அப்படி ஒரு மலரை தன் வாழ்நாளில் இதுவரை பார்த்ததேயில்லை என்பதைப் போல இதழ் விரித்து மேசையை அலங்கரித்திருந்த காகித அந்தூரியப் பூக்களை மனதால் மொய்த்துக்கொண்டிருந்தான் ராகவ். உண்மையில் அவன் கண்கள் மட்டுமே பூக்களில் நிலைத்திருந்தன. மனம் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எங்கோ செவிக்கு குரல் எட்டாத் தொலைவில் எதையோ தொலைத்துவிட்டு தேடுவதைப்போல அலைந்து கொண்டிருந்தது.
ராகவனுக்கு முன்பாக அலுவலகம் வந்து சேர்ந்திருந்த நான்கைந்து இளைஞர்கள் ஏற்கனவே தங்கள் விவரங்களைத் தந்து பதிவு செய்திருந்ததால் அவர்கள் தங்கள் நேர்காணல் முறைக்காக காத்திருந்தனர். ராகவ் வரவேற்பறையில் தனது விவரங்களை குறிப்பிடச் சென்றபோது அங்கிருந்த பெண் அவனது முறை வரும்போது அவனை அழைப்பதாக ஆங்கிலத்தில் கூறினாள். அவனது விவரங்கள் அடங்கிய கோப்புகளை காத்திருப்பு அறையில் காலியாக இருந்த பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.
அவ்வப்போது கண்ணாடிக் கதவு திறந்து மூடியது. அதில் தனது அங்கங்களை உரசிக்கொண்டும் கால்பாகம் உடல் மட்டுமே உள்ளே தெரியும்படியும் அவ்வப்போது பெயர் சொல்லி அழைத்துவிட்டுப் போனாள் அந்த வரவேற்பறை பெண். அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் , ஜீன்ஸும் அவளது வடிவத்தை எடுப்பாகக் காட்டியது. கழுத்து வரை வெட்டிய கூந்தல் அவள் ஹைஹீல்ஸோடு டக் டக்கென்று குதித்து குதித்து நடக்கும்போது குதிரையின் வாலைப் போல மினுமினுத்து ஆடியது. அவள் அரேபியக் குதிரையின் சாயலில் இருப்பதாக ராகவிற்குத் தோன்றியது.
“ஆமாம், இதற்கு முன்பு நான் அரேபியக் குதிரையை பார்த்ததில்லையே?”- அவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
அறையின் மிதமான வெப்பம் சீராக இருந்தது. இருந்தும் ராகவிற்கு வியர்வை நெற்றியில் துளிர்த்துப் பெருகி வடிந்தது. அவன் கைக்குட்டையை பாக்கெட்டில் தேடினான். அம்மா தர மறந்துவிட்டாள்.
“சே..லுங்கியாக இருந்தால் அழகாகத் துடைத்துக்கொள்ளலாம்”.
இந்த அலுவலக உடுப்பு அவனுக்கு எரிச்சலைத் தந்தது. எப்போது கழட்டி எறிவாய் என உடல் அவனைக் கேட்டது.
கிளைக்கு ஒரு நிறமாக பூத்திருந்த பூக்கள் பார்வையை அடிக்கடி வளைய இழுத்து வைத்துக்கொண்டன. அந்த அரேபியக் குதிரையை விட அந்தூரியப் பூக்கள் அவனை வெகுவாகக் கவர்ந்தன.
“டே..ராகவா! இது நோக்கு ஏழாவது கம்பெனிடா. நாஞ்சொல்லி தெரிய ஒன்னுமில்ல. அப்பாவுக்கு ஆபரேஷன் உடம்பு. அலுப்பு தாங்காது. என்னைக்காவது ஆபிஸ் போய்ட்டு வரவே சிரமப்படறாரு. உடம்பு உழைச்சி தேஞ்சிடுத்து. இனி தாங்காதுடா. நாங்க உன் விரல் பிடிச்சி நடக்கற பருவத்துக்கு வந்துட்டோம். பாத்து பண்ணுடா”.
அம்மா இதுவரை புலம்பியவள் இல்லை. அவள் பெயருக்கேற்ற மாதிரியே லஷ்மி கடாட்சத்தோடு வாழ்ந்தவள். விவரம் தெரிந்து அவள் அப்பாவிடம் என்றுமே குறைபட்டுக் கொண்டதேயில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு செல்வம் இடது மாரை பிடித்துக்கொண்டு விழுந்தபோது மொத்தமாக இயக்கம் நின்றுபோனதைப் போல வீடு ஸ்தம்பித்து நின்றது. நோய் கண்டபின் ஐசுவரியம் என்ன? கடாட்சம் என்ன?
செல்வத்திற்கு பைபாஸ் அறுவைசிகிச்சை முடிந்தபோது லஷ்மியின் அநேக நகைகள் வங்கியில் அடகுக்கு இருந்தன. ராகவி இரண்டாவதாக உண்டாகி இப்போது ஏழு மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. லஷ்மி மாவடு, நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாய்கள் செய்து பாட்டிலில் அடைத்து அக்கம்பக்கத்து தெருக்களில் விற்பதில் சொற்ப வருமானம் வருகிறது. ராகவ் இதுவரை ஆறு பன்னாட்டு நிறுவனங்களின் வாசல் ஏறி இறங்கி விட்டான்.
‘மிஸ்டர் ரகுநாதன் நீங்கள் போகலாம்’ – அந்த அரேபியக் குதிரை ஒருமுறை கூட தன் முழு உடலையும் உள் நுழைத்து அறைக்குள் வரவேயில்லை. அவளது நுனிநாக்கு ஆங்கிலப் புலமையும் அவளது கனீர் குரலும் அந்த அறையெங்கும் ரீங்கரித்தது.
கடந்த வார இறுதியில் ராகவ் இன்ஸ்டாகிராமில் லயித்திருக்கும் போது அந்த பிரபல இயக்குநர் தன் துணை இயக்குநர்களோடு தான் இயக்கி மாபெரும் வெற்றி கண்ட திரைப்பட விழாவில் கொண்டாடி களிக்கும் காணொளி சிக்கியது. மீண்டும் மீண்டும் அந்த காணொளியைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்த ராகவ் அவ்விடத்தில் தன்னையும் ஒருவனாக இருத்திப் பார்த்தான்.
முதன் முதலாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ராகவிற்கு பள்ளியில் மேடை நாடகம் ஒன்றை அரங்கேற்றி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றிற்கு உயிர் கொடுத்து கதாபாத்திரங்களை நிஜமாக்கி மேடையில் கண்முன்னே பேசவைத்தபோது மொத்தக் கூட்டமும் கண்ணீர் விட்டு கைத்தட்டியது. ஆனந்த கண்ணீரோடு செல்வமும் லஷ்மியும் தங்கள் புத்திரனை கட்டியணைத்து முத்தமிட்டு, “நீ பெரிய இயக்குநரா வருவடா” என்று புகழ்ந்து தள்ளினர். அவர்கள் அவ்வார்த்தையை மறந்த காலத்தில் ராகவ் அதை இறுகப்பற்றியிருந்தான்.
வீடு முழுவதும் குவியல் குவியலாக காகிதங்கள் சேர்ந்தன. லஷ்மி சுத்தம் செய்து மாளாமல், “இனி எந்த காகிதத்தையும் வீட்டில பார்க்கப்படாது” என்று கண்டித்தாள்.
அன்றிலிருந்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து நோட்டுகளை வாங்கி அதில் எழுதி வைத்தான் ராகவ். என்றாவது எல்லாம் குப்பைக்கு போகும் என்று அவனுக்கும் தெரியும்.
சந்தன நிற முழுக்கைச் சட்டையில் பழுப்பு நிறத்தில் நேர்த்தியான கழுத்துப்பட்டையும் பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் கால்சராயும் அதற்கேற்ற பளபளக்கும் பூட்ஸ் அணிந்து கையில் மடிக்கணினியுடன் அமர்ந்திருக்கும் ராகவ்..
ஹூடி வகை டீ சர்ட்டும், டிரவுசரும், கேஷுவல் ஷூவும் அணிந்து கையில் ஒயின் கிளாஸுடன் பெரிய இயக்குநர் , நடிகர்களோடு பாரில் கூத்தாடும் ராகவ்..
வலது கீழ் முதுகுப் பகுதியில் நூல் பிரிந்து கிழிந்துவிடும் நிலையில் இருக்கும் அழுக்கு நிற பனியனும் , கட்டம் போட்ட லுங்கியுடன் எத்தனை வேகமாகச் சுற்றியும் காற்று வராத மின்விசிறியை வெறித்துக்கொண்டு நடுநிசியில் உறக்கமற்று படுத்திருக்கும் ராகவ்..
மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளத் தயங்கி தலை கவிழ்ந்து நிற்கும் காட்சியில் இடைவேளை விடப்பட்டது.
“ராகவா.. ராகவா..”
லஷ்மி கதவைத் தட்டினாள்.
“இந்த நடுநிசியில அம்மாவிற்கு என்ன வேணும்?” பதறித்தான் விழித்தான்.
“அப்பாவிற்கு மீண்டும் ஏதாவதாகிவிட்டதா?” மனம் நேராக கோரமான ஒன்றின் மேல் குத்திட்டு நின்று தானாகவே துன்பப்பட்டது.
நிற்கிறோமா.. நடக்கிறோமா என்று உடல் குழம்பியிருக்கும் போது ராகவ் கதவைத் திறந்தான். அம்மா காபி கோப்பையொடு நின்றிருந்தாள்.
“ஓ..விடிஞ்சிடுச்சா?”
பத்து பதினைந்து வருடங்களாக கதவைத்தட்டி அம்மா காபி கொடுத்தால்தான் ராகவின் விழிகள் திறக்கும். அப்படியே காபி கோப்பையோடு மீண்டும் படுக்கையில் அமர்ந்துகொண்டு கைப்பேசியை ஒரு கையில் பிடித்து எதையாவது பார்த்துக்கொண்டு காபியைச் சுவைத்தால் தான் அந்த நாள் முழுமையாகத் தோன்றும்.
ஆனால், இன்று அந்த பாக்கியத்தை லஷ்மி கெடுத்தாள்.
“ராகவா.. நான் மாவடு கொடுக்க அம்பேத்கர் தெருவுக்கு போயிருந்தேன். அங்கதான் நம்ம செல்விய பாத்தேன். அவ பொண்ணு தெரியும்ல? ரேகா. என்னமா வளர்ந்திட்டா? உயரத்தில மட்டுமில்லடா.. வாழ்க்கையில கூட நல்ல உசரத்துக்கு அவ அம்மாவ கொண்டு போயிட்டா. ரெண்டு வருசம் முன்னாடிதான் எம்என்சி கம்பெனில சேர்ந்திருக்கா. இப்போ முந்தா நேத்து அவளுக்கு ஆன்சைட் ஆப்ஃர் கிடைச்சிடுத்து. அமெரிக்கா போறா பாரு ஜம்முனு. சம்பளமும் அப்படியே ஏறிடுமாம். கார் கூட கத்துண்ட்ருக்கா. வரன் வேற பார்க்க போறாளாம் செல்வி” என்று நிறுத்தி மூச்சு வாங்கிய இடத்தில் ராகவ் இரண்டு சிப் காபியை சுவைத்தான். வழக்கமற்ற ருசி.
“ஜாதகம் எல்லாம் ஆஸ்திரேலியா, கனடா, சவூதினு வருதாம்”. ராகவ் உறிஞ்சிய மூன்றாம் சிப் லேசாக கசந்தது.
“ஒருகாலத்துல ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம்டா. செல்வி நம்ம ஆத்துல கூட செத்த நாள் வேல பாத்தாலே? அவ புருசன் இல்லாம புள்ளைய நன்னா படிக்க வச்சி கர சேத்திட்டா பாரு. புள்ளையும் அம்சமா சரசுவதி கடாட்சத்தோட இருக்காடா”.
அம்மா எதற்காக காலையில் இழுத்து வைத்து இத்தனை காரியங்களை விவஸ்த்தை கெட்டு தன்னிடம் கூறிகிறாள் என்று எண்ணிக்கொண்டு காலி கோப்பையை மேசையில் வைத்துவிட்டு நகர்ந்தான் ராகவ்.
“ராகவா இந்தாப்பா” – அம்மா ஏதோ ஒரு காகிதத்தை சுருக்கம் நீக்கி கையில் தந்தாள்.
செல்வி பொண்ணு ரேகா வேலை பாக்குற கம்பெனியோட அட்ரஸ் இதுல எழுதி இருக்குப்பா. அப்புறம் கீழ இருக்கு பாரு. அது அவளோட என்னவோ நம்பராம். அத சொன்னேனா உனக்கு முன்னுரிமை தருவாங்களாம்”.
எப்போதும் அழுக்குப் பாவாடை. அதிகமாக மேல் சட்டை இருக்காது. பெட்டிகோட்டோடு நிற்பாள். இருந்தாலும் ஒழுகிய மூக்கைச் சீந்துவதற்காக அதை கைக்குட்டையாக்கி இருப்பாள் ரேகா. வீட்டிற்கு வரும் போதெல்லாம் ‘அக்கா அக்கா’ என்று ராகவியோடு சுற்றுவாள். பின் வாசலைத் தாண்டி உள்ளே வரமாட்டாள்.
“ஓ.. அந்த ரேகாவா? இப்போ புரியுதுமா”.
ராகவ் சிரித்துக்கொண்டான்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு கணேஷைப் பார்க்கச்சென்றிருந்த போது வழியில் தென்பட்டவள் ரேகாவாகத்தான் இருக்க முடியும் என்று யூகித்தான் ராகவ். தூரத்திலிருந்து நடந்து வந்தவள் ராகவை நெருங்கும்போது நடையின் வேகத்தை குறைத்துக்கொண்டாள். நல்ல உயரம். அவளது உச்சந்தலை ராகவின் காதுவரை இருந்ததை மானசீகமாக அளந்து பார்த்தான். ராகவின் தோள்கள் தானாக ஒரு இன்ச் அளவு ஏறிக்கொண்டது.
ரேகா மாநிறம்தான். ராகவ் கிள்ளினால் ரத்தம் வரும் அளவிற்கு எலுமிச்சை நிறம். ராகவியின் இரட்டை என்பதால் பெண் ஜாடையும் களையும் முகத்தில் இருக்கும். மீசையும் தாடியும் அடர்ந்து இல்லாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேருக்கு நிற்கும் அதை அடிக்கடி தடவிக்கொள்வான்.
மேடுபள்ளங்களற்ற சீரான உடலமைப்பு ரேகாவிற்கு. பார்த்து கிளர்ச்சியுறத் தேவையற்ற தோற்றம்தான் என்றாலும் முகத்தில் அந்த அடர் மையிட்ட கண்களும் அதில் சின்னஞ்சிறு மச்சமும் ஓரிரு முறை பார்த்துவிட்டு திருப்தி பட்டுக்கொள்ள முடியாத வனப்பு.
இருவரின் கண்களும் வேண்டுமென்றே சந்தித்துக்கொண்ட போது அவள் புருவங்கள் உயர்ந்தன. பற்கள் விரியச் சிரித்தாள்.
“ஹை..ராகவ் ..எப்டி இருக்கீங்க?” என்று கரகரத்த குரலில் இயல்பாக பேசினாள். கை குலுக்க முறையாக உடலை லேசாக முன்பக்கம் சாய்த்து நெருங்கி வந்தாள்.
“ஹை.. மிஸ்.. ரேகா.. ஐ ம் குட். நீ.. நீங்க?”
பவ்யமாக கைக்குலுக்கிக் கொண்டான். அவள் கை சில்லிட்டு இருந்தது. ஓரிரு நொடி மௌனங்களுக்குப் பின் ரேகா ஏதோ சொல்ல வாயெடுத்த போது ராகவ், “பை.. டைம் ஆச்சு “ எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.
ராகவ் தெருமுனையை அடைந்தபோது ரேகா தெருவிலிருந்து மாயமாகி இருந்தாள்.
இன்னும் கூட பேசியிருக்க வேண்டுமோ என்று ஒருகணம் ராகவிற்குத் தோன்றியது. அவள் ஒருவேளை வேலையைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது? அவளுக்கு வேலையைப் பற்றி என்ன தெரிந்திருக்கும்? ஒருவேளை தெரிந்திருந்தால் கல்லூரி முடித்து நான்கு வருடமாகியும் பணிக்கு செல்லாத புருஷ லட்சணத்தை பற்றி என்ன நினைப்பாள்?
ஒருமுறை தீபாவளியன்று வீட்டு வாசலில் கணேஷோடு ராகவ் விளையாடிக்கொண்டிருந்த போது ரேகா தன் தாயோடு வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் அணிந்திருந்தது ராகவியின் பழைய பாவாடை சட்டை. நிறம் மங்கி விட்டதால் அதை அம்மா ரேகாவிற்கு தாரை வார்த்திருந்தாள். அதை புத்தாடை போல பெருமிதத்தோடு அணிந்து கொண்டு அதன் வேலைப்பாடுகளில் தொங்கும் மணிகளைப் பிடித்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ஒரு கையில் லஷ்மி செய்த பொறி உருண்டையை வைத்து கொறித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது ராகவி பருவப்பெண் என்பதால் ஆண்பிள்ளைகளோடு விளையாடும் அனுமதி மறுக்கப்பட்டது. அவள் தன் தந்தையோடு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தொலைக்காட்சி இருக்கும் அறை வரை செல்ல ரேகாவிற்கு அனுமதி இல்லாததால் அவள் ராகவ் பட்டாசு வைத்து விளையாடும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவளைப் பார்த்த கணேஷ் ராகவிடம் ஏதோ குசுகுசுக்க இருவரும் சிரித்துக்கொண்டார்கள். கணேஷ் தன் அரைக்கால் டிரவுசரில் இருந்த ஊசிப்பட்டாசு பொட்டலத்தை திறந்து பத்து பதினைந்து பட்டாசுகளை ஒன்றாக திரித்துக் கட்டினான். ராகவ் அதன் திரியில் தன்னிடமிருந்த பத்தியில் பற்ற வைத்தான். திரி சரசரவென பற்றிக்கொண்டு மேலெழும்பியபோது ராகவ் அதை தூர வீசி எறிந்தான். அது சரியாக ரேகா இருந்த இடத்தில் சென்று படாரென வெடித்தது. அவள் அழத்தொடங்கும் போது சரியாக இருவரும் அவரவர் வீட்டிற்குள் சென்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் அம்மா ராகவை அழைத்தாள். அடிப்பதற்காகத்தான் அழைக்கிறாள் என்று எண்ணிச்சென்றான் ராகவ். வாசலில் ரேகா செல்வியின் அணைப்பில் நின்றிருந்தாள். அம்மா அவளது கைகளில் எதையோ தடவிக்கொண்டிருந்தாள். அவளது சட்டை பாவாடையில் ஆங்காங்கே எரிந்த ஓட்டைகள் தெரிந்தன.
“என்னம்மா?” என்றான் எதுவும் தெரியாதவன் போல.
“டே..ராகவா.. பாப்பாவுக்கு பட்டாசு தெரிச்சு காயம் பட்டிருச்சு. ஓடிப்போய் தெரு முக்கு மருந்து கடையில் களிம்பு வாங்கிட்டு வாயேன்” – என்று பத்து ரூபாய் தந்தாள்.
ரேகாவின் கன்னங்களில் அழுது ஓய்ந்திருந்த அடையாளங்கள் படர்ந்திருந்தன. ராகவ் சிரித்துக்கொண்டான்.
“மிஸ்.. சுனைனா ப்ளீஸ் கம்” என்று அந்த அரேபியக் குதிரைப்பெண் மீண்டும் தலையை மட்டும் நீட்டி அழைத்துவிட்டுப் போனாள்.
ராகவ் தனது கோப்புகளை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான்.
மெல்லிய கண்ணாடி போன்ற நெகிழி காகிதத்தை ஊடுருவியச் சொற்கள் வெளியிலிருந்து பார்ப்பதற்கும் தெளிவாகத் தெரிந்தது. ராகவேந்திரன் செல்வக்குமார் என்று பெரிதாக காட்டப்பட்ட அச்சு எழுத்தில் பெயர் மட்டும் மங்கியே தெரிந்தது. செல்வக்குமார் என்ற செல்வம் எப்படி மத்திய அரசு வேலையில் அமர்ந்தார் என்பதை சிறு வயதில் கதையாக பிள்ளைகளுக்குச் சொல்வார்.
செல்வத்தின் அப்பா சிவச்சந்திரன் சாதாரண பள்ளி வாத்தியாராக இருந்து ஓய்வு பெறும் வரை நூறு ரூபாய் சம்பளமே பெற்றவர். தனது மகன் மத்திய அரசுப் பணியில் வெள்ளை சீருடை பணியாளனாக தனித்து நிற்க வேண்டும் என்று கனவு கண்டார். பள்ளியிலும் சுமார் கல்லூரியிலும் சுமார் என்று சுமாராகவே இருந்த செல்வத்திற்கு அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதுவதாகத் துளியும் எண்ணமில்லை. இருந்தும் தந்தைக்காக எதையோ எழுதி இறுதியாக குறைந்த மதிப்பெண்களில் தேர்வானாராம்.
எம்எல்ஏ, எம்பி என்று தெரிந்தவர்களை எல்லாம் வைத்து பணமாற்றங்கள் பல செய்துதான் இந்த வேலையை வாங்கித் தந்ததாக சொல்லுவார். வேலை செய்வதற்கான் திருப்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித பங்கமும் வராமல் தனது காலத்தில் செல்வம் பார்த்துக்கொண்டார். பிள்ளை தனது பாரத்தை கைமாற்றிக் கொள்வான் என நம்பும் காலத்தில்தான் ராகவ் கரையேறவே திணருகிறான் என்பது திரைமறைவிலிருந்து பார்வைக்கு வந்தது.
மேற்கூரை ஒரு இன்ச் இறங்கிவிட்டதான தோற்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்த அந்த வரவேற்பு அறையின் விளிம்புகளில் லாவண்டர் வண்ண சன்ன விளக்குகள் மெல்லிய ஒளியை வீசி சூழலை ரம்மியமாக வைத்திருந்தன. மத்தியில் தொங்கும் வேலைப்பாடுகள் நிறைந்த சரவிளக்கு பகலிலேயே பளிச்சென்று எரிந்தது. ராகவிற்கு லேசாக உள்ளுக்குள் கசகசத்தது.
நேர்காணல் அறைக்குள் நுழைந்ததும் முந்தைய ஆட்களைப் போல இவர்களும் உங்கள் ஹாபி என்ன என்று கேட்டால் என்ன சொல்வது? சினிமா என்று சொல்லித்தானே கடந்தமுறை ஏகப்பட்ட கேள்விகளை எதிர்க்கொண்டு தோற்க நேரிட்டது. சரி.. லட்சியம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வது? அதிலாவது சினிமா கனவைச் சொல்லலாமா ? இல்லையே.. இதற்கு இரண்டு நேர்காணல்கள் முன்பு அதே கேள்வி கேட்டபோது இயக்குநராவதுதான் லட்சியம் என்றால் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் ஏன் வேலை தேடி வந்தீர்கள் என்ற கேள்வி வந்ததே? அதற்கான விடை தெரியாததால்தானே நான் இங்கு வந்திருக்கிறேன்?
பொழுதுபோக்கு லட்சியம் எல்லாம் வைத்துக்கொண்டால்தான் வாழ முடியுமா? இவையெல்லாம் இல்லை என்றால் வாழ்க்கை என்ன ஆகிவிடப்போகிறது? அதிலும் வேலைக்கு சேர்ப்பதற்கு இத்தகைய கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன? – ராகவ் முழுமையாக எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு தலை லேசாக வலித்தது. இயந்திரங்கள் அதிக நேரம் உழைத்தால் உராய்வில் வெப்பம் உருவாவதைப் போல ராகவின் மூளை அளவிற்கு அதிகமாக உழைத்து தலை சூடாகியிருந்தது.
டாமிகேர்ள் வகையான வாசனை திரவியம் திடீரென திவ்யமாக அவ்விடத்தை குளிர்வித்தது. அந்த நறுமணம் எல்லா எண்ணங்களையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக்கொண்டது. கதவைத் திறந்துக்கொண்டு முழுமையாக அறைக்கு உள்ளே ஒரு பெண் வந்தாள். நீல நிற டாப்ஸில் வெள்ளைப் பூக்கள் மலர்ந்து சௌந்தர்யமாகச் சிரித்தன. அதற்கேற்ற லெக்கின்ஸ் மற்றும் துப்பட்டாவை கழுத்தில் வளையச் சுற்றி வைத்திருந்தாள். பிட்டம் வரை நீண்டிருந்த கூந்தல் காற்றில் அலைந்து நறுமணம் பரப்பியது. கண்ணின் இறுதிவரை மயில் போல மை தீட்டியிருந்தாள். அடர்ந்த புருவங்களுக்கு மத்தியில் சிறிய மச்ச அளவில் கருப்பு பொட்டு எடுப்பாக இருந்தது.
“ஹலோ ..மிஸ்டர். ராகவ், இஸ் எவ்ரிதிங் ஓகே?”
ராகவ் படாரென்று தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டவன் போல எழுந்து நின்றான். அவன் முன்னால் அவன் உயரத்தை ஒத்த ரேகா நின்றிருந்தாள். கண்கள் இரண்டும் ஒரு கணம் நேரடியாக சந்தித்துக்கொண்ட பின், “யா..ஐம் ஓகே” என்று புன்னகைத்தான் ராகவ்.
அவள் கையோடு கொண்டு வந்திருந்த படிவத்தில் அவளுடைய பெயரும் ஐந்திலக்க எண்ணும் நிரப்பப்பட்டிருந்தது.
“ராகவ்..இது தான் என்னோட எம்ப்ளாயி ஐடி. இத நான் அல்ரெடி உங்களுக்கு ஃபில் பண்ணிட்டேன். நீங்க உங்க டீடயில்ஸ் எழுதி அங்க ரிசப்ஷன்ல கொடுங்க. எச்.ஆர் வந்ததும் கொஞ்ச நேரத்துல இண்டர்வியூ ஸ்டார்ட் பண்ணிடுவாங்க”. சொல்லிவிட்டு உதடுகள் விரிய புன்னகைத்தாள் ரேகா.
ராகவ் அதை வாங்கிக்கொண்டு, ”ஓகே ரேகா. தேங்க்யூ சோ மச்“ என்று கைகுலுக்கினான். அவள் அங்கிருந்து வெளியே சென்ற இரண்டு கணங்களுக்கு அங்கிருந்தவர்களின் கண்கள் அவள் மேலேயே அப்பியிருந்ததை ராகவும் கவனித்தான்.
இரண்டொரு நிமிடங்களில் அந்த அறை மீண்டும் பக்குவமடைந்தது. அரேபிய குதிரையின் காலடி ஓசை கேட்கவில்லை. ராகவ் தன் கோப்புகளோடு எழுந்துகொண்டான். கதவைத் திறந்து அறையிலிருந்து வெளியேறினான். லாவண்டர் வண்ணம் அவனது சட்டையின் நிறத்தை அழுக்காகக் காட்டியது. அங்கிருந்து வந்து வளாகத்தை விட்டு வெளியேறினான். கடற்காற்றில் ரேகா தந்த விண்ணப்பபடிவம் அவள் பெயரைத் தாங்கிக்கொண்டு உயர உயரப் பறந்தது.
*********