
““Sunlight reveals all”. சூரியன் அனைவருக்கும் பொது. அதற்கு ஆண் பெண் பால் பேதமில்லை. விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள், சிறு தாவரங்கள் முதல் பெருமரங்கள் வரை இந்தப் பூமியில் தோன்றி உயிர்த்திருக்கும் அனைத்துக்கும் சூரியன் பொது. அதற்கு பேதமில்லை. அதைப் போலவே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பேதம் இல்லாமல் பாவிப்பார்கள், பாவிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்கிறது “A Sun“ திரைப்படம்.
2021 ஆம் ஆண்டுக்கான தைவான் நாட்டின் சார்பில் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வான படம் இது. 2019ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் பாம் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பின்னர் ஜனவரி 2020-இல் நெட்பிளிக்ஸில் வெளியானது. ஆனால் கோவிட் பொது முடக்கக் காலத்தில் எண்ணற்ற படங்களால் நிரம்பி வழியும் நெட்பிளிக்ஸில் இது பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. பின்னர் ஆஸ்கர் தேர்வுக்கு, தைவான் சார்பாக அனுப்பட்ட போதே பரவலான கவனம் பெற்றது.
இரண்டு மகன்கள் கொண்ட எளிய குடும்பம். அப்பா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் வேலை செய்கிறார். அம்மா அழகுக் கலைக் கடை ஒன்றில் வேலை செய்பவர். மூத்தவன் சென் ஷி ஹா. இளையவன் சென் ஷி ஹோ. இந்தக் குடும்பம் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளைக் கதை சொல்லலில் தெளிவும், வாழ்வனுபவ ஆழங்களும் கொண்ட திரைக்கதையின் வழியே ஒரு சிறந்த திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் சாங் மங் ஹாங். தைவான் தேச ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்.
ஒட்டுமொத்தமாக படம் எனக்களித்த அனுபவம் அலாதியானது. படம் தன் உள்ளடுக்குகளில் பொதிந்து வைத்திருக்கும் வாழ்வு சார்ந்த எளிய ஆனால் ஆழமான உண்மைகள் என்னை மிக அதிகமாய் கவர்ந்தன. தன் வழி தவறிய இளைய மகனைக் காப்பாற்றப் போராடும் அம்மா, மகன்களின் மீது பாசம் கொண்ட, ஆனால் நிறைய நேரங்களில் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாத, அல்லது தெரியாத அப்பா, இரண்டு மகன்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள், ஆளுமைக் கோளாறுகள், சக மனிதர்கள் தன் சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மை வழி தீமைகள், தீமைகளின் வழியே கிளைத்தெழும் புதிய நன்மைகள் எனப் படத்தின் சாராம்சம் எளிமையும் ஆழமும் அடர்த்தியும் கொண்ட திரைக்கதை அமைப்பு இந்த சாதாரணக் குடும்பக் கதையை தனித்துவம் மிக்க ஒன்றாக்கி விடுகின்றது. அந்த தனித்துவம் திரைக்கதையின், இயக்குனரின் தனித்துவமேயன்றி வேறில்லை.
படத்தின் ஆரம்பத்தில் கார் ஓட்டும் போது ஒரு குண்டுப் பெண், பயிற்றுனர் வென்-னிடம் [சென் ஷி ஹோ-வின் அப்பா] “உங்களுக்கு மணமாகி விட்டதா, எத்தனை குழந்தைகள்?” என்று கேட்பாள். அதற்கு “ஒன்று” என்று பொய்யான பதிலைச் சொல்வார். ஆனால் அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நல்ல பிள்ளை. பெற்றோர் சொல் பேச்சுத் தட்டாதவன். குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம். இளைய மகன் அதற்கு நேரெதிர். ஒரு கொலை முயற்சியில் பங்கு கொண்டு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவன். விசாரணையின் போது அப்பா வென் “நாங்கள் அவனைச் சரியாக வளர்க்கவில்லை. அவன் சிறையில் இருக்கட்டும். இந்தத் தண்டனை சரியான ஒன்று தான். அப்போதாவது அவன் திருந்துகிறானா என்று பார்க்கலாம்.” என்று கடுமையாகச் சொல்கிறார். ஆனால் சிறையில் மட்டுமல்ல மனிதர்கள் எங்கேயும் ”மனிதர்கள்” தாம். விக்கிரமாதித்தன் சுமந்து அலையும் வேதாளத்தைப் போல தீமையின் நரகத்தைத் தன் முதுகில் சுமந்து அலையும் மனிதர்கள். சென் ஷி ஹோ அவர்களில் ஒருவன். உண்மையில் மனித மனம் தீமையின் வேர்கள் பூண்டது. இவ்வளவு வன்முறை, துவேஷம், அதிகாரம், போர், ஆதிக்க வெறி, என எத்தனையெத்தனை வார்த்தைகளை அடுக்கிப் பட்டியலிட்டாலும் மனித மனதில் வேர் கொண்டுள்ள தீமைகளை முழுமையாக்கிச் சொல்லி விட முடியாது. ஆனால் இந்த அற்ப சொற்ப வாழ்வில் அத்தனை மனிதர்களும் உருவாக்கிக் கொண்டிருக்கும் தீமைகளுக்கு இடையே தான் தினமும் பூக்கள் பூக்கின்றன. புல் பூண்டுகள் பசுமை பூண்டு சூரியனுக்கு முகம் காட்டுகின்றன. பறவைகள் தனது எச்சத்தால் காட்டை உருவாக்குகின்றன. ஆனால் மனிதனால் என்ன உருவாக்க முடியும் என்று யோசித்தால் அறிவியல் தொழில் நுட்பங்கள் தவிர்த்து வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அவையெல்லாம் மனிதர்களுக்கு வாழ்வியல் வசதிகளை ஏற்படுத்தித் தந்தது தவிர அதன் பங்களிப்புகள் குறித்து எனக்கு ஆழ்ந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்தப் பூமியில் மனிதர்களுக்கு நிகழும் சௌகரிய நன்மைகள் என்பது இந்தப் பூமிக்கு எதிரான மகத்தான தீமையே. கடந்த நூறு ஆண்டுகளின் உலக மானுட வரலாற்றைப் பொது நோக்கில் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். நான் அறிவியலுக்கோ தொழில் நுட்பத்துக்கோ அல்லது மனித குலத்துக்கோ எந்த விதத்திலும் எதிரான மனப்பான்மை கொண்டவன் அல்ல. இந்தப் பூமி தன் அச்சில் நிலை கொண்டிருப்பது மனிதர்களால் அல்ல, மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களால் என்பது மிகை அல்ல; பேருண்மை. கசப்பான பேருண்மை.
நான் இப்போதெல்லாம் மனிதர்களின் வன்முறைக்கும், அன்புக்கும் சரிசமமாக அஞ்சுபவனாக இருக்கிறேன். A SUN திரைப்படத்தின் மூல ஆதாரமும் இது தான். ஒரு நாணயத்தின் தவிர்க்கவே இயலாத இரண்டு பக்கங்களான அன்பும், வன்முறையும். சிறு வயதில் அம்மாவின் திகட்டாத அன்பில் வளரும் இளைய மகன் தான் வளர்ந்த பின்னர் வன்முறையாளனாக உருவெடுக்கிறான். குடும்பத்தின் நிம்மதியை, வாழ்வின் நியதிகளைக் கலைத்துப் போடுகிறான். அடிப்படையில் மனிதர்கள் அகத்தில் வன்முறை நிரம்பியவர்கள். அதைத் தணிக்கத் தான் உலகத்தில் இத்தனை கடவுளர்களும், கலை இலக்கியம் இசை, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளும் தோன்றின அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்பது என் தரப்பு.
சிறுவர் சீர்த்திருத்தச் சிறைக்குச் செல்லும் தம்பி சென் ஷி ஹோவுக்குச் சக முரட்டுக் கைதி ஒருவனுடன் மோதல் வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். எதிரி உடல் வலிமை மிக்கவன். சென் ஷி ஹோ மன வலிமை மிக்கவன். உடல் வலிமை கொண்டவனும் மன வலிமை கொண்டவனும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். ஒரு முறை சென் ஷி ஹோ வின் அம்மா சிறைக்கு வந்து மகனைப் பார்த்து விட்டு உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்கிறார். அதைச் சிறை அறையில் இருக்கும் சக கைதிகளுக்கு சென் ஷி ஹோ கொடுக்கிறான். ஆனால் உணவைத் தள்ளி விட்டு முரடன் சொல்கிறான். “எல்லா உணவையும் சாப்பிட்டு வீட்டு நன்றாக அயர்ந்து தூங்கி விடாதே. அப்படித் தூங்கி விட்டால் உன்னை என் கைகாளாலே குத்திக் கொன்று விடுவேன்”. உயிர் காக்கும் பொருட்டு முரடனும் சென் ஷி ஹோவும் அன்றய இரவில் விழித்திருக்கிறார்கள். அடர் நீலம் பூத்த கருமை இரவு. அவர்களுக்கு இடையில் இரவில் நிகழும் உரையாடல்கள் செறிவானவை, மனித மனங்களின் அபத்த வன்முறை இருப்பைக் கட்டியங் கூறுபவை.
தூக்கத்தைத் தவிர்க்க எதிரி ஆறாம் வாய்ப்பாடு சொல்கிறான். 1X 6=6, 2X 6=12,. 8X 6= சொல்லும் போது எதிரிக்குப் பதில் தெரியவில்லை. சென் ஷி ஹோ 48 என்று வாய்ப்பாட்டுக்கான பதிலைச் சொல்கிறான். அதோடு நில்லாமல் அந்த பதிலை எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கவும் செய்கிறான். அந்த பதில் சென் ஷி ஹோ தான் எப்படிப்பட்டவன் என்று முன்னறிவிப்பதாக இருக்கிறது. ஆறு பேர் உன்னிடமிருந்து எட்டுப் பைகள் வாங்கினால் நீ எத்தனை விற்றிருக்கிறாய்? அதற்கு எதிரியின் பதில் 48. ஆம் அதே தான் 8X 6=48.
“சரி இன்னொரு கேள்வி. எட்டு பேர் உன்னை தலா ஆறு குத்துகள் குத்துகிறார்கள் எனில் மொத்தம் எத்தனை குத்துகள்?” என்று சென் ஷி ஹோ கேட்க எதிரி 48 என்று பதில் சொல்கிறான். ”முட்டாள், ஒருவன் ஆறு குத்துகள் உன் முகத்தில் குத்தினால் நீ ஆள் காலி, பிறகெதற்கு மீதிக் குத்துகள்?” என்று சென் ஷி ஹோ கேட்கும் போது ஒரு மின்னலைப் போல அவனைப் பற்றிய மனச் சித்திரம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டு விடுகிறது.
தனது அண்ணனின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் சிறையில் சென் ஷி ஹோ, கைதிகளுக்கான உணவு வண்டியை இழுத்துக் கொண்டு அந்த மைதானத்தில் ஓடும் காட்சி தனித்துவம் மிக்கது. இழப்பு தரும் வலியை மிகையாக்காமல் வலியை நேரடியாகப் பார்வையாளர்கள் உணரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் காட்சி அது ”இருப்பது”, “இல்லாமல் போவது” என்ற வாழ்வின் எதிரிடை நிலைகளாக அந்தக் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமயங்களில் ஒருவரின் இருப்பை விட இல்லாமையே நமக்கு அதிகம் கற்றுத் தருகிறது.
மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். இளையவன் முரடனாக, அறிவிருந்தும் அதைப் பயன்படுத்தாத மூர்க்கனாக தன் செயல்களின் பின் விளைவுகளை அறியாதவனாக இருக்கிறான். அதற்கு நேர் மாறாக மூத்தவன் அமைதியானவனாக, நன்னடத்தை உடையவனாக, கல்வியில் சாதிக்க விரும்புபவனாக, பெற்றோரைப் புரிந்து கொள்பவனாக, குடும்பச் சூழ்நிலைகளை பிரச்சினைகளின் ஆழ அகலங்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்பவனாக இருக்கிறான். இந்த ஒரே குடும்பத்தின் இரண்டு மகன்களின் எதிரெதிர் குணாம்சங்கள் திரைக்கதையை வலுவான ஒன்றாக மாற்றி விடுகின்றன. பல மாயாஜாலத் திறப்புகளை உருவாக்குகின்றன. மொத்தப் படத்தின் இயங்கு தளமும் இந்த இருவரின் எதிரிடை மனப்போக்குகளை மையமிட்டே நகர்கிறது.
மூத்தவன் அதிர்ந்து பேசாதவன். மௌனத்தைப் போல தியானத்தைப் போல அக இருப்புக் கொண்டவன். தன் குடும்பத்தின், பெற்றோர்களின் வாழ்நிலை அறிந்தவன். பூமிக்கடியில் அரவமற்று நகரும் நீரோட்டம் போன்றே உயிர்ப்பானவன். எனினும் அவன் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறான். தன்னிலையில் தற்கொலைக்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், அவன் தனது இருப்பை ஏன் இல்லாமல் ஆக்கிக் கொண்டான் என்பது வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று. அந்த அறிய முடியாப் புதிரின் சூத்திரதாரி மனித மனம். அதன் ஆழம் காண முடியா இருண்மை. தனக்கு வாழ்க்கை வழங்கிய வாய்ப்பை ஒதுக்கி மரணத்திடம் சரணடைகிறான் மூத்தவன்.
ஆனால் வாழ்க்கையைத் திட்டங்கள் ஏதுமில்லாமல் மூர்க்கமாக எதிர்கொள்ளும் சென் ஷி ஹோவுக்கு வாழ்க்கை இன்னொரு வாய்ப்பை [SECOND CHANCE] வழங்குகிறது. அவன் கொஞ்சம் தட்டுத் தடுமாறி அந்த இரண்டாம் வாய்ப்பைப் பிடித்து மேலேறி வாழ்வைப் புதிதாகத் துவங்குகிறான். எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக இருந்த மூத்தவன் வாழ்வைத் தொடர விரும்பாமல் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறான். வாழ்வு குறித்த என்னவிதமான புரிதல் மூத்தவனை தற்கொலையின் மரண இருளை நோக்கித் தள்ளுகிறது? தன் இருப்பை இல்லாமல் ஆக்குவதன் மூலம் தனக்கு இளையவனின் இரண்டாம் வாய்ப்பை அவன் உறுதி செய்கிறானா? திடமாகச் சொல்லத் தெரியவில்லை.
வாழ்வு மனிதர்களை விதியின் வழி தேர்ந்தெடுத்து நிகழ்த்தும் அலகிலா விளையாட்டுக்கு நம்மால் விடை காண முடியுமா? சாத்தியம் தானா அது? தெரியவில்லை. படம் பார்த்து முடிந்ததும் எனக்குத் தோன்றிய எண்ணங்கள் இது தான். மனம் ஏனோ அந்த விடை தெரியாத முரணின் பக்கமே சாய்கிறது. படத்தின் ஆரம்பத்தில் கார் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் போது, அப்பா அந்தக் குண்டுப் பெண்ணின் கேள்விக்குத் தனக்கு ஒரு மகன் என்று பொய் சொல்கிறார். ஆனால் அந்தப் பொய் படத்தின் கடைசியில் உண்மையாகி விடுகிறது. குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய மூத்த மகன் தற்கொலை செய்து கொள்கிறான். அவநம்பிக்கையை மட்டுமே பெற்றோர்களுக்கு அளித்து வந்த இளைய மகன் சிறை தண்டனை முடிந்து வீடு திரும்புகிறான். அப்பா சொன்ன பொய்யின் வலு பெரிதாகி விடுகிறது. எனில் உண்மையின் ஆன்மிக வலு என்ன? படம் இவ்வாறான வாழ்வு குறித்தான பலவித சிந்தனைகளை பார்வையாளர்களிடம் எழுப்புகிறது. உண்மைக்கு ஒரு ஆன்மிக வலு இருப்பது போல பொய்க்கும் ஒரு ஆன்மிக வலு உண்டு. நாம் அதை உணரும் பட்சத்தில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்யலாம். தேர்வு நம்முடையது. விளைவுகள் நம்முடைய தெரிவைப் பொருத்தது.
சென் ஷி ஹோவின் அப்பா வேலை செய்யும் அலுவலகத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வாசகம் படத்தில் வெவ்வேறு இடங்களில் இடம் பெறுகிறது. ”வாழ்வு உங்களுக்கு அளிக்கும் நாளைக் கைப்பற்றுங்கள்; உங்கள் பாதையை தீர்மானமாக முடிவு செய்யுங்கள்”. எளிதானதும் ஆனால் பின்பற்றக் கடினமானதும் ஆன இந்த வாசகம் படம் முடிந்த பின்னும் நம்முள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
***
நண்பர், ஆவணப்பட இயக்குனர் ஜாய் பாண்டியராஜன் My Salinger year என்னும் படத்தைப் பார்க்கப் பரிந்துரைத்தார். சென்ற வருடம் வெளியான இந்தப் படம், படைப்பிலக்கியம் சார்ந்து இயங்க விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டியது என்பேன். ஜோஹன்னா ரகோஃப் எழுதிய My Salinger year என்னும் அபுனைவு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் எந்த அளவு எளிமையும் சுவாரசியமும் கூடிய ஒன்றாக உள்ளதோ, அதே அளவு சுவாரசியம் நிறைந்தது இந்தப் புத்தகத்தை எழுதிய ஜோஹன்னா ரகோஃப்பின் அனுபவமும், அவர் எழுத்தாளரான விதமும். படம் நெட்பிளிக்ஸில் இருக்கிறது.நாம் ஜோஹன்னா ரகோஃப்-பின் அனுபவங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.
ஜே டி சாலிங்கர் பற்றி ஏற்கனவே இந்தத் தொடரில் எழுதியிருக்கிறேன். தன்னுடைய நாவலான The Catcher in the Rye மூலம் பெரும் புகழ் பெற்ற நட்சத்திர எழுத்தாளர். அமெரிக்க இலக்கிய வரலாற்றில் சாலிங்கரின் நாவல் கற்பனை செய்ய முடியாத வெற்றியைப் பெறுகிறது. அதே அளவில் சர்ச்சைக்குள்ளான நாவலாகவும் இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் இந்த நாவலைப் பள்ளிகளில் பாடமாக வைக்கத் தடை செய்தது. நாவல் கொடுத்த அதீதப் புகழ், அதைப் பின்தொடர்ந்த அமெரிக்க அரசாங்கத் தடை என்பதைப் பற்றியெல்லாம் பெரிதும் கவனம் கொள்ளாத சாலிங்கர் தனிமை விரும்பி. சமூகக் கலப்பை விரும்பாதவர். எளிதில் கையாள முடியாத ஆளுமைக் கோளாறும், படைப்பு மேதமையும் ஒருங்கே கொண்டவர். தன் நாவலின் மூலம் கிடைத்த அதீத புகழை சாலிங்கர் அறவே வெறுத்தார். தனது பண்ணை வீட்டில் மனிதர்கள் தொடர்பில்லாமல் வாழ்ந்தார். பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், தனிப்பட்ட அளவில் நண்பர்கள் என யாருடனும் தொடர்பில்லாமல் தனது இறுதிக் காலம் வரை அவர் வாழ்ந்தார். அப்படியான வினோத அல்லது தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடுகள் கொண்ட அவர் இலக்கியப் பதிப்பு ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தில் சாதாரணச் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை எவ்விதம் பாதித்தார் என்பது தான் My Salinger Year புத்தகத்தின் சாராம்சம்.
லண்டனில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து முடித்து அமெரிக்கா திரும்புகிறார் ஜோஹன்னா ரகோஃப். நியூயார்க் நகரில் பழமையான இலக்கியப் பதிப்பு ஒழுங்குபடுத்தும் நிறுவனம் [Literary Agency] ஒன்றில் உதவியாளராக வேலைக்குஅ சேர்கிறார். வேலைக்குச் சேர்ந்த ஆண்டு 1996. கணினியைக் கூட இன்னும் அலுவலகப் பயன்பாட்டுக்கு கொண்டு வராத அளவுக்கு அந்த நிறுவனம் இன்னும் பழமை மாறாமல் இருக்கிறது. அவருக்கு எழுத்தாளராக வேண்டும் என்கிற ஆசை உள்ளூர இருக்கிறது. ஜோஹன்னா ரகோஃப்பின் முதலாளி கண்டிப்பு நிறைந்தவர். அந்நிறுவனத்தில் ஜோஹன்னாவுக்கு கொடுக்கப்பட்ட வேலை புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜே டி சாலிங்கரின் வாசகர் கடிதங்களுக்குப் பதில் எழுதுவது. அது வரை சாலிங்கரின் எழுத்துக்களை ஜோஹன்னா படித்ததில்லை. ஆனாலும் வேலை நிமித்தம் சாலிங்கர் அவருடைய அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிறார்.
படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் முதல் முறையாக வேலைக்குச் சேரும் பெண்ணின் தடுமாற்றங்களை, நிறுவனத்தில் வேலை செய்யும் மனிதர்களை எதிர்கொள்வதில் நேரும் குழப்பங்களை, தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்களை இந்த நினைவுக் குறிப்பு புத்தகம் [Memoir] அழகாக விவரித்துக் கொண்டே போகிறது. இந்தப் புத்தகத்தின் ஆரம்ப உரையில் ஜோஹன்னா ரகோஃப் இதை குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத் தேவையின் நிமித்தம் வேலைக்குப் போகும் பெண்களின் அக நெருக்கடிகள், புற வாழ்வில் தனிப்பட்ட உறவுகள் கொடுக்கும் நெருக்கடிகள் மற்றும் பொருளாதார ஊசலாட்டம் ஏற்படுத்தும் நெருக்கடிகள் ஆகியவற்றுக்கிடையே எழுத்தாளராக விரும்பிய ஒரு பெண்ணின் கதை இது. புற வாழ்வு தரும் நெருக்கடிகளுக்கிடையே தன்னை. படைப்பு மனதை தக்க வைத்துக் கொள்ளல்.
பணியில் சேர்ந்த முதல் நாள் அனுபவத்தைச் சுவாரஸ்யமாக எழுத்தில் நினைவு கூர்ந்துள்ளார் ஜோஹன்னா. ஜோஹன்னாவின் முதலாளி [புத்தகம் முழுக்கவும் My Boss என்றே குறிப்பிட்டுள்ளார் ஜோஹன்னா] ஜெரியைப் பற்றிப் பேசுகிறார். ஜெரி யாரென்று ஜோஹன்னாவுக்குத் தெரியாது. குழப்பத்துடன் முதலாளி சொல்வதைக் கேட்டுக் கொள்கிறார். ”யாராக இருந்தாலும் சரி, பொதுவான வாசகர்கள், இலக்கியம் பயிலும் மாணவர்கள், படத் தயாரிப்பாளர்கள் என யார் வேண்டுமானாலும் இருக்கட்டும், ஜெரியைப் பற்றி ஒரு வார்த்தை பேசக் கூடாது. அவரது முகவரியையோ தொலைபேசி எண்ணையோ தந்து விடக்கூடாது. முடிந்த வரை அதிகம் பேசாமல் தொலைபேசியை வைத்து விட வேண்டும். இது ரொம்ப முக்கியமானது” முதலாளி அளவுக்கதிமான எச்சரிக்கையோடு குறிப்பிட்ட அந்த “ஜெரி” ஜே டி சாலிங்கர்.
சாலிங்கரின் நாவல் 1951ஆம் ஆண்டு வெளி வந்தது. ஜோஹன்னா ரகோஃப் நாவல் வெளியாகி 45ஆண்டுகள் கழித்துத் தான் அந்த இலக்கியப் பதிப்பு ஒழுங்கு படுத்தும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். பல வருடங்கள் ஆனாலும் சாலிங்கருடைய எழுத்துக்களைப் படித்து விட்டு உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் உணர்ச்சிப்பூர்வமான கடிதங்களை வாசகர்கள் அந்நிறுவனத்துக்கு அனுப்பிய வண்ணம் இருந்தார்கள். அந்தக் கடிதங்களைப் படித்து விட்டு உணர்ச்சி ஏதுமில்லாத வெற்று வார்த்தைகளிலான பதில் கடிதங்கள் [Formal Template Letters] அனுப்புவதே ஜோஹன்னா ரகோஃப்பின் அன்றாடப் பணி. அவர் அன்றாடம் எழுதும் குறிப்பிட்ட டெம்ப்ளேட் வகைமை கடிதம் ஒன்று.
அன்புள்ள வாசகருக்கு,
எழுத்தாளர் சாலிங்கருக்கு நீங்கள் எழுதிய கடிதத்துக்கு மிக்க நன்றி. சாலிங்கர் தனக்கு வரும் வாசகர் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதில்லை என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே உங்கள் மதிப்புறு கடிதத்தை சாலிங்கருக்கு எங்களால் அனுப்பவியலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். சாலிங்கரின் எழுத்துக்களின் வாசகராக இருப்பதற்கு மீண்டும் நன்றி.
தங்கள் உண்மையான,
இலக்கிய பதிப்பு ஒழுங்குபடுத்தும் நிறுவனம்,
நியூயார்க்.
நான்கு வரிக் கடிதம் தான். ஆனால் பாருங்கள், சாலிங்கருக்கு வருகிற எல்லாக் கடிதங்களையும் வரிக்கு வரி வாசித்து விட்டு இந்த மொண்ணையான பதிலைத் தான் எல்லா வாசகர்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும். ஆனால் எல்லாக் கடிதங்களுக்கும் ஒரே மாதிரியான பதிலை எழுத முடியாமல் சில கடிதங்களில் வெளிப்பட்டிருக்கும் உணர்ச்சி வெளிப்பாட்டின் தீவிரத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக நிறுவனக் கட்டுப்பாடுகளை மீறி வாசகர்களுக்குப் பதில் கடிதங்கள் எழுதினார் ஜோஹன்னா ரகோஃப். அதற்காக தனது முதலாளியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார். சமயங்களில் வாசகர்கள் அந்த நிறுவனத்துக்கு நேரடியாக வந்து ஜோஹன்னா ரகோஃப்பிடம் சண்டையிட்டதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. இவையெல்லாமும் சேர்ந்து தான் இந்தப் புத்தகத்தை முக்கியமானதொன்றாக ஆக்குகின்றன. கடிதங்களுக்கு பதில் எழுதும் இந்த சலிப்பான அன்றாடப் பணிகளுக்கு இடையே தான், தன் எழுத்தாளராகும் கனவையும் ஜோஹன்னா ரகோஃப் தக்க வைத்து அதை நிஜமாக்கிக் காட்டினார். இலக்கிய வாசகர்கள் மட்டுமல்லாமல், எழுத வேண்டும் என்று ஆசையும் கனவுமிருப்பவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
ஜோஹன்னா, சாலிங்கரை ஒரு முறை தான் சந்தித்தார். தொலைபேசியில் ஓரிரு தடவை பேசியதுண்டு. அவ்வளவு தான் சாலிங்கருடனான அவரது பரிச்சயம். சாலிங்கருக்குக் காது கேளாமைப் பிரச்சினை உண்டு. தொலைபேசியில் அவர் உரக்கப் பேசுவார். ஒவ்வொரு முறையும் ஜோஹன்னாவின் பெயரைத் தவறாக உச்சரிப்பார். பேச்சின் போது ஜோஹன்னாவின் எழுத வேண்டும் என்கிற ஆசையைத் தன்னுடைய உள்ளுணர்வால் கண்டுபிடிக்கும் சாலிங்கர் ஜோஹன்னாவை எழுத வேண்டும் என ஊக்குவிக்கிறார். ”நீ ஒரு சாதாரண அலுவலக உதவியாளர் மட்டும் இல்லை. நீ ஒரு எழுத்தாளர், அதை நினைவில் வைத்துக்கொள். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் எழுது. தினமும் என்றால் தினமும், ஒரு நாள் தவறாமல். நிச்சயம் உன்னால் எழுத முடியும்” என்பது சாலிங்கர் ஜோஹன்னாவுக்கு ஒரு தொலைபேசி உரையாடலின் போது சொன்ன ரகசியம்.
இந்தப் புத்தகத்தின் வழியே நமக்கு தென்படுகிற சாலிங்கரின் ஆளுமை கணிக்க முடியாதது. முன் பின் அறிமுகம் இல்லாத, பொருளாதார நிமித்தம் பணியில் சேர்ந்த ஓரளவு தன்னாளுமை மிக்க பெண்ணான ஜோஹன்னாவை எழுத்தாளராக்கியது சாலிங்கரின் தனித்த ஆளுமை. ஜோஹன்னா, ஒரு வருடம் தான் நியூயார்க்கின் புகழ் பெற்ற இலக்கியப் பதிப்பு ஒழுங்குபடுத்தும் நிறுவனப் பணியில் இருந்தார். அந்த ஒரு வருடம் தான் அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றி அமைத்தது. பொது வெளியில் வேறு மாதிரி புரிந்து கொள்ளப்பட்ட சக மனிதர்களால் எளிதில் அணுக முடியாத கடுமையும், மூர்க்கமும் கூடிய சாலிங்கர் அதற்கு முற்றிலும் எதிர் மாறான ஒரு ஆளுமையாக ஜோஹன்னாவிடம் நடந்து கொள்கிறார். அந்த ஊக்குவிப்பு ஜோஹன்னாவை வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிறது.
வேலையிலிருந்து வெளியே வந்து வெவ்வேறு பத்திரிகைகளில் பணி புரிந்து கொண்டே தன்னுடைய முதல் நாவலை எழுதிப் பிரசுரிக்கிறார் ஜோஹன்னா. அதற்கடுத்து அவர் எழுதிய My Salinger Year புத்தகம் அவரை உலகறிய வைக்கிறது. எழுதுதல் என்பது ஆழ்மனச் செயல்பாடு. மேல் மனம் இரைச்சல்கள் மிகுந்தது. அதை அமைதியாக்கி, நம் மௌனத்தை நோக்கி நகர்வதே எழுத்து. இது என் வரையிலான அனுபவம். எழுதும் போது நிகழ்கிற நான் – நான் இல்லை. இந்தப் புத்தகத்தை படித்த போதும் அதற்கு முன் படத்தைப் பார்த்த போதும் எனக்குத் தோன்றியது இது தான். மேலோட்டமாக எழுத்து, அறிவுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து ஆழ்மனத்தின் புதிர் வெளியில் நம் அனுபவமும் உணர்வும் சேர்ந்து செய்யும் பயணம். அந்தப் பயணத்தின் போது கற்பனை வழியே வெளிப்படும் படைப்பாற்றலே எழுத்து. இப்படமும் புத்தகமும் என் தனிப்பட்ட ஆளுமையில் செலுத்திய பாதிப்பு முக்கியமானது. எழுத்துக்கு மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைக்கும் தேவைப்படும் கட்டுப்பாடு மிக்க ஒழுங்கை, மன ஓர்மையை, கவனக் குவிப்பை, செயல் திறனை இவ்விரு படைப்புகளின் வழியே நான் கற்றுக் கொண்டேன் என்பது மிகை அல்ல.
தொடரும்…