கவிதைகள்
Trending

குதிரைக்காரன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

 [ மு  ]

னது முலையின் மீது அவன் கண்கள்
அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் .

அவனது கண்கள் இனியெப்போதும்  நள்ளிரவையே காணும்.

தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல்
பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள்.

 

 [ க  ]

மைதியான நள்ளிரவுகளில்
யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு  நெடுநேரம் நிற்கிறார்கள்.
அம்மா எழுந்து  திறக்க வருவதற்குள்
போய்விடுகிறார்கள்.

நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென
தாழ்ப்பாளின்  அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள் வருவதேயில்லை.

ஏழு வயதில் தொலைந்து போன சகோதரன்
தன் 14 வயதின் முதல் காதலன்
நீண்ட பிரசவ அறைக்குள் போய்விட்டு 40 வருடங்களாய் இன்னும் வராமலிருக்கும் அம்மா இங்கேயே இரு வந்திடுவேனென்று சொல்லிக் கிளம்பிப் போன அப்பா.

இதில் யாராயிருக்குமென்று அம்மாவிற்கு கவலை

பொறுமையிழந்தவள்
நேற்று நள்ளிரவு  வீட்டின்  கதவுகளை தனியே பெயர்த்துக்கொண்டிருந்தாள்.

[ து  ]

துயரங்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது.
துயரங்கள் மேலும் மேலும் துயரங்கள்.

[ ப ]

வெறும் ஒலியால் மட்டுமே பறவைகள் வாழும் வீடது
அ – ப்பறவைகளைப் பார்த்தவரில்லை  –
அ – தன் இறகுகளை சேகரித்தவரில்லை –
உணவிட்டவரில்லை – உணவாய்க் கொண்டவரில்லை
நேற்றவை சில குட்டி ஒலிகளை குஞ்சுகளாய்ப் பிரசவித்தன.

[ உ ]

ன்னை நானே கண்காணித்துக்கொண்டிருக்கும் உளவாளியாயிருந்தேன்.

 [ அ ]

ரண்டு கால்களையும் இழந்தபின்  அப்பா சொன்னார்
”எனது முழங்கால் வரை  எப்போதும் சகதிக்குள் மூழ்கியிருக்கின்றன மகனே”

அவர் எப்போதும் சகதிக்குள் நின்றவாறே உண்டார்.
– வாழ்ந்தார் – இறந்தும்  போனார்.

சகதியை கைகளால் வாரி வாரி எனக்குத்தான் அழுக்கு நகங்கள்

ஒருநாள் தோட்டத்தில் வள்ளிக்கிழங்கைத் தேடி தோண்டியபோது
கணுக்கால் வரை அவரின் கால்களைப் பார்த்தேன்.

சேனைக் கிழங்குகளைத் தேடியபோது
அவரின் கால் விரல்கள்  கிடைத்தன.

[ கோ  ]

நூற்றுக் கணக்கில் கோழி இறகுகள் பறந்து செல்கின்றன
தீவன வண்டிகளின் பின்னால்

க் ..கெ … க்…கென தன் கோழிகளை  இரையெடுக்க அழைக்கும்போதெல்லாம்
ஓரிரு இறகுகளும் போகின்றன.

ஒரு நாய் குப்பை மேட்டில் கோழி இறகுகளை விரட்டி விளையாடுகிறது.

அதே குப்பைமேட்டில்
காற்று உயரத்திற்கு அழைக்கும்போதெல்லாம்
பூமியிலிருந்து  ஒரு சேர எழுந்து கோழி இறகுகள் நடனமாடுகின்றன.

கோழி இறகுகள் வேறொரு  கோழி இறகுகளைக் காதலிக்கின்றன.
கோழிகளின் காதலென்பதும், கோழி இறகுகளின் காதெலென்பதும்
வெவ்வேறு

கோழிகள் இறந்த பின்னால்தான்
கோழி இறகுகளின் வாழ்வு துவங்குகிறது.

[ கா ]

ழக்கப்பட்ட நாய் இறந்தவனின் காலெலும்பை
தோண்டி எடுத்து வந்து விளையாடுகிறது – கால் பந்து உருள்கிறது.

[ மு  ]

பிறந்ததிலிருந்து அன்றுதான் வானில் முதல் சிறகசைப்பு அந்த பறவைக்கு –

                                                                 முதன்முதலில் வேட்டையாடவருகிறான் அந்த சிறுவன் –

                                                                 அந்த புது கவணில் கல் வைத்து முதல் குறிபார்க்கிறார்கள்  –

                             அன்றுதான் முதன்முதலாக  தீயுரசி சமைக்கக் கற்கிறாள் அவன் தங்கை.

 

*** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button