
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் இருக்கைப் பட்டையை அணிகிறார்களோ இல்லையோ முதல் வேலையாக வானொலியின் காதைப் பிடித்து திருகிவிடுபவர்கள் அநேகர். அவர்களில் பிரபாகரனும் ஒருவன். மனசுக்குள் எத்தனை குழப்பங்கள் குத்தவைத்து உட்கார்ந்திருந்தாலும் தன்னைச் சுற்றி ஓசையெழுப்பிக் குழப்பங்களை மறந்துவிடும் மனநிலையென்பது மாயநிலையை ஒத்தது.
‘வெறும் முனியாண்டியாக இருந்து, பிறகு குரு முனியாண்டியாக மாறி, முடிவில் பரமானந்தா குருமுனியாக உருமாறி வலம் வந்த வட்டாரத்தின் பிரபல சுவாமிகள், பாலியல் மற்றும் கொலை வழக்கில் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.’ வானொலியின் தலைப்புச் செய்தி பிரபாகரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘எவன் எப்படிப் போனா என்ன?’ என்றிருக்க முடியவில்லை அவனால். அம்மாவை நினைத்துப் பார்த்தான். அதிர்வலைகள் அவனுக்குள் எழுந்தன. மனம் பலவற்றையும் அசை போடத் துவங்கியது.
ஒரு மாதக் காலமாக அவனது அம்மா உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். கடந்த ஒரு வாரமாக உடல் நிலை மேலும் மோசமாகியிருந்தது. அண்ணன் வீட்டிலிருக்கும் அம்மாவைப், போய் பார்ப்பதும் வருவதுமாக இருக்கிறான். அம்மாவும் பல முறை கேட்டுவிட்டார்… ‘பிரபா, வதனியை கூட்டிட்டு வா!’ என்று. அவனும், இதோ… அதோ… என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான். இன்னும் கூட்டிப் போய் காட்டியப்பாடில்லை. எத்தனையோ முறை அம்மாவின் உடல் நிலையைச் சொல்லி மனைவியை அழைத்துப் பார்த்துவிட்டான். அவள் இசைந்தபாடில்லை.
இந்த விடயத்தில் முரண்டுபிடிப்பதற்கு மதிவதனியை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது. அவள் அன்பானவள். பண்பானவள். மனிதர்களைப் பார்த்துப் பழகும் பக்குவம் தெரிந்தவள். யார் மனதையும் நோகடிக்கும் நோக்கம் இல்லாதவள். ஆனாலும் உறவுகளுக்கிடையில் பிளவுகள் உருவானதைக் காலத்தின் கோலமென்றுதான் சொல்ல வேண்டும். தன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கிறதே, என்று விதியை நொந்து கொண்டான் பிரபாகரன். வருங்காலத்திலாவது தன் விதி பொன் விதியாகட்டும் எனக் குலதெய்வமான செல்லியம்மனை மனதில் நெஞ்சுருகி வேண்டிக்கொண்டான்.
பிரபாகரனும் மதிவதனியும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாகவே வேலை பார்க்கிறார்கள். தொடக்கத்தில் பூத்த சினேகம், வளர்ந்து காதலாகித் திருமணத்தில் முடிந்தது. எந்த ஓர் இடையூறுமின்றி இருவீட்டாரின் பரிபூரண ஒப்புதலோடு திருமணப் பந்தத்தில் இணைந்தனர்.
மறந்தும் கணவனுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து விடாதவள் மதிவதனி. உற்றார் உறவினர்களோடு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பவள். சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஒருத்தி தனக்கு மனைவியாகக் கிடைத்ததில் பிரபாகரனுக்குத்தான் உள்ளூர அத்துணை பெருமிதம். எல்லாம் சுமூகமாகத்தான் நகர்ந்தது ஈராண்டுவரை…
பிரபாகரனின் அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அல்லது அம்மாவைப் பார்க்க இவர்கள் போகும்போதெல்லாம், ‘இன்னும் குழந்தை இல்லையா?’ என்பதுதான் அம்மாவின் சர்வதேசக் கேள்வியாக இருந்தது. கேள்வியோடு விட்டுவிடாமல், அதற்காகப் புதுப்புதுத் தீர்வுகளைச் சொல்லி, அதனைச் செய்து பார்க்கவும் நச்சரிக்கத் தொடங்கினார். தங்கள் மீதுள்ள அக்கறையால்தான் அம்மா எல்லை மீறுகிறார் என்பதனை உணர்ந்ததனால் பிரபாகரனும் மதிவதனியும் நிதானம் காத்தனர்.
பிரபாகரனின் அம்மா பழங்காலத்துச் சித்தாந்தத்தில் ஊறிப் போனவர். பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளில் மிதப்பவர். குழந்தைப் பேறு இல்லையென்றால் மருத்துவரைப் பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், அவர் சொல்லும் தீர்வு, மந்திரவாதியையும் மாந்திரீகத்தையும் வரவேற்பது. பாவத்தையும் பரிகாரத்தையும் உட்படுத்தியது. பிரபாகரனும் மதிவதனியும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். கடவுளின் கிருபையால் நல்லது நடக்கும் என்பத்தில் மாற்றுக் கருத்து இல்லாதவர்கள்தான். ஆனால், அம்மா கைகாட்டும் கருங்காட்டு வழியை முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். அவர்களின் படித்த மனநிலையும் பகுத்தறிவுத் தெளிவும் அவர்களைப் பின்னாலிருந்து இழுத்துப் பிடித்தது. மூடநம்பிக்கையின் பொருண்மையை மண்டையில் ஏற்றி வைத்திருக்கும் யாரையும் வெறுத்தே பழகிய மதிவதனி மாமியாரை வெறுக்காமலிருக்கப் படாதபாடுபட்டாள்.
பிரபாகரனுக்குள் தாயின் இரத்தம் ஓடுவதால் ஒருவேளை அவன் தாய்ப் பேச்சுக்குத் தலை சாய்க்க நேரலாம். மருமகளையும் மகன் நிலையிலேயே நினைத்துக் கருத்துத் திணிப்பை நிகழ்த்தியதுதான் மாமியார் செய்த தவறு.
திருமணமாகி ஐந்தாண்டுகளைக் கடந்த நிலையில்… மதிவதனியும் மனதளவில் ரொம்பவே நொடிந்து போயிருந்தாள். ‘இன்னும் குழந்தை இல்லையா?’ என்கிற கேள்வி அம்மாவிடமிருந்து மட்டுமல்ல, சந்திக்க நேரும் யாவரிடத்திலிருந்தும் வந்த வண்ணமாக இருந்தது. எதிர்ப்படும் கேள்விகளைப் பிரபாகரனால் ஓரளவு கடந்துவிட முடிந்தது. ஆனால், மதிவதனிக்கு மூச்சுமுட்டியது. மூளை உறுத்தியது.
இந்த ஐந்து ஆண்டுகளில் எல்லா விதமான மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டுவிட்டார்கள். இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் குழந்தை இல்லை. எல்லாம் அகிலம் காக்கும் மகா சக்தியின் திருவிளையாடல் என்று இருவரும் சமாதானம் அடைந்து நம்பிக்கையோடு காத்திருந்தனர். இயற்கை முறையிலான கருத்தரிப்பையே இருவரும் விரும்பினர். அதனால், செயற்கை கருத்தரிப்பு முறையை (ARTIFICIAL INSEMINATION) அவர்கள் மறுதலித்தே வந்தனர்.
திருமணத்துக்குப் பிந்தைய ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் இருவரின் புத்தாண்டுத் தீர்மானமும் – வேண்டுதலும் தங்களுக்கு இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு குழந்தை வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கான முனைப்பு இருவரிடமும் தீவிரமாகவே இருந்தது.
கடந்த ஆண்டின் இறுதியில் வீட்டுக்கு வந்திருந்த பிரபாகரனின் அம்மா, வழக்கம் போல் குழந்தை பற்றிய பேச்சைக் கிளப்பினார்.
“வதனி, பரமானந்தா குரு முனின்னு ஒரு சுவாமிஜி இருக்காரு. சொன்னதெல்லாம் பலிக்குதாம். பத்து வருஷமா கொழந்த இல்லாதவங்களுக்குக்கூட அவருகிட்ட பரிகாரம் பண்ணி கொழந்த பொறந்திருக்காம்…”
மதிவதனி அமைதியாகவே இருந்தாள். அம்மாவின் பேச்சை நிறுத்த என்னென்னவோ இடைமறித்துப் பேசிப் பார்த்தான் பிரபாகரன். அம்மாவின் பேச்சு அவர் போக்கிலேயே போய் கொண்டிருந்தது. அவரது பேச்சின் சாரம்சத்தை மடைமாற்றம் செய்ய முடியாமல் மகன் திணறினான். வழக்கத்தைவிட இம்முறை நீண்டு கொண்டே போனது அம்மாவின் பேச்சு. நெருக்குதல் தருவதாகவே மகனுக்கும் மருமகளுக்கும் புலனாகியது.
“நான் கடைசியா கேக்குறேன். அடுத்தப் புது வருசத்திலையாவது இந்த வீட்டுல கொழந்த சத்தம் கேட்க வேணாமா? நாளைக்கே வாங்க. போய் சாமியாரைப் பாத்துட்டு வந்துடுவோம்!”
மதிவதனியின் பார்வை பிரபாகரன் மேல் போனது. அந்தப் பார்வையின் அர்த்தம் அவன் அறிந்ததுதான்.
“வதனி, அவனை ஏன் பாக்குற. அவன் ஆம்பள. அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல? பொம்பளைங்க நமக்குத்தான் பிரச்சனை.”
“இதுல, ஆம்பள பொம்பளன்னு என்ன வேற்றுமை இருக்கு அத்தை. குழந்தை இல்லைன்றது கணவன் மனைவி ரெண்டு பேருக்குமே வலி தர்ற பிரச்சனைதானே. எங்க மேல நீங்க காட்டற அக்கறை புரியுது. ஆனா, அதுக்கான வழி இது இல்ல. நாங்க தொடர்ந்து டாக்டரைப் பார்த்து பேசிக்கிட்டுத்தான் இருக்கோம். நாங்க பாத்துக்கிறோம்!”
“அப்ப, கடைசிவரை நீ மலடியாவே தான் இருக்கப் போறியா!”
கொஞ்சமும் யோசிக்காமல் மதிவதனியின் மாமியார் சட்டெனச் சிந்திய வார்த்தையில் கண்ணீரோடு அறைக்குள் நுழைந்தாள் மதிவதனி. பிரபாகரனுக்கும் சொல்லொனாக் கோபம் வந்து அம்மாவைக் கடிந்து கொண்டான். அன்று மாமியாரிடம் பேச்சை நிறுத்தியவள்தான் மதிவதனி. அதற்குக் காரணம் கோபமல்ல; மனதில் ஏற்பட்ட காயம்.
பிறகொருநாள்…
“என்னங்க, இப்படியே பொறுமையா எத்தனை வருஷம் இருக்கிறது. செயற்கை கருத்தரிப்புக்குப் போவோமா? வயசு அதிகமா ஆயிட்டா அதுக்கும் வாய்ப்பில்லாமல் போகலாம்.”
“அம்மா, பேசியத மனசுல வச்சிக்கிட்டு இப்படி முடிவு பண்ணியிருக்கன்னு நெனைக்கிறேன். இவ்வளவு நாள் பொறுத்துட்டோம் இன்னும் கொஞ்ச நாள் பாத்துடுவோம். எனக்கு நம்பிக்கை இருக்கு வதனி.”
அதன் பிறகு வந்த நாட்களில் மதிவதனி கேட்பதும் பிரபாகரன் மறுப்பதும் தொடர்ந்தது. ஏனோ, செயற்கைக் கருத்தரிப்பில் பிரபாகரனுக்கு பெரிய நாட்டமில்லை. மதிவதனியும் அதனைத் தொட்டுக் கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.
பழைய ஞாபகங்களிலிருந்து விடுபடுவதற்கும் மகிழுந்து வீட்டை அடைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
பிரபாகரன் வீட்டுக்குள் நுழையும் போது எதிர்கொண்டு வந்தாள் மதிவதனி.
“வதனி, உங்கிட்ட நான் ஒன்னு சொல்லனும்!”
“நானும் உங்ககிட்ட ரெண்டு சொல்லனும்!”
“அது என்ன ரெண்டு? அப்ப நீயே முதல்ல சொல்லு!”
“முதல் விசயம், நாளைக்கு அத்தையைப் போய் பார்த்துட்டு வரலாம்!”
பிரபாகரனின் முகத்தில் வெளிச்சம் வந்தது…
“அடுத்தது…?”
“நீங்க எதையோ சொல்றேன்னு சொன்னீங்களே. அதை முதலில் சொல்லுங்க?”
“செயற்கைக் கருத்தரிப்பை முயற்சிப் பண்ணலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்!”
வதனியின் முகத்திலும் வெளிச்சம். அவ்வெளிச்சத்தோடே பேச்சைத் தொடர்ந்தாள்…
“அதுக்கு அவசியம் வரக்கூடாதுன்னு வேண்டிக்குவோம். ரெண்டாவது விஷயம்… நான் மாசமா இருக்கேன்!”
அவளைக் கண்கலங்க அணைத்துக் கொண்டான் பிரபாகரன். அவளும் ஆனந்தத்தில் அழுதாள்.
பிரபாகரனின் கரம் மனைவியின் வயிற்றைத் தனிச்சையாய்த் தடவியது. அதில் அவனது சந்ததி தட்டுப்படுவதாய் உணர்ந்தான்.
மறுநாள் அம்மாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினர். விட்டுக் கொடுப்பதில் நிலைக்கின்ற பெரும் சுகத்துக்கு விலையேது?
கதையின் வேறொரு கிளை இப்போதுதான் பிரிகிறது…
மாமியாரைச் சந்தித்துவிட்டு வீடு வரும்வரை மதிவதனி மௌனமாகவே இருந்தாள். கண்களில் சிகப்பு நரம்புகள் பரவியிருந்தன. அவ்வப்போது கண்களில் நீர் கசிந்தது. துடைத்துக் கொண்டாள். இதயம் வெதும்பியது; அதில் வலிகள் ததும்பின. கனவுகளோடு கருவறையில் பூத்திருக்கும் வாரிசை, வைத்துக் கொள்ளலாமா? கலைத்துவிடலாமா? எனச் சிந்திக்கத் தொடங்கியிருந்தாள். ஒவ்வாமையால் அவளுக்குக் குமட்டியது.
‘எத்தனையோ இரவுகள் உடல் அசந்துபோயிருந்த போதும் கணவன் நெருங்கிவரும் அந்தக் காமப் பொழுதுகளில் மறுப்புச் சொல்லாமல் இன்முகத்தோடு புணர்ந்தது… வேண்டுமே ஒரு குழந்தை என்பதற்காகவே.
உடலுறவின் இருப்பைக்கூட பல வகைமையில் மாற்றிச் செய்து அதன் விழைவிலாவது கரு தங்கிவிடாதா? என்கிற கணவனின் பேராசைக்கு… அசௌகரியங்களுக்கு இடையிலும் புரண்டு படுத்து வழி தந்தது வருங்கால மழலையின் வாசனையை மனதில் வைத்துதானே.’ எல்லாம் தலைக்கீழானது அவளது சிந்தையில்.
வீட்டுக்குத் திரும்பியதும் மதிவதனி பிரபாகரனிடம் கேட்ட முதல் வார்த்தை…
“ஆமாம், நான் தினமும் சாப்பிடற சாப்பாட்டுல அந்த சாமியார் கொடுத்த வஸ்துவ கலந்தீங்களா?”
ஆடிப் போனான் பிரபாகரன். முகத்தில் பயம் கலந்த அதிர்விருந்தது. தெரியக்கூடாதென்று கவனமாகப் பார்த்துக்கொண்டது எப்படித் தெரிந்ததென்றுத் தடுமாறினான். நன்மையைக் கருதிச் செய்த செயலானாலும், ஒருவர் விரும்பாததை அவருக்குத் தெரியாமல் அவருக்கே செய்வது எத்துணை பெரிய தவறு என்பதனை அவன் உணர்ந்துதான் இருந்தான். இருந்தாலும் மனம் நச்சரிக்கும் நப்பாசையினாலும், அம்மாவின் விடாத நெருக்குதலாலும் அவன் தெரிந்தே பிழை செய்துவிட்டான். என்ன சொல்லி மனைவியைச் சமாதானப்படுத்துவது? இனி வெடிக்கப் போகும் பூகம்பத்தை எப்படித் தடுப்பது? கலங்கினான் பிரபாகரன். அவள் காலில் விழுந்துவிடவும் தயாரானான்.
“ஏன் வாயை மூடிகிட்டு சும்மா இருக்கீங்க? உண்மை தெரிஞ்சுப் போச்சின்னா? உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி? எனக்குத் தெரியாம என் சாப்பாட்டுல வெஷத்தக் கலந்த மாதிரிதான் நீங்க செஞ்ச இந்தக் காரியம். விஷத்த கலந்தா கூட ஒரே நாளுல செத்துத் தொலைஞ்சிருப்பேன். இப்ப நீங்க செஞ்ச இந்த வேலக்கு நான் தினம் தினம் சாவனுமா? என்னப் பொருத்த வரைக்கும் நீங்க செஞ்சது பெரிய துரோகம். நமக்குள்ள இருக்கிற காதலாலையும் அந்நியோனியத்தாலயும்தான் கரு தங்குனுச்சின்னு சந்தோசப்பட்டேன். ஆனா, அந்த நம்பிக்கை இப்ப செத்துப் போச்சி. நமக்குப் பொறக்கப் போற புள்ளைக்குக்… கடவுளும் கடவுள் மேல வச்ச நம்பிக்கையும்தான் காரணம்னு நம்புனா, அதுதான் உண்மையான உன்னதமான பிரசவமா இருக்கும். ஆனா நீங்க… பொறக்கப் போற புள்ளைக்கு எவனோ மந்திரிச்சிக் கொடுத்த எதுவோ ஒன்னுன்னுதான் காரணம்னு சாகறவரைக்கும் நம்புவீங்க. அந்த நம்பிக்கைக்கு நான் பலியாக மாட்டேன். இந்த கொழந்தைய நான் பெத்துக்க மாட்டேன்!”
உச்சியிலிருந்து விழும் அருவி, பாறைகளை மோதி வெளிப்படுத்தும் பெரும் சத்தமும் பேரிரைச்சலும் மதிவதனியின் பேச்சிலிருந்தது. தனது சரியான… நியாயமான… கொள்கைக்கு அவள் அழுத்தமாய் வாதித்தாள். அறைக்குள் நுழைந்து அறைக் கதவைப் படாரென அறைந்து சாத்தினாள்.
கற்சிலையாய் நின்றிருந்தான் பிரபாகரன். மண்டைக்குள் ‘எப்படி இவளுக்குத் தெரிந்தது?’ என்கிற கேள்வி மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது போல் கொத்திக்கொண்டிருந்தது. ஆண்களின் பொதுபுத்தி அப்படித்தான். தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு சாணையும் முழத்தையும் தடவிக் கொண்டிருப்பது.
அறைக் கதவு திறக்கப்படும்போது அவளது மனக்கதவும் திறக்குமென நினைத்திருந்தான் பிரபாகரன். வாழ்ந்த வாழ்வின் நினைவுகளை மீட்டெடுத்து அவளைச் சரி செய்துவிட… அவளது மேடு பள்ள மனவோட்டத்தைச் சமன் செய்துவிட.. வித விதமான அணுகுமுறைகளை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்தருணத்தில் அவனுக்குத் தெரியாது. அவனது நம்பிக்கை குருட்டு நம்பிக்கை என்று.
ஆமாம், மதிவதனிக்கு எப்படி உண்மை தெரிந்தது? இப்போது அதுவா முக்கியம்? எப்படித் தெரிந்தது என்பது தெரிந்தாலும் வாசகர்களால் இந்தக் கதையின் முடிவை மாற்றிட முடியாது.
அன்றைய நாள் மதிவதனியைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாகவே இருந்தான் பிரபாகரன். மாலைக்கும் இரவுக்கும் நூலளவே இடைவெளியிருந்த பொழுதில் அவனது அமைதியை குழைக்கும் விதமாக கைப்பேசியில் செய்தி வந்தது.
கதறி அழுதான். அம்மாவின் ஆதன் இறைவனடி சேர்ந்து நாழிகை கடந்திருந்தது.
*******