
ஆஸ்திரேலியா பயணத்திற்காக பரபரப்புடன் அனைத்து பொருட்களையும் அட்டைப் பெட்டிகளில் பாக்கிங் செய்து கொண்டிருந்தாள் கீதா. அதனால் அவள் மிகப்பெரிய மன உளைச்சல் அடையப்போகிறாள் என்பதை அறியாமல்.
ஆஸ்திரேலியாவிற்கு இது அவளது மூன்றாவது பயணம் என்றாலும் ஆசைமகனுக்கும் மருமகளுக்கும் பேரனுக்கும் அவள் அன்போடு அள்ள முடிந்ததையெல்லாம் அள்ளி அட்டைப் பெட்டிகளில் அடுக்கினாள்.
அவள் எப்போதும் கனத்த சூட்கேஸ்களை விரும்புவதில்லை. ஏனென்றால் சூட்கேஸ் கனத்திற்கு இன்னும் இரண்டு கிலோ கூடுதலாக எடுத்து செல்லலாம் என்பது அவள் கண்டுபிடிப்பு.
விமானத்தில் லக்கேஜ்ஜாக இருபது கிலோவும் கைச்சுமையாக ஏழு கிலோவும்தான் எடுத்து செல்லலாம். மீறினால் எக்ஸெஸ் ஃபேராக (உபரி கட்டணம்) எக்கசக்கம் கட்டவேண்டி வரும்.
எனவே, கீதாவின் கணவர் விஜய் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டாலும் அவள் பிடிவாதம் பெரும்பாலும் வென்றது, எல்லா மனைவியரைப் போல.
ஒவ்வொரு விமானப் பயணத்திலும் இந்த லக்கேஜ் தலைவலி தம்பதியிடம் மிகுந்த மனவலியை ஏற்படுத்திவிடும். சொல்லி சொல்லிப் பார்த்து அலுத்துப்போன விஜய், அவளுக்கு பட்டால்தான் தெரியும் என்று விட்டு விட்டார். அதுவும் அவளுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.
புறப்படும் நாளன்று எதிர்பாராத விதமாக கீதாவின் தங்கை இரண்டு கிலோ இனிப்புகளை “பேரனுக்கு கொடுத்து விடு” என்று வழங்கிச் சென்றாள். கீதாவிற்கு வீட்டிலிருந்த “வெய்யிங் ஸ்கேல்” சில நேரங்களில் சரியாக எடையைக் காட்டவில்லையோ என்ற சந்தேகம் வேறு.
இரண்டு மிகப்பெரிய அட்டைப் பெட்டிகள், இரண்டு டிராலி பேக், ஒரு லேப்டாப் பேக், என்று டாக்ஸியில் ஏற்றி ஒரு மாலைப் பொழுதில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அறுபதைக் கடந்த இருவரும் அனைத்து லக்கேஜையும் ஏர்போர்ட் டிராலியில் சிரமப்பட்டு ஏற்றி செக்கிங் கவுன்டரில் நின்றபோது கீதாவின் தைரியம் மெள்ள உடைய ஆரம்பித்தது.
“எக்செஸ் லக்கேஜ்” என்று தண்டம் கட்டவேண்டி வருமோ என்ற பயம் அவளை அரித்தது.
கீதா பல அலுவலகங்களில் பணி புரிந்த நிர்வாக நிமிர்வு கொண்ட, சற்றே சர்வாதிகார குணம் பெற்ற, அஷ்டாவதானி. விஜய்யும் பல நாடுகளில் பல நிலைகளில் பணி புரிந்து வழி நடத்தப்பட்டு, பலரையும் வழி நடத்திய அனுபவத்தினால் கனியப்பட்ட பொறுமைசாலி.
ஒவ்வொரு பயணத்தின்போதும் கீதா செக்கிங் கவுண்டரில் உள்ள ஊழியர் தமிழா, மலையாளமா, ஹிந்தியா, என்பதை நொடியில் அவதானித்து அவர்தம் மொழியில் பேசி, அவளுடைய பர்சனாலிட்டி மற்றும் சாதுரியத்தால் எக்ஸ்ட்ரா கட்டணம் எதுவும் கட்டாமல் தப்பித்து விடுவாள். விஜய் சற்று செவிடு என்பதால் அவளையே அனைத்தையும் பார்த்துக்கொள்ள அனுமதித்து விடுவார்.
ஆனால், இன்று கீதா, முதல் பந்திலேயே அவுட் ஆன “விராட் கோலி”யானாள்.
அவள் முன் அமர்ந்திருந்த விமான நிலைய ஊழியர் சற்று கறாரான மிலிட்டரி டைப்.
எனவே, அவர் அனைத்து லக்கேஜ்களையும் ஒரேயடியாக எடை போட்டுவிட்டு கம்ப்யூட்டரில் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். கீதாவிற்கு மன அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது.
அனைத்தையும் முடித்து விட்டு, சாவதானமாக கீதாவைப் பார்த்து “நீங்கள் எக்செஸ் லக்கேஜ் கட்டணமாக பதினேழாயிரம் கட்ட வேண்டும்” என்று உச்சபட்ச தண்டனை வழங்கினார்.
அதிர்ச்சியால் உறைந்த தம்பதியின் சாமான்களை அப்புறப்படுத்த சொல்லிவிட்டு மற்ற பயணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் மிலிட்டரி மீசை.
“ஆயிரம் இரண்டாயிரமாக இருந்தால் போனால் போகிறது கட்டி விடலாம்” என்று இருந்த தம்பதிக்கு பதினேழாயிரம் இடியாக இறங்கியது.
தம்பதியை வழியனுப்ப யாரும் வரவில்லை என்பதால் யாரிடமும் எதையும் கொடுத்து அனுப்ப முடியாத சூழ்நிலை. பயணத்தை கேன்ஸல் செய்தால் ஏகப்பட்ட பணம் நஷ்டம், நேர விரயம்.
சனிக்கிழமையன்று பெற்றோர் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்து அன்று இரவு அவர்களை மெல்போர்ன் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்டு, ஞாயிறு அவர்களுடன் இருந்து விட்டு திங்கள் பணிக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தில் மகன் செய்த ரிசர்வேஷன் வீணாகிப் போய்விடுமே என்ற கவலை வேறு கீதாவை பாடாய்பாடுத்தியது.
நேரம் ஆக ஆக மற்ற பிரயாணிகள் செக்கிங் கவுண்டரை ஆக்ரமித்துக் கொள்ள தம்பதிக்கு பதட்டம், மன நெருக்கடி பெருகிக்கொண்டே இருந்தது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கீதா அந்த ஊழியரிடம் அபராத கட்டணத்தைக் குறைக்கும்படி கெஞ்சி மன்றாட, அவரோ “அனைத்தும் கம்ப்யூட்டர் மயம். கோலாலம்பூரில் செக் செய்தால் என் வேலை போய்விடும்.. சாரி” என்று கையை விரித்து விட்டார்.
ஒரு சில சாமான்களை எடுத்துவிட்டு அங்குள்ள குப்பைக் கூடையில் போட்டு விடலாம் என்று தம்பதி முடிவெடுத்தாலும், ‘எதைப் போடுவது; எதைக் கொண்டு செல்வது?’ என்ற குழப்பம்.
தலா இருபது கிலோவிற்கு மேலே இருந்த இரு அட்டைப் பெட்டிகளும் எளிதில் அவிழ்க்கமு டியாத பிளாஸ்டிக் கயிறு மற்றும் எளிதில் பிரிக்க முடியாத செல்லோ டேப்பால் அற்புதமாக கட்டியிருந்தாள் கீதா. இது போன்ற பாக்கிங் விஷயத்தில் கீதா கில்லாடி.
அங்கு இருந்த மற்ற பயணியர்களும் ‘வெயிட்டை சரிபார்த்து கொண்டு வந்திருக்க வேண்டாமோ?’ என்பது போல் இருவரையும் இரக்கம் கலந்த ஏளனப் பார்வை பார்த்தனர்.
‘இதுதான் தருணம்’ என்று கீதாவை கோப வெள்ளத்தில் மூழ்கடித்து சாகடிக்காமல் விஜய் அவளுக்கு ஆறுதல் சொல்லி ஆற்றுப் படுத்தினார்.
“லுக்! கீதா! நாம் இருவரும் பல ஊர்களுக்கு முப்பது வருடங்களாக பறந்து கொண்டிருக்கிறோம், இதுவரை எக்ஸ்சஸ் லக்கேஜ் கட்டணம் எதுவும் கட்டாமல். முப்பது வருட பயணத்தில் பதினேழாயிரம் வருடம் சராசரி அறுநூறு ரூபாய்தான்.
ஆயிரக்கணக்கில் டிக்கெட் புக் பண்ணி போகும்போது வருடம் தலா அறுநூறு ரூபாய் பெரிய விஷயமல்ல. கஷ்டமோ நஷ்டமோ, மனதை திடப்படுத்திக் கொண்டு பதினேழாயிரத்தை கட்டிவிட்டு பிளேன் ஏறுவோம்” என்று சமாதானம் சொன்னார் விஜய்.
தேன் நிலவாக இருக்கவேண்டிய பயணம் தேள் கொட்டிய பயணமாகி விட்டதே என்று கலங்கினாள் கீதா. பென்ஷன் இல்லாத வாழ்க்கையில் பதினேழாயிரம் அவர்கள் இருவருக்கும் இரண்டு மாத மாதாந்திர செலவுக்கான பட்ஜெட் பணமல்லவா என்று உருகினாள்.
வாழ்நாளெல்லாம் அஞ்சு ரூபா, பத்து ரூபா, என்று செலவை எங்கெல்லாம் குறைக்க முடியுமோ அங்கெல்லாம் குறைத்து, ஓலா டாக்ஸியில் செல்லாமல் கடும் வெய்யிலில் ஆட்டோவில் சென்று சிறுகச் சிறுக மிச்சப்படுத்திய பணம் எல்லாம் இப்படி ஒரேயடியாக பதினேழாயிரமாகப் போகப் போகிறதே என்ற துக்கம் தொண்டையை அடைக்க கவுண்டர் ஊழியரிடம் தண்டம் கட்டுவதற்காக சரண் அடைந்தாள் கீதா.
நல்ல வேளையாக பாங்க் அக்கவுண்டில் பணம் இருந்தது. அவர் சக ஊழியர் ஒருவரை நியமித்து கீதாவிடமிருந்து பணத்தை கலெக்ட் செய்ய ஆணையிட்டார்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. எங்கும் புறப்பாடு டென்ஷன். இன்னும் சில நிமிடங்களில் கவுண்டர் அடைக்கப்பட்டு விடும். அதற்குள் பணம் கட்டி விட்டு லக்கேஜ்ஜை கன்வெயர் பெல்ட்டில் அனுப்பிவிட்டு, போர்டிங் பாஸ் பெற்று, எமிக்ரேஷன் கியூவில் நின்று பாஸ்போர்ட்டில் சீல் பெற்று ஹிந்தி மட்டுமே தெரிந்த செக்யூரிட்டியிடம் செக்யூரிட்டி செக் முடித்து விமானத்துக்கு வேகு வேகுவென்று விரைய வேண்டும்.
இரவு சாப்பாடாக கொண்டு வந்திருந்த அவுல் உப்புமாவை சாப்பிட நேரம் இல்லாததால் குப்பையில்தான் கொட்ட வேண்டும் போலிருக்கிறது என்று தம்பதி படபடத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், என்ன துரதிஷ்டமோ, மொபைல் ஃபோன் வழியாக கீதா பல முறை ஜீ-பே செய்ய முயன்றும் பணம் அவள் அக்கவுண்ட்டிலிருந்து விமான அலுவலக நம்பருக்குப் போக வில்லை!
ஊழியரே திருப்பித் திருப்பி முயன்றும் தோல்வி!
எகிறியது டென்ஷன்! ஊழியரும் ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் அவருடைய மேனேஜரிடம் “ஏதோ டெக்னிக்கல் ப்ராப்ளம்! கஸ்டமரிடமிருந்து பணம் நம் கைக்கு வரமாட்டேன் என்கிறது” என்று சொல்லிவிட்டு வேறு வேலைக்குப் போய் விட்டார்.
இப்போது யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஸ்பீக்கரில் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பரபரப்பு உச்சக்கட்டம்!
வேறு வழியின்றி இறுதியில் செக்கிங் கவுண்டர் மிலிட்டரி ஆசாமி, ஒரு டிராலி பேக்கில் இருந்து அனைத்து பொருட்களையும் வேறு பைகளுக்கு மாற்றி விட்டு காலி டிராலி பேக்கை அங்கேயே குப்பைக் கூடை அருகில் விட்டு விட சொன்னார்.
அப்போதைக்கு அவர்தானே கண் கண்ட தெய்வம்!
கீதாவும் விஜய்யும் உடனே ஒரு டிராலி பேக்கை முழுக்க காலி செய்து விட்டு அதன் பொருட்களையெல்லாம் மற்ற பைகளில் அழுத்தி, நசுக்கி, திணித்து, பிதுங்கினாலும் எப்படியோ பேக் செய்து விட்டு அந்த காலி டிராலி பேக்கை கார்பேஜ் கூடை அருகே அனாதையாக விட்டு விட்டு போர்டிங் பாஸ் பெற்று அனைத்தையும் சுபமாக முடித்துக்கொண்டு விமானம் நோக்கி ஓடினர்.
பதினேழாயிரம் ரூபாயால் ஏற்பட்ட ஏகப்பட்ட டென்ஷன் நீங்கி, பதினேழாயிரம் மிச்சப்படுத்தி விட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தனர்.
பல வருடங்கள் பல இடங்கட்கு தங்களுடன் வந்த அந்த டிராலி பேக்கிற்கு இருவரும் மனதளவில் பிரியா விடை கொடுத்து நன்றி செலுத்தினர் மானசீகமாக.
வாழ்க்கையில் எதையுமே ‘லா ஆஃப் ஆவரேஜ் என்ற சராசரி கணக்கு பார்க்கும் விஜய், ஆயிரம் ரூபாயிற்கு வாங்கிய டிராலி பேக் பத்தாண்டுகள் உழைத்ததால் நிகர இழப்பு நூறு ரூபாய்தான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
கோலாலம்பூர் வழியாக மெல்போர்ன் வந்திறங்கி மகனின் காரில் ஒரு பனி மழை பெய்யும் குளிர் இரவில் டிருகானிநா-வில் அமைந்த அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
‘ஜெட் லாக்’ எனப்படும் பயண அயர்ச்சியெல்லாம் நீங்கிய பிறகு இரண்டு நாட்கள் கழித்து மகனிடம் பதினேழாயிரம் பற்றி சொன்னாள் கீதா.
மகன் பெற்றோரை எதற்காக எக்ஸசெஸ் லக்கேஜ் எல்லாம் கொண்டு வந்து இப்படி அவதிப்பட வேண்டும் என்று கடிந்து கொள்ள, ‘ஏதோ! பகவான் புண்ணியத்தில் பதினேழாயிரம் கட்டாமல் தப்பித்து விட்டோம்’ என்று அனைவரும் அகமகிழ்ந்து அவரவர் வாழ்க்கையில் ஆழ்ந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து, வீட்டு வாசலில் இருந்த போஸ்ட் பாக்ஸில் இருந்த ஒரு தபாலை பேரன் தன் அப்பாவிடம் கொடுத்தான். ஏதோ கவர்ன்மெண்ட் சீல் போட்ட தபால். சற்று துணுக்குற்று பார்த்த மகன் ஸ்ரீகாந்த் அதிர்ச்சியில் உறைந்தான். அனைவரும் “என்ன தபால்?” என்று பதட்டதுடன் கேட்க ஸ்ரீகாந்த் ஒரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு வருத்தத்துடன் உண்மையை உரைத்தான்.
கார் ஓட்டுவதில் எப்போதுமே ஸ்ரீகாந்த் சர்வ ஜாக்கிரதை. சட்ட விதிகளை என்றுமே மதிப்பவன். அவன் ஆபீஸ் செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் ‘குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்’ என்று சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு நாள் சற்று லேட்டாக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற போது அவசரத்தில் ஓரிடத்தில் வேகத்தை குறைக்கத் தவறி விட்டான்.
அங்கிருந்த ஸ்பீட் ராடார் அவனைக் குற்றவாளியாக்கியது.
இருநூற்று தொண்ணூத்தைந்து ஆஸ்திரேலிய டாலர். கிட்டத்தட்ட பதினேழாயிரம் ரூபாய்!
விதிவசத்தால் பதினேழாயிரம் நாம் மிச்சப்படுத்தினாலும் ‘ஆஸ்திரேலியா விதி’யால் அந்த பணம் மீண்டும் கை நழுவிப் போய்விட்டதே என்று கீதாவுக்கு உரைத்தது.
கண்டம் விட்டு கண்டம் தாண்டினாலும் விடாது துரத்தும் விதியின் விளையாட்டைத் தவிர்க்கமுடியவில்லையே என்று பரிதவித்தாள் கீதா.
வாழ்க்கையில் அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் சகஜமாக எடுத்துக்கொண்டு வாழும் விஜய் வழக்கம் போல அவரது ‘லா ஆஃப் ஆவரேஜ்’ விதியினை எல்லோருக்கும் சொன்னார்.
“டேய் ஸ்ரீகாந்த்! நீ பத்து வருஷமாக ஆஸ்திரேலியாவில் இருக்கிறாய்! வருடத்திற்கு ஒரு முப்பது டாலர் அரசுக்கு டொனேஷன் வழங்கியதாக எடுத்துக் கொண்டு சமாதானமடைந்து வாழ்ந்தால் இது போன்ற அதிர்ச்சிகளை கடந்து போய் விடலாம்” என்று ஆறுதல் சொன்னார்.
இப்போது வீட்டிலுள்ள அனைவருமே எப்படியாவது சிறுகச்சிறுக இந்த முன்னூறு டாலர்களை அப்படியும் இப்படியுமாக மிச்சப்படுத்த முயன்று வாழ்க்கையை தொடர்ந்தனர்.
விதி வலியது!!!