கவிதைகள்
Trending

மா.காளிதாஸ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

உடல் மேல் ஊரும் சிலந்தியைத்
தட்டிவிடத் தட்டிவிட, திரும்பவும்
தன் பழைய பாதையைச் சீரமைக்கிறது.

பாழடைந்துவிட்ட உணர்வில்
ஒரு கணம் பதற வைக்கிறது.

எலும்பு மூடிய வெறும் சதையை வலைக்கான பிடிதளமாக
எப்போது மாற்றியது சிலந்தி?

மாட்டிக் கொண்டதை, வலையறுத்து வெளியில் வீசும் அக்கறையின் போது பிடிதளத் தசைநார்கள் மீதும்
கவனம் கொள்ளுங்கள்.

வலைக்குள் இரை விழும் போது
மணல்சிற்பத்தில்
கல் விழுந்தது போலவும்
மென்று துப்பிய பூமரில்
கை வைத்தது போலவும்
ஒரு கதறல் கேட்கிறது.

தன் எச்சிலால்
சிலந்தி முத்தமிடத் தொடங்கும் போதே
காலம் தன் கன்னித்தன்மையை இழந்துவிட்டது.

பாதை மாறிய சிலந்தியை
சுவற்றோடு நசுக்கிய தடம் மட்டுமே
வடிந்து உலர்ந்திருக்கிறது
இப்பெரும்பொழுதில்.

***

இருளின் மீது
சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் வெளிச்சம்,
அதுவொரு தியான நிலையென
தனக்குத் தானே பெருமிதம் கொள்கிறது.

உள்ளிழுத்த வேகத்தில்
வெளிவிடும் மூச்சுக்காற்று
தனதே அல்ல என நம்ப மறுக்கிறது.

வாயில் கவ்விய தேக்கரண்டி எலுமிச்சை கீழே விழாமல்
இலக்கை அடைய வைத்தல் போல வெளிச்சத்தை
அவ்வளவு காபந்து செய்கிறது இருள்.

துரத்தும் நாயிடம் தப்பிக்க, காலை
மேலே தூக்கி வைத்துக் கொள்ளும் இருசக்கர வாகன ஓட்டியைப் போல வெளிச்சம்
எப்போதும் இருளை அண்டியிருக்கிறது.

சமயம் பார்த்து
இருளின் காலை வாரிவிடும் வெளிச்சம்,
தன் பரவல் குறித்த நிலைப்பாட்டில்
உறுதியாக இருக்கிறது எப்போதும்.

மூர்க்கமான பகையாளியைப் போல
முதுகில் குத்தினாலும்
வெளிச்சத்தைக் காட்டிக் கொடுக்க
சிறு அலறலைக் கூட  வெளிப்படுத்துவதில்லை இருள்.

இருளின் தோள் மீது சவாரி செய்து
உலகைத் தன் கண்களால் அளக்கும்
வெளிச்சம், தன் பார்வை
மங்கிக் கொண்டே வருவது குறித்து
மேலதிக அச்சம் கொள்கிறது.

இருந்தும் இருளின் மீது
அதி அதிகாலையில் மூத்திரம் பெய்யும் மார்ச் மாதக் கொடும்பனியை
ஓரமாய் நின்று கைகட்டி ரசிக்கிறது வெளிச்சம்.

***

காலத்தின் கரையில்
காலார நடக்கிறேன்.

எப்போதோ இறந்த ஆறுமுகம் எதிர்பட்டு எத்தனை குழந்தைகள் என்கிறான்.

கவனித்தும் கவனியாதது போல் கடப்பது அதே அவளாகத் தான்
இருக்க வேண்டும்.

நெடுநாள் கழித்து சிராய்த்து நடந்த குதிகாலை உறுத்தும் முள்ளின்
கூர்முனை வலியும் இதம் தான்.

எங்கிருந்தோ ஒரு கவுச்சி வாசம்
நாசியைத் துளைத்து நகர்கிறது.

தடுமாறினாலும் விறைப்பு குறையாமல்
ஒரே தாள லயத்துடன் ஓசை எழுப்புகிறது அருகாமை முதுமையின்
கைத்தடிப் பளபளப்பு.

நின்று நிதானித்துத்
திரும்பிப் பார்க்கும் என்னை
சட்டையே செய்யாமல் கடந்து போகிறது
யாரோ யாருக்கோ விடும் அழைப்பு.

நெழிசலெடுக்கும் அல்லது தட்டையாக்கும் தொடர் ஒலியை மட்டுப்படுத்துகிறது
சங்கு மற்றும் சேகண்டி மணியின்
திடீர் முழக்கம்.

திரும்ப வேண்டிய இடம் வந்ததும்
ஒரு சுற்று இளைத்துப் பெருத்தது போல் இருக்கிறது மனது.

***

காணாமல் போகிறவளின் நாப்கின்

இடையறாத  மௌனச்சொற்களை
தூர தேசத்திலிருந்து வரும் பறவைகளுக்குத் தின்னக் கொடுக்கிறாள்.

அதுவரை பற்ற வைத்தறியாத
வாயு அடுப்பு
இரண்டாவது சிமிட்டலில்தான்
அவளது கனவையும் எரிக்கிறது.

கழுவிக் கவிழ்த்திய

தேநீர்க் கோப்பையைப் போல குப்புறக்கிடக்கும் அவள், மறுநாள் தலையணை உறையை வெயிலில் உலர்த்துகிறாள்.

பசிக்காமல் வடகமாகியதை
ஐஸ்கிரீம் டப்பாவில் பத்திரப்படுத்துகிறாள்.

காற்றுக்கு அசையும் கதவுக்குப் பின்னால் நெருக்கமான நிழல் நிற்பதாக
அவ்வப்போது பிரம்மை கொள்கிறாள்.

தினம்தினம் காணாமல் போகும் அவளுக்காக…
நாள் நெருங்க நெருங்க
தன்னைத் தானே நொந்து கொள்கிறது
பதுக்கி வைக்கப்பட்ட நாப்கின்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button