
புனைவின் நெற்றிக்கண் பார்த்து
விழிக்கு விழி வேண்டும் என்றது
மொழிக்குத் தவறிய சொல்
நழுவிய மீனின் கண்ணில்
செல்லப் பிராணியின் தொல்லை போல
வார்த்தைப் பொருத்தம் பார்த்துச்
சேர்க்கை சரியில்லை என்றது
என் நல்லூழ் நீ எனக்குக் கிடைத்தாய்
உன் பொல்லூழ் நான் உனக்கு
ஒரு வார்த்தையின் பல நூறு
அர்த்தங்களாகித் திரிகிறேன்
இந்த வனத்தின் பனிக் காற்றில்
மேலும்
இந்தப் பொன்னூத்து அம்மனின் சந்நிதியில் அடங்கும்
இந்த அடுக்கு மலைச் சாரலின்
எலந்தை மற்றும் புளியம் பழ மரங்களின் கிளைகளில்
தம் தாபம் துடைக்கும் மேகங்கள்
இவ்வனத்தின் உயிர் மோகங்களாக வரும்
33 யானைகளின் கழிவிலும்
யானைகள் உடைத்துப் போட்ட மரங்களிலும்
இவ்வளவு ஏன்
இந்தச் சின்னஞ் சிறு பூக்களின் மலர்ச்சியிலும்
எல்லோருக்கும் வாழ்வு
எமக்காகவும் ஒரு சூழ்வு
என்கின்றனவே
இதை எங்கே சென்று சொல்ல
1: வைக்காத சொற்கொலு
மோனத்தில் சொக்கிய கண்கள்
திரிசூலம் தீண்டிப் பிளவுபட்ட
தென்றலின் பாதைகளைச் சுட்டும்
இமை மயிர்களின் விறைப்புப் பதைபதைப்பு கொண்டு
இந்தச் சரீரத்தின் இன்ப அழுத்தப் புள்ளிகளைத்
தடவாமல் படர்கின்றன
பொதிகையின் ஒவ்வொரு அணுவும்
சுரக்கக் கூடும் காம்புதான் எனில்
இசையின் தசைப் பிசைவில்
நலுங்கும் புணர்பரவசம்
அள்ளிய இரு கை பாத்திரத்தில்
கிடைத்த உடல் ச்ருஷ்டி மோகம்
தன்னை அனுமதித்த மலர்
தான் உறிஞ்சும் தேனீக்கும் தெரியும்படி
கொஞ்சுகிறது அதன் இதழ்களை ஏற்று
சொல்லில் கறந்த சொல்
சொல்லைத் துறந்த சொல்
சொல்லே மறந்த சொல்
முதலில் இப்படி ஆரம்பித்தது
இறந்த பின்
இந்த ஜென்மத்தில் நான்
என்னையே கூடச் சந்திப்பேனா எனத் தெரியாதபோது
உங்களுக்காகவா வாதாடுவேன்
சூழ் கொள்ளும் என் முள்
பாழ்-சிமிழ் தான்
என்பர் அன்றோ எனைப்
பழகிக் கண்டோர்.
2: நுனித் தோல் விலகாத சொல்
உள்ளே செல்லும் சொல்
சொல்லே இல்லை
எங்கும் அர்த்தங்களின் நர்த்தனம் தான்
படுக்கையில் கிடந்தால் போதும்
ஒரு சொல் என்றாலும் சரி
இரு சொற்கள் என்றாலும் சரி
புணர்ச்சி விதிக்குக்
கட்டுப்படுமா உணர்ச்சிக் களி
அவை கூத்தாடும் போக்குக்கு
இன்னும் ஒரு சக உலகம் உருவாகும் அளவு
சக்தியின் மிகுதியோ இன்பச் சகதியில் கூத்தாடுகிறது
உன் பார்வையின் கூரிய அலகில்
காரிய சித்தமாக.
இந்தக் கற்பனையின் சொற்ப மெய்யில்
இருப்பது நான் மட்டுமே அல்ல
இடர் மீறிப் பருகிய மிடர் தனில்
சுடர் விட்ட உன் இதழ்களும்தான்
புனைவு எனும் நிஜம்
உண்மையெனும் மாயத்தோற்றம்
ரெண்டும் சந்தித்துக் கொண்ட பொழுது
அந்த உரையாடலைக் கேட்க
அவையடக்கம் கொண்ட பலர் உடன் இருந்தனர் தான்
அவர்கள் வாளாவிருந்தனர் தான்
ஒரு ரத்த நிலாவும் கூடக் காத்திருந்தது தான்
தன் பார்வைக்கு மட்டுமே கூடி அது மத்தாப்பாகும் வரை
பஸ்பத்தின் ஊற்று தேர்ந்தெடுக்கும் பாதைக்கு
மூலவரா பொறுப்பு
அது உற்சவரின் பாடல் அல்லவோ
எந்தச் செவிக்கு எது சாயுமோ
எந்தச் சுவைக்கு எது பாயுமோ
உழுபவர் பாடும்
ரெண்டு சந்தித்துக் கொண்ட பொழுது
என் பெயர் கருப்பு
என்றானது.
கரம் தள்ளிச் சுரம் வரப் புதைத்த
விதைநெல்லின் முளைவில்லைத்
தேடிக் கொண்டிருக்கிறான்
அவனுக்குக் காலமும் புரியவில்லை
கர்மமும் தொலையவில்லை
அன்றிரவு அவனுக்கு
இப்படி எல்லாம் நிகழ்கிறது…
மின்விசிறி
விடியலைத் துரத்திப் பிடிக்கும்
காலச்சக்கரமாகிறது
பஞ்சு மெத்தை
நீச்சல் தெரியாமல் மூழ்குபவனின்
கடலாகிறது
கடிகாரம்
அமாவாசையையும் விழுங்கத் துவங்கும்
சர்பமாகிறது
திறன்பேசி
மனம் பிறழ்ந்த கிரகத்தின்
செயற்கைக்கோளாகிறது
இந்த நிகழ்வுகளின் அருஞ்சொற்பொருளை
அவன் இப்படிப் புரிந்து கொள்கிறான்
ஒற்றைப்படையாக
பூபாளத்தின் பாதாளத்தில்…
தவம் இருந்து பெற்ற
சவம் இது
சிவம் வேடிக்கை பார்க்கிறது
மூன்றாவது கண்ணிலும்
கிருமி தொற்றிய சொல்
360 டிகிரிக்கும் தன் தலையைச் சுழற்றுகிறது
அசையும் திரைச்சீலை விலக
ஜன்னல் கண்ணாடித் திரையில்
நிலவொளியின் காட்சி-பாய்ச்சி
நீட்டிக் காட்டும் நிழல்வெளியின்
மரக்கிளை இலைகளின் நடனத்தில்
ஒரு கொய்யாப் பூவின் புன்னகை
கருப்பு வெள்ளையில் கசிகிறது
இருட்கடலின் பேரலைகளின் பேரிரைச்சலைப்
பிரதியெடுத்து வீசும் மின்விசிறியோசை
காற்றைப் பிழிகிறதோ கனலைப் பொழிகிறதோ
காரிருளின் கனவில் ஓர் கார்மேகமும் இல்லை
நிசியின் மசி விரெலெங்கும் நிரம்பி வழிய
தலை மயிரில் துடைத்தால் மேலும் கருமை கூடுகிறது இப்பொழுதுக்கு
கையை நீட்டி இருளை அள்ளிப் பிள்ளையார் பிடிக்கத் தொடங்கினேன்
உன்மத்தம் சிலிர்த்ததோ அந்தகாரம் மலர்ந்ததோ
என் மேல் பட்டுத் தெறித்தது பிரகாச இருள்.