
பலநாள் கழித்து
அறையை காலி செய்ய வருபவன்
அதன் நிலை கண்டு
அதிர்ந்து போகிறான்
அவன் எப்போதும்
விரட்டும் புறாக்கூட்டம்
அந்த எட்டாவது பால்கனியை
தன் இறகுகளால் நிறைத்துப் போயிருந்தது
ஒரு மூலையில் குவிக்கப்பட்ட. அவன் பொருட்களின் பொதியில் இருந்து
செண்டு பாட்டில்களும்
எண்ணெய் டப்பாக்களும்
உருண்டோடின
எப்போதும் அவன் விரட்டும் புறாக்கூட்டம்
அந்த எட்டாவது பால்கனியை
தன் இறகுகளால் நிறைத்துப் போயிருந்தது
எவ்வளவு முறை கழுவினாலும்
அழுக்காகவே இருக்கும் கழிவறை அன்று
அத்தனை பளபளப்புடன் மிளிர்ந்தது
வெள்ளை பூசப்பட்ட அறை
அவனுக்கு அத்தனை
இருண்மையாய் இருந்தது
அவன் தலைக்கு மேல் சுற்றும்
மின்விசிறி அன்று ஏனோ
புழுக்கத்தை வீசியது
சொந்த இடத்திலேயே
அந்நியமாய் உணர்வது
அவனுக்கு அதுதான் முதல் முறை
அறையை சுத்தம் செய்த ஊழியனுக்கு
தனக்கும்,எடைக்கும் போவதைத் தவிர
அத்தனையும் குப்பையென்பதால்
சான்றிதழ் கோப்புகளையும்
விட்டுச் சென்றிருந்தான்
தொலைந்து போன
காதலிக்காக எழுதிய டைரியும்
தொலைந்து போய்
கனத்த இதயத்துடன் வெளியேறுபவன்
எந்த காயலாங்கடையில் சென்று தேடுவான்
தன் நினைவின் சுவடுகளை!
***
குளியறையில் உங்களது
மீசையோ,ஜடையோ
ஒழுங்கில் இருக்கத் தேவையில்லை
கதவின் எல்லை வரையிலான
உங்களது ஆட்டத்தையும்
பரவசத்துடன் பாடும்
உங்கள் பாடலையும்
தெறித்த சுவற்று நீரில்
விரலால் வரையும் போதும்
சுவர்ப்பல்லியைப் போலவே
உங்களை நீங்களே ரசிப்பதை
ஒருமுறையேனும் உணர்ந்ததுண்டா?
தலையில் கவிழ்த்த குவளையைலிருந்து
கசியும் நீரை கவனிக்கும் நொடியை விட
வேறென்ன வேண்டும் அமைதிக்கு?
அவ்வப்போது புன்னகைகளையும்
வழியும் கண்ணீரையும்
கழுவிச் செல்லும் நீருக்கு
என்றேனும் சொன்னதுண்டா நன்றி?
என்ன உடை அணிய வேண்டும் என்றோ
என்ன முகம் பொருத்த வெண்டுமென்றோ
தொல்லை இல்லாத நிர்வாணத்தோடு
“இப்படியே இருந்தால் எப்படி இருக்கும்”என
எண்ணியது எத்தனை முறை?
நம்புங்கள்
வெளி உலகத்தின்
கதவைக் திறக்கும் முன்
குளியலறைக் கண்ணாடியில்
நீங்கள் பார்த்தது உங்களைத்தான்!
***
பிரிவின் போதான
லவ் யூ க்கள் தனிமையை
தழுவிக்கொள்கிறது
மொபைலில் சொல்லப்படும்
மிஸ் யூ க்கள் உறவை
உயிர்ப்புடன் வைக்கிறது
யாசகனைக் கடக்கும்போது
குலுங்கிக் கலைகிற மனது
சில்லறை இடுகிறது
நம்மைச் சார்ந்தவர்களுக்காக
வேண்டிக்கொள்ளும் நொடிகளை
இறைமை நிரப்புகிறது
மரணத்திற்குப் பிறகான
அஞ்சலியில் நினைவுகள்
கலங்க வைக்கின்றன
உண்மையில்
எல்லா செயல்களிலும் மனது
பிறரை ஆற்றுப்படுத்துவதாய்
தன்னைத்தான் தேற்றிக்கொள்கிறது.