பெருங்காற்றின் தவம் – காந்தி முருகன்

அவளுக்கான அறை உருவாக்கப்பட்டுப் பெயர் அட்டைத் தயாராகி விட்டது. இனி அவள் தனது பயணத்தை அங்குத்தான் தொடர வேண்டும். புதிய தோற்றம்; புதிய சூழல்; புதிய மனிதர்கள். இந்தப் பயணமானது எத்தனை மணி நேரத்திற்கென்று என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. மணிகள் நாள்கள் ஆகலாம்; நாள்கள் மாதங்கள் ஆகலாம். மௌன யுத்தத்திற்கான நேரம் துவங்கி விட்டது. யாரும் யாரோடும் போரிட அவசியமில்லை. ஆயுதங்கள் கிடங்கிலிருந்து முண்டியடித்துக் கொள்ளத் தேவையில்லை. உடற்காயங்கள் சதையை இறுக்கிப் பிடிக்க வேண்டிய அவலமுமில்லை. உச்சத்தைத் தொட முடியாத மௌனம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கும். இந்த மௌனத்தைத் தாண்டி ஒரேயொரு ஒலி மட்டும் காதில் விழுந்து கொண்டே இருக்கும்.
நான்கு திசைகளிலும் ஒளியற்ற சூழல். சிறு துளி அளவிற்குக் கூட வெண்மையை காணயியலாது மூடிக் கொண்ட கண்கள் அவை. கை கால்கள் அசைவை எதிர்கொள்ளவில்லை. உடலெங்கும் மின்சார கம்பிகள். மூக்கிற்குச் சுவாசக் கவசம் பொருத்தப்பட்டு உயிர் பிரிய ஓராயிரம் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் உள்ளக போராட்டத்தில் தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறாள் அவள்.
அவளது அழுகையும், கதறலும் யார் காதிலும் விழாமல் போயிருக்கலாம். அவளது காதுகளுக்கே அவை கேட்காமலும் இருக்கக் கூடும். ஆனால், அவளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனதில் பட்டதை அவளால் எள்ளளவும் சொல்ல இயலாது. அந்த ஒற்றைச் சொல்லுக்காக அவளது உதடுகளின் அசைவுகள் இயற்கையோடு போராடிக் கொண்டிருக்கின்றன.
பஞ்சு மெத்தையில் பல நாள்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த உடலது. சொகுசாக அயர்ந்து கொண்டு ஓய்வெடுக்க வேண்டிய நிலை. பல மெத்தைகளையும் தாண்டி இந்த மெத்தைக்கு சிறப்பு அழைப்பாளியாக வந்துள்ள உடலது. கண்ணுக்குப் புலப்படாத, சலனப்படாத ஒன்றின் மீது உணர்வுக் கொள்ளாத நிலையில் அவளது மூளை ஓய்வு கொள்ள விரும்பவில்லை.
“தேனு….அம்மாடி…”
அடர்ந்த வனத்திற்குள் தூரத்திலிருந்து ரீங்காரமிடும் வண்டின் ஒலியைப் போல அந்தக் குரலின் சாரம் அவளை அழைக்கிறது. சூன்யமான இருளுக்குள் கெஞ்சுதலின் வெளிப்பாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் ஏமாற்றத்தின் விளிம்பில் தத்தளிப்பதை அறியாது நீச்சலென தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் குரலது. இருபத்தைந்து வருடங்களாக போலி உணர்வுக்குள் சிக்குண்டு கிடப்பதை துளியளவும் அறியாது காலத்தைக் கடத்திய குரலது. இப்போதும் அந்தக் குரல் மன அழிழ்வை உணராது வந்து அவள் முன் நிற்கிறது. அந்தக் குரலின் மூச்சுக் காற்று அவளை அரவணைத்துக் கொள்ள தவமாய் காத்திருக்கிறது. பூட்டத் தயாராகிக் கொண்டிருக்கிற அறையின் கதவை அவளால் இனி திறக்க முடியாது. சாவி தொலைந்து விடும் என்பது உறுதி. அவளால் உணர முடிவதெல்லாம் இந்தச் சூன்யமான இருளிலிருந்து விடுபட முடியாத சூழலில் மனபாரத்தின் வலிகளைக் கடந்திட சிந்தைக்குள் வலிமையில்லை.
அவளது விரல்களைத் தாங்கி அந்தக் குரலின் உருவம் தொடுகிறது; தடவுகிறது. மென்மையான ஊடுருவல். அந்தத் தொடுதல் அவளது மூளையைச் செயல்பட வைக்கிறது. இரு விரல்களின் நுனி ஆத்மார்த்தமான அன்பை முளைக்க வைக்கிறது. ஆனால், அவளுக்குள் கட்டவிழ்த்தப்பட்டிருக்கும் ஓர் உணர்வு, புதிய உணர்வின் தாக்கம் அவளுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தடுக்கிறது. மனத்தைக் கொன்று தின்கிறது. இப்போது இந்தத் தொடுதலை அவள் விரும்பவில்லை. விலகிட முனைகிறாள்; முடியவில்லை. செயல்படத் தொடங்கியிருந்த மூளைக்குள் ஒரு தட்டு விழுந்தது போல சலசலப்பு. எதையோ உணர்ந்து விட்டது போலவே அந்த விரல்கள் பின்வாங்கிக் கொண்டன.
இந்த ஒளியற்ற நிலையில் அங்கும் இங்குமாய் மின்மினிப் பூச்சியாய் அவனது கண்கள் மட்டும் சிறு வெண்மையைக் கொண்டு வந்து சேர்க்கின்றன அவளுக்கு. புன்னகை நிறைந்த முகம். கன்னத்தில் விழும் குழியில் அன்பைத் தேக்கி வைக்கலாம். அறுபடும் விலங்குகளுக்கு உண்டான சுயசுதந்திரம், பாவப்பட்ட மனித உணர்வுகளுக்குக் கிடைப்பதில்லை. எல்லையற்ற பெருவெளியில் பயந்து எழும் ஒவ்வொரு கணமும் அவளது முகம் துவண்டு வீழ்ந்து மடிகிறது.
அவனைக் மீண்டும் மீண்டும் காண கண்கள் விரும்புகின்றன. கட்டமைப்புகளின் பிடியில் நிலைகுத்திக் கிடக்கும் அவளது உணர்வுகள், எண்ண அதிர்வலைகளை கட்டவிழ்த்துபட முரண்கள் சூழ்ந்து வேலியிட்டுக் கொண்டுள்ளன.
முதல் சந்திப்பு நிகழ்ந்த காலக்கட்டம் அது. ஓர் இலக்கிய உரையைக் கேட்ட முதல் தருணமும். இருள் சூழ்ந்து தனிமையை விரும்பியவளாய் உருமாறிக் கொண்டிருந்த அவளுக்குள் கண்ணீர் ததும்பிய வலியோடு ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதென்பது சாத்தியமன்று. தஞ்சம் புகுந்திருந்த தோழியின் தாயாருக்கு வாகனமோட்டியாக விரைந்தவள் கசங்கிய ஆடையில், அலங்கோல முகத்தில் மண்டபத்தின் மூலையில் அமர்ந்திருந்திருக்க அவனது கணீர் குரல் உணர்வுக்குள் புகுந்திட ஒரு கணம் புத்துணர்வாய் உணர்ந்தாள். சில மாதங்களாக வன்மங்களைத் தேக்கி வைத்திருந்த ஆழ்கடல் ஒன்று, அன்று தன் தேக்கங்களைக் கட்டவிழ்த்திருந்தது தன் உணர்வுகளிலிருந்து. வசீகரமான தோற்றத்தை விட அவனது உரை, குரலின் இனிமை அவளை நகர மறுத்திருந்தது. கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. வற்புறுத்தலின் பேரில் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலிருந்து தன்னைத் தொலைத்து விட்டுத் தேட மறுத்திருந்தாள்.
இலக்கியவாதிக்கும் சாதாரண மக்களுக்குமான உறவென்பது எழுத்தாளன் தன் படைப்புகளுக்கிடையில் விட்டுச் செல்லும் வாசக இடைவெளியால் உயிர் பெற்று நிற்கக் கூடியது. வாசிப்பை முன்னிறுத்தாத அவளிடம் பட்டாம்பூச்சியைப் போன்றே தொலைந்து விடக் கூடிய நிலை அதிகமானது.
சிறிது நேர மனப்பிரளயத்திற்குள் சிக்கித் தவித்தாள். நிகழ்ச்சியிலிருந்து வாங்கி வந்த அவனது நூலை பல முறை பார்த்தாள். மூலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கயிற்றின் முனைப் பகுதி பொருட்களுக்கிடையில் வெளியே நீண்டு கொண்டிருந்தது. சுண்டு விரலால் உள்ளே தட்டி விட்டாள். மௌனமாய்த் தீண்டிய அதே கண்கள் நூல் வடிவமாய் உருமாறியிருந்தது. அன்றிரவு முழுவதும் அவளது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததை உணர்ந்து தோழியின் தாயார் புன்னகை கொண்டார்.
எழுத்தின் மீது தேன்மொழிக்கு கொஞ்சமிருந்த ஆர்வம் “சிறுகதைகள் அருமை“ என அவளது முதல் விமர்சனத்திற்கு “நன்றி தோழி“ என அவனது வாட்சப் பதிவு மூலம் பேரின்பமாக மாறியது. தொடர்ந்து நிறைய வாசிக்கலானாள். அவனது படைப்புகளையே தேர்ந்தெடுத்து வாசித்தாள் ; அவனோடு பேசவும் முயற்சித்தாள். இலக்கியப் பயணம் தொடர்ந்து சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்தது
அவர்களுக்கான நெருக்கத்தில் மாற்றங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. கம்பனி புரோடக்ஷன் வேலை நேரத்தில் இலக்கியத்திற்கான, அவளுக்கான நேரத்தையும் அவன் சரிவர பங்கிட்டுக் கொண்டான். தன்னை அவனுக்கு ஈடாகவே கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொண்டாள். எழுத்தால் நெருங்கியவள் மனதால் நெருங்கிட தயக்கத்தைக் காட்டினாள்.
தேன்மொழியின் அன்பில் அவன் சிக்கியிருப்பதை அவளால் உணர முடிந்தது. அவளது கைப்பக்குவத்தை மனதார பாராட்டி வயிராற சாப்பிடுவான். அவனது எந்தச் சிக்கல்களுக்கும் தேன்மொழியால் நல்ல தீர்வினை வழங்கிட முடியுமென்பதை உணர்ந்து அவளிடம் இரகசியங்களற்ற போக்கினைக் கொண்டிருந்தான்.
தேன்மொழிக்குள் உண்டான மாற்றங்களைப் பலரும் பாராட்டிய தருணம். இரண்டு முரடர்களிடம் சிக்கித் தவித்த அன்றைய இரவின் கருள் சுருளையிலிருந்து முழுமையாக விடுபட்டு ஆர்வம் சார்ந்த நகர்வுகளின் வழி தன்னைத் தானே செதுக்க ஆரம்பித்தாள், அவனது திருமண நாள் வரை. தேன்மொழி மருத்துவமனையில் மனநல மருத்துவ பிரிவின் கீழ் சிக்கியிருந்தாள். திருமணத்திற்குப் பின்னும் அவன் தேன்மொழியிடம் எப்போதும் போலவே பேச முயற்சித்ததை அவள் தொடர்ந்திட விரும்பவில்லை. அவரது படைப்புகளுக்கு வாசகனாக பயணம் முடிவுப் பெற்றதை மனத்திடம் சொல்லிச் சொல்லிப் பழகினாள்.
தேன்மொழியின் இக்கட்டான மனநிலையில் நட்பாய் மலரந்த அன்பொன்று வாழ்க்கைத் துணையாய் மாறிப் போனது. அவனது நினைவிலிருந்து விடுபட இந்த மணவாழ்வை ஏற்றுக் கொண்டு அதில் பலமுறை தோல்வியையும் சந்தித்தாள். புதியவனின் அன்பிற்காக பல முறை தனது மனபிரளயத்திலிருந்து வெளியேற முயன்றும் பலனில்லாமல் போனது. கணவனின் அன்பும் அரவணைப்பும் அவளை போலியான வாழ்க்கை வாழ அவளைத் தயார்படுத்திக் கொண்டே இருந்தது.
இன்று அவளது வாழ்நாளின் இறுதி அத்தியாயமாகக் கூட இருக்கலாம். மீண்டும் மீண்டும் சிந்தனையைத் துளைக்கும் அவனது நினைவுகளிலிருந்து விடுபட முடியவில்லை. மகன் இளமாறனின் வருகையைக் கூட உணர முடியாத நிலையில் மருத்துவர்கள் தேன்மொழிக்கு சில மணி நேர வாய்ப்புகளைத் தற்காத்திருந்தனர்.
தீராத ஆசைகளோடு எந்த ஆன்மாவும் இவ்வுலகை விட்டு எளிதில் பிரிவதில்லை. தனக்கான கோரிக்கைகளைப் பிரபஞ்சத்திடம் முன் வைத்துக் கொண்டே இருக்கும். தன் உயிர் பிரிவதிலிருந்து தடுப்புச் சுவரை உருவாக்கிக் கொண்டே தன் பிடிவாதத்தை பிரபஞ்சத்திடம் திணித்துக் கொண்டே இருக்கிறாள். தன் நிலையைக் கண்டு அந்தப் பிரபஞ்சமும் தன் மீது காதல் வயப்படும் என்பதே அவளது எண்ணம். அவளின் பிடிவாதத்திற்கு இந்தப் பிரபஞ்சம் வளைந்து கொடுக்கும்; வரமாய்க் கொடுக்கும் என்பதே அவளின் பெரும் எதிர்பார்ப்பு.
நேரம் ஆக ஆக கணவனின் ஏக்கம் ஒரு புறம் அதிகரித்தாலும் தேன்மொழியின் நிலையைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானான். அவனது மனத்திலும் தயக்கமொன்று சிந்தனையைச் சீரழித்துக் கொண்டிருந்தது. தன் தோளில் சாய்ந்திருந்த மகன் இளாவின் முகத்தைப் பார்த்தார். ஆழ்ந்த கவலையில் தன்னையும் மறந்து தூங்கியிருந்தான். பேத்தி தியா அவனது மடியில் உறங்கியிருக்க சந்தியா கைப்பேசியில் மூழ்கியிருந்தாள். பலரும் அங்கே அடுத்தக் கட்ட நகர்வுக்காக, செயல்பாட்டிற்காக காத்துக் கிடந்தனர்.
மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டார். மகனின் தலையை நாற்காலியில் சாய்த்து விட்டு அவளது அறையை நோக்கி நடந்தார். தன்னோடு வாழ்ந்தவளின் உருவத்தை ஒரு கணம் மலைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எது நடந்தாலும் நான் என் இளாவுக்குத்த்தான்…நீங்க ஒன்னும் இல்ல…”
விளையாட்டாய்ச் சொல்லிச் செல்லமாய்த் தடவிச் செல்லும் அவளது மனப்பாங்கை இப்போதும் நினைத்துப் பார்க்கிறார். எதையும் சமாளித்துப் பேசும் அவளிடம் குழந்தைத்தனம் அதிகமிருக்கும். வெகுளித்தனம் என்று பலரும் நினைத்திருக்கக் கூடும். அவளால் தன் மன அழுத்தங்களை தீர்த்துக் கொள்ள இயலாத நிலையில் இளாவோடு ஐக்கியமாகி விடுவாள்.
கணவர் அவளது அருகில் சென்று வலது கையைத் தன் இரு கரங்களால் ஏந்தினார். அவரது கண்ணீர் அவளது கைகளில் தெறித்தது. அவளது மூளையில் சுயசிந்தனை கொஞ்சம் வெளிப்பட்டது.
“அம்மாடி, தேனு…”
அவரது ஒவ்வொரு கெஞ்சதலிலும் வாய் வார்த்தைகள் பலமிக்கதாகவே அவள் உணர்வாள். அவளுக்கான பாதுகாப்பு வளையத்தை வார்த்தைகளால் பின்னியிருப்பான்.
“உன்….உன்….இளமாறனை வரச் சொல்லட்டா…”
கணவரின் வார்த்தைகளில் ஏக்கமும், மன அமிழ்வும் இரண்டெனக் கலந்திருந்தது. தேன்மொழியின் மூளை அதிவேக அதிர்வுக்குள்ளானது. கண்களில் அசைவு தென்பட்டது. விரல்களில் தடுமாற்றம் நிகழ்ந்தது.
“என் தேனு எனக்கு வேணும்டி…ஒன் இளமாறன் வந்தாதான் என் தேனு நிம்மதியா மூச்சு விடுவா…”
கணவரின் அமைதியான கதறலின் ஒவ்வொரு விநாடியும் அவளை மரணக்குழியில் தள்ளியது. கணவனின் மடியிலிருந்து டைரி நழுவி கீழே விழ அவளது உயிரும் பிரிவதற்குத் தயாரானது.