
அவள் கவிதைகள்
கனியின் இனிப்பெனத் திரண்டிருப்பவளை
நசுக்கிப் பிழிந்து புளிப்பின் வாடை புகுத்தி
புட்டிக்குள் அடைத்துவைக்கிறது காலம்.
தனிமையிலும் தவறவிட்ட தருணங்களிலும்
தள்ளாடிக் கொண்டிருப்பவனின்
நடுங்கும் கரமேந்திய கோப்பையில்
நான்காம் முறையாய்
நிரம்பித் தளும்பிக்கொண்டிருக்கிறாள் அவள்.
கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிறக்கும்
ஒவ்வொரு மிடறிலும்
நாத்தங்கி உள்நழுவும் கசப்பின் சுவையோடு
தானும் கலந்து மறைகிறாள்
திராட்சைவனத்தின் ஆதிருசி ஆனவள்.
*** *** ***
மழையென அவன் பொழியும்போதெல்லாம்
தாழங்குடையெனத் தயங்காது நனைபவள் அவள்
காற்று திருப்பிய கார்முகிலென
வேற்றுமுகம் காட்டிப் பொழியும் இன்றைய மழையில்
முந்தைய மழையின் வாசனை இல்லை
முந்தைய துளிகளின் குளிர்மை இல்லை
முந்தைய பொழிவின் கனமும் இல்லை
முந்தைய சாரலின் சுகமும் இல்லை
மொத்தத்தில் இம்மழை மழையாயில்லை
சொல்லப்போனால் இது மழையே இல்லை
மழை பொழிவதான பாசாங்கில்
மனம் நனைத்துக்கொண்டிருக்கிறாள்
முந்தைய பொழிவின் குளிர்மை எஞ்சியிருக்கும்
முற்றத்துக் கற்றூணில் மார்பணைந்து.
*** *** ***
அவளை வட்டமிட்ட வல்லூறை வீழ்த்தி
அதன் சிறகெலும்பை உருவிக் குழலாக்கி
மெல்லிசை பயிலத் தொடங்கினாள் அவள்.
வழிந்த இசைவழி முளைத்த இறகுகள்
காற்றில் படகென மிதந்திறங்கத் தொடங்கின
புதிர்ச்சட்டங்களெனப் பின்னிப்பொருந்திய யாவும்
அவளறியாது சிறகென உருக்கொண்டன.
மூச்சடக்கி வாசித்த இசைக்குறிப்புகள்
சிறகுகளுக்கு ரகசியமாய் உயிரூட்டின
கானகம் அதிர, காற்று அதிர
நிலம் அதிர, வான் அதிர
பல்கிப் பெருகிய வல்லூறுகள்
ஆதிநாள் முதலாய்
அடிவயிற்றில் கனலும் அகோரப்பசியோடு
அவளைச் சூழ்ந்து வட்டமிடத்தொடங்கின.