கவிதைகள்
Trending

இரா.கவியரசு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கறிக்குழம்பு மணக்கவில்லை
————————————————–

என்னது
கறிக்குழம்பு தயார் செய்யும் போது
ஊண் உருகும்
நெய் மணக்கவில்லையா ?
நாசிகளே
நீங்களாகவே குதித்து
உடைந்து விடுங்கள்
பிடுங்கி எறிந்தால் அவமானமாகிவிடும்
திடீரெனக் கதவடைப்பது
உங்களுக்குப் பழக்கம் இல்லையே
வாசனைக்கால்களை
கழற்றிவைத்துவிட்டு
உள்நுழையும்
மூச்சுக்குத் தெரிந்திருக்கிறது எல்லாமும்
அவசர அவசரமாக
காலணிகளை மாட்டி
கால்களைத் தொட்டு ருசிக்கிறது நாக்கு
துளியும் உப்பில்லை
உள்ளே உருளுகிறது
காய்ந்த ஆற்றுமணல்
கசப்பு கூட இல்லாதது
கொன்றுவிடத் தூண்டுகிறது
நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்
யாராவது சொல்வதற்குள்
நீங்களே விழுந்து விடுங்களேன்
சுவை மணம் தெரியாது
புதிய நோயின் அறிகுறி இதுவென்று
மருத்துவர் சொன்னபின்
நாக்கை  இழுத்துக் கொண்டேன்
நாசிகளுக்கு  பதிலாக
ஒரு பெரிய உள்மூச்சு.

***

பின்பக்கத்தைத் திண்ணும் மீன்கள்
———————————————————-

முதலில் உள்நுழைகிறது
அதி துல்லிய கேமிரா
அவளது பின்பக்கத்தை அடிப்பவன்
திணிப்பதற்கான
கட்டளைக்காக காத்திருக்கிறான்
சொடக்கு ஒன்று
அவள் முகத்துக்கு நேரே சென்று
முணக ஆரம்பிக்கலாம் என்கிறது
உடலுக்குள்
ஒவ்வொரு படியாக உயர்கிறது
திரவமட்டம்
நீளமான தாமரைத் தண்டை
மீச்சிறு துண்டுகளாகப் பரவ விடுகிறாள்
அலையடித்தும்
அசையக்கூடாத குளத்துக்குள்
கதறுவதற்கான நேரம்
வந்து கொண்டிருக்கிறது
தலையை வெளியில் முட்டி
முகத்தைத் தொலைக்க விரும்புகிறாள்
இப்போதைய சொடக்கு
கண்களை மூடக்கூடாதென
பறந்து வருகிறது
முலைகளில் எச்சில் துப்புகிறவன்
முன்பக்கம் என சைகை காட்டும்போது
இன்னும் இன்னுமெனப்
பசியடங்காமல் துள்ளுகின்றன
பின்பக்க உடலைத்
தின்று முடித்த மீன்கள்.

***

முக்தியடைதல்
—————————
வயிற்றில் நீல ஆடை அணிந்து
ஒற்றைத் தாளுடன் துயில்பவனை
மூன்றாண்டுகளாக கேட்பாரில்லை
குண்டான கோப்புகள்
நெருக்கும் போதெல்லாம்
கதறி அழுதிடுவான்
ஒவ்வொரு முறை
பீரோவைத் திறக்கும்போதும்
“இன்று நான்
வெளியே சென்று விடுவேன்”
தோழர்களிடம்
பெருமிதத்துடன் சொல்லுவான்
பூட்டிய பிறகு
நிறையும் இருளில்
ஒரே ஒரு தாள் உடலை
இன்னும் குறுக்கிக் கொள்ளுவான்
இன்று பார்த்து வந்திருக்கிறது
ராஜ வாழ்வு
உடனே கேட்கிறார்கள்
மிக மிக அவசரமாம்
எல்லா அடுக்குகளிலும் பயங்கர களேபரம்
தூசியை ஊதியபடி
தயார் செய்து கொள்ளும் ஒல்லிப்பையன்
எட்டிப்பார்க்கிறான் பெருமிதத்துடன்
அழகாகத் திலகமிட்டபின்
அவனுக்கடியில் வைக்கப்படுகிறது
மிகப்பெரிய ரெக்கார்டு
பலூனைப் போல உப்பியதால் கத்துகிறான்
“நானும் குண்டாகி விட்டேன் போங்கடா !”
மர்மமாக  சிரிக்கிறார்கள் பீரோவிலிருக்கும் தோழர்கள்
கையொப்பங்கள் நகர்த்தும் எஸ்கலேட்டரில்
உயர்ந்த இடம் நோக்கிச் செல்பவன்
முற்றாக்க முடியாத
காவியமாகிடும் கனவிலிருக்கும்போது
சொல்லாமல் உருவப்படுகிறது  மிகப்பெரிய ரெக்கார்டு
நடவடிக்கை தேவையில்லையென
சாதாரணமாக
முற்றுப்பெறுகிறது
வாழ்வு.
***
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button