
– 1 –
புணர்வதில்
சலித்துக் கிடக்கும்
யோனி!
–
குறிக்கு ஏங்காத
யோனித்துளையொன்றும்
இல்லை என்னிடம்.
ஒரே ஒருமுறை
என்னை ஆடையின்றி
பார்ப்பதே மோட்சம்
என்றான் ஒருவன்.
ஒரே ஒருமுறை
உன்னைப் புணர்ந்து முடித்த
நிமிடத்தில்
செத்துப் போவதென்றாலும்
சுகமே என்றான்
இன்னொருவன்.
அந்த ஒருவனும்
இந்த ஒருவனும்
ஒருவன் இல்லை.
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொருவன்.
ஒவ்வோர் இடத்திலும்
ஒவ்வொருவன்.
சொற்களின்
சாயல் தான் வேறு வேறு.
அர்த்தங்கள் ஒன்று தான்.
குறிகளின்
சொந்தக்காரர்கள்
வேறு வேறு
மொழிகளில் பேசினாலும்
குறிகள் ஒரே மொழியில்தான் பேசுகின்றன.
எங்கெங்கு காணினும்
என் யோனி ருசி பார்க்க
ஆவல் கொண்ட குறிகள்
மலிந்து கிடக்கிறது.
கணக்கு வைப்பதும்
நினைவில் கொள்வதும்
சாத்தியம் இல்லாத அளவு.
எவனுக்காவது
என் முட்டியைத் தாண்டி
கொஞ்சம் காட்டினாலே
என்னை முந்நூறு தடவை
புணர்ந்ததில்
போரடித்து விட்டது…
என
தன் நண்பர்களிடம் “புறம் நானூறு”
பேசுவான் அவன்.
முடிந்தால்
என் நண்பர்களிடமும்
அதே “சுய இன்ப வரலாறு”
பீத்துவான்.
முடியாமல்
ஒரு பொழுதில்
ஒருவனை
ஆடைகளை அவிழ்க்காமலே
சில அரை நொடிகள்
புணர அனுமதித்தால் போதும்.
அடுத்த நிமிடமே
அவ்வளவுக்கு
“அவள் வொர்த்” இல்லையென
குறி கழுவும் முன்
குறுஞ்செய்தி அனுப்புவான்.
போதாதென்று
நேரில் காண்கையில்
காணாததை எல்லாம் கண்டதாயும்
அதுவெல்லாம்
அத்தனைச் சிறப்பாய்
இல்லையென்றும்
கூசாமல் கதையளப்பான்.
நானே பார்க்கவில்லை
எவன் பார்த்துவிடப் போகிறான்…
என்ற நம்பிக்கையில் தான்.
இப்படியாக
புணர்வதில்
சலித்துக் கிடக்கிறது
என் யோனி.
அவ்வப்போது
அடங்காமல்
உன்மத்தம் கொள்ளும்
மொத்த உடலும்
யோனியை குத்திக்
கிழித்து விட துடிக்கிறது தான்.
ஆனாலும்
உங்களில்
எவனொருவனையும்
அடுத்த நாளே அழைத்து
புணர்ந்து தணிந்திடத்
தோணவில்லை.
என்னைப் புணர்வதை
சுகமென மட்டும் கொள்பவன்
எவனையும் கண்டதில்லை.
என்னைப் புணர்வதை
பெருமையென
நினைப்பவனுடன்
புணர்வதை விட
ஒரு எருமையைப் புணர்தல்
போதுமெனக்கு!
– 2 –
ஒரு பொழுது வரையே
பசித்திருத்தல் சுகம்.
பின்
இரையெடுத்தலே நலம்.
இரைகள்
பசியாறிக் கொண்டன.
– 3 –
இரக்கத்தைப் பற்றி
எனக்கு
தப்புத் தப்பாய்
சொல்லித் தந்தவர்கள் தான்
அன்பு செய்தலைப் பற்றியும்
மன்னித்தலைப் பற்றியும்
தப்புத் தப்பாய்
சொல்லித் தந்திருப்பார்கள்
என நினைக்கிறேன்.
இன்னொன்றும்
நினைவுக்கு வருகிறது.
அவர்கள்,
பழி வாங்குதலைப்
பற்றியும் கூட
எனக்கு
தப்புத் தப்பாகவே
சொல்லித் தந்திருக்கிறார்கள்.