இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

நெகிழியை உண்ணும் நுண்பூஞ்சைகள் – பூமி தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறதா? – நாராயணி சுப்ரமணியன்

கட்டுரை | வாசகசாலை

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் சாராம்சம் இதுதான்: “ப்ளாஸ்டிக்கை உண்ணக்கூடிய ஒரு வகை நுண் பூஞ்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள், பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது”.

இந்தத் தகவலின் பின்னால் இருக்கும் அறிவியலை முதலில் விரிவாகப் பார்க்கலாம். கடல்சார் ஆராய்ச்சிக்கான ராயல் நெதர்லாந்து கழகத்தைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் ஜுலை 2024ல் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். வடக்கு பசிபிக் கடல்நீரில் இருந்து சேகரிக்கப்பட்ட பேரன்க்யோடாண்டியம் ஆல்பம் என்ற ஒருவகை நுண் பூஞ்சையானது, பாலிதீனை உண்டு செரிக்கிறது என்று அவர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். புற ஊதாக் கதிர்களுக்குக் கீழ் வைக்கப்பட்ட பாலிதீன் துகள்களை இந்தப் பூஞ்சை உண்கிறது. ஒரு நாளைக்கு 0.044 விழுக்காடு என்ற வேகத்தில் இது உண்கிறது. இது ஆய்வகத்தில் கண்டறியப்பட்டது.

இதை இப்போது கடல் சூழலுடன் பொருத்திப் பார்க்கலாம். புற ஊதாக்கதிர் பட்டு சிதைந்த பாலிதீன் என்றால் என்ன? கடல்பரப்பின் மேலே பல நாட்களாக மிதந்தபடி, சூரிய ஒளி பட்டு கொஞ்சம் சிதைந்துபோன பாலிதீனை இதற்கு ஒப்பிடலாம். அவ்வாறு சிதைந்துபோன பாலிதீன் கிடைத்தால், இந்தப் பூஞ்சை ஒரு நாளைக்கு 0.04% என்ற வேகத்தில் அதை சாப்பிடும். அதாவது, சூரிய ஒளியால் ஏற்கனவே சிதைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த பாலிதீனின் உள்ள வேதிப் பிணைப்புகளை இந்தப் பூஞ்சை உடைத்துவிடும். பிறகு, அதை உணவாக உட்கொள்ளும்.

பாலிதீன் என்பது நாம் மிக அதிகமாகப் பயன்படுத்தும் நெகிழி வகை என்பதாலும், இந்தப் பூஞ்சை கடல் சூழலில் இருக்கும் நெகிழியை உண்ணுகிறது என்பதாலும் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இப்பொதைக்கு 400 வகையான வெவ்வேறு நுண்ணுயிரிகளுக்குப் நெகிழியைச் சிதைக்கும் பண்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் ஒப்பீட்டளவில் பார்த்தால் கடலில் வாழும் பூஞ்சைகள் மிகவும் குறைவு. மேலே குறிப்பிட்ட நுண் பூஞ்சையோடு சேர்த்து மொத்தம் நான்கு இனங்களுக்கு மட்டுமே இந்தப் பண்பு உண்டு.

இப்போது செய்தியின் இரண்டாம் அம்சத்துக்கு வரலாம் – கடலில் இருக்கும் நெகிழியை ஒரு பூஞ்சை உண்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். நெகிழிப் பிரச்சனைக்கு இது தீர்வாகி விடுமா? இதனால் பூமி தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறது என்று சொல்லிவிட முடியுமா?

நெகிழிப் பிரச்சனைக்கு நிச்சயமாக இந்த நுண்ணுயிரிகள் ஒரு தீர்வாகாது. இதுவரை மொத்தமாக 810 கோடி மெட்ரிக் டன் நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்திருக்கிறோம். அதில் 79% குப்பையாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய பிரச்சனையை நுண்ணுயிரிகளால் சரி செய்யமுடியாது. ஏன் என்று விரிவாகப் பேசலாம்.

முதலில், பல நுண்ணுயிரிகள் ஒரு குறிப்பிட்ட வகை நெகிழியை மட்டுமே சாப்பிடும் பண்பு கொண்டவை. எல்லா நெகிழியையும் ஒரு நுண்ணுயிரியால் சிதைக்க முடியாது. ஒரு குப்பைக்கூளத்தில் பலவிதமான நெகிழி வகைகளும் இருக்கும். இவற்றை மொத்தமாக சரிசெய்ய வேண்டுமென்றால் பலதரப்பட்ட நுண்ணுயிரிகளை அங்கே செலுத்த வேண்டியிருக்கும். அவை ஒன்றாக இணைந்து வாழும் என்றோ, நெகிழியை உண்ணும் வேலையை சரியாகச் செய்துவிடும் என்றோ உறுதியாக சொல்லமுடியாது.

நுண்ணுயிரிகளின் உடலில் இருக்கும் நொதிகள்தான் (Enzymes) நெகிழியைச் சிதைக்கும் வேலையைச் செய்கின்றன. நொதிகள் மிகவும் நுணுக்கமான செயல்பாடுகளைக் கொண்டவை. அவை சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற துல்லியமான சூழல் வேண்டும். வெப்பநிலை, அமில அளவு போன்ற பல சூழலியல் கூறுகள் மிகச்சரியான அளவில் இருக்கவேண்டும். இவற்றில் எது மாறினாலும் நொதிகள் ஒழுங்காக வேலை செய்யாது. ஆய்வகத்தில் ஒரே மாதிரியான சூழலில் வளர்க்கப்படும் நுண்ணுயிரிகளில் நொதிகள் இயங்குகின்றன என்பதாலேயே, மாறுபட்டுக்கொண்டேயிருக்கும் இயற்கைச் சூழலிலும் இந்த வேலை நடக்கும் என்று சொல்லிவிடமுடியாது. குறிப்பாகக் காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை உயர்ந்தபடியே இருக்கிறது. இது நிச்சயம் நொதிகளைப் பாதிக்கும்.

பெரும்பாலான நுண்ணுயிரிகளில், நெகிழியை உண்ணும் வேகம் மிகவும் குறைவானதாக இருக்கிறது. உதாரணமாக இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கடல் பூஞ்சையில்கூட நெகிழி உண்ணும் வேகம் 0.04% மட்டுமே. 810 கோடி மெட்ரிக் டன் நெகிழிக் கழிவை இவை தின்று செரிக்க எத்தனை நாட்களாகும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற நுண்ணுயிரிகளை முன்வைத்து, “பூமி தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது” என்று நிச்சயம் சொல்ல முடியாது.

பூமிக்குத் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் பண்பு உண்டு, மீண்டெழும் ஆற்றலும் உண்டு. ஆனால், இந்த நுண்ணுயிரிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த வாதத்தை வைக்க முடியாது. தன்னைத்தானே சரிசெய்து கொள்ளவேண்டும் என்பதற்காக பூமியே முயற்சி செய்து இந்த நுண்ணுயிரிகளை உருவாக்கவில்லை, இவற்றுக்கு நெகிழியை உண்ணும் பண்பை வழங்கவும் இல்லை. சுற்றியிருந்த சூழலில் அதிகமான நெகிழி இருக்கிறது என்பதால், அதை உண்ணும் பண்பு இந்த உயிரிகளுக்கு வந்திருக்கிறது. இது ஒருவகை பரிணாம வளர்ச்சி. சூழலின் நெருக்கடியால் உருவான பரிணாம வளர்ச்சி என்று இதை வகைப்படுத்தலாம். அதற்கும் பூமியை குணப்படுத்துவதற்கும் தொடர்பில்லை.

பரிணாமமோ பூமியின் மீண்டெழும் பண்போ…. ஏதோ ஒரு காரணத்தால் இந்த ஆற்றல் வந்திருக்கிறது, இது பூமியைக் குணப்படுத்தும் என்பது உண்மைதானே?

இதுபோன்ற சிறு மாற்றங்கள் பூமியைச் சரிசெய்துவிடாது. மனிதன் ஏற்படுத்திய பாதிப்புகளோடு ஒப்பிடும்போது இந்த சிறு மாற்றங்கள் மிகவும் சிறியவை. மலைக்கும் கடுகுக்குமான வேறுபாடு இது.

இன்னும் சொல்லப்போனால், “பூமி தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறது” என்று நாம் நம்பத் தொடங்கிவிட்டால் அது ஆபத்தானதாக முடியும். பூமி தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்றால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். தொழிற்சாலைகளின் புகையைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை, திடக்கழிவை எங்கு வேண்டுமானாலும் கொட்டலாம், உலோக நச்சு நிறைந்த கழிவு நீரை அப்படியே நாம் நீர்நிலைகளில் விடலாம் – எப்படியும் சில நாட்களில் பூமி இதை சரி செய்துவிடுமே!

பூமியின் தாங்குதிறன் மற்றும் மீண்டெழும் தன்மையையும் மீறி நாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறோம் என்பதே உண்மை. நெகிழியை உண்ணும் திறன் கொண்ட சில நுண்ணுயிரிகள் உருவாகி வருகின்றன என்பது நிச்சயம் ஆறுதலான செய்தி. ஆனால், அவற்றை மட்டுமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பூமி குணமடைந்துவருகிறது என்று நம்பிவிடக்கூடாது. மனிதன் இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கான தீர்வுகளை நாம் முன்னெடுத்தபடியே இருக்கவேண்டும்.

nans.mythila@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button