
தனியன்
பொசுக்கு பொசுக்கென
கோபம் மட்டும்
வராமலிருந்திருந்தால்
இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி
ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள்
இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி
தான் பொங்கியதை
தானே அள்ளித் தின்னும்
கொடுமை நேர்ந்திருக்காது.
***
கொள்ளைக்கூட்டத்தினர்
சதா தேடி அலைந்துகொண்டே இருக்கின்றனர்
என் தனிமையை
ஒரு கோணிப் பையிலிட்டுப் பத்திரப்படுத்துவது
எப்படியெனும் யுக்தியைக் கண்டறிவதற்குள்
ஆயிரம் கைகள்
என் வீட்டுக் கதவை
இடைவிடாது தட்டிக்கொண்டே இருக்கின்றன.
***
தனிமையையும் மௌனத்தையும்
சரிக்குச் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்
ஒரு நாளெனும் கோப்பையில் நிரப்பி
சிந்தாமல் சிதறாமல் கலக்க வேண்டும்
ஒரு சிறந்த தேநீரைப் போல
ஒவ்வொரு மிடறாக விழுங்க வேண்டும்
இதழில் ஒட்டியிருப்பதை நாவால் உறிஞ்சி
நாவில் மிஞ்சியிருப்பதை
சப்புக்கொட்டி ருசிக்க வேண்டும்
வேண்டும் வேண்டுமென்று
யாரேனும் வாசலில் வந்து யாசித்தால்
வேண்டவே வேண்டாமென்று
இழுத்து மூடிவிட வேண்டும் கதவுகளை
அப்படியொரு சிறந்த தேநீரை அருந்த
வேறு வழியேயில்லை!
***
கூடவே வருபவர் எழுந்து சென்றால்
ஏன் செல்கிறீர்கள்?
எங்கே செல்கிறீர்கள்?
என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை.
சகபயணி இறங்கும்போது
சிறு புன்னகையோடு
வழியனுப்புவதைப் போல
ஒரேயொரு சின்னஞ்சிறு புன்னகை
அவ்வளவுதான் என்றாகிவிட்டது
பயணச் சீட்டை சேமிப்பதுமில்லை
என் நிறுத்தம் வரை
அவர் வருவாரென
எதிர்பார்ப்பதுமில்லை
ஆளில்லாப் பேருந்தில் பயணிக்கவும்
பழகிக்கொள்ளத்தான் வேண்டும்.
*******