அர்ஹந்தினாவிலிருந்து வந்திருந்த நண்பன் மேடி பெர்த்தாவின் வீட்டில் தங்கியிருக்கிறான். சென்ற முறை பெர்த்தாவின் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். பெர்த்தா வெளிநாட்டு மாணவர்களைத் தன் வீட்டில் தங்க வைத்துக் கொள்வார்கள். மாணவர்கள் ஆங்கிலத்துடன் கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள இந்த ஏற்பாடு. மேடி நன்றாக சமைப்பான். அர்ஹந்தினா ஷெப்பர்ட்பை செய்திருப்பதாகக் கூறினான். உருளைக்கிழங்கு மசியலில் கொத்தப்பட்ட மாட்டிறைச்சி சேர்த்து சமைத்தது. பூண்டு சேர்த்த ரொட்டியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கூடவே கொஞ்சம் துவர்ப்பான பியர் இருந்தால் கேட்கவே வேண்டாம். பெர்த்தாவுக்கு எண்பது வயதாகிறது. கொண்டாட்டமாக என்னை வரவேற்று கையில் பியரைக் கொடுத்தார்கள். சுவையான உணவுக்காக இல்லாவிட்டாலும் பல்வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்க இம்மாதிரியான விருந்துகளுக்கு உடனடியாகச் சென்றுவிடுவேன். ஆனால் மேடி அன்று அழைத்ததுக்கு காரணம் போன வாரம் என் வீட்டுக்கருகில் நடந்த பிரச்சனைக் குறித்து கேட்டறிவதற்காக.
ஒரு வெள்ளிக்கிழமை நான் இருக்கும் சௌத் ப்ரைன்ட்ரீ சதுக்கத்துக்கருகில் இருந்த தெருவில் துப்பாக்கி முனையில் ஓர் இளைஞன் ஒரு வீட்டை பிடித்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் காவல் துறை அப்பகுதி முழுவதையும் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தது. யாரும் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். சம்பவம் நான் இருக்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் இருந்ததால் எல்லாவற்றையும் நேராகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. காவல் துறை வந்த அடுத்த சில நிமிடங்களில் SWAT (Special Weapon And Tactics) குழு விரைந்தது. அதற்குள்ளாக இரண்டு ஹெலிக்காப்டர்கள் மேலிருந்து அனைத்தையும் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். அடுத்த சில மணி நேரத்தில் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தப் பத்துப் பேரும் மீட்கப்பட்டு எங்கள் இடத்தில் பாதுகாக்கப்பட்டார்கள். ஏதோ ஹாலிவுட் ஆக்ஷன் படத்துக்குள் சென்றுவிட்ட உணர்வு ஏற்பட்டது.
முகமெல்லாம் வெளிறியிருந்த அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன் அந்தக் குடியிருப்பில் தங்க வந்த இளைஞன் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்திருக்கிறான். யாருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கிறான். திடீரெனத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அனைவரையும் பிடித்து வைத்திருக்கிறான். பின் பயந்து மூன்றாம் தளத்தில் இருக்கும் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு யாரும் உள்ளே நுழைந்தால் தற்கொலைச் செய்துக்கொள்ளப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். மிரட்டப் பட்ட பத்துப் பேரும் தவறாமல் சொன்ன ஒரு வாக்கியம்: “அவன் இப்படிச் செய்வானென்று கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை”. அவனுக்கு போதைப் பழக்கம் எதுவும் இருக்கிறதா என்று விசாரித்தேன். தங்களுக்குத் தெரிந்த வரை இல்லை என்றார்கள். ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காவலர்கள் அந்த இளைஞனைக் கைது செய்தார்கள்.
மொத்தக் கதையையும் சொன்னப் பிறகு மேடி அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாசாரத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தான். என் வீட்டுக்கருகில் நடந்தது போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் ஏதாவது ஓரிடத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிவிட்டது. பள்ளிகளில் மாணவர்கள் இம்மாதிரியான நேரங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
அமெரிக்க இரண்டாம் சட்டத் திருத்தத்தில் இப்படியான ஒரு சொற்றொடர் வருகிறது: A well regulated Militia, being necessary to the security of a free state, the right of the people to keep and bear Arms, shall not be infringed. இந்தச் சொற்றொடர் பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. நாம் அதன் நுணுக்கங்களுக்குள் செல்ல வேண்டாம். குடிமக்கள் தங்கள் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ள யாரையும் நம்பியிருக்க அவசியமில்லை, அதலால் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடுக்க முடியாது என்று பொதுவாக பொருள் கொள்வோம். இதன் அடியோட்டமாக இருப்பது Independence – யாரையும் சாராதிருப்பது. என்னுடைய நண்பர்கள் பலர் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தான். எங்கே பிரச்சனைத் தொடங்குகிறது என்றால், யார் கையில் துப்பாக்கி இருக்கிறது என்பதில் ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் மனநிலை சரியில்லாமல் துப்பாக்கி பிரயோகிப்பது, ஆத்திரத்தில் பிரயோகிப்பது என்பது தான் பிரச்சனை.
வெளியிலிருந்து இந்தப் பிரச்சனையை அணுகினால் சட்டத் திருத்தத்தில் இன்னொரு மாறுதல் கொண்டு வந்தால் போதும் என்றுத் தோன்றலாம், ஆனால் உற்று நோக்கினால் மனச்சிதைவு குடும்பப் பின்னணி என்று எங்கேங்கோ இட்டுச் செல்லும். என் வீட்டுக்கு அருகில் நடந்த சம்பவமும் அப்படியான பின்னணியில் நிகழ்ந்ததே. கைது செய்யப்பட்ட நபர் முதலில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவலில் எடுக்கப்பட்டார். அதைவிடச் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் பயன்படுத்தியது வெறும் பொம்மை துப்பாக்கி.
இவற்றையெல்லாம் மேடியிடம் விரிவாகப் பேசிக்கொண்டிருந்த போது பெர்த்தா தன் முள்கரண்டியை எங்கள் முன் மேஜையில் குத்தி, “முள்கரண்டிக் கூட ஆயுதமாக பயன்படுத்தலாம், அதனால் நாளை முதல் இவைகளுக்குத் தடையிட முடியுமா?” என்றாள். மேடிக்கு பெர்த்தாவின் வாதம் இன்னும் புரியாததால் அந்த முள்கரண்டியை மெதுவாகப் பிடிங்கி எடுத்து பெர்த்தாவிடம் நீட்டி, “முள்கரண்டிகள் அத்தியாவசியமானவை. துப்பாக்கிகள் அப்படியில்லையே?” என்றான். பெர்த்தாவுக்கு மேடி சொல்ல வருவது புரியவில்லை. இருவரையும் பார்த்துக் கொண்டே என் பியரைப் பருகி முடித்தேன்.
‘அந்நிய நிலக் குறிப்புகள்’ பற்றி யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது ஒரு கலக்கமான மனநிலையைக் கொடுக்கிறது. சென்ற மாதக் கட்டுரைக் குறித்து பா.திருச்செந்தாழை எழுதியிருந்தது மிகுந்த உற்சாகமாக இருந்தது. அவருக்கு என் நன்றியும் அன்பும். அதேபோல ஒவ்வொரு முறையும் ‘குட்டி’ வளன் கையில் புரவியுடன் வெளியிடும் நிழற்படமும் உற்சாகமாக இருக்கிறது. கண்டிப்பாக இத்தொடர் குழந்தைகளுக்குப் பிடிக்காது. ‘குட்டி’ வளன் வளர்ந்ததும் வாசித்து கருத்துச் சொல்வார் என்று எதிர்ப்பார்க்கிறேன். தொடர் குறித்த உங்கள் விமர்சனங்கள் எதுவானாலும் தெரியப்படுத்துங்கள். அடுத்த மாதம் சந்திப்போம்.
(தொடரும்…)