
பிரியங்களின் வாய்ப்பாடுகள்
ஓரொண்ணு ஒண்ணு,
ஈரொண்ணு ரெண்டு
எனத் தொடங்குவதில்லை பிரியங்களின் வாய்ப்பாடுகள்
சிலநேரம் அவை
ஆயிரத்தில் தொடங்கி மில்லியனைக் கடக்கின்றன
சிலநேரம்
இலட்சத்தில் தொடங்கி
கோடிகளில் புரள்கின்றன
ஏற்ற, இறக்கத்துடன்
காணப்படும் இதயங்களின் சென்செக்ஸ் புள்ளிகளின் உச்சம் தொட
இரவல் வாங்கி
பறக்கிறது ஏரோப்பிளேன்
இறக்கைகளை
எப்போதாவது
இடறி விழுகையில்
ஈ மொய்த்துப் போகும்
பிரியங்கள் உயிர்த்தெழ அவசியப்படுகிறது
சில துளிகளேனும்
அன்பெனும் தொட்டி நீர்.
***
இரவின் தற்கொலை
காற்சட்டை
நனைக்கும் பேரன்களின்
பேய்க் கனவுகள்
பாட்டிகளுக்கானது…
சட்டென மின்னிமறையும்
மின்மினிப்பூச்சிகள் யாவும், கொள்ளிவாய்ப்பிசாசாகும்
ரெண்டுக்குப் போகும்
மழை இரவுகளில்…
சடாமுடியுடன்
வயிறு வரை
தொங்கும் நாக்குள்ள
பேயை பாட்டிகள்
வர்ணிக்கையில்
பேரன்களின் மனக்கிடங்கில்
விழித்துப் கொள்வாள்
சுடுகாட்டுக் காளி …
வெள்ளாடை உடுத்தி
மூனு பனைமர
வளத்தியோடு
காலில்லா பேய்களைக்
கண்ணுக்கு முன்
காட்டுகையில் பயக்கிற
பேரன்களை
அணைத்துக்
கொள்ளும் பாட்டிகள்,
தேவதைகளாவது
அக்கணத்தின்
விசித்திரம்.
முனியாகவும், காஞ்சனாவாகவும் குழல்விளக்கு வெளிச்சத்தில்
முற்றத்தில் உலவும்
இன்றைய கிராபிக்ஸ்
பேய்கள் பிரித்தே வைக்கிறது
பேரன்களிடமிருந்து
பாட்டிகளை…
பேரன்களையும்,பாட்டிகளையும் சேர்க்கவியலா விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறது
ஒவ்வொரு இரவும் அதிகாலையில்.
***