
மீதமிருக்கும் வாழ்வுகளைக் கதைகளாக அடுக்கி வைத்தல்
செங்கலை வரிசையாக அறுத்துக் கொண்டிருப்பவள்
உலகினை நீளவாக்கில் கட்டி முடிக்கிறாள்.
1.
தினந்தோறும் கைகளைத்தட்டி இயேசுவை அழைத்தபடி யிருக்கும்
அவளின் தலைமுடி வெள்ளையாகிவிட்டன
அவளின் தோல் சுருக்கங்களில் வறண்டுகிடக்கிறது
அவளின் பிள்ளைகள் மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துப் போகின்றனர்
அவள் வளர்க்கும் செடிகள் அன்றாடம் பூத்து உதிர்ந்து கிடக்கின்றன
எப்போதும் போல் அவள் அவற்றைக் கூட்டி அள்ளிக்கொண்டேயிருக்கிறாள்.
இப்போது அவள் பெயர் எஸ்தர் பாட்டி என மாறிவிட்டதை
அவ்வப்போது நினைத்து சிரித்திடும் பொழுதுகளில்,
அவளது நரைத்திடாத வெட்கத்தை
யாருமற்ற வீடு ரசித்துக்கொண்டிருக்கிறது.
வெளியில் அவள் வைத்திருந்த பருக்கைகளை
கொத்திக்கொண்டிருந்த காகங்கள் தலையைத் தூக்கி ஒருமுறை
அவளை,
அந்தப் பிரகாசமான கணத்தைப் பார்க்கின்றன.
2.
தன் முறைக்கென காத்திருந்து கரும்பலகையில்
நீளமான கோடொன்றை வரையத்துவங்குகிறாள்,
அது உலகை நீளவாக்கில் பார்த்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.
பூமிப் பந்தின் மீது மரக்கட்டை இதயங்கள் முளைத்து வருவதை,
அதன் மீது நெருக்கமற்ற பூக்கள் மலர்ந்திடுவதை,
இவ்வளவு முழுமையாக வரைந்திட முடியுமென
அங்கிருந்தவர்களால் நம்பவே முடியவில்லை.
எல்லோரும் எழுந்து நின்று கைகளைத்தட்டும் போது,
பார்வையற்ற அவள்
தன்னிடத்திலிருக்கும் சிரிப்புகளை
எல்லோருக்காகவும் திறந்து காண்பிக்கிறாள்.
அது
அந்தக் கரும்பலகையிலிருந்து ஒரு துளி வண்ணம்
உலகை நோக்கி உருண்டு வருவதைப் போலிருக்கிறது.
3.
ஒவ்வொரு பாதையாகக் கண்டுபிடித்து நடந்திடும் ஆடுகளை
வரிசைபடுத்திக் கொண்டிருப்பவளுக்கு
ஒவ்வொரு சிறிய வயிற்றையும் நிரப்பியாக வேண்டும்.
இடுப்பிலிருக்கும் குட்டிப் பெண் குழந்தை அப்பாதைகளை
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத் தினந்தோறும் முயலுகிறது.
ஆடுகள் இலைகளை மென்று கொண்டிருக்கும் போது
தன் சிறிய மார்பை குழந்தைக்குச் சுவைக்கக் கொடுக்கிறாள்.
ஒவ்வொரு பெரிய ஆடுகளும் தங்களது குட்டிகளை தேடத்துவங்குகின்றன.
தன் சிறிய வயிற்றின் கதவைத் திறந்து
சூரியனில் ஒரு கைப்பிடியை
அள்ளிப்போட்டு மூடுகிறாள்.
குட்டி ஆடொன்று கத்திக்கொண்டே அவளுக்கருகில் நின்றிருக்கிறது.
அதற்குக் கொஞ்சம் புரிகிறது
கொஞ்சம் புரியவில்லை.
4.
முழு சிகப்பில் மஞ்சள் கரை பதித்த பாவாடையிலிருந்த வாசனையைத்
தான் ஒரு பருவம் முழுவதும் நினைத்துக்கொண்டிருந்தாள்.
பின்பு
அடுப்பைத் துடைக்கும் சிறிய துணியாக அது மாறிவிட்ட காலத்திற்குள்
எப்படி நுழைந்திருந்தாள் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.
முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
ஒவ்வொரு பொருளும் தன் விருப்பத்திலிருந்து வெளியேறி
சிறிய தேவைக்கான ஒன்றாக மாறிவிடும் அதிசயங்களை
அந்த வீடு முழுவதுமாக
மிக அழகாக அடுக்கிக் கொண்டிருக்கிறாள்.
அலமாரியின் பெரிய கண்ணாடியில் தன்னைத் திரும்பவும் பார்த்த
போது தான் உணர முடிந்தது
அவளின் கலைந்த இந்த இருப்பை.
5.
சிறிய பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களை அடித்துத் தள்ளும்
இயந்திரத்தின் லிவர்களை எப்போதும் அழுத்திய படியிருக்கும்
அவளின் மனது சோர்வாக உணர்கிறது,
இவ்வுலகத்தின் இதயத்தைத் தேடிப் பிடித்து அதை அணைத்து
வைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
வரிசையாக வந்து விழுந்து கொண்டிருக்கும் சாமான்களை
மெல்லப் பிரித்த படியிருக்கும் அவளது தோழிக்கு
இவ்வுலகிலிருந்து திடீரென காணாமல் போக வேண்டும் போலிருந்தது.
இருவரும் சிறிய சாமான்களை வைத்து விளையாடத்
துவங்குகின்றனர்.
இந்த உலகம் அணைந்து போய்க் கொண்டிருந்தது
இந்த உலகிலிருந்து அவர்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தனர்.
சின்ன இடைவெளிகளில் தான் இந்த வாழ்வு
இப்படி பூத்துக்குலுங்குகிறது.
6.
எப்போதும் வீடு முழுவதும் நடந்து கொண்டிருந்தவளின்
பாதங்களிலிருந்து
ஒரு சிறு செடியைப் பறித்து
வீட்டு வராந்தாவின் மூலையில் வளரச்செய்தோம்.
எல்லோரையும் விட்டு அவள் சென்ற
நீண்ட தொலைவுகளுக்குப் பிறகு,
அதில் பூத்திருந்த பூவொன்றை வெட்டி எடுத்தவுடன்
அது தன் அனுகூலத்தை விட்டு விட்டுப் பைத்தியமாகியது.
தேடி வந்து அவள் சொல்லப்போகும் ஒரு ஆறுதலான
சொல்லுக்கு அப்பாலிருக்கும் பிரியத்தின் வெளிச்சத்தில் தான்
அது உயிரோடிருக்கிறது.
எப்போதும்
அதன் வாழ்விற்கு வெளியில் பெய்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது பெரும் மழை.