
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்
————————————
மணலோடும் ஆற்றுக்குள்
நாணற்பூக்கள் திரட்டி
சேடிப்பெண்ணாக
வெஞ்சாமரம் வீசுகிற
இடையன் மகனுக்கு
ஈடாக என்ன தருவது?
அந்திச்சூரியனை இழைத்து
பிறைநிலவை பெயர்த்து வைத்து
கிரீடமொன்று பரிசளிக்க லாம்.
***
தேநீர் நிலையத்தின் பண்பலைப்பாடல்
—————————————————————–
“அன்னக்கிளி உன்னைத் தேடுதே”
பாடலை கேட்கிற பொழுதெல்லாம்
வால்நட்சத்திரமாய்
புழுதிகிளப்பிச் செல்லும்
தகரப்பேருந்தில் ஏற்றப்பட்டு
கரும்புக்கொல்லைகள் அடர்ந்த
வண்டிப்பாதையில்
சில்வண்டுகள் ரீங்கரிக்கும்
சிற்றூரின் மைல்கல்லருகே
இளமறியைப்போல
இறக்கி விடப்படுகிறேன்
நீங்களுமா?.
***
கும்மரச்சம்
——————–
பனியகலா அதிகாலை
வேம்பு விட்டு சாலை கொத்தும் காக்கைகள்
சுவரொட்டி ஒட்டுகிறவர்
பால்காரர்
விரையும் வாகனங்கள்
நீர் சுமக்கும் பெண்டிர்
துப்புரவுப் பணியாளர்
செல்லப்பிராணிகளோடு நடையாளர்கள்
கும்மரச்சம் போடும் குருவிக்கூட்டம்
கூட்டு சேர ஆசைதான்
இருந்து தொலைக்கிறதே
ஏழு மணி ஷிப்ட்.
***