இணைய இதழ்இணைய இதழ் 80சிறுகதைகள்

ரயில் – தேஜூ சிவன்

சிறுகதை | வாசகசாலை

காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது.

வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள்.

“ஸார்.”

“சொல்லுங்க”

”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.”

“மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.”

“ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா? அப்ப நீங்க தானே மிஷின்ல வாஷ் பண்வீங்க.. இன்னிக்கு போட்டுட்டு சொல்லுங்க. ச்சும்மா பளீர்னு மின்னும்.”

சொல்லி சிரித்தாள். 

பற்கள் மின்னின.

ஒரு பாக்கெட் நீட்டினாள்.

உள்ளே மொபைல் ஒலித்தது.

“சரிம்மா.”

“ஸார்..ஸார்.. கொஞ்சம் தண்ணி தரமுடியுமா? சூரியன் ரொம்பவே இன்னைக்கி சுடறார்.”

திரும்பவும் சிரித்தாள்.

திரும்பவும் மின்னல்.

“இரு.. கொண்டு வர்றேன்”

வாட்டர் பாட்டிலை வாய்க்குள் கவிழ்த்தாள்.

தேங்க்ஸ் ஸார்.”

மொபைல்  கூப்பிட்டது.

சுபத்ரா.

“என்னங்க தூங்கிட்டிங்களா?”

“இல்லியே.”

“அப்றம் ஏன் ஃபோனை எடுக்கலை.”

“அதுவா..”

“என்ன மென்னு முழுங்குறீங்க?”

“ஒரு பொண்ணு வந்தா..”

“ம்”

“சேல்ஸ் கேர்ள். ஏதோ சோப் பவுடர்  சாம்பிள் கொடுத்தா…”

“பொண்ணு கொடுத்தா வாங்கிடுவீங்களா?”

“பையன் கொடுத்தாலும் வாங்கிருப்பேன். ஃப்ரீதானே?”

“அட.. எப்பேலர்ந்து இவ்ளோ சமத்தா ஆனிங்க?”

“உன்ன கட்ன அன்னைலேர்ந்து தான்.”

“சரி..வழியுது. வைங்க.”

”இரு சுபி.. எதுக்கு கூப்பிட்டே?”

“வீட்ல தனியா இருக்கறது போரடிக்குதுன்னு புலம்பறிங்களே பேசலாம்னு பாத்தா…”

“ஆமா.. 36 வருஷம் பரபரன்னு வேல பாத்துட்டு ஒரு நாள் உனக்கு 60 வயசாய்டுச்சு.. வீட்டுக்கு போன்னு சொன்னா என்ன பண்றது”

“சரி புலம்பாதீங்க.. வேலைல சேர்றப்பவே தெரியும்தானே எதாவது ஆக்கபூர்வமாப் பண்ணுங்க டார்லிங்.”

மையமாக மண்டையை ஆட்டினேன்.

சுபத்ரா ஃபோனை வைத்தாள்.

திரும்பவும் மொபைல் அழைத்தது.

”மிஸ்டர் ராகவன்?”

“யெஸ்.”

“அந்த ரயில்வே பயணத்திற்கு நீங்கதானே அப்ளை பண்ணியிருந்தது?

சட்டென ஞாபகம் வரவில்லை.

“1961”

“யெஸ்.. யெஸ் நாந்தான்”

“உங்க ஜர்னி கன்ஃபர்ம் ஆய்ருக்கு. வாழ்த்துகள்.”

“எப்ப வரணும்?”

“இப்பவே?”

“இப்பவேவா?”

“ஆம். இம்மீடியெட்லி.”

“இல்ல..என்  வொய்ஃப் ஆபிஸ் போயிருக்காங்க..வந்ததும்..”

”நோ.. நோ.. நாட் அல்வ்ட்.. நீங்க அப்ளை பண்ணப்பவே அந்த கண்டிஷனை சொல்லியிருந்தோம். லட்சத்தில் ஒருவர் நீங்கள். ரெஃப்யூஸ் பண்ணிட்டா அப்றம் . யூ ஆர் டிஸ்குவாலிஃபைடு.”

ஏதாவது ஆக்கபூர்வமாப் பண்ணுங்க.

சுபத்ராவின் குரல் மனதில் கேட்டது.

“ஓகே.”

“குட்.. உங்க பாஸ்கோட் உங்க ஃபோனுக்கு அனுப்பறோம். சீக்கிரம் ஸ்டேஷனுக்கு வாங்க.”

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

யில்வே ஸ்டேஷனில் ஆள் நடமாட்டமில்லை.

சாயங்காலம் நாலு மணிக்கு தான் அடுத்த ரயில்.

உள்ளே நுழைந்ததும் எங்கோ ஒரு பெல் சப்தம் கேட்டது.

திடும்மென வெட்டவெளியிலிருந்து தோன்றியது போல் ஒரு அழகி புன்னகையுடன் எதிரில் வந்தாள்.

பெண்ணும், ரோபோவும் புணர்ந்து பிறந்தவள் போலிருந்தாள்.

“வெல்கம் ராகவன்.”

ஒரு அறைக்குள் அழைத்துப் போனாள்.

“உங்க டீடெய்ல் சொல்லுங்க”

“அப்ளிகேஷன்ல இருக்குமே?”

“இது செகண்ட் வெரிஃபிகேஷன். சொல்லுங்க”

ஆர்.ராகவன்.

சுபத்ரா.

நந்தினி.

ஷியாம்

02.11.1961.விடியற்காலை 4.30.

204, வளையல்காரத்தெரு,

கரந்தை,

தஞ்சை,

தமிழ்நாடு,

இந்தியா.

பின்கோடு: 613002.

பின் நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

“வரப்போற ரயில்ல  பதிமூணு  கம்பார்ட்மெண்ட் மட்டும் தான். 

இன்ஜின்,1900,1910,1920,1930,1940,1950,1960,1970,1980,1990,2000,2010,2020. இது கோச் பொசிஷன். 

இன்ஜினிலிருந்து ஏழாவது உங்க கம்பார்ட்மெண்ட் ”

மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

“உங்க பாஸ்கோடு கொடுங்க. பயோமெட்ரிக் எடுப்பாங்க. ஹேப்பி ஜர்னி.”

கை குலுக்கினாள்.

ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸருக்குள் கை விட்டது போல் இருந்தது.

தோல் பைண்டிங் செய்யப்பட்ட தொடர் புத்தகம் போலிருந்தது அந்த ரயில்.

ஏழாவது பெட்டியில் ஏறினேன்.

பாஸ்கோடு சொன்னேன். கண்களைக் காட்டினேன். விரல் தொட்டேன்.

பெட்டிக்குள் கொஞ்சம் பேர் இருந்தனர்.

”02.11.1961 விடியற் காலை 4.30 தானே?”

தலையசைத்தேன்.

சீட்டில் உட்கார வைத்தாள்.

சீட்பெல்ட் கட்டி விட்டாள்.

நீலஒளி உமிழும் ஒரு டேப்லெட் கொடுத்து விழுங்கச் சொன்னாள்.

விழுங்கினேன்.

கம்பார்ட்மெண்ட் விளக்கு அணைக்கப்பட்டது.

ரயில் புறப்பட்டது.

பிளேன் ப்ரொபெல்லர் சுழல்வது போன்ற ஒலி கேட்க ஆரம்பித்தது.

ரயிலுக்கு எப்ப றெக்கை முளைத்தது?

யோசிப்பதற்குள் மிக மெலிதாக தலை சுழல ஆரம்பித்தது.

பெளர்ணமி வெளிச்சம் போல் கம்பார்ட்மெண்ட் ஒளிர ஆரம்பித்தது.

அருகில் வந்தாள்.

”ராகவன்.. இறங்குவதற்கு தயாராய் இருங்க. உங்க பழைய வீட்டிற்கு உங்களை அழைத்துப் போக ஒருவர் வருவார். அவர் கண்ணுக்கு மட்டும் தான் நீங்க தெரிவிங்க..”

“மத்தவங்க கண்ணுக்கு”

”தெரியமாட்டீங்க.”

சிரித்தாள். 

AI சிரிப்பு.

றங்கினேன்.

ரயில் பழுப்பு மரவட்டை போல் நகர ஆரம்பித்தது.

கால்கள் அதிர்ந்தன.

அருகில் இருந்த மரபெஞ்சில் உட்கார்ந்தேன்.

தோளை யாரோ தொட்டார்கள்.

அவனா,அவளா கண்டுபிடிக்க முடியாமல் மையமாக இருந்தான்..ள்.

“போகலாமா?”

புறப்பட்டோம்.

தென்னங்கீற்று வேயப்பட்ட சிறு வீடு.

லாந்தர் வெளிச்சத்தில் பரபரப்பாக இருந்தது.

 வாசலில்  நான் நின்று கொண்டிருந்தேன்.

இல்லை.

இல்லை.

என் அப்பா .

இளவயது அப்பா.

உள்ளே ஒரு பெண்ணின் முனகல் கேட்டது.

அம்மாவா?

பரபரப்பாய் ஒரு வயதானஅம்மாள் வந்தார்.

அம்மாச்சி.

“மாப்பிளை .. தைர்யமாக இருங்க .. மேரி பாத்துட்டு இருக்கு. அது கையால எடுத்துப் போட்ட புள்ளைங்க நூத்து கணக்குக்கு மேலே.”

அப்பாவின் கண்கள் தளும்பிக் கொண்டிருந்தன.

சரியாக 4.53. உள்ளே நுழைந்தேன்.

மேரி சிஸ்டர் என்னைத் தலைகீழாகத் தூக்கி என் பின்புறத்தில் செல்லமாய் ஒரு அடி கொடுத்தார்.

நான் வீறிட்டு அழ ஆரம்பித்தேன்.

அம்மாச்சி வெளியே ஓடினார்.

“மாப்ளே.. ஆம்பள புள்ள.”

அப்பா மண் தரையில் கால் நீட்டி படுத்து  கோவில் திசை நோக்கி நமஸ்கரித்தார்.

யில்வே ஸ்டேஷனுக்குள் நுழையும் போதே  ஒரு பெல் சப்தம் கேட்டது.

நீலப்புகை பின்னணியிலிருந்து அவள் வந்தாள்.

“என்ன?”

“போகணும்”

”எங்க?’

“வீட்டுக்கு.”

சிரித்தாள்.

”ராகவன். நீங்க இப்ப இருக்கறது 1961ல. நீங்க பிறந்ததை உங்க கண்ணால பாக்கணும்கிற ஆசை நிறைவேறிடுச்சுல்ல. ”

”ஆமாம். ஆனா நான் திரும்ப 2023க்குப் போகணுமே.”

”நீங்க  அப்ளை பண்ணப்ப எல்லா கண்டிஷனையும் படிக்கலையா?”

“குட்டி எழுத்துல போட்டிருந்தீங்க.. அதான்.”

“டிஸ்க்ளைமர்லாம் அப்டிதான் போடுவோம். இப்ப சொல்றேன்.. நீங்க அந்த ரயில்ல வந்தப்ப ஆறு பத்து வருஷம் தாண்டி வந்துருக்கீங்க. ஒவ்வொரு பத்துவருஷமும் தாண்ட ரயிலுக்கு  வெளில ஒரு நாள் ஆகும் .”

”ரயிலுக்கு உள்ற?”

“பத்து வருஷத்துக்கு ஒரு மணி நேரம்.”

“அப்டின்னா?”

“அந்த ரயில் திரும்ப வர ஆறு பிளஸ் ஆறு பன்னெண்டு நாள் ஆகும்.”

“அது வரைக்கும்.”

“வெய்ட் பண்ணுங்கோ”

“வேற ரயில் கிடையாதா?”

“உண்டு.”

“அதுல போகலாம்ல?”

”போகலாம் .. ஆனா அது இன்னும் கடந்த காலத்துக்குத்தான் போகும்.”

”அப்டின்னா?”

“இப்ப 1961.. இனி 1950,1940,1930 இப்டி பழைய காலத்துக்குப் போகலாம்.

போக விருப்பமா?”

யோசித்தேன்.

திடும்மென அந்த நினைவு எழுந்தது.

தலையசைத்தேன்.

“எந்த வருஷம்? எங்கே?”

சொன்னேன். 

புருவம் நெரித்து பின் தெளிந்தாள்.

“ஓகே.இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடும்.”

சின்ன குலுக்கலுடன் ரயில் நின்றது.

அஸ்டபோவோ ரயில் நிலையம்.

ரஷ்யா.

காலை 5.45.

20.11.1910.

இறங்கினேன். 

அவர் சற்று தள்ளி மேப்பிள் மரத்தடியில் ரயில்நிலைய மரபெஞ்சில் சரிந்திருந்தார்.

அருகில் போனேன்.

அவர் கைக்கு அருகில் ஒரு புத்தகம் கவிழ்ந்து கிடந்தது.

கரமஸோவ் சகோதரர்கள்.

அஸ்டோபோவோ ரயில் நிலைய மேப்பிள் மரத்தடி மரபெஞ்சில் என் கண்ணுக்கு எதிராக ஆக்ஸிஜனுக்காகப் போராடிக் கொண்டிருந்தார் லெவ் நிக்கோலோவிச் டால்ஸ்டாய்.

*****

p.santhanakrishnan2@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button