காலம் என ஐரோப்பாவில் குறிப்பிடப்பட்ட 1718-72 காலகட்டத்திலேயே ஸ்வீடனில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது என்றாலும் தொழிற் குழுக்களில் தகுதி உறுப்பினராகச் சேர்ந்து வரி கொடுத்த பெண்கள்தான் அவ்வுரிமையை அனுபவித்தனர்.பகுதிதோறும் மாறுபட்ட விதிமுறைகளும் இருந்திருக்கின்றன. 

வாக்களிக்க நகரமன்றத்துக்கு வருவதில் பெண்கள் அசௌகர்யமாக உணர்ந்தால் பதிலி வாக்காளராக ஒருவரை அனுப்பலாம் (கணவர்தானே போவார்!) என்ற உரிமையும் தரப்பட்டது.பதிலி வாக்காளர் ஏற்பாட்டில் முறைகேடுகள் நடப்பதாகச் சொல்லி பெண்கள் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. அரசியல் பேசும் இடத்துக்குப் பெண்கள் வருவது அனாவசிய வேலை என்றெல்லாம் தடைவிரும்பிகள் காரணம் சொல்லியிருக்கிறார்கள்!

  திருமணமான பெண்களுக்கு சொத்துரிமை இல்லையென்பதால், திருமணமாகாத , விதவையான, விவாகரத்தான பெண்களுக்கான உரிமையாகத்தான் சுவீடனின் வாக்குரிமை இருந்திருக்கிறது.அதுவும் இப்படி வருவதும் போவதுமாக !

1902ல் அமைப்பு தொடங்கி வேண்டுகோள் வைத்தார்கள்.ஒருவழியாக 1921ல் அதாவது 150 ஆண்டுகள் கடந்து, பெண்களுக்கான வாக்குரிமையும்,தேர்தலில் போட்டியிடும் உரிமையும் மீட்கப்பட்டது.

நியூசிலாந்து 1893ல் பிரிட்டனின் காலனியாக விளங்கியபோதே பெண்களுக்கு முழுமையாக வாக்குரிமை அளித்தது.ஆனால் தேர்தலில் போட்டியிடும் உரிமை 1919ல்தான் கிடைத்தது.தெற்கு ஆஸ்திரேலியா 1895ல் பெண்கள் போட்டியிடவும் வாக்களிக்கவும் உரிமை தந்து சட்டமிழைத்தது.கூட்டு நாடாக உருவானதும் மைய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இவ்வுரிமையை உறுதி செய்து சட்டம் வகுத்தபோதும் சில மாநிலங்களில் ஆஸ்திரேலிய ஆதிகுடிப் பெண்களுக்கு இவ்வுரிமை மறுக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்திருக்கிறது.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை பின்லாந்து 1905 ல் நடந்த கலகத்தையடுத்த வேண்டுகோளை ஏற்று  அடுத்து வந்த ஆட்சி சீர்திருத்தத்தில்,பெண்கள் வாக்களிக்கவும் போட்டியிடவும் உரிமை வழங்கி வரலாற்றில் இடம் பிடித்தது.1906ல் கோரிக்கை ஏற்கப்பட்டது.அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணெல்லாம் இல்லை. 1907 தேர்தலில் பத்தொன்பது பெண்கள் தேர்தலில் வெற்றி பெற்று உலகின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

நியூயார்க்கில் 1915 தேர்தல் தொடங்க பத்துநாட்கள் இருக்கையில் அக்டோபர்  23 ஆம் தேதி சுமார் இருபத்து ஐந்தாயிரம் பெண்கள் (அதில் ஒரு சில ஆயிரம் ஆண்களும் உண்டு) பேரணியாக வலம் வந்தனர். மாணவிகள் உருவாக்கித் தந்த போஸ்டர்களுடன் வாக்குரிமை முழக்கமிட்டது அக்கூட்டம். இரண்டரை லட்சம் பேர் கூடி ஆதரவு தந்தாலும் பொது வாக்கெடுப்பில் சாதகமான சூழல் வரவில்லை.ஆனால் அன்று உருவான அனல் கனன்று கொண்டேயிருந்து. 1917ல் அடுத்த தேர்தல் சமயத்திலும் பேரணி நடைபெற்றது. இம்முறை பொதுவாக்கெடுப்பில் வெற்றி!  வாக்குரிமைப் போராட்டத்தின் வெற்றி!!

அமெரிக்கா 144 ஆண்டுகள் கழித்து தன் பெண்களுக்கு வாக்குரிமையைத் தந்தது.சட்டம் இருந்தபோதும் சில மாநிலங்களில் கறுப்பினப் பெண்களின் வாக்குரிமை 1965 வரை கானல் நீராகவே இருந்திருக்கிறது.

ரஷ்யாவில் மன்னராட்சி முடிந்து இடைக்கால அரசு உருவான 1917 முதலே பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.

சுவிட்சர்லாந்தில்  “முழுவதுமாகப் பெண் வாக்குரிமை” என்ற கனவு 1971ல்தான் நிறைவேறியது.

நம் நாட்டைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் எவ்வித வேறுபாடுகளுமின்றி வாக்குரிமையை உறுதி செய்ததால் விடுதலை பெற்றது முதலே பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்துவிட்டது.

ஆனால் நம் நாட்டிலும் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

1915ல் இந்தியாவுக்கு வந்த அயர்லாந்துப் பெண்மணி மார்கரெட் கஸின்ஸ் இந்தியப் பெண்கள் முன்னேற்றத்துக்காக அகில இந்திய பெண்கள் மகாசபையைத் தோற்றுவித்தார்.பெண்கல்வி,சம உரிமை,சமுதாய சீர்திருத்தம் இவற்றோடு பெண்களுக்கான அரசியல் பங்கெடுப்பை வைத்து உருவான இந்த அமைப்பில்,அன்னிபெசன்ட்,முத்துலக்ஷ்மி ரெட்டி, அம்புஜம்மாள், ஹீரா டாட்டா போன்றோர் இருந்தனர். அரசியல் அதிகார சீர்திருத்தங்களுக்கான மாண்டேகு-செம்ஸ்போர்ட் சந்திப்புகள்,கூட்டங்களின் காலகட்டம் அது.பெண்களின் சமூக, கல்வி நிலை மேம்பாட்டுக் கருத்துகளை முன்வைக்க அனுமதிவேண்டிய இவர்கள் கடிதத்துக்கு மறுப்பே பதிலானது.நாங்கள் அரசியல் விவகாரங்களே பேசுவோம் என்றதும் கஸின்ஸ், “பெண்களின் அரசியல் பிரச்னை பற்றி மட்டும் பேசத் தயார்” என்று மீண்டும் வேண்டுகோள் வைத்தார்.

இந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதும் சரோஜினி நாயுடு,மார்கரெட் கஸின்ஸ் உள்ளிட்ட பதினான்கு பெண்கள் கொண்ட  குழு இந்திய அரசியல் சீர்திருத்தங்கள் உருவாகும்போது பெண்களின் அரசியல் உரிமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதை வலியுறுத்தினர்.நேரில் கலந்துகொள்ள முடியாத பல பெண் பிரமுகர்கள் இதையே தந்தி மூலம் வலியுறுத்தினர்.

பல்வேறு நிலை தாண்டி சீர்திருத்தம் அறிமுகமானபோது மகளிர் வாக்குரிமை இடம் பெறவில்லை. இந்த அமைப்பினர் மேலும் தீவிரமாயினர். ‘ஸ்திரீ தர்மம்’ என்ற பத்திரிக்கை வாயிலாக தொடர்ந்து விளக்கங்கள்,அரசியல் கட்சிகளின் ஆதரவினைக் கோரிப் பெறுவது,நிர்வாகத்தின் கதவுகளைத் தொடர்ந்து தட்டுவது இவை தாண்டி இங்கிலாந்து சென்று அங்கிருந்த பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து ஆதரவு பெறுதல்,அங்கு கூட்டங்களில் கலந்துகொண்டு இந்திய மகளிர் வாக்குரிமை பற்றி விளக்குவது, அங்கிருந்த இந்தியாவுக்கான அலுவலகத்தில் மனு அளிப்பது என்று அமைப்பினர் ஒவ்வொருவருவரும் அவரவர் தளத்தில் தொடர்ந்து இயங்கினர்.

1919ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டம் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவில்லை. மாறாக மாநிலங்களே இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டது.ஆனால் பெண்கள் தேர்தலில் நிற்க முடியாது. வாக்குரிமை பொதுவாக,வருமான,செல்வ,சமூக அந்தஸ்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.வேட்பாளராக யார் நிற்பது என்பதை லண்டன் கட்டுப்படுத்தவும் முடியும் என்ற நிலை.

மகாத்மா காந்தி கூட அப்போது சுதந்திரப் போரைப் பெண்கள் ஆதரிக்க விரும்பினார்.ஆனால் பெண்கள் வாக்குரிமை பெறுவதை ஆதரிக்கவில்லை.மாகாணங்கள் தோறும் பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சென்னை நகர அமைப்பு 1919 ல்போட்டியிடும் உரிமை வழங்காது வாக்குரிமையைப் பெண்களுக்கு அளித்தது.பெண்கள் அமைப்பினர் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் உரிமைகளும் வாய்ப்பும் வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வந்தனர்.1920ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மாகாணத்தில் பெண்கள் அரசியல் உரிமையைப் பெற்றனர்.தொடர்ந்து 1921ல் சென்னை மாகாண சபை, பெண்கள் உள்ளாட்சி அமைப்பில் வேட்பாளராகும் வாய்ப்பைக் கொண்டு வந்தது. அதே ஆண்டு பம்பாயிலும் இது தொடர்ந்தது.

வங்கத்தில் அபலா போஸ் உள்ளிட்ட பெண்முன்னேற்றக் கருத்தாளர்கள் இந்த சீர்திருத்தம் வரவேண்டும் எனக் கடுமையாகப் போராடித் தோற்றனர்.படித்த சமூகம் கூடப் பெண்களுக்கு எனப் பொதுவாக வாக்குரிமை அளித்தால் தாசிகளும் அதைப் பயன்படுத்தக் கூடும் என்பதுபோன்ற மோசமான பிற்போக்கு சிந்தனை கொண்டிருந்த அவலம்…

தொடர் முயற்சிகளால் மாகாணங்களும், மன்னராட்சிப் பகுதிகளும் பெண்களின் அரசியல் உரிமைகள் குறித்து ஏதாவது நடவடிக்கை மாற்றங்களில் இறங்கின.1926ல் பெண்கள் சட்டசபைகளுக்குப் போட்டியிடும் சட்டத் திருத்தம் வந்தது.

 

இம்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவரான கமலாதேவி சட்டோபாத்யாயா முதன்முதலில் போட்டியிட்டு சிறிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.1927ல் சென்னை மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட டாக்டர்.முத்துலக்ஷ்மி ரெட்டி முதல் பெண் சட்டசபை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார். 

அடுத்தடுத்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட எல்லா மாகாணங்களும் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியபோதும் சொத்துரிமை போன்ற விவகாரங்களால் கிட்டத்தட்ட ஒரு சதவீத மகளிரே பயன் பெற்றனர்.

தொடர் அரசியல் நிலவரங்களில் வாக்குரிமை பிரதான கருதுகோள்களில் ஒன்றாக இருந்தது,டொமினியன் அந்தஸ்து குறித்த நேரு அறிக்கை பால் பேதமற்று அனைவருக்கும் வாக்குரிமை என்பதை வலியுறுத்தியது.

இதனிடையே சைமன் கமிஷன் எதிர்ப்பு,ஒத்துழையாமை இயக்கம்,கள்ளுக்கடை மறியல் என இந்தியப் பெண்கள் தங்கள் அரசியல் உணர்வையும்,திறத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

பெண்களுக்கான தனித்தொகுதி ஒதுக்கீடு குறித்த ஆதரவு,எதிர்ப்பு நிலைப்பாடுகளும் நிலவின.

1935ல் வந்த இந்திய அரசு சட்டம் (இறுதி காலனித்துவ சட்டம்) பல கட்டுப்பாடுகளை வாக்குரிமையின்மேல் வைத்தது. இதன்படி மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினரே வாக்குரிமை பெற முடியும்.இதில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் சொற்பம்.

“விவாகரத்து ஆன பெண், கைம்பெண், மற்றும் சொத்து இல்லாத பெண்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று அரசாங்கம் கருதியது”.

வெவ்வேறு மாகாணங்களில் பரம்பரை சொத்துக்களில் பெண்களுக்கான உரிமை என்பது மாறுபட்டிருந்தது. மதராஸ் மாகாணத்தில், அரசுப்  பணியில் இருந்த அதிகாரியாகவோ அல்லது சிப்பாயாகவோ இருந்து மரணித்தவரின் தாயாகவோ அல்லது மனைவியாகவோ ஓய்வூதியம் பெறும் பெண்ணுக்கு வாக்குரிமை உண்டு.

அதேபோல் கணவர் வரி செலுத்துபவராகவோ அல்லது சொத்துக்களையும் உடைமைகளையும் வைத்திருந்தால் அவரது மனைவிக்கும், தாய்க்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

அதாவது, ஒரு பெண்ணின் வாக்களிக்கும் தகுதியை தீர்மானிப்பது அவரது கணவரின் சொத்து, தகுதிகள் மற்றும் சமூக அந்தஸ்தை முற்றிலும் சார்ந்ததாக இருந்தது.

அதிக கல்வியறிவற்ற, கிராமப்புறங்களைச் சேர்ந்த, ஏழைப் பெண்களைச் சேர்ப்பதில் யாருக்கும் ஆர்வமில்லை. அதன் விளைவே இப்படிப்பட்ட கெடுபிடிகள்…

இந்தியா விடுதலை பெற்றவுடன் நமக்கென்று அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது..

389 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில்  

  • சரோஜினி நாயுடு 
  • தாக்ஷாயினி வேலாயுதன் 
  • அம்மு சுவாமிநாதன்
  • துர்காபாய் தேஷ்முக் 
  • ராஜ்குமாரி அம்ருத் கௌர்
  • பேகம் ரசூல் 
  • கமலா சௌத்ரி 
  • ஹன்ஸா மேத்தா 
  • லீலா ராய் 
  • மாலதி சௌத்ரி 
  • பூர்ணிமா பானர்ஜி 
  • ரேணுகா ராய் 
  • சுசேதா கிருபளானி 
  • விஜயலக்ஷ்மி பண்டிட் 
  • அன்னி மஸ்கரினே                                                                                                                                

ஆகிய 15 பெண்கள் இருந்தனர்.

சட்டமேதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் நிகழ்ந்த இந்த அற்புதமே சாதி,மத,இன,மொழி,அந்தஸ்து பேதமிலாது வயதுவந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கியது.

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாக்களர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது. 

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த காலனித்துவ கொள்கைகளில் இருந்து மாறுபட்டு, பெண்கள் சுயாதீன வாக்காளராக பதிவு செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

மாபெரும் சிக்கல் என்னவென்றால் பல பெண்கள் தங்கள் சொந்தப் பெயரைக் கணக்கெடுப்பில் தெரிவிக்கவில்லை. கணவர்,தந்தை,மகன் அல்லது அவர்கள்  சார்ந்த உறவினரைக் குறிப்பிட்டே வந்தனர்.தங்களைப் பற்றிய விவரம் தெரிவிக்க விரும்பவில்லை.குறிப்பாகப் பெயர்களை…

கணவன் அல்லது தந்தையின் பெயரால் மட்டுமே பெண்கள் அடையாளம் காணப்பட முடியாது, அவர்கள் தங்கள் பெயரால் மட்டுமே பதிவு செய்யப்படுவார்கள் என்று அரசு கூறியது.

பெண்கள் தங்கள் பெயர்களை எழுத ஊக்குவித்த அரசு, அதுதான் அவர்களின் சொந்த அடையாளத்தை உருவாக்கும் வழி என்று உணர்ந்து விழிப்புணர்வுப்  பிரசாரங்களை மேற்கொண்டது.

பெண்கள் தங்கள் நலன்களைப்  பாதுகாக்க வேண்டுமென்றால், அவர்கள் வாக்காளர்களாக மாறுவது அவசியம் என்று மகளிர் அமைப்புகள் பரவலான முயற்சிகளை முன்னெடுத்தன.

எல்லாம் தாண்டியும் சுமார் இருபத்தெட்டு லட்சம் பெண்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிடாமல் விடுபட்டுப் போனார்கள் 

எவ்வளவு நீண்ட போராட்டம்…

எவ்வளவு பேரின் முயற்சி… 

எத்தனை காலப் பிரசாரம்…

எல்லாம் தாண்டியும் காலம் கனிந்து வந்து காலடியில் உரிமை காத்து நின்றபோது தங்கள் அடையாளம் எது என்றே உணராத, அறியாமையில் மூழ்கிக் கிடந்த அந்த இருபத்தெட்டு லட்சம் பெண்கள் நமக்குப் பாடம்.

அவர்கள் நம் அச்சத்தின், அறியாமையின் அடையாளம் !!

அவர்களிடமிருந்து மாறுபட்டு, தங்கள் முயற்சியால் பல தடங்களில் சலியாது நடந்த, நடந்துகொண்டிருக்கும் பெண்கள் நமக்கு 

நம்பிக்கையின் அடையாளம் !

பெண்ணறிவின் அடையாளம்!

புத்துலகின் அடையாளம்!

அத்தகைய பேரறிவின், பெரு உழைப்பின் சமகால அடையாளங்கள் சிலரை இத்தொடர்வழி சந்திப்போம்.கொண்டாடுவோம்!  

தொடரும்….

தொடர்புடைய அடையாளம் பதிவுகள்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button