
ககனம்
அகண்ட வானம்
வெளிர் மஞ்சள் மேகம்
வடக்கு நோக்கி
பறவைகள் கூட்டம் படையெடுக்கிறது
எங்கிருந்தோ கேட்கிறது
குயிலின் கானம்
மாடப்புறாக்கள் சிறகடித்துப்
பறக்கின்றன கோயிலை நோக்கி
கூண்டுக்குள் முடங்கிவிடாதே
விசாலமான வானம் இருக்கிறது
என்று பச்சைக்கிளி
என்னை அழைக்கின்றது
தன் குஞ்சுகளை
காத்துக் கொள்ள
இருகாகங்கள் ஒன்று சேர்ந்து
கழுகினை விரட்டுகிறது
அரிதாக தென்படும் தும்பிகள்
எனது பால்யகால நினைவுகளை
தட்டி எழுப்புகின்றன
தண்ணீர்த் தொட்டியின் மீதமர்ந்து
இறகு கோதிக் கொண்டிருந்த
இரண்டு மைனாக்கள்
கடைசி வரை என்னை
சட்டை செய்யவே இல்லை
நீராடிவிட்டு வந்த
சாம்பல்குருவி சுவரில் அமர்ந்து
சிலிர்த்தபோது
துளித்துளியாய் நீர்த்திவலைகள்
என் மீது சிதறின
மாமரக்கிளையில் மயில்
இன்னும் கிட்டத்தில் பார்க்க
நான் அந்த அணிலாக
இருந்திருக்க வேண்டும்
நம்கண்முன்னே இருள்
கவியும் போது
குருட்டு ஆந்தைக்கு
இரவில் கண்தெரியுமென்றால்
நம்ப முடிகிறதா என்ன
வானத்து நட்சத்திரங்கள்
கண்ணகி சிலம்பை
உடைத்தபோது சிதறிய
மாணிக்கப் பரல்களாகவே
என் கண்களுக்குத் தெரிகின்றன
வானத்தில் அம்மா சுட்டிக்காட்டிய
அதே நிலவுதான்
ஆனால் பார்ப்பவன்
அதே நானல்ல
ஓடும் நதியில்
இரண்டு முறை
இறங்குவது யாருக்குத்தான்
சாத்தியம்!
***
நான்
யாரையும் எதிர்பார்க்கவில்லை நான்
இருந்தும் வாசலையே
பார்த்துக் கொண்டிருந்தேன்
மேஜையின் மீது
விரித்து வைக்கப்பட்டிருந்த
புத்தகத்தின் பக்கங்களை
காற்று புரட்டிக் கொண்டிருந்தது
இமைகள் மூடுவதும்
விழிப்பதுமாக இருந்தது
மெல்ல மெல்ல உறக்கத்தின்
ஆழத்திற்கு செல்லத் துவங்கிய நான்
கதவைத் திறக்கும்
சத்தம் கேட்டு
கண்விழித்தேன்
உற்றுப் பார்த்தேன்
தாழ்ப்பாள் திறக்கப்படாமல்
அப்படியே இருந்தது
வேறொன்றுமில்லை பிரம்மை
ஜன்னல்களின் வழியே
கொசுக்கள் படையெடுக்க
ஆரம்பித்தது
எழுந்து மின்விசிறியை
சுழலவிடலாம் தான்
ஆனால் அதற்கு
மனம் ஒப்பவில்லை
மெல்ல இருள்
கவியத் தொடங்கியது
கடிகார முட்கள்
ரேடியம் என்பதால்
நேரத்தை அறிந்து கொள்ள
சிரமமில்லை
இருளைக் கிழித்தபடி
வாகனங்கள் வீட்டைக்
கடந்து சென்றன
மதில்மேல் அமர்ந்திருந்த
கறுப்புப்பூனை என்னையே
திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தது
அசைந்தால் ஓடிவிடும்
சிலைபோன்று இருந்தால்
பூனை என்ன செய்யும் பாவம்
பொறுமை இழந்தேன்
இனி யார் வரப்போகின்றார்கள்
என்றெண்ணி நாற்காலியிலிருந்து
எழ முயன்றேன்
உடல் மரத்துப் போயிருந்தது
அன்று முதன்முதலாக
மனதின் கட்டளையை
உடல் செயல்படுத்த மறுத்தது
நான் நினைவுகளில்
மட்டுமே வாழ்ந்திருந்தேன்
வேறு உடை மாற்றுவதுதான்
மரணம் இருந்தும்
ஞாபகங்கள் சிலுவையென
கனக்கின்றன!
***