
ஞாபக நதி
நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம்
அலங்கரிக்கும் வரவேற்பறையில்
அலைந்து திரியும் வண்ணமீன்
ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது
நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின்
விராலை
கெளுத்தியை
உளுவையை
கொறவையை
விலாங்கை
அசரையை
கெண்டையை
ஜிலேபியை
நளுங்கை
இன்னும் பிற மச்சங்களை.
*** ***
எசப்பாட்டு
மல்லி ப்பூ…..
முல்லப்பூ……
பிச்சிப்பூ……..
கதம்ப…….
பூவேய் …. பூவேய்…… என தெருவழி கூவிப் போகிற பூக்காரியின்
குரலுக்கு எசப்பாட்டாய் இசைக்கிறது குழந்தை
பூவே….
பூவே….
பூவே……
அம்மாவின் அதட்டலுக்குப் பிறகும் பூவே…
பூவே…
பூவே…. எனும் குழந்தையை நின்று கவனித்து புன்னகைத்துப் போகும்
பூக்காரியின் முகம் தெரு கடக்கையில் மலர்கிறது கனகாம்பரமாக.
*** ***
அதிர்வு
ஊதுபத்தி கட்டுகள் சுமந்து
ஊரெல்லாம் சுற்றி
ஒன்றிரண்டும் விற்காத விசனத்தோடு
சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுணங்கி
நெற்றி சுருக்கி
நிழலுக்கேங்கி
வைகாசிபட்டி வண்டிக்காய் பூமியைத் தட்டித் தட்டி
பூதக்குடி புங்கமரத்திற்கு வந்துசேரும் பார்வையற்றவனை பச்சாதாபத்தோடு
பார்த்து தாகம் தீர
தள்ளுவண்டியில் வரிசைகட்டி வைத்த
தர்பூசணிக் கீற்றிலொன்றை
தயாபரியாய் நீட்டுகிறாள்
அலங்காநல்லூர்க் கிழவி
பாலமேட்டுக்காரன் குச்சுக்கடையில்
பதநீர் அருந்தியபடி பார்த்துக் கொண்டிருக்கும்
எந்தன் மனதிலோ அதிர்ந்து மறைந்தது
ஈ அமர்ந்த மாட்டின் சிலுப்பலாய்
‘நல்லோர் ஒருவர் உளரேல் அவர்
பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’எனும்
அவ்வைக்கிழவியின்
அற்புத வரியொன்று!
*** ***