
உப்புக் கண்டங்களுக்கும் நினைவிருக்கும்…
பர்தாவினுக்குள் நுழைந்துவிட்ட சகோதரிகளோடு மூன்றாவதாய் அமர்கிறேன்
அவர்களிடம் திராட்சைப்பழங்கள்
கொறிப்பான்களாக ஒருவர் கை ஒருவராக மாறிக்கொண்டேயிருக்க
வாப்பா பின்னிருந்து குரல் கொடுக்கிறார்
பெரிய ஹூசைபா..என்றவாறே
ஒவ்வொரு உருண்டையாகத் தோன்றிய திராட்சைப் பழங்களுக்கிடையே
ஓரத்திலமர்ந்திருக்கும் என்னை
இடித்துத் தள்ளிவிடப் போகிறார்களென்கிற எச்சரிகை மணியது
மேலும் நான் சிறிய ஹூசைபாவைத் தேடினேன்.
***
அப்பாவிற்குப் பிடித்தது
நாகூர் ஹனிஃபாவின்
இறைவனிடம் கையேந்துங்கள்
எனக்கோ பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை
பிடித்ததைத்
திரும்பத் திரும்பக் கேட்கிற பானி
அப்பாவிற்கும் எனக்கும் ஒரே மாதிரி
எனக்குப் பிடித்துவிட்டால்
அப்பாவிற்கு பிடித்தது
பதினாறடி பின்னால்தான் பாயவேண்டும்.
***
சுல்தான்பேட்டை வீதியிலிருந்தபோது
பக்கத்துக்கடைக்குப் புதிதாக வந்துபோனவன்
அஜீத்தா அப்பாஸா தெரியாது
கடைபெஞ்சிற்கு வருவான்
வலைப்பின்னல் கூடையில் சிற்றுண்டிப் பாக்கெட்டுகளை எடுத்துத் தருவான்
மாலைப் பொழுதில் மட்டுமல்ல
புதிதாக மதியமும்
பாடங்களைப் படிக்க முன்னறையில்
இடம்பிடித்தேன்.
***
பக்கத்துவீட்டுக் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த
உப்புக்கண்டங்களுக்கும் நினைவிருக்கும்
வீட்டைவிட்டு வெளியேறும் போதும்
வீட்டிற்குள் நுழையும் போதும்
மறைக்கத் தெரியாத
வேடிக்கையது.
***