கதைக்களம்

பொறி – ரிஸ்வான் ராஜா

கதைக்களம் | வாசகசாலை

றை  முழுதும்  கும்மிருட்டு.  ஒருவிதப்  பதற்றத்தோடு  சுற்றும்  முற்றும்  பார்த்தவாறு  மெதுவாக  உள்ளே  நுழைந்து,  எதிரே  மாட்டித்  தொங்கவிடப்பட்டிருந்த  கொப்பரைத்  தேங்காய்  சில்லை  நன்றாக  நுகர்ந்துப்  பார்த்து,  கடித்திழுத்த  மறுநொடி  பொறியின்  கதவு  தடாரென  மூடியது. திடுக்கென்று  பயந்த  எலி  திரும்பி  வந்த  வழித்தேடி  ஓட,  போக  வழியில்லாமல்  பொறியின்  நாலா  புறமும்  கீச் கீச்சென  கத்திக்கொண்டே  திரிந்தது.  பலம்  கொண்டு  பொறியின்  கம்பிகளை  கடித்துப் பார்த்து முடியாமல்  போக,  அதன்  சிறு  விழிகள்  இரண்டும்  பிதுங்கி  மரண  பயத்தில்  நின்றுக்கொண்டிருந்தது.

சிறிது  நேரத்தில்  அறைக்  கதவு  திறக்கும்  சத்தம்  கேட்டது.  எலி  தலையைத்  திருப்பி  சத்தம்  வந்த  திசை  நோக்கி  குறுகுறுவெனப்  பார்த்தது. கதவைத்  திறந்து,  விளக்கு  சுவிட்சைப்  போட்ட  மறுகணம்,  அந்த  சிறிய  அறையின்  ஏதோவொரு  மூலையில்  ஓடி  ஒளிந்தது  இருள்.

தோளில்  மடிக்கணினி  பையும்,  கையில்  பாலித்தீன்  பையில்  உணவுப்    பொட்டலமும்,  கழுத்தில்  டையும்,  இடுப்பில்  தொங்கிய  ஐடி  கார்டுடன், முப்பது  வயது  மதிக்கத்தக்க  ஒருவன்  சோர்வாக  உள்ளே  நுழைந்தான். கதவுக்குப்  பக்கத்திலுள்ள  தண்ணிக்  கேன்  வைத்திருக்கும்  மேசையில்  உணவுப்  பொட்டலத்தை  வைத்தான்.  குனிந்து  காலணியைக்  கழற்றி  கதவுக்கு  பின்புறம்  போட்டுவிட்டு,  எதிரேயிருந்த  கட்டிலில்  மடிக்கணினிப்  பையை  வைத்தவன்,  காலுறையைக்கூட  கழற்றாமல்  பொத்தென்று  கட்டிலில்  விழுந்தான். 

சிறிது  நேரத்தில்  ‘கிளிங்  கிளிங்’கென்ற  சத்தம்  கேட்டது.  உடனே  கால்சட்டையின்  பாக்கெட்டில்  கைவிட்டு  அலைப்பேசியை  எடுத்து  அரைக்கண்ணில்  ‘டுமாரோ  மார்னிங்,  யூ  ஷுட்  சப்மிட்  ஆல்  த  ரிப்போர்ட் பேப்பர்ஸ்.  டோண்ட்  ஃபர்கெட்’  என்ற  குறுஞ்செய்தியைப்  படித்தவுடன்,   டக்கென்று  எழுந்து  உட்கார்ந்தான்.  மேசையிலிருந்த  பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை  எடுத்து  வாயில்  வைத்து, லைட்டரில்  பற்றவைத்தான்.  முதல்  புகையை  ஆழமாக  உள்ளிழுத்து,  காலுக்குப்  பக்கத்திலிருந்த  மடிக்கணினியை  எடுத்து  ஆன்  செய்து,  ஏதேதோ  வேக  வேகமாக  தட்டச்சு  செய்தான்.

இடையிடையே  அலுப்புடன்  நெற்றியில்  கை  வைத்து  தேய்த்தவாறு,  “பாஸ்டர்டு.  இவனுங்க  பண்ற  தப்புக்கெல்லாம்  எந்த  கணக்கும்  டேலி  ஆகாது. இதுல,  நாளைக்கே  ரிப்போர்ட்  வேணும்னு  என்  உசுர  எடுக்குரானுங்க”  என முணங்கினான்.  

ஒருசில  நிமிடங்களில்  மற்றொரு  சிகரெட்டை  பற்றவைத்து,  ஆத்திரமாக  கீபோர்டை  தட்டினான்.  கொஞ்சம்விட்டால்  உள்ளேயே  நுழைந்துவிடுமளவு  முகத்தை  மடிக்கணினியின்  திரைக்கு  மிக  அருகில்  வைத்திருந்தான்.  கண்கள்  சிவக்க  வேலை  செய்துக்கொண்டிருந்தவனைப்  பார்த்த  எலி,  இவனும்  தன்னைப்போல்  இந்த  அறையில்  மாட்டிக்கொண்டானென்று  நினைத்து  அவன்  மேல்  பரிதாபப்பட்டது.

மணி  இரண்டை  நெருங்கிக்கொண்டிருந்தது.  பெருமூச்சுடன்  எழுந்து  கட்டிலில்  தலைவைக்கும்  பக்கத்தின்  மேலே  கட்டியிருந்த  கொடிக்  கயிற்றிலிருந்த  கைலியை  எடுத்து  மாற்றினான்.  காலுறையைக்  கழற்றி  கொண்டுபோய்  காலணியினுள்  திணித்தான்.

மேசையிலிருந்த  அக்வா பினா  பாட்டிலில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தண்ணிக்  கேனின்  பைப்பை திறந்து,  அரை  பாட்டிலளவு  தண்ணீரைப்  பிடித்துக்கொண்டு,  கதவிற்கு  பக்கத்தில்  முடிச்சுப்போட்ட  நாலைந்து  பாலித்தீன்  பைகளும்,  சில  கசங்கிய  பயணச்  சீட்டுகளும்  கிடந்த  அட்டைப்  பெட்டியில்  பேருக்கு  கை  கழுவினான்.

மேசைக்குப்  பக்கத்தில்  பிளாஸ்டிக்  நாற்காலியை  இழுத்துப்போட்டு  உட்கார்ந்து,  அங்கிருந்த  உணவுப்  பொட்டலத்தை  எடுத்துப்  பிரித்தான்.  புளித்த  வாடையோடு,  நாலு  இட்லியும்,  அதன்  மேல்  சேற்றை  வாரி இரைத்தார்போல்  கொஞ்சம்  தேங்காய்  சட்னியும்,  மிளகாச்  சட்னியும்  கலந்து  அப்பியிருக்க  கூடவே,  சாம்பார்  பாக்கெட்டைப்  பிரித்து  அதன்  மேல்  ஊற்றி  பிசைந்து  ஒருவாய்  எடுத்துவைத்தான்.  இடது  கையை  நீட்டி  கட்டில்  மேல்  கிடந்த  அலைப்பேசியை  எடுத்து,  ஹெட்போனை  காதில்  மாட்டிக்கொண்டு  பாட்டுக்  கேட்டான்.

அதுவரை  அமைதியாக  இருந்த  எலி  சட்னி,  சாம்பார்  வாடை  வந்ததும்  மீசைத்  துடிக்க  கத்திக்கொண்டே  இங்கும்  அங்கும்  அலைந்தது.  ஹெட்போனில்  கேட்கும்  பாட்டு  இரைச்சலில்  இதை  எதையும்  கண்டுக்கொள்ளாமல்  சாப்பிட்டு  முடித்தவன்,  உட்கார்ந்துக்  கொண்டே  எச்சில்  தாளை  சுருட்டி  அட்டைப்  பெட்டியை  நோக்கி  வீசியெறிந்தான்.  

அது  பெட்டியின்  விளிம்பில்  பட்டுத்தெறித்து  சுவற்றோரம்  நிற்கும்  அகலமான  பழைய  மர  அலமாரிக்கு  கீழே,  உள்ளே  தள்ளி  மூலையில்  வைத்திருந்த  எலிப்  பொறிக்குப்  பக்கத்தில்  போய்  விழுந்தது. 

எதிர்பார்த்தது  கிடைத்த  சந்தோசத்தில்  எலி  மூக்கை  கம்பிக்கு  வெளியே   நீட்டி  முகர்ந்து  பொட்டலத்தை  கடித்திழுத்து,  அதிலிருந்த  மிச்ச  மீதியை  தின்றது.  அவன்  அலைப்பேசியை  சார்ஜில்  போட்டு  மேசையின்  மேல்  வைத்துவிட்டு  தூங்க  ஆரம்பித்தான்.  பசி  அடங்கியதும்  எலியும்  சிறிது  நேரத்தில்  தூங்கியது.  விளக்கு  எரிய,  மின்விசிறி  எலியைப்போல்  கீச் கீச்சென்ற  சத்தத்துடன்  ஓடிக்கொண்டிருந்தது.

அதிகாலை  ஐந்தரை  மணி.  அலைப்பேசியில்  அலாரம்  அடித்தது.  மெதுவாக  புரண்டு  ஸ்நூஸ்  மோடில்  போட்டுவிட்டு, எழாமல்  படுத்துக்கிடந்தான்.  

ஒவ்வொரு  பத்து  நிமிட  இடைவெளியிலும்  அலாரம்  அடிப்பதும்,  அதை  அவன்    ஸ்நூஸ்  மோடில்  போடுவதுமாக  கிடந்தான்.  ஆறேகால்போல  எழுந்து  அலைப்பேசியில்  மணியைப்  பார்த்ததும்,  அவசரம்  அவசரமாக  துண்டும்  கையுமாக  கதவைத்  திறந்து  வெளியே  ஓடினான்.  சட்டென்று  அவன் தப்பித்துவிட்டதாக  நினைத்த  எலி,  கம்பியை  கடித்து  தானும்  தப்பிக்க  வழித் தேடியது.  முடியாமல்போக,  கீச்  கீச்சென  கத்தத்  தொடங்கியது. 

தலையைத்  துடைத்தவாறு  அறைக்குள்  நுழைந்தவனைப்  பார்த்த  எலி  அமைதியாய்  ஆச்சரியத்தோடு  கண்களைச்  சுருக்கி  இவன்  எப்படி  மறுபடி வந்து  மாட்டினான்  என்ற  கேள்வியோடு  அவனைப்  பார்த்தது.  அவன்  வேக வேகமாக  துணிகளை  மாட்டிக்கொண்டு,  தலை  சீவியும்  சீவாமலும்,  அலைப்பேசியை  எடுத்துப்  பாக்கெட்டில்  வைத்து,  மடிக்கணினிப்  பையை தோளில்  தொங்கவிட்டு,  கதவை  சாத்தி  வெளியேச்  சென்றான்.

எலி  ஒரு  நிமிடம்  குழம்பிப்போய்  திரு  திருன்னு  முழித்தது.  நம்மல  போலதான்  இந்த  எடத்துல  வந்து  மாட்டிக்  கெடந்தான்.  இப்ப  கொஞ்ச  நேரத்துக்கு  முன்னாடித்தான்  தப்பிச்சி  வெளியே  போனான்.   அப்புறம்  எப்படியோ  திரும்ப  வந்து  மாட்டிக்கிட்டான்.  இப்ப  பாத்தா  மறுபடியும்  தப்பிச்சிப்  போயிட்டானே. நம்மால  மட்டும்  ஏன்  இங்கிருந்து  தப்பிச்சிப்  போக  முடியல  என்ற  பலத்த  யோசனையும்,  கவலையும்  கலந்து  பொறிக்குள்  சுற்றித்  திரிந்தது.

இரவாகியது,  வெளியேச்  சென்றவன்  நேற்றைப்  போலவே  சோர்வாக  தோளில்  மடிக்கணினிப்  பையும்,  கையில்  பாலித்தீன்  பையில்  உணவுப்    பொட்டலத்துடன்  உள்ளே  நுழைந்தான். 

விளக்கு  மற்றும்  மின்விசிறியின்  சுவிட்ச்களைப்  போட்டுவிட்டு,  காலணியையும்  காலுறையையும்  கழட்டி  கதவுக்குப்  பின்புறம்  எறிந்தான்.  மேசையில்  உணவுப்  பொட்டலத்தை  வைத்து,  தண்ணீர்  பாட்டிலை  எடுத்து கொஞ்சம்  தண்ணிக்  குடித்தான்.

மடிக்கணினிப்  பையைக்  கட்டிலில்  ஒரு  ஓரமாக  வைத்து,  சுவற்றில்  சாய்ந்தவாறு  உட்கார்ந்துக்கொண்டு  அலைப்பேசியை  எடுத்து  தனது  சேமிப்பில்  இருந்த  எண்ணிற்கு  அழைத்தான். 

இரண்டாவது  ரிங்கில்  மறு  முனையிலிருந்து  “ஹலோ, சொல்லுங்க  தாஸ்” என்று ஒரு  பெண்ணின்  குரல்  கேட்டது.  

“ஒன்னுமில்ல.  நாளைக்கு  அந்த  ஆர் ஆர் கம்பெனியிலிருந்து  பாலாஜின்னு  ஒருத்தர்  காலையில  வர்றேன்னு  சொல்லிருக்காரு,  அவர்கிட்ட  கொடுக்க  வேண்டிய  டாக்குமெண்ட்ஸ்  எங்கிட்டத்தான்  இருக்கு.  இன்கேஸ்,  நான்  வர்றதுக்கு  முன்னாடியே  அவரு  வந்துட்டாருன்னா,  என்னுடைய  கேபின்  டிராயர்லதான்  அது  இருக்கு.  கொஞ்சம்  எடுத்து  அவருகிட்ட  கொடுத்துடுங்க”.

“ஷியூர்  தாஸ்.  ஆமா  டிராயர்  கீ”. 

“அது  ஓபன்லதான்  இருக்கு”.

“ஓ…  அப்படியா,  இட்ஸ்  ஓகே  நான்  கொடுத்துடுறேன்”.

“தேங்ஸ்  திவ்யா”.

“யூ  ஆர்  வெல்கம்  தாஸ்.  குட்  நைட்”.

“குட்  நைட்”  என்று  அலைப்பேசியை  வைத்தவுடன்,  மடிக்கணினியில்  ஏதோ  நோண்டிவிட்டு,  சாப்பிட்டு  படுத்தான். 

இவ்வளவுக்கும்  எலி  அவனை  பொருட்படுத்தவேயில்லை.  அவன்  நினைத்தால்  உடனே  தப்பித்துவிடுவான்.  தன்னுடைய  நிலைமைதான்  அப்படியில்லை  என்று  நினைத்திருக்குமோ  என்னவோ.  நேற்றாவது  பரவாயில்லை  தின்பதற்கு  கொஞ்சம்  மிச்சமீதிக்  கிடைத்தது.  இன்று  அதுவுமில்லை.  நேரமாக  ஆக  எலிக்கு  பசியும்,  உயிர்  பயமும்  கூடிக்கொண்டே  போக,  கத்தியவாறு  அங்குமிங்கும்  ஓடியது.

சத்தத்தைக்  கேட்டு  கண்  விழித்தவன்  எழுந்து  மெதுவாக  வந்து  மர  அலமாரிக்கு  அடியில்  குனிந்துப்  பார்த்தான்.   எலி  எப்படியும்  தப்பித்துவிடுவது  என்ற  முடிவுடன்  பொறியினுள்  சுற்றிச்  சுற்றி  ஓடிக்கொண்டிருந்தது. 

“குளூவெல்லாம்  வைக்காதிங்க  தம்பி.  மாட்டி  இழுத்துக்கிட்டு  ஓடி  எங்கயாவது  செத்துக்  கடந்து  தெரியாமப்  போச்சின்னா,  புழு  புழுத்து  நாற ஆரமிச்சிடும்னு” சொல்லி  வீட்டு  ஓனர்  கொடுத்த  எலிப்  பொறி  நல்லா  வேல  செஞ்சிருச்சி  என்று  நினைத்துக்கொண்டு,  “மாட்டிக்கிட்டியா  சார்ஜர்  ஒயர்,  ஷீ  எல்லாத்தையும்  கடிச்சா  வைக்குற.  செத்த  நீ”  என்று  பொறியை  தூக்கிக் கொண்டு  சாலைப்  பக்கம்  சென்றான்.

கொஞ்ச  தூரம்  சென்று  அடித்து  சாகடிச்சிடலாம்னு  நினைத்தவன்,  போகும்  வழியில்  என்ன  நினைத்தானோ,  திடீரென  மனம்மாறி  பொறியை  கண்ணுக்கு  நேராகத்  தூக்கி  எலியைப்  பார்த்து,  “இதுதான்  கடைசி.  இனிமே  என்  ரூம்  பக்கம்  வந்த  கண்டிப்பா  சாவுதான்.  ஓடிடு”  என்று  சொல்லி  பொறியை  கீழே  வைத்து  கதவைத்  திறந்தான்.

அடுத்த  நொடி  எலி  பாய்ந்து  ஓடியது.  அவன்  அறைக்குள்  வந்து  கதவை சாத்திக்கொண்டான்.

******

24/6/2018 கல்கி வார இதழில் வெளியான சிறுகதை.
ஆசிரியரின் உரிய அனுமதியோடு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

******

rizvanraja33@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button