
பார்க்கும் தூரத்தில்
சிறிதும் பெரிதுமாக வளர்ந்திருக்கும்
செடிகளுக்கும் கொடிகளுக்கும்
மரங்களுக்குமிடையே நடக்கிறாள்
நெஞ்சுக்கு நேராக நிலவைப் போன்ற
கோளொன்றினைப் பிடித்திருக்கிறாள்
அது
ஒளி வீசுகிறது
சுடுகிறது
சில்லிடுகிறது
வெதுவெதுப்பாய் இருக்கிறது
பிரதிபலிக்கிறது…
வழியெங்கும் சக்கரமாகச் சுழல்கிறது தலை
தேடல் சுமந்த விழிகளின்
ஈரம் மினுக்க நடக்கிறாள்
தென்படும் பலருக்கு
அவள் கைகளில் இருப்பது தெரியவில்லை
சிலர் முன்னோ
அவளே தன்னை மறைத்துக் கொண்டாள்
கைகளில் ஒளிரும் கோளோ, எதுவோ
இன்னும் சிலரைக் கண்டதும்
ஒளிர்வதை நிறுத்தி இருளுக்குள்
ஒளிந்து கொள்கிறது
அவள் தலை மட்டும்
நம்பிக்கையில் நாற்புறமும்
சுழல்வதை நிறுத்தவில்லை
விழிகள் முன்பை விடவும்
அதிகம் ஈரம் சுரந்தன.
கைகளில் இருக்கும்
அது
பெரிதாகிறது
நடந்து கொண்டே
அதற்குள் நுழைகிறாள்
வெளி வருகிறாள்
சிறிது நேரத்தில்
திரும்பவும் சிறிதாகிறது
இன்னும் சிறிதாகிக் கொண்டே வந்து
அவளுக்குள் புகுந்து கொள்கிறது
அமைதியாக நடக்கிறாள்…
நீண்ட தூரம் பின்தொடர்ந்து
பார்த்து, சோர்ந்து, தூங்கி எழுந்து
அவள் சென்ற பாதையைத் தேடி விரைகிறேன்
இப்போதும் அவள் கைகளில்
அது
இருக்கிறது. இல்லை.
அதில் அவள் இருக்கிறாள்
இல்லை.. இல்லை.. அவளுக்குள்
அது இருக்கிறது
அவள்தான் அது
அதுதான் அவள்
கால்கள் தளர்வடைய
சுழன்று கொண்டிருக்கும்
தலையை நிறுத்துகிறாள்
விழிகள் வெறிக்கின்றன
செடிகளும் கொடிகளும் மரங்களும்
பல்லாண்டுகளாகப் பரவியிருக்கும்
வேர்கள் நடுங்க ஆடின!
அவள் பெருமூச்செறிவதை நிறுத்தினாள்
பகிர்ந்து கொள்ள யாருமற்ற
அதைப் பால்வெளியில்
வான்தொடும் நீள்கைகளினால்
வீசி எறிகிறாள்
விழுந்தது
விழுந்தாள்
வான் ஒருமுறை
குறுகிப் பணிந்து எழுந்தது
கசிந்த துளி சமுத்திரமாகியது.
***
சொற்களுக்குள்
அகப்படுத்திக்கொள்ள விருப்பமில்லைதான்
எனினும்
ஒரு சொல்லில் உடைந்து விடும்
மக்கு குடமாகத்தான்
தளும்பிக் கொண்டிருக்கும்
கண்ணீர் இருக்கிறது
சொல்லாவது தழுவட்டுமே!
எதிர்பார்ப்பு தொடர்கிறது நிழலாக…
அறியத் தருமெண்ணம் அறவேயில்லை
விரல் ஓர மாற்றத்திலிருந்து
விழி சிவந்த மாறுதல் வரை
உட்கொண்டு செரித்துக் கொண்டிருக்கையிலும்
சொல்லாமல் புரியாதவை
இனி சொல்லியும்தான்…
அழகான கவிதை தோழி..