சிறுகதைகள்

பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்

சிறுகதை | வாசகசாலை

ர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச் சென்றுவிடுவார். தகரக்கூரையைத் தாங்கி நின்ற உருட்டு இரும்புக் கம்பியைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தாள் பைரோஸ். மேற்கு நோக்கி நீண்ட வீதியில் ஓரிருவர் நடந்துகொண்டிருந்தனர். மாலை வேளையாக இருந்தால் வீதியே கூச்சல் மிகுந்ததாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முக்காடு விலகியதுகூட உணராமல் ‘பொறணி’ பேசிக்கொண்டிருப்பார்கள். தினசரிக் கதைகள் எங்கிருந்தாவது முளைத்துவிடும். யார் யாருடன் ஓடிப்போனாள். யார் யாருடன் தொடுப்பு வைத்திருக்கிறாள். கேள்விகளும் பதில்களும் சமூக இடைவெளியின்றி பகிர்ந்துகொள்ளப்படும். வீதியில் விளையாடிக்கொண்டிருக்கும் தங்கள் குழந்தைகளிடம் அக்கறை மிகுந்ததில்லை. வாண்டுகள், தானுண்டு தன் விளையாட்டுண்டு எனக் கத்திக்கொண்டு, ஓடிக்கொண்டு வீதியே அமர்க்களமாயிருக்கும்.

வாசலில் நின்றபடி ரபீக்கையும் அமீனையும் தொண்டை கிழியக் கத்திக்கூப்பிட்டு விளையாட்டுத்தனத்திலிருந்து மீட்டுவர இயலாது. அவர்கள் கால்களுக்கு ஓய்வே கிடையாது. அதிலும் இளையவன் அமீன் ரொம்பச் சுட்டி. கால்களில் சக்கரத்தை மாட்டிவிட்டதைப்போல் ஓரிடத்தில் ஒரு நொடிகூட நிற்கமாட்டான். அவன் செயல்பாடுகளை நொடிக்கும் குறைவான காலத்தில்தான் அளக்கமுடியும். அதனாலேயே கீழே விழுந்து மண்டை உடையப்பட்டிருக்கிறான். சைக்கிளில், பைக்கில் மோதி உதடு கிழிந்திருக்கிறான். அவன் வேகத்துக்கு யாரும் ஈடு கொடுக்கமுடியாது. இந்த மூன்று மாதத்தில் எத்தனை முறை கிழே விழுந்திருக்கிறானோ. எத்தனை முறை மண்டை உடைந்திருக்கிறதோ. எதையும் மெதுவாகச் செய்து பழகுடா என்றால் கேட்பதேயில்லை. அவன் அப்பனை மாதிரியே! அவனும் அப்படித்தான். வீதியில் நடக்கும்போது விடுக் விடுக் என்றே நடப்பான். மார்க்கெட்டில் மூட்டையை தூக்கிக்கொண்டு நடக்கும்போதும் அப்படியே. ஏதொன்றையும் நிதானமாக யோசித்து முடிவெடுக்கத் தெரியாது. பேசுவதும் அப்படியே. தடதடவெனப் பேசிவிடுவான். முதல் வார்த்தையை புரிந்துகொள்ளுமுன் கடைசி வார்த்தைக்குச் சென்றுவிடுவான். மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் அப்படியே எதிர்பதமாக இருப்பான். அவனைப் புரிந்துகொள்ள வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சிலநேரங்களில் கோபம் வந்து கத்தியிருக்கிறாள். வேண்டுமென்றே நடிக்கிறானா என்று கூடச் சந்தேகித்திருக்கிறாள். பல நேரங்களில் புரிந்திருந்தாலும், புரியாததுபோல் விழித்துப்பார்ப்பான். அவன் புரிந்துகொண்டானா இல்லையா என்பதை கணிக்க முடியாதமாதிரி!

இரவில் பாயை விரித்ததும் ஒரு நிமிடம் கூடத் தாமதிப்பதில்லை. பிள்ளைகள் தூங்கிவிட்டார்களா இல்லையா என்பதைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. விடிவிளக்குக்கூட இல்லாத பூரண இருட்டைத்தான் விரும்புவான். ரகசியச் செய்கைகளுக்கு வெளிச்சம் இடையூறாக இருக்கக்கூடாது. உறவென்பது உச்சக்கட்டத்தை அடைவதுமட்டுமே என்பதுபோல். இயந்திரத்தனமாகச் சுருக்காக முடிந்துவிடும். அவன் பேசும் வார்த்தைகளைப்போலவே சட்டுபுட்டென இயங்கிக் களைத்துவிடுவான். அவளுக்கு அப்போதுதான் ஆரம்பமே ஆரம்பமாகி இருக்கும். அந்த வேதனை இரவில் மட்டுமல்ல. மார்க்கெட்டுக்குப் போவதற்குமுன் வெள்ளென நாலுமணிக்கும் இன்னொரு முறை சம்பவிக்கும். காலையில் சூடாக டீ சாப்பிட்டுவிட்டுப் போவதுபோல் தினசரி வாடிக்கையாக நிகழ்த்திவிடுவான். அவளும் கனவில் மிதந்தபடி தாங்கிக்கொள்வாள். விடிகாலை வீச்சத்துடன் இதழ்களைக் கடிக்கும்போது அருவருப்படைவாள். முத்தம் முடியும்வரை மூச்சை உள்ளிழுக்கமாட்டாள். அப்போது மட்டுமல்ல… எப்போதும் அவன் வாய் வீச்சமடிக்கவே செய்யும். வீச்சம் என்றால், அவன் வாய். மட்டுமல்ல… அவன் உடலே ஒருவித துர்நாற்றம் அடிக்கும். எப்போதும் வியர்வையால் நனைந்த தோல், அழுக்கு மண்டி இருக்கும். மார்க்கெட்டிலிருந்து வந்ததும் குளிக்கச் சொல்லி எத்தனையோ முறை நிர்பந்தித்திருக்கிறாள். அவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதது போலவே அமர்ந்திருப்பான். உண்மையில் அவனுக்குக் காதுகள் செவிடாகிவிட்டனவா எனச் சந்தேகமடைந்திருக்கிறாள். ஊர்க்கதைகளைமட்டும் எவ்வாறு காதுகள் உள்வாங்கிக்கொள்கின்றன?.

தினமும் ஒருமுறையாவது பள்ளிக்குச் சென்று தொழுகை நடத்தி வரும்படி எத்தனையோமுறை மன்றாடியிருக்கிறாள். குறுகிய காலத்தில் வாழ்ந்து முடித்துவிடவேண்டும் என்ற அவசரமாக ஈசலைப்போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவனுக்கு நிதானத்தைப் பற்றி என்ன தெரியும். தொழுகையில் கிடைக்கும் அமைதியும் நிதானமும் அவனிடமிருந்தால் இப்படியான அவசரக் குடுக்கை வாழ்வை எதற்காக விரும்பப் போகிறான். அகமும் புறமும் அசுத்தத்தை நிரப்பியவனாக ஏன் வாழ்க்கையைக் கழிக்கப் போகிறான்.

இன்னொருவரின் கை விரல்களின் தொடுதலால் திகைத்துத் தன் கையை நகர்த்தி விழித்துக்கொண்டவளைப்போல் திரும்பிப் பார்த்தாள் பைரோஸ். கண்களை அகல விழித்தபடி,  வெகுளித்தனமான சிரிப்புடன், “சலாமலைக்கும்!” என்றான் சிறுவன். அவளைப்பார்த்து சலாமலைக்கும் எனச் சொன்ன முதல் மனிதன் அவனாகத்தான் இருப்பான். அவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் ’அலைக்கும் சலாம்’ என்றாள். அவனுக்கும் அந்த மரியாதை புதிதாகத் தோன்றியிருக்கும். உற்சாகத்துடன் சிரித்தான். அவன் சிரிப்பும் செய்கையும் பரிச்சயமானதாகவே தோன்றியது. சாகுலின் முகத்தை அவனுக்குள் பொருத்திப்பார்த்தாள். சிலநொடிகள் அவளுடைய முகமும்கூட அவனுடையதுடன் ஒத்துப்போனதுபோல் பிரமை ஏற்பட்டது.. அது அவன் வயதை ஒத்த சிறுமியாக இருந்தபோதுமட்டும் எனச் சமாதானப்படுத்திக்கொண்டாள். அவமானங்களும், அனுபவங்களும் அதிகரிக்கும்போது மூளையும் வளர்ந்துவிட்டதாகவே உணர்ந்தாள். எப்போதாவது கடைகளுக்குச் சாமான் வாங்க வரும்போது அவனைப் பார்த்திருக்கிறாள். வெகுநாள் பழகியவனைப்போல் சிரிப்பான். வீட்டுவாசலில் கடந்துபோயிருக்கிறான். அவனை யாரும் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. அவன் வீடு எங்கேயிருக்கிறது என்பதுகூடத் தெரியாது. பள்ளிவாசலையே சுத்திசுத்தி வருவான். “பாய பார்க்க வந்தியா?” சிறுவனின் குரல் சன்னமாகக் கேட்டது. “ஆமா…” அவனுக்குப் பதில் அளிக்கவேண்டும் போலிருந்ததால் அளித்தாள்.

“அப்பறம் ஏன் இங்க நிக்கிற?”

சிறிது மவுனமாயிருந்த பைரோஸ், “அங்க அமீன்னுன்னு ஒரு பையன் இருப்பான். ஒனக்குத் தெரியுமா?”

“ஓ தெரியுமே… எனக்கு முட்டாயெல்லாம் வாங்கிக் குடுத்துருக்கான்”

“அவன இங்க வரச் சொல்றியா?” அவள் குரல் சற்றே நடுங்கியது. முகம் தெரியாத பையனை வரச்சொல்வதுபோல். அவனை அழைப்பதற்குத் தனக்கு என்ன உரிமையிருக்கிறது. அவளுக்குள் மிகப் பலவீனமாக அந்தக் கேள்வி எழுந்தது. பெற்ற தாயைவிட மகன்மீது உரிமை கொண்டாடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதை தனக்கான தண்டனையாக வலியத் திணித்தால்… அந்த அரை மெண்டல் அப்படியும் செய்வாள். எப்படித்தான் இவளிடம் இத்தனை வருடங்கள் மருமகளாக குப்பை கொட்டினாளோ.

சிறுவன் வேகவேகமாக அமீனின் வீட்டை நோக்கி நடந்தான். பெரிய மனிதத் தோரணையுடன் கால்களை எட்டி வைத்து நடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் நடையே காட்டிக்கொடுத்துவிடும். மற்ற சிறுவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதை! உடலெங்கும் வெகுளித்தனம் ஊறி வழிந்தது.

சாகுலின் சாயலும் அப்படித்தான் இருக்கும். தலையை நிமிர்த்தி வாயைப் பிளந்து கறையோடியப் பற்களைக்காட்டிக்கொண்டு பேசும்போது ஒவ்வொரு வார்த்தையிலும் அறிவில்லாத்தனத்தைத் தோய்த்திருப்பான். ஆனால் பண விஷயத்தில் அவனை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு ரூபாயையும் எண்ணி பர்சுக்குள் புதைத்து டவுசருக்குள் திணித்து வைத்திருப்பான். செலவு போக மீதிப்பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை மனதுக்குள்ளேயே கணக்கிட்டு மனப்பாடம் செய்து வைத்திருப்பான். இந்த விஷயத்தில்மட்டும் அவனுடைய மூளை எப்படிச் சுதாரிப்பாக வேலை செய்கிறது என வியந்திருக்கிறாள். அதனாலேயே அவன் நடிக்கிறானோ எனச் சந்தேகமடைந்திருக்கிறாள். காரியக்காரக் கிறுக்குகள் இப்படித்தான் இருப்பார்களோ.

மூத்தவன் பிறந்தவுடன் தனிக்குடித்தனம் போகலாம் என எவ்வளவோ தூரம் சொல்லியும் அவன் கேட்கவில்லை. கொழுந்தனின் பார்வையும் பேச்சும். அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. போதாக்குறைக்கு மாமியின் சிடுமூஞ்சித்தனம். இப்படியெல்லாம் மனிதர்களில் இருப்பார்களா என்பதை அப்போதுதான் பார்க்கிறாள். இரவிலும் யாரோ விளக்குவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல்! அப்படி ஒரு உணர்வு. பகல் நேரங்களில் மனம்விட்டுப் பேசமுடியாமல். இரவில் கள்ளத்தனமாகப் புணர்வதைப்போல் வேகவேகமாக இயங்கி… அப்படியே பழகிவிட்டானோ. தனிக்குடித்தனம் வந்தபிறகுகூட அதை அவன் மாற்றிக்கொள்ளவில்லை. தனிக்குடித்தனம் போனது ஒரு பெரிய கதை. கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் ஆறுமாதம் இருந்துவிட்டாள். அதிகாலை சூடான ’டீ’ கிடைக்காமல் அவன் தவித்த தவிப்பு. தவிக்கட்டும். அப்படியாவது தனிக்குடித்தனம் செல்வதற்கு ஒத்துக்கொள்வானே. கடைசியில் அதுதான் நடந்தது. பள்ளிவாசலுக்குப் பின்புறத்தில் வீடு ஒன்று பார்த்து குடியேறினார்கள். மாமி வீட்டுக்கு அடுத்த வீதிதான். மார்க்கெட் நேரம்போக பெரும்பாலான நேரங்களில் அம்மா வீட்டில்தான் கெடையாகக் கிடப்பான். பொழுதானதும் வீட்டுக்கு வந்துவிடுவான். போதை ஏற்றிக்கொள்ள மதுக்கடைக்கு வருவதைப் போலவே தோன்றும்.

சிறுவன் நடுவீதியில் நின்றுகொண்டு வீட்டைப்பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான். கையை தன் திசையை நோக்கி நீட்டி விளக்கிக்கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே பேசுவதை அவர்கள் நம்புவார்களா. விளையாட்டுக்குப் பேசுகிறான் என எடுத்துக்கொள்வார்களா. அவள் ஆர்வத்துடன் கம்பியைப் பிடித்துக்கொண்டே கூர்மையாகப் பார்த்தாள். இன்னும் வெளிச்சுவர் பூசாத வீடு. அவன் சரியான வீட்டுக்கு எதிரில் நின்றுதான் பேசுகிறானா. பக்கத்துவீட்டுக்கு எதிரில் நிற்கிறானா. நெருக்கமான வீடுகளாக இருப்பதால் குழப்பம் மிகுந்தது.

திடுமென அமீன் வீட்டுக்குள்ளிருந்து துள்ளித் தெருவில் குதித்தான். அதே துள்ளல், அதே வேகம். சில அடிகள் ஓடிவந்தான். வெயிலில் கருத்திருந்த தனது முகம் சிவந்துபோய் பிரகாசமானதை கண்ணாடியில் பார்ப்பதுபோல் உணர்ந்தாள். அவனை அள்ளிக்கொள்ள கைகள் துறுதுறுத்தது. கண்களில் நீர் முட்டி நின்றது. பார்வையை மறைத்தது. நெஞ்சம் விம்மித் தணிந்தது. அவனை நெஞ்சோடு அணைத்து தலைமுடியை கோதிவிடுவதற்கு விரல்கள் தயாராயின.

தூரத்திலிருந்து உணர்ந்தாலும் மாமியின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் எதையோ அவனுக்கு நினைவுப்படுத்துவது போன்ற குரல். அதே திமிர்த்தனமான அதட்டல். வெருண்டு நிற்கவைக்கும் வெண்கலக்குரல். குரலையும் மீறி, வேறு யாரையோ எதிர்பார்த்துத் தேடி ஓய்ந்த கண்களுடன், இன்னும் ஓரடி எடுத்துவைத்த அமீனின் கண்களில் தீயின் ஜிவாலை. அன்று பார்த்த அதே நெருப்பு. எதிரில் இருப்பவரின் கண்களைச் சுட்டெரிக்கும் தன்மைகொண்டது. நம்பிக்கைத் துரோகி என உரக்கக்கத்தும் வீரியத்துடன் காற்றை ஊடுருவிப் பயணம் செய்யும் வேகம். தூரம் அதிகமிருந்தாலும் வேகம் குறையவில்லை. அன்றும் அவள் அப்படித்தான் உணர்ந்தாள். ரசூலைக் கட்டிப்பிடித்துப் படுத்திருந்தவள் திடுக்கென எழுந்து சேலையைப் போர்த்திக்கொண்டு சிலநொடிகள் மலங்க மலங்க விழித்தாள். ரசூலும் எழுந்துகொண்டான். ஒருநொடிகூடத் தாமதிக்காமல் ஓடிவிட்டான் அமீன். அதன்பிறகு மாமியின் வீட்டைவிட்டு அவன் இங்கு வரவேயில்லை, அவள் ரசூலுடன் வீட்டைவிட்டுக் கிளம்பும்வரை.

சாகுலும் எட்டிப்பார்த்தான். ஆர்வத்துடன் கண்கள் அலைபாய்ந்து தேடியது. கறைப்பற்களைக் காட்டியபடி அசட்டுச் சிரிப்பில் முகம் அப்பாவித்தனத்துடன் தெரிந்தது. அவள் நின்றுகொண்டிருக்கும் இடத்தை அனுமானித்துவிட்டான். முகத்தைப் பார்த்துவிட்டான். ஏதோ ஒரு வேட்கையை முகம் வெளிப்படுத்தியது. தன்னைத் தேடி வந்துவிட்டாள் என்பதாக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வெண்கலக்குரல் மறுபடியும் கூவியது. சட்டென மாறும் வானிலைபோல் முகத் தசைகள் இறுக்கமாயின. அமீனின் கையைப்பிடித்து மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.

பைரோஸின் கண்ணீரில் ஆனந்தம் கரைந்துபோயிற்று. ஏமாற்ற நீரை கண்கள் சுரந்தன.

மாமி வெளியே வந்தாள். பைரோஸ் ன் முகம் இருண்டது. நேரில் பார்த்தால் அவள் வாயில் இந்த வார்த்தைகள்தான் வரும் என அனுமானிக்க முடியாது. ஊரில் உள்ள கெட்டவார்த்தைகள் அனைத்தையும் சாக்கடை வீச்சத்தோடு வாயில் மென்றுவிடுவாள். வேகமாக அடுத்த வீதிக்குள் நுழைந்தாள். அங்கிருந்தபடி சுவற்றில் பல்லிமாதிரி ஒட்டிக்கொண்டு எட்டிப்பார்த்தாள். வீதியின் இருபுறமும் மாமி அவளை தேடுவது தெரிந்தது. அவளுடைய எல்லை அவ்வளவுதான். துரத்திவரும் நாய் தன் எல்லைக்குள் நின்றுவிடுவதைப்போல…

ஏமாற்றத்தை உரத்த குரலில் கெட்டவார்த்தைகளாகக் கொட்டினாள். “அவுசாரி முண்ட! அவன் …….. பத்தலையா. இவனத் தேடிவந்துட்ட. எங்குட்ரி ஓடி ஒளிஞ்சுட்ட. …….. திமிரு இன்னும் அடங்கலயா. ஒரு அப்பனுக்கு பொறந்தவளா இருந்தா முன்னாடி வந்து நின்னுடி”

”எங்கடா அவ…” சின்னப்பையனைப் பார்த்து கேட்டவளிடம் பயந்த முகத்தைக் காட்டி, “தெர்ல… அங்குட்டுப் போயிடுச்சு!” கையை சாலையின் வளைவு முனைவரை நீட்டினான்.

“போடா கிறுக்குப் பயலே… ஒன்னையும் மயக்கிப்புட்டாளா… ஓட்றா”

பைரோஸ் சின்னப்பையனை அங்கிருந்தபடியே நன்றியுடன் கவனித்தாள். தான் நின்றிருக்கும் இடம் தெரிந்தும் சொல்லாத மனசு உடையவனா கிறுக்குப்பயல்? புத்திசாலி.

அப்புறம் எந்தச் சத்தத்தையும் காணோம். சொரசொரப்பான சுவரின் முனையை ஆதாரமாகப் பிடித்து மெதுவாக எட்டிப்பார்த்தாள். மாமி உதிர்த்துச் சென்ற கெட்டவார்த்தைகளின் நாற்றம் மட்டுமே மிச்சமிருந்தது. அவளைக் காணோம். அவசரமில்லாமல் நடந்தாள். மீண்டும் திரும்பிவந்தால் ஓடிவந்து ஒண்டிக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கையுடன். சிறுவன், “போயிடுச்சு… வா!” குரலைக் குறைத்து, கைகளால் சைகை செய்தான். அவனை உச்சி முகரவேண்டும் எனத் தோன்றியது. அதையும் மாமி தவறாகச் சித்தரித்துவிடுவாள். அமீனைவிட இரண்டு, மூன்று வருடங்கள் மட்டுமே மூத்தவனாயிருந்தாலும்…

மீண்டும் டீக்கடையின் நிழலில் நின்று எட்டிப்பார்த்தாள். வீதி இப்போது வெயிலைமட்டுமே சுமந்துகொண்டிருந்தது. கண்களில் நீர் நிறைந்தது. அமீன் அவளைநோக்கி ஓடிவருவதுபோல் பிரமை உருவானது. கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள். வெற்றிடத்திலிருந்து வெப்பமான காற்று முகத்தில் அறைந்தது.

வீதிக் குத்தில் டெய்லர் கடையிலிருந்து மவுலானா, “போய் பாரும்மா. ஒம்புள்ள தான…” ஜாக்கெட் துணியை வெட்டியபடி தைரியமாகப் பேசினார். மாமி கத்தும்போது அது எங்கோ போய் ஒளிந்துகொண்டது.

“போ… போ… போய் பாரு!” சிறுவன் அவள் கையைப் பிடித்து இழுத்தான். அதை மெதுவாக விலக்கிவிட்டு, டெய்லர் கடை வாசலுக்குப் போனாள்.

“நீங்களே கேட்டீங்கள்ல… எப்டி பேசிட்டுப் போறா?”

டெய்லர் மவுனமாயிருந்தார். அவருக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. “ஓம்புள்ளயப் பாக்கறதுக்கு யார் கிட்ட ரைட்ஸ் வாங்கணும். போய் பாரும்மா. பெத்தவ வயிறு எரியக்கூடாது”

“அவனப் பாக்கணும்னுதான் அவருக்குத் தெரியாம வந்தேன். வந்தும் பிரயோசனம் இல்ல! பாங்கு சொல்லப்போகுது. மூணுமணிக்கு வந்துடுருவாரு. பஸ்சேரி ஒட்டஞ்சத்தரம் போகணும். அவனப் பார்த்து நாலு வார்த்த பேசிட்டா மனசு நெறஞ்சு போயிடும்” கண்களிலிருந்து நீர் அருவிபோல் கொட்டியது.

அவள் சொன்னதுபோல் பாங்கு ஒலித்தது. முக்காடை நன்றாகப் போர்த்திக்கொண்டாள். பாங்கு சொல்பவர் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி தனக்காகத்தான் அல்லாவை இறைஞ்சுகிறாரோ. தொடர்ந்து, சங்கிலி கோர்த்தார்போல் மெலிதான பாங்கு ஒலி வெவ்வேறு திசைகளிலிருந்து காற்றில் பரவ ஆரம்பித்தது.

“போலீஸ்ல போய் புகார் பண்ணும்மா. அதென்ன புள்ளைய பாக்க வுடுறதில்ல…”

”போலீசுக்குப் போ… போலீசுக்குப் போ” சிறுவன் விடாமல் கூறினான்.

“போலீசுக்குப் போனா ஒட்டஞ்சத்திரக்காரன் ஒத்துக்க மாட்டான். எனக்குத் தெரியாம அங்க போயிட்டு வந்தியான்னு நாலு மிதி மிதிப்பான்” அழுகையை மீறி பதற்றம் உருவானது. மவுனமாக மனசும் சேர்ந்து அழுதது.

“ஜமாத்துல பேசலாம்னாலும் ஒட்டஞ்சத்திரக்காரனுக்குத் தெரிஞ்சு போயிடும். என்னதான் பண்றது?”

“அல்லா விட்ட வழின்னு ஆத்திக்க வேண்டியதுதான்” அவளுக்கு அவளே சமாதானப்படுத்திக்கொண்டதுபோல் சற்றுத் தெளிவானாள். “வறேன் பாய்” அழுகையை இன்னும் முழுதாக முடிக்காத குரலில் சொன்னபடி மெதுவாகப் படியிலிருந்து இறங்கினாள். டெய்லரிடமிருந்து கிளம்பிய பெருமூச்சு பின்புறத்தைச் சூடாக்கியது. ஜாக்கெட் தைக்கத் துணி கொடுத்துத் திரும்பும்போது தாக்கும் அதே பெருமூச்சு. ஆனாலும் அதில் ஏதோ ஒரு வேறுபாட்டை உணர்ந்தாள். ஏக்கமும், எதையோ பறிகொடுத்ததைப் போன்ற உணர்வும் கூடுதலாக.

மெதுவாக நடந்தவள் பின்னர் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தாள். இந்தக் கணத்தில் அமீனின் நினைவுகள் கரைந்துபோய், பேருந்தைப் பிடிக்கவேண்டும், ரசுல் வருவதற்குள் போய்ச் சேரவேண்டும் என்ற அவசரம் மட்டும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button