இணைய இதழ்இணைய இதழ் 94கவிதைகள்

சமயவேல் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இலைமுகம்

வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.
ஈர இதயத்தின் பனித்துளிகள்
புற்களிலும்
இலைகளிலும் பூக்களிலும்;
எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;
காலியான,
அனைத்தும் நிரம்பித் ததும்பும்
ஒரு தூய சாலை;
ஒரு விநோத இலையாகிறது
என் முகம்;
நிச்சயம்
பனித்துளிகள் அரும்பக்கூடும்.

*****

டைஹோ மால்

நான் எங்கே இருக்கிறேன்?
எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.

திறன் கடிகாரம் பெலமுலா ஜங்ஷன் என்கிறது.
என்ன செய்கிறேன்?
என்னமோ செய்கிறேன் என்றும் சொல்லமாட்டேன்.
போக்குவரத்தில் சிக்கி நிற்கிறேன்;
இது தினமும் நடப்பதுதானே.

எங்கே போகிறாய்?
எங்கேயோ போகிறேன் என்றும் சொல்ல மாட்டேன்.
டைஹோ மால் போகிறேன்.
எதற்காகப் போகிறேன்?

சுருக்கமாகக் கூறுகிறேன்:
கேள்விகளுக்கப்பால்
ஒரு உலகம் இருக்கிறதல்லவா, இருக்கிறதா இல்லையா?

இல்லையா? இருக்கலாமா?

ஆனால் நான்
அங்கேதான் டைஹோ மாலில் இருக்கிறேன்;
பாருங்கள் அங்கே
பன்னூறு பதில்கள்.

*****

குரல்களின் நெரிசலில்
மருந்துகளின் வாசனையில்
திக்கித் திண்டாடும் ஒரு பொழுதில்
உள்மனம் வருடும் சரோட் இசையொன்று
ஒரு ரயிலின் கூவலுடன்
எங்கிருந்தோ வருகிறது.

துயரைக் கூவியழைக்கும்
இரவுநேர ரயில் பெட்டிகள்
எதனுடனோ போராடியபடி
இருள் கிழித்து வெறிகொண்டு
பாய்கின்றன.

மெல்லிய சரோட் இசை தொலைந்துவிடாமல்
இருக்கப் போராடுகிறேன்.
வெகுநீள ரயில் எழுப்பும் புயல்
பல நூறு கிலோமீட்டர்கள் தாண்டி
என்னை அசைத்து அசைத்துப் பிடுங்கி எறிகிறது

அரண்மனை நிழலில்
ஜமுக்காளத்தில் அமர்ந்து
சரோட் இசைப்பவளுக்கு
அரணமனையையே தரும்
விந்தை ராஜா நான்;
புயல் தணியட்டும்.

*****

முளை கட்டிய சொற்கள்

அச்சிட்ட சொற்கள் நடுவில்
எனக்கென ஒரு சொல் தனியாக முளைத்தது
முதலில் அல்யோஷா கரமசோவ் நூலில்,
‘ருஷ்யத் துறவி’ பக்கத்தில் திடீரென முளைத்து
இலைகள் போலவே அசைந்தன;
அள்ளி வைத்தேன்.

துறவும் காதலும் துயரமானவை என
உணர்ந்த நாட்கள் அவை;
நாட்கணக்கில்
நெருப்பூர்தியில் அலைய முடியுமா என்ன?

நெஞ்சில் முளைகட்டி முடிந்து வைத்திருக்கும் சொற்கள்
முளைக்கட்டும் எனக்
காத்திருந்தேன்;
இரு சொற்களின் நடுவில்
பசும் மஞ்சளாய் துளிர்த்த சொற்தளிரில்
அதே அவளின் வாசம்;
தளிரிலைகள் பெருகப் பெருக
மழைக்கால விருட்சமானது உடல்.

முளைச் சொற்களால் நிரம்பிய
இதய அறைகளில் குவிந்தன
ஆயிரம் கவிதைகள்;
என் ரத்தம் முழுவதிலும்
பெருகும் கவிதைகளால்
முளைக்கின்றன
கணக்கற்ற மரங்கள்;
அச்சிட முடியாத வனமாகிறேன் நான்.

*****

மிகச் சிறிய முகத்துடன்
நாடிக்கும் நெற்றிக்கும் இடையில்
அரை ஸ்கேல் அளவுக்கு
அவ்வளவு சிறிய முகம்
பிடித்துப் போனதற்கு
நீல வண்ண உடையும்
காரணமாக இருக்கலாம்;
ஆனால்
எப்போதோ ஒரு காலத்தில்
பிடித்திருந்த முகம் அது…
ஓ… அந்த நட்ராஜ் அரை ஸ்கேல்…
அதிர்ந்து சிணுங்கியது;
ஒரு ஜியாமெட்ரி பாக்ஸ் பிடித்துப்போக
ஒரு காரணமும் தேவையில்லை.

*****

ஒரு குறைபாடும் இல்லை.
பூனைகள் ஜென் துறவிகள் போன்றவை.
தனிமையா உலகமா என்று ஜன்னலில் நின்று தியானிப்பவை.
தனிமையை வெகுநேரம் அருந்திக்
கொட்டாவிவிடும் அழகே
பூனையழகு.
மிக மிக மௌனமாக
அல்லது ஓரிரு மியாவுடன்
‘உட்கார்ந்துகொண்டே’
அனைத்தையும் கடப்பவை பூனைகள்.

*****

மஞ்சள் நிற மரங்கொத்தி
பின்வாசல் தோட்டத்தில் நிற்கிறது;
மரமல்லியில் ஒரேயொரு பூ
பூத்திருக்கிறது;
தெருவில் வாகனம் நசுக்கிய தவளையில்
காக்கைகள் பசியாறுகின்றன;
ஆறு அணில்கள் அங்கும் இங்கும் எங்கும்
ஓடித் திரிகின்றன;
காலி மனையில் வசிக்கும் பாம்பின்
குட்டிகள் துணிந்து வெளியேறுகின்றன;
செம்பருத்தியில் பத்து மலர்கள்;
பள்ளத்தில் சிக்கிய மழைநீராய்
நான் பிளாஸ்டிக் நாற்காலியில்
தத்தளிக்கிறேன்.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button