
உடைந்து குறுகி
மௌனச் சிறையிட்டு
உட்புறம் தாழிடுகையில்
காற்றும் நுழையாமல்
காதுகளையும்
மூடித் தொலைக்கிறேன்.
கழுத்தறுபட்டுக்
கதறிக் கொண்டிருக்கும்
நியாய தர்மங்களின்
விசும்பல்
இன்னும் நின்றபாடில்லை.
மோனத்தவத்தால்
முடிவேதும் வரப்போவதில்லை…
மனசுக்கு மரத்தோல் போர்த்தி
மீண்டும்
மௌனம் துறக்கிறேன்.
முன் நிற்கும்
புத்தனிடம்
மாற்றமேதுமில்லை.
***
பூங்கொத்துகளை
நீட்டி
கிளைகளை அசைத்து
மெல்ல காற்றைத்
தூதனுப்பி
வான் பார்க்கும்
மரங்களுக்கு
மேகத்தைக் கீழிறக்கி
நீர் வார்ப்பதன்றி
வேறென்ன செய்துவிட முடியும்
அந்த வானம்?
***
வரைந்து முடித்த
மாயக் கட்டங்களுக்குள்
வலிந்து புகுத்திக் கொண்ட
வரையறைகளில்
ஒன்றை விடுகையில்
மற்றொன்றைப்
பற்ற வேண்டிய
நிர்ப்பந்தங்கள்.
சுவாரஸ்ய
ஆட்டத்தில்
பார்வையாளர்களும்
பங்கேற்பாளர்களும்.
உறுமும் சிங்கமும்
பந்தாடும் யானையும்
ஒற்றைச் சொடுக்கில்
கீழ்ப்படியும் யுத்திகளில்
எப்போதும் போல்
சுழன்று கொண்டிருக்கிறது
பூமி.
***