இணைய இதழ்இணைய இதழ் 80சிறுகதைகள்

பழைய கணக்கு – சரத்

சிறுகதை | வாசகசாலை

சுனிலுக்குக் கண்கள் இருண்டன. கைகள் நடுங்கியது. கால்கள் தளர்ந்து போய் இருந்தன. வியர்வையால் உடலெல்லாம் ஈரம்.

ஆஹா! அந்த இலை…

இப்பவே வேண்டும்! இங்கேயே! உடனுக்குடன்!

அதைக் காய வைத்து, பொடியாக்கி, பீடியோடு சேர்த்துப் புகைத்து…!

வேண்டும். உடனே! 

இல்லையெனில்? 

செத்து விடலாம்‌.

ஒரே ஒரு இழுப்பு‌. இல்லையெனில் இறப்பு!

‘யார் அது? தேவியா?’

‘தேவி‌…தேவி…’

‘நான் உங்க அம்மா டா மூதேவி…’

‘அம்மா…தேவி எங்க?’

‘சார்…இப்படித்தான் ஏதேதோ பேசுறான்…ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்…’

‘டீடாக்ஸிஃபிகேஷன் இப்போ தான் ஸ்டார்ட் பண்ணிருக்கோம். சரியாக சில நேரங்கள் ஆகும். வெயிட் பண்ணுங்க…’

யூனிட் ஹெட் சண்முகம் வந்தார். 

தூக்கி வாரப்பட்ட தலைமுடி. அதில் ஆங்காங்கே தெரியும் வெள்ளைக் கோடுகள்‌, வயது நாற்பதை நெருங்கலாம் என்றது.

ஒவ்வொரு நோயாளியைப் பற்றியும் கேட்டுவிட்டு சுனிலிடம் வந்து நின்றார்.

‘வாட்ஸ் திஸ் கேஸ்…?’

பயிற்சி மருத்துவர்களுள் ஒருவன்,’கன்னாபிஸ் சைக்கோசிஸ் சார்…’ என்றான்.

மற்ற பயிற்சி மருத்துவர்கள் கைகட்டிக்கொண்டு பவ்வியமாக நின்று கொண்டிருந்தனர்.‌

‘எனி லீகல் கேஸ் ஆன் ஹிம்…?’

‘ஹி வாஸ் அரெஸ்டட் ஃபார் ஒன் ரேப் கேஸ் பிஃபோர்…இப்ப எந்த கேஸீம் இல்ல சார்…’

‘தேவி…தேவி…’

சண்முகத்தின் பார்வை அருகிலிருந்த சுனிலின் அம்மாவிடம் சென்றது.

‘உங்க பேரு…?’

அதற்கு பதில் அளிக்காமல்(பதில்: லட்சுமி),’நல்ல பையன் தான் சார். சேராத பசங்க கூட சேந்து…’

கண்களில் வழிந்த நீரையும், மூக்கையும் ஒருசேர துடைத்துக் கொண்டு விம்மினார் லட்சுமி.

‘தேவி…தேவி…’

‘ஹூ இஸ் தட் தேவி?’ என்றார் சண்முகம்.

‘ஹி இஸ் ஹாலுசினேட்டிங் சார். அப்படி யாரும் இல்ல…’ – பவ்வியங்களுள் ஒருவன்.

சிறிது நேரம் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டனர்.

‘டாக்டர்…என்ன கொன்னுடுங்க ப்ளீஸ்…’

‘டாக்டர்…டாக்டர்…’

‘டேய் டாக்டர் உன்கிட்ட தான் டா சொல்றேன்…செவுட்டுப்பயலே…’

மருத்துவர்கள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. 

‘டீன் இஸ் வெரி மச் இன்ட்ரஸ்டட் இன் திஸ் கேஸ். லோக்கல் அரசியல் புள்ளிக்கு தெரிஞ்சவங்க போல‌. டேக் கேர் ஆஃப் ஹிம்…’

சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்ற சண்முகம், சுனிலை ஒருமுறை பார்த்தார்‌.

அவன் காற்றோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். 

*

மணி ஐந்தைக் கடந்திருந்தது‌. காலையில் இருந்த பரபரப்பு நீங்கி, வார்டு சற்றே இளைப்பாறிய வேளையில்‌‌…

‘சுனில்…’

‘தேவி…’

‘எழுந்து வா…’

‘வரேன் தேவி…’

இரண்டாவது மாடி கட்டிடத்தில் இருந்து ஒருவித மயக்கச் சிரிப்புடன் லிஃப்ட்டினுள் நுழைந்தான் சுனில்.

‘ம்…வா சுனில்…மேல வா…’

‘வரேன் தேவி.‌‌..’

சுனிலின் விரல் நெம்பர் 12 ஐ அழுத்தியது‌.

வார்டு நர்ஸ் நிர்மலா தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சுனிலின் இருக்கை அருகே வர, லட்சுமி மட்டும் தரையில் தூங்கிக் கொண்டிருந்தாள்…!

‘சார்…நிர்மலா பேசறேன்…’

‘சொல்லுங்க ஸிஸ்டர்…இன்னிக்கு ட்யூட்டி நான் இல்ல‌‌…’

‘சுனிலைக் காணோம்‌…’

‘ஓ…மார்னிங் தான பார்த்தோம். சரி, டாக்டர் ஆனந்த் தான் இன்னிக்கு ட்யூட்டி. ஐ வில் இன்பார்ஃம் ஹிம்‌‌…’

08

09

10

11

12

‘தேவி! நீ இங்க தான் இருக்கயா?’

‘ஆமா…’

‘வரேன் தேவி…’

ஆனந்த், அன்றைய வேலையெல்லாம் முடித்து விட்டு அப்போது தான் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தான்.

அவனுக்குப் பிடித்த சுட்ட விராலின் தலைப்பகுதி அவன் வாயினுள் சரியாக சென்றபோது அந்த போன் வந்தது.

‘சுனில் காட் அப்ஸ்காண்ட்…’

‘வாட்…? என் ட்யூட்டில தான் இந்த எழவுலாம் வந்து சேரும்…ச்சே…’

ஆனந்த் பரபரப்பானான். மண்டைக்குள் ஏதேதோ ஓடியது‌.

‘டீன் இன்ட்ரஸ்டட் கேஸாச்சே…ஆயிரம் கேள்வி கேப்பாங்க…சண்முகம் சாருக்கு உடனே சொல்ல வேண்டும்…இந்த விரால்…’

ஆனந்த் அலுத்துக் கொண்டான். சுனிலின் மீது வெறுப்பு வந்தது. 

‘எங்கடா போய் தொலைஞ்ச…’

மாறி மாறி டெலிபோன்கள் பறந்தன. 

‘ஸிஸ்டர்..‌‌.சுனில் அம்மா லட்சுமி எங்க?’

‘தூங்கறாங்க சார்…’

‘வாட்…செடேஷன் சுனிலுக்கு குடுத்திங்களா இல்ல அவன் அம்மாவுக்கு குடுத்திங்களா…?! அவங்கள முதல்ல எழுப்புங்க…’

‘ஓகே சார்…’

‘நம்ம வாட்ச்மேன ஒருமுற மாடிக்கு அனுப்பி செக் பண்ண சொல்லுங்க‌…ஐ யம் கம்மிங்…’ 

‘தேவி…தேவி…’

‘வா சுனில்…உனக்காகத் தான் நான் காத்திருக்கிறேன்…

*

குயிய்ங்…குயிய்ங்.‌‌..என காதைப் பிளக்கும் காற்று. கழுகுப் பார்வையில் நகரத்தின் அத்தனை கட்டிடங்களும் மொத்தமாகத் தெரிந்தன. அந்த 12 வது மாடியில் சுனிலைத் தவிர வேறு யாரும் இல்லை‌. 

‘தேவி..‌‌.எங்கே இருக்க?’

‘உன் பக்கத்தில் தான் சுனில்…நான் ஒன்னு கேட்பேன்‌. எனக்காக செய்வாயா…?’

‘கண்டிப்பா…’

சுனில் தனியாக பேசியபடி மொட்டை மாடியின் நுனியில் நின்று கொண்டிருப்பதை பார்த்த வாட்ச்மேன் அதிர்ச்சி அடைந்தான்.

‘டேய்…கீழ இறங்கு…’

‘சுனில்…அப்படியே கீழ பாரு…ஒரு சிவப்புப் பூ தெரியுது பாரு…அது எனக்கு வேணும்…’

‘அவ்வளவு தானா தேவி? உடனே பறிச்சுட்டு வரேன்…’

தரை தளத்தில் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கேசுவாலிட்டி அருகே,

அந்த சிவப்பு ஆம்புலன்ஸ்…

அதன் மீது தீடீரென…!

……

உலா வந்து கொண்டிருந்த மருத்துவர்களின் வெள்ளைக் கோட்டுகள் எல்லாம் சிவப்பாய் மாறின.

சுனிலின் உடல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

*

இடம் : போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

நாள், நேரம் : அடுத்த நாள், காலை 10 மணி.

‘சார்…உங்கள பாக்க ஒரு பொண்ணு வெயிட்டிங்’

‘யோவ் அந்த இன்ஸ்பெக்டர வரச் சொல்லுயா…அந்த பையன் பேரு என்ன? ம்‌‌… சுனில்… ஏகப்பட்ட போன் கால்ஸ்…ரொம்ப ப்ரஷர்…’

‘சார்‌.‌..ஒரு பொண்ணு‌…’

‘என்னவாம்…?’

‘கை நிறைய ஸ்வீட்ஸ் வச்சுருக்கு…பூமிநாதன் சார பாக்கனுமாம்…’

‘அவர் இல்லனு சொன்னயா?’

‘சொன்னேன் சார்…உடனே உங்கள பாக்கனும்னு சொல்லுது…’

‘சரி…உள்ள வரச் சொல்லு‌…’

‘வணக்கம் சார்…’

‘சொல்லுங்க என்ன வேணும்?’

‘பூமிநாதன் சார்…?’

‘அவரு ட்ரான்ஸ்வர் ஆகி போயிட்டாரு மா…’

‘அப்படியா? போன வருசம் பூமிநாதன் சார ஒரு கேஸ் விஷயமா சந்திச்சேன். ரொம்ப ஹெல்ப் பண்ணாரு…’

‘…….’

‘இன்னைக்கு அந்த கேஸ் சம்பந்தமா ஒரு நல்லது நடந்துருக்கு‌…அதான் சார பாத்துட்டு போகலாம்னு வந்தேன்…’

‘ஓ…தட்ஸ் நைஸ்…’

‘ப்ளீஸ் டேக் திஸ் ஸ்வீட்ஸ் சார்…’ 

அகர்வால் ஸ்வீட்ஸ் கனத்தது. கூடவே ஒரு தினத்தந்தி.

‘ஓ…தேங்க்ஸ்…ஐ வில் டெல் பூமிநாதன் அபெளட் யூ‌…’

‘தேங்க் யூ சார்‌…அப்போ நான் கெளம்பரேன்…’

கமிஷனரின் கவனம், கோடிட்டு காட்டப்பட்ட அந்த தினத்தந்தி வரிகளின் மீது பாய்ந்தது.

“பிரபல தனியார் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தற்கொலை. இவர் ஓராண்டுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்துக் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது”

‘மிஸ்டர் பூமிநாதன்..‌‌.உங்களத் தேடிட்டு ஒரு பொண்ணு வந்துச்சு, கையில் ஸ்வீட்ஸோட?’

‘ஓ எஸ்…இன்னைக்கு அங்க வருவாங்கனு நான் எதிர்பார்த்தேன்…’

‘ச்சே…அந்த பொண்ணு பேர கேக்க மறந்துட்டேன் மிஸ்டர் பூமி…’

‘எனக்குத் தெரியும். ஷி இஸ் மிஸ் தேவி…’

*****

drsarathkumar1991@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button