வேங்குழல்
இந்த அரசமரம்
எனக்குப் பாதுகாப்பு உணர்வினைத்
தருகின்றது
இரண்டாம் முறையாக
என் அன்னையின் கருவறையில்
இருப்பதைப் போன்றதொரு
உணர்வு அது
ஆகாயத்தில் கிளைபரப்பி
இருக்கும் புஷ்பங்களை
என்மேல் உதிர்த்து
ஆசிர்வதிக்கின்றது
தடுமாறி விழும்போது
அதன் சருகுகள் மெத்தென
என்னைத் தாங்கிக் கொள்கின்றன
செளக்கியத்தை விசாரிக்கும்
வேர்களுக்கு நான் ஒருநாளும்
நீர் வார்த்ததில்லை
மரம் என்பது வெறும்
கிளைகளும், இலைகளும், பூக்களுமா
நம்மால் வேர்களை
புறந்தள்ள முடியுமா
ஞானமடையாத சித்தார்த்தன்
தேடிவந்து அமர்ந்த பிறகு
எப்படி புத்தன் வெளிப்பட்டான் என
போதி மரமே அறியும்!
*** *** ***
மை
எழுதுகோல் எனது
ஆறாம்விரல்
காகிதத்தில் பதிவாகும் எனது எழுத்து
நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும்
இதோ எல்லோருடைய
கைகளிலும் தீப்பந்தம்
என்னுள் எரியும் அக்னியில்
அதை நீங்கள் பற்றவைத்துக்
கொள்ளுங்கள்
நான்கு திசைகளிலும்
ஓடுங்கள்
யாரோ ஒருவனின் கையிலிருக்கும்
நெருப்பின் மூலம்
இவ்வுலகு தீக்கிரையாகட்டும்
மரணத்திற்கு அஞ்சாதீர்கள்
உங்களை உடலில்
சிறை வைத்தவனை பூமியில்
நடமாட விட்டுவிடாதீர்கள்
கடவுள் இந்த பொம்மை
விளையாட்டை இத்துடன்
நிறுத்திக் கொள்ளட்டும்
இல்லையேல்
கொழுந்துவிட்டெரியும்
தீயின் நாக்குகளுக்கு இரையாகி
அவனும் சாம்பலாகட்டும்!
*** *** ***
உள்வெளி
எனக்கும் உலகுக்கும்
இடையே இந்த
ஜன்னல் தான் இருக்கின்றது
கேட்பாரற்று வந்துபோகும் காற்று
எதேச்சையாக தென்படும் வானம்
தன் குட்டியை
வாயில் கவ்விச் செல்லும்
அணிற்பிள்ளை
சிறகடித்துப் பறக்கும்
நினைவுப் பறவைக்கு
இடையூறு செய்யும்
சாம்பல் குருவிகளின் சீண்டல்கள்
தனிமையின் பேரமைதியைக்
கெடுக்கும் மதிய உணவுக்கான
அழைப்புகள்
ஞானக்குயில் பாடும்
வாழ்வின் கீதங்கள் மீது
உண்டான ஆழ்ந்த லயிப்பு
சூழ்நிலைக்கு ஏற்றாற்போல்
பண்பலையில் ஒலிக்கும்
பாடல்
அறையில் சூரல்நாற்காலியில்
சாய்ந்தபடி கடவுளின் லீலைகளை
வியந்தபடி கண்கள்மூடி
மெளனித்திருக்கிறேன்
சுவர்க்கம்
ஜன்னலுக்கு உள்ளேயா
வெளியேயா என்று
கடவுள் கண்ணாமூச்சி
ஆடிக் கொண்டிருந்தார்
விளையாட்டு முடியும்வரை
காத்திருக்கலாமா
வேண்டாமா என்று
ஒருமைனா ஜன்னல்
கதவோரம் அமர்ந்து
யோசித்துக் கொண்டிருந்தது!
*** *** ***
சிவசம்போ
நீங்கள் அவர்கள் நான்
இதோடு முடிந்துபோய்விடுவதில்லை
உலகம்
அனுபவமும் அனுபவிப்பவனும்
வேறுவேறாகத் தான்
தோன்றுகிறது
அனுபவம் உயிரோடிருக்க
அனுபவித்தவன் நொடிக்குநொடி
செத்துக் கொண்டிருக்கிறான்
அவரவர் பார்வையில்
பலப்பல உலகம்
வழக்கிற்கு வாதிப்பிரதிவாதி
இரண்டுபேர் வேண்டுமல்லவா
இருதரப்புமே வாதிடும்
அவரவர் பக்கம்தான்
நியாயம் இருக்கிறதென்று
சூட்சும உலகில்
எல்லாம் நிரந்தரம்
ஸ்தூலமே தோன்றி மறைகிறது
பேசிச் சிரித்தவர்களெல்லாம்
போனார்கள் போனார்கள்
கரையே நிரந்தரம்
நதியல்ல
கையை உதறிவிடு
சோற்றுப் பருக்கைகள்
ஒட்டிக்கொண்டிருக்கும்
கைவீசி நட
வாழ்வுக்கு மாலையிட்டவர்கள்
மயானத்தில் மண்டியிட்டுத்தான்
ஆகவேண்டும்
நீ நான் அவன் இவன்
பேசிச் சிரித்து
கூடிக்களித்து
வருவதிங்கே
போவதெங்கே
அது தெரியாதமட்டும்
தெருவில் திரியும்
நாயென்ன
உடுத்திக் களையும்
நாமென்ன
சிவோஹம்
சிவோஹம்!