
அவன் தனது அறையிலிருந்து வாசலுக்கு மிதந்து சென்றான். காற்றில் மிதக்கும் ஒரு காகித விமானத்தை போல. அவனால் நம்பமுடியவில்லை. பாதங்கள் தரையில் படவில்லை ஆனால் ஒர் ஊர்தியை போல அவனால் நகர முடிகிறது. இதோ வாசலில் இருந்து விடுதி காம்பௌன்ட்டின் நுழைவு வாயிலுக்கு காற்றில் சிறகடிக்காத பருந்தாக மிதந்தே சென்றுவிட்டான். ஒரே மகிழ்ச்சி ஆனந்தம் கால்கள் வலிக்கவில்லை தரையில் ஊன்றி நடந்தால் தானே வலிக்கும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் பருந்தின் இறக்கையை போல அகல விவரித்தபடி செல்கிறான். கால் ஊன்றி நடக்க உதவுவது கைகளே. இனி அதுவும் தேவையில்லை. தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் நின்ற வாக்கில் கைகளை விரித்துக்கொண்டு காற்றில் ஸ்கேடிங் செய்வது போல முன்னும் பின்னும் அங்குமிங்குமாக சுற்றி சுழன்றுகொண்டிருந்தான்.
எனக்கு கால்கள் தேவையில்லை இனி, இதற்கு முன்னும் பெரிதாய் பயன்பட்டதில்லை துவண்டு தான் கிடந்தது, கைகள் தான் காலின் வேலையையும் சேர்த்து செய்தது. என்னால் இப்போது பறக்க முடிகிறது. நான் இனி மனிதனில்லை. எனக்கு இறக்கையேதுமில்லை, இருந்திருந்தால் வலிக்க வலிக்க சிறகடித்து பறக்க வேண்டியிருந்திருக்கும். இனி எனக்கு எந்த வலியோ வேதனையோ சிரமமோ இல்லை, காலை கஷ்டப்பட்டு தரையில் ஊன்ற வேண்டாம், கைகளையும் பயன்படுத்த வேண்டாம் அதனால் வலியில்லை. காற்றில் அலையும் ஒரு தூசியை போல் உணர்கிறேன்.
நான் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும். யாருடைய உதவியையும் எதிர்பார்த்திருக்க வேண்டாம். நினைத்த நேரத்திற்கு நினைத்த வேகத்தில் சென்று வருவேன். தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மடை திறந்து வந்து விழுந்தன அவன் மன எண்ணங்கள்.
அந்த கான்வென்ட்டின் எல்லா திசைகளையும் மூலைமுடுக்குகளையெல்லாம் சுற்றி வந்தான். அது நல்ல இரவு நேரம். இருந்தும் என்ன? அவனுக்கு எந்த வெளிச்சமும் இல்லாவிட்டாலும் எல்லாமும் தெளிவாய் தெரிந்தன, இரவு பொழுது என்றுகூட சொல்ல முடியாது அது ஒரு விநோத பொழுது. சரி சரி விடிந்ததும் வீட்டிற்கு சென்று வர வேண்டும். அம்மா அப்பா பார்த்தால் எவ்வளவு சந்தோஷப் படுவார்கள். முதல் பஸ் எத்தனை மணிக்கு ? பஸ்ஸெல்லாம் எதுக்கு? நான் காற்றில் மிதந்தவாறே அமெரிக்காவுக்கு கூட செல்ல முடியும்.
நடக்கவே முடியாத தன் மகனுக்கு இப்படியொரு வரம் கிடைத்ததை பார்த்தால் அம்மா என்ன செய்வாங்க? வேறென்ன சந்தோஷத்துல அழுவாங்க தூக்கிவச்சி முத்தம் கொஞ்சுவாங்க, தான் கும்பிட்ட சாமியெல்லாம் கூப்பிடுவாங்க. மாரியாத்தா, காளியாத்தா,ஐயனாரே எம்புள்ளைய காப்பத்திட்டப்பா ஒனக்கு அத பண்றேன் இத பண்றேன்னு நன்றி கடன் சொல்லுவாங்க. ஹா…ஹா… அவங்களுக்கு தெரியாதே இந்த வரத்தை கொடுத்தது வேளாங்கண்ணி மாதா னு.
அப்பா என்ன பண்ணுவாரு? தெரியலையே! கண்டிப்பா என்னை விட அதிகமா சந்தோஷபடுவாரு ஆனா அவரு சந்தோஷபட்டா எப்படி இருக்கும் முகம்? இதுவரை பார்த்ததில்லையே! எப்பவும் என்னை நெனச்சு கவலையும் எப்படியாவது மற்ற பசங்களுக்கு சமமா பெரிய ஆளா ஆக்கிடனும்னு வைராக்கியமும் கலந்துதான் இருக்கும் அவர் முகம் ஒரு மாதிரி இறுக்கமா எப்பவும். அந்த முகத்துல சிரிப்பு பார்க்கணும் முத்தம் கொடுக்கணும் அவர் எனக்கு முத்தம் கொடுக்கணும்.
வீட்டுக்கு போய்ட்டு பள்ளிகூடம் தொடங்குறதுக்குள்ள வந்துடணும். ம்ஹும்…… அதுக்கு முன்னாடி மதர் சுப்பீரியர் பார்த்து அவங்க கிட்டயும் சொல்லணும் பறந்து காட்டணும். ஆமா முதல் நன்றி கூட அவங்களுக்கு தான் சொல்லணும். ஏன்னா அவங்க தான சொன்னாங்க , “வேளாங்கண்ணி மாதா கிட்ட வேண்டினா உங்க கால்களுக்கு பலத்த தருவாங்க உங்க கைய பிடித்து எழுப்பி நடக்க வைப்பாங்க. மாதாவுக்கு குழந்தைங்கனா ரொம்ப பிடிக்கும். குழந்தை யேசுவ எப்படி கைக்குள்ளயே வைச்சிருக்காங்களோ அதேபோல உங்களையும் பாத்துப்பாங்க, அவங்ககிட்ட அடம்பிடித்து கேட்டிங்கனா கண்டிப்பா நிறைவேற்றுவாங்க. அப்புறம் நீங்க எல்லாரையும் போல நடக்கலாம் ஏன் பறக்கவும் முடியும். எல்லாரும் கண்ண மூடி உண்மையா மனசார மாதாவ நெனச்சு வேண்டுங்க” அப்படினு.
நான் அப்படி தான் வேண்டுனேன் முழுசா நம்பி வேண்டுனேன், அதனால் தான் மாதா குழந்தை யேசுவ கையில் தூக்கிகிட்டு பிரகாசமான ஒளியோட எம்முன்னாடி வந்து இந்த வரத்தை கொடுத்துட்டு என் தலையில கை வைச்சுட்டு போனாங்க, குழந்தை யேசு கூட குட்டியா புஸ் புஸ்னு அழகா காத்துல தவழுற மாதிரி கை கால அசைச்சுகிட்டு மாதாவோட இடுப்புல உட்கார்ந்திருந்தாரு இப்படி நான் பார்த்த எல்லாத்தையும் மதர்கிட்ட சொல்லணும்.
யாரோ என்னை கூப்புடுறாங்க… தோ…கொஞ்ச நேரத்துல விடியப்போகுது நான் ரெடியாகணும், வீட்டுக்கு போக ரெடியாகணும் ஆமா. “ ஏய் விஜி என்ன இவ்ளோ நேரம் தூக்கம் ப்ரேயருக்கு ரெடியாகணும் எழுந்திரு”, விடுதி காப்பாளரின் குரல்.
தூக்கத்திலிருந்து எழுந்து சுற்றி பார்க்கிறான் அறையிலிருந்து மற்ற பசங்க எழுந்து குளிக்க சென்றுவிட்டிருந்தனர். முழுதாய் விடிந்திருந்தது. மதர பார்த்து பேசணும் வீட்டுக்கு போகணும். கைகளை அகல விரித்து கால்களை தரையில் ஊன்றாமல் காற்றில் மிதந்து செல்ல முற்பட்டான். கட்டிலிலிருந்து கீழே குதித்தது போல் பொத்தென்று விழுந்தான். பறக்க முடியவில்லை. மீண்டும் கட்டிலைப் பிடித்துக்கொண்டு துள்ளித் துள்ளிப் பார்க்க, மிதக்க முடியவில்லை, என்னால காத்துல மிதக்க முடியும் நைட்டெல்லாம் அப்படி தான் இந்த கான்வென்ட் முழுக்க சுற்றி வந்தேன்.மீண்டும் முயற்சித்து விழுகிறான். நாம எதையாவது மறந்துட்டோமா? இரவு பறந்ததை நினைத்து பார்த்து, அதுவோலவே மிகச் சரியாக செய்து பார்க்கிறான் விழும்போது கால் முட்டி தரையில் இடிபட முட்டியை பிடித்துக்கொண்டு வலியில் தவிக்கிறான். தொண்டையை அடைக்கிறது ஏமாற்றத்தை அனுபவிக்கிறான். முகம் வாடியது. பிறகு கைகளின் உதவியின்றி எழுந்து நடக்க முயல, அதிலும் தோல்வி . விழுந்த இடத்திலேயே சற்று நேரம் தலை குனிந்து தரையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தவன், பிடித்தவொன்றை யாரோ அவனடிமிருந்து பிடுங்கிக்கொண்டதை போல கையால் தரையில் அடித்துக்கொண்டு அழுகையை வாய்க்குள்ளே போட்டு இறுக மூடிக்கொண்டான்.
இல்ல நான் மாதாவ பார்த்தேன் குழந்தை யேசுவ கூட பார்த்தேன். மாதா என்னை பறக்க வைச்சாங்க.மதர் சொன்ன மாதிரி உண்மையாவே வேண்டுனேன். நான் பழையபடி கைத்தாங்கலாதான் நடக்கணுமா, கால இழுத்து இழுத்துகிட்டுதான் போகணுமா?….
ம்ஹூம்…..நான் மறுபடியும் வேண்டப்போறேன், “மாதா நைட்டு போல என்னை பறக்க வையுங்க வேண்டாம் வேண்டா நடக்க வையுங்க போதும், நான் வீட்டுக்கு போகணும் அம்மாவ பார்க்கணும் அப்பா பார்க்கணும் என்னால நடக்க முடியுதுனு அவங்ககிட்ட காட்டணும். ப்ளீஸ் மாதா நடக்க வைங்க”. கண்களை திறந்து காலைத் தொட்டுப் பார்க்கிறான் அது எப்போதும் போல சூப்பிபோய் சப்பையாகத்தான் கிடக்கிறது. பலமில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த அழுகை கண்ணீராய் கொட்டுகிறது. சத்தமின்றி அழுகிறான். தேம்பி தேம்பி அழுகிறான். தேற்றுவதற்கு யாருமில்லை அருகில். அவனும் யாரும் வந்துவிடக்கூடாது என்ற நிலையில்தான் இருந்தான். ஒரு பிள்ளை தனது அழுகையின் போது யாரும் வந்துவிடக்கூடாது என நினைத்தால் அந்த காரணம் மிகவும் வலியானது. முதல்முறையாக அவன் மனதால் பாதிக்கப்படுவதை உணர்கிறான் என்று அர்த்தம்.
பிறகு அவ்வப்போது அதேபோன்ற கனவும் வந்துகொண்டுதான் இருந்தது. வயதுக்கேற்றாற்போல் கனவிலும் சிறு மாற்றம் நிகழ்ந்தது. சிறு வயதில் இருந்த வேகத்திற்கும் உற்சாகத்திற்கும் குறையாமல் கனவில் அவன் பறந்து கொண்டிருந்தான். வயது ஏற ஏற அவனது நடை மற்றும் செயல்களில் நிதானம் குடிகொண்டது வேகம் குறைந்து கவனம் அதிகரித்தது. கனவிலும் அவன் பறப்பதில்லை நடக்கிறான், ஓடுகிறான் எல்லோரையும்போல.
இப்போதெல்லாம் எந்த கடவுளையும் வேண்டுவதில்லை. கனவு தானாகவே வருகிறது. கடவுள் மீது நம்பிக்கை இழந்துவிட்டாலும் இந்த கனவின் மீது கொஞ்சம் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. அதை அவனால் மொத்தமாக துடைத்தெறிய முடியவில்லை அல்லது அவன் விரும்பவில்லை.
*****
Super na ?