
ராணுவ பூட்ஸ்கள்- 1
*
போர்களில் களைப்படைந்திருந்த ராணுவ பூட்ஸ்கள்,
தாங்கள் மிதித்து விட்டு வந்திருந்த
நிலங்களை, பூக்களை, தானியங்களை, மக்களை
நினைவிலிருந்து எடுத்துப் பார்க்கத் துவங்குகின்றன.
கடந்து வந்திருந்த வழி முழுவதிலும்
அவைகளின் பரிதாபமான உடைந்த குரல்கள்
தனியாகக் கிடக்கின்றன.
அவ்வொவ்வொன்றின் ஆன்மாவிலும் அப்பூட்ஸ்களின்
தடங்களே ரேகையெனப் பதிந்திருக்கின்றன.
அவற்றை கைகளிலெடுக்க முற்பட்ட போது
தோன்றிய அமைதியின்மையே
அம்மாபெரும் வெற்றியின்
முன்னால் மிகத் தனிமையாக இருக்கிறது.
*
ராணுவ பூட்ஸ்கள்- 2
*
வெற்றியின் நற்செய்தியை பரப்பிடும் வேளையில்,
உலர்ந்திருந்த உடல்களின் மீது அழுத்தமாகப் பதிந்திருக்கும்
ஆயிரமாயிரம் பூட்ஸ்களின் தடங்களை
யாருக்கும் தெரிந்திடாமல் மறைக்க முயல்கின்றன அதிகாரங்கள்.
மேலும்
வரலாற்றின் அச்சமூட்டும் ஒரு செயலுக்கருகில்,
எப்போதும் கைகுலுக்கிய படியும்,
சாய்ந்தபடியுமே நிற்கின்ற னவை.
*
ராணுவ பூட்ஸ்கள்- 3
*
ஒரு எதிரியின் உடலின் மீதிருந்து துவங்கும் வண்ணத்துப்பூச்சியைப்
பார்த்துக் கொண்டிருந்த ராணுவ பூட்ஸ்,
அதன் சிறகுகளை மிதித்துச் சிதைத்தது.
மிஞ்சிய சிறகுகளுடன் ஒரு மூலையில் அது பறப்பதற்கு
முயன்று கொண்டிருந்ததை பார்த்த போது தான்,
அதன் சுதந்திரத்தை எப்படி முழுவதுமாக மிதித்து
அழிப்பதென யோசிக்கத்துவங்கிய தது.
*
சிறிய காகிதங்கள்- 1
*
இந்த யுத்தங்களுக்குப் பிறகு,
நீ உனது இடிந்த வீட்டிலும்
நான் எனது வீடிருந்த நிலத்திலும்
சிறிய காகிதங்களில் போர் விமானங்களும்
நீர்மூழ்கி கப்பல்களும் செய்து வைப்போம்.
மிகவும் சிக்கல்கள் நிறைந்த மீதி வாழ்வுகளை,
நமக்கென யாருமற்ற வெறுமைகளை,
அச்சிறிய காகிதங்களின் கூர்மைகளைக் கொண்டே
ஒவ்வொன்றாகப் பெயர்த்தெடுப்போம்.
*
சிறிய காகிதங்கள்- 2
*
சிறிய காகிதத்தில் உனக்கொரு அண்ணனை
நான் செய்து கொடுக்கிறேன்.
எனக்கொரு தங்கையை நீ செய்து அனுப்பு,
இனி ஒருபோதும் சந்திக்கவே முடிந்திடாத நாமிருவரும்,
பதுங்கு குழியில் வளர்ந்திடும் சிறிய செடியின்
காலத்திற்கருகில் அவற்றை வளர்ந்திடச் செய்வோம்.
உறவுகளற்ற நிலத்தில் வாழ்க்கையைக் கடப்பதற்கு
ஒரு முறையேனும் அவற்றை பழக்கிவிட்ட பிறகு தான்,
பீரங்கிகளின் சக்கரங்களுக்குள் மாட்டிக்கொள்ள வேண்டும் நாம்.
*
சிறிய காகிதங்கள்- 3
*
நாம் செய்ய முயன்று கொண்டிருக்கும் இப்பறவைகள்
முழுவதுமாக செய்து முடிக்கப்படும் வரை
உன்னையோ அல்லது என்னையோ தேடி
பறந்திடாமல் இருக்க வேண்டும்.
அவற்றிற்கு யுத்த திசைகளை ஒரு முறைக் காட்டி விட வேண்டும்.
இப்படியே.
நமக்கு யுத்தங்கள் பற்றி முழுவதுமாக தெரிந்திடும் வரையிலாவது,
சிறிய இடைவெளியில்,
நம் பெற்றோர்களைக் கைவிட்டிருக்கலாம் அந்தத் தோட்டாக்கள்.
*