
பேச்சுலர்ஸை ப்ளார் என்று அறையும் பெருநகரம்
ஒரு வழியாக நேற்றே வீட்டை சுத்தம் செய்தாயிற்று
இன்னும் ஊறவைத்த துணிகளை மட்டும் துவைத்தால் போதுமானது
அன்பு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு
வருவதேற்கே
இதோ 9.13 ஆகிவிட்டது
நேரமிருந்தால் ஏதாவது படம்
பார்க்கலாம் அல்லது
காமெடி நிகழ்ச்சியொன்றைக் கண்டு
சிரிக்க முயற்சிக்கலாம்
அதன் பின் தூங்க…
மேலும்
வீட்டு ஓனரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்
வெளியுலகை அப்படியே காட்டும்
ஜன்னல்களை அடைப்பது குறித்து
2
சாலையைக் கடந்த பின்புதான்
நினைவு வந்தது
பாக்கெட்டைத் துழாவியபடி
டீக்கடைப் பக்கம் திரும்பினேன்
மீண்டும் வராமலா இருந்துவிடப் போகிறீர்கள்,
அப்போது தாருங்கள்
என்பது போல
கள்ளமற்றுச் சிரிக்கிறார்
அடுத்த முறை
அந்த சிரிப்பையும் வாங்கிக்கொள்ள வேண்டும்.
3.
இத்தனை நேரமும்
கீபோர்டில் நிகழ்த்திய சீரற்ற இசைக்கோவையை
நிறுத்தியபோது
மணி 6.47
குளிர்ப்பிரதேச அறையிலிருந்து
பணிவாக விடைபெற்று
வெளியேறுகையில்
மணிக்கட்டிலிருந்து முழங்கைக்கு
முன்னகர்ந்து கொண்டது சட்டை
‘நிலாவே வா
செல்லாதே வா’ பாடல் ஒலிக்கிற
எதிர் டீக்கடையிலிருந்து
ஆவி பறக்கிறது.
நிதானமாக அடியெடுத்து
இருபுறமும் கூர்ந்து கவனித்து
கடக்கிறேன் சாலையை
அவ்வளவு எளிதல்ல
ஒரு உலகத்திலிருந்து
மற்றொரு உலகத்திற்குள் நுழைவது
4.
நண்பனின் தோழியிடம்
அதிகம் பேசியதில்லை
எப்போதாவது
இன்ஸாடாகிராமில்
நெருப்பு விடுவது
இதய இமோஜியை பரிமாறிக் கொள்வது
இரண்டொரு வார்த்தை வாஞ்சையாக
பேசிக்கொள்வதோடு சரி
நான்தான் இதய இமோஜிக்கு பதிலாக புத்தகங்களை பரிமாறிக் கொள்ளலாம்
என்றேன்
அவளும் சரியென்றே சொன்னாள்
கூரியர் அலுவலகத்தில்,
முகவரியை எழுதி கொடுத்ததும்
போன் நம்பரைக் கேட்கிறார்கள்.
எப்படி அவர்களிடம் சொல்வது?
இல்லையென்று
மற்றும்
எப்படி நண்பணின் தோழியிடம் கேட்பது?
வேண்டுமென்று.
***
ஒரு நியாயமான பேச்சுலர் வாழ்க்கை இப்படித்தான் அமைகிறது.
யார் யாரோ டாமிபாயாமே அவர்களுக்கு மத்தியில்
இப்படி ஒரு பேச்சிலர் வாழ்வு அழகு !
எனது பத்து வருட வாழ்வு கண்முன்னே விரிகிறது.