இணைய இதழ்இணைய இதழ் 94சிறுகதைகள்

பிரிவு – ஞானசேகர்

சிறுகதை | வாசகசாலை

சாய்பாபாவுக்கு எதற்கு வியாழக்கிழமை பிடித்துப் போனது எனத் தெரியவில்லை. கோவிலில் நல்ல கூட்டம். இன்று விடுமுறை நாள் கூட கிடையாது. ஆனால், ஏதோ சுபதினம். எல்லாம் படித்த நடுத்தர மற்றும் மேல் நடுத்தரவர்க்கக் கூட்டம். பெண்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஆண்கள். வாகனங்களை நிறுத்தி எடுப்பதில் அந்த சாலையே நெரிசலில் திணறிக்கொண்டிருந்தது. பைக் கார்களில் வந்து இந்தப் பக்கிரியிடம் கோரிக்கை வைக்கும் முரண்பாடு என் அறிவுக்கு எட்டவில்லை. இத்தனைக்கும் மணி நான்குதான். வெயிலின் உக்கிரம் இன்னும் மீதமிருந்தது. மாலை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இப்பொழுதே கும்பிட்டுவிட்டு போய்விடலாம் என்று வந்துவிட்டார்கள் போலும்.

நான் அந்த சாலையில் இருந்து உள்ளே பிரிந்து செல்லும் சிறிய தெருவின் முனையில் எனது ராயல் என்ஃபீல்டு பைக்கை நிறுத்திவிட்டு இளநீருக்காக காத்துக்கொண்டிருந்தேன். “யெப்பா, சொகமா இருக்கியா?” என்று நேராக வந்து எனது இடது கையை தனது இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள் மீராவின் ஆச்சி.

அவரை அங்கு எதிர்பார்த்திருக்கவே இல்லை. அவர் குனிந்திருந்த விதமும் கனமான புதுப்புடவையில் ஒடுங்கி இருந்த விதமும் பார்ப்பதற்கு ஏதோ முதிர்ந்த ஆமையைப் போல் இருந்தார். என்னைப் பார்த்த சந்தோஷம் அவர் பொக்கைவாயிலிலும் முகச்சுருக்கங்களிலும் கூடத் தெரிந்தது. அவரது சரியான வயது யாருக்கும் தெரியாது. எண்பது இருக்கும் என்பது என் அனுமானம். சிலமுறை நானே அவரிடம் கேட்டிருக்கிறேன். ‘இப்ப என்ன தெரிஞ்சு என்ன ஆவப்போது’ என்பார். மீராவிடம் கேட்டால் ‘ம்ம், எல்லாம் கல்யாண வயசுதான்’ என்று பதில் வரும். 

ஆச்சி தன்னருகே நின்றிருந்த இளம்பெண்ணைக் காட்டி, ‘இந்த பொண்ணும் கம்ப்யூட்டர் தான் படிக்கிது. மேல் வீட்டுலதான் இருக்காங்க’ என்றார். அந்தப் பெண் பள்ளியில் படிப்பவளா கல்லூரி படிப்பவளா என்பதை அவளைப் பார்த்துக் கணிக்க முடியவில்லை. தலையை முன்னதாக அசைத்து நான் புன்னகை புரிந்ததும் அவளும் புன்னகை புரிந்தாள். பின் ஆச்சி அவளிடம் என்னைக் காட்டி ‘இதுதான் மீராவோட மாப்பிள்ளை’ என்றதும் அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து குழப்பம் தோன்றியது. 

ஆச்சி என்னைப் பார்த்து, ‘சாமி கும்பிட ஆரம்பிச்சாச்சா?’ என்று கிண்டலாகக் கேட்டதும் அதுவரை திகைப்பில் இருந்த நான் சுதாரித்து சிரிப்புடன் ‘இன்னும் இல்ல ஆச்சி. இந்த தெருவுல கூட வேலை பாக்குறவங்க வீடு இருக்கு. அங்க வந்தேன். எப்டி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?’ என்றேன்.

‘நல்லா இருக்கேன். இன்னும் தனியாத்தான் வீட்டுல இருக்கியளோ? சாப்பாட்டுக்கு என்ன பண்ணுதிய?’ என்று கேட்டாள்.

‘இல்ல, இப்ப அம்மா வந்து கூட இருக்காங்க’

‘நல்லதாப்போச்சு’ என்றவள் அந்தப் பெண்ணிடம், ‘விஜி போலாம்மாம்மா, ஆட்டோவ கூப்பிடு’ என்று மீண்டும் என்னிடம் திரும்பி, ‘ஒரு எட்டு வீட்டுக்கு வந்திட்டு போங்க. செத்த நிமிஷத்துல போய் சேர்ந்திரலாம்’ என்று என் பதிலை எதிர்பார்க்காமல் கையைப் பிடித்தவாறே கிட்டதட்ட இழுத்துச் சென்றாள். ‘வேலை இருக்கிறது. இன்னொரு நாள் வருகிறேன்’ என்று நழுவிவிடலாம் என்று நினைத்தாலும் கூட ஏனோ இதற்காகவே வெகுநாட்கள் காத்திருந்தவன் போல, ‘நீங்க முன்னாடி போங்க. நான் பைக்குல பின்னாடியே வரேன்’ என்றேன். அந்த இளம்பெண் முகத்தில் மேலும் குழப்பம் கூடி இருந்தது தெரிந்தது.

ஆட்டோ அந்த நெரிசலில் மெதுவாக முன்னகர நான் பைக்கில் அவர்களைப் பின் தொடர்ந்தேன். மீரா வீட்டில் இருக்க வாய்ப்பு அதிகம். சென்றமுறை போனில் பேசும் போது இன்னும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதாகத்தான் சொன்னாள். வீடு வந்தவுடன் அந்த இளம்பெண் ஆச்சியிடமும் என்னிடமும் விடைபெற்று மேல்தளத்தில் இருக்கும் அவள் வீட்டிற்குச் சென்றாள். நாங்கள் வீட்டின் வாசலில் செருப்பைக் கழட்டும்போதே ஆச்சி, ‘லெட்சுமி லெட்சுமி இந்தா மருமகன் வந்திருக்காக’ என்று வெளியிலிருந்து சத்தமிட்டார். அவள் மருமகன் என்று சொன்னது எனக்கு சங்கோஜமாக இருந்தது. டிவி பார்த்துக்கொண்டிருந்த மீராவின் அம்மா என்னைப் பார்த்தவுடன் திடுக்கிட்டு பின் சுதாகரித்துக் கொண்டார். அவருக்குப் பேச வார்த்தை கிடைக்கவில்லை போல. ஆச்சி அவள் படுக்கையில் ‘ஞானபண்டிதா’ என்றவாறு சென்று உட்கார்ந்து கொண்டார். நான் எப்பவும் போல ஆச்சியின் கட்டிலின் எதிரே போடப்பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டேன். மீராவின் அறை லேசாகத் திறந்திருந்து உள்ளேயிருந்து ஏசியின் குளிர்காற்று வருவதை என்னால் உணர முடிந்தது. அவள் உள்ளேதான் இருக்கிறாள். ஆச்சி, ‘அவ வந்துட்டாளா?’ என்றார் மீராவின் அம்மாவிடம்.

‘உள்ளதான் இருக்கா. என்ன விஷயம்?’ என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து தயங்கியவாறு கேட்டார் மீராவின் அம்மா. 

‘ஏட்டி..ஏட்டி..’ என்று ஆச்சி கட்டிலிலிருந்தபடியே கத்தினார். 

‘அவ காதுல போன் மாட்டிக்கிட்டு இருப்பா’. 

ஆச்சி தனது படுக்கையில் இருந்து எழுந்து விடுவிடுவென்று மீராவின் அறைக்குள் சென்றாள். மீராவின் அம்மா இன்னும் என்னைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தார். எனக்கு அவரைத் தனியாக எதிர் கொள்ள துணிவில்லை. ஆச்சியோ மீராவோ அங்கிருந்தால் நன்றாக இருக்கும். ‘சும்மாதான் அத்தை. ஆச்சிய கோவில்ல பாத்தேன். வீட்டுக்கு வந்துதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க’ என்றேன். அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிறிது நேரத்தில் ஆச்சி மீண்டும் தன் படுக்கைக்குத் திரும்ப வந்தாள். பின்னாலேயே மீரா அறையை விட்டு வெளியே வந்து அறைக்கு வெளியே இருந்த சுவரில் சாய்ந்தவாறு என்னைப் பார்த்து வரவேற்கும் புன்னகையுடன் கையை உயர்த்தி ‘ஹாய்’ என்பது போல் சைகை செய்தாள். இரவு நேர பேண்டும் மெல்லிய ரௌண்ட் நெக் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தாள். முகம் மேலும் பொலிவாக முன்பை விட அழகாய் தெரிந்தாள். கணவனை இழந்த அல்லது பிரிந்த பெண்களின் முகத்தில் சில தினங்களில் ஒரு பொலிவு தோன்றுமே அதுதானா இது? தான் இனி சுதந்திரமானவள் எனும் பொலிவு. இல்லை. மீரா எப்போதும் சுதந்திரமானவள்தான். திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி. ஒருவேளை ஒரு வருடம் பிரிந்து இருந்ததில் அவளைப் பார்க்கும் என் பார்வையில்தான் அவளின் பொலிவு கூடியிருக்கிறதோ? 

‘ஆபிஸ் வொர்க்கா?’ என்றதற்கு ‘இல்லை’ என்பது போல் முகபாவனை செய்தாள். 

‘எந்நேரமும் காதுல மாட்டிக்கிட்டுதான் இருக்கா. காது செவிடாகப் போகுது’ என்று ஆரம்பித்த ஆச்சி என்னைப் பார்த்து, ‘பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல. கடசியா உங்க வீட்டுக்கு வந்தப்ப பாத்தது. ஒரு வருஷம் இருக்குமா? மீராவையும் அப்ப பாத்ததுதானோ?’ என்று கேட்டார்.

‘இல்ல. போனமாசம் சினிமா போனப்ப பாத்தோம். ஃபோரம் மால்ல’ 

‘ஓ ரெண்டு பேரும் படத்துக்கு போனியளா?’ 

‘இல்ல நான் என் ஃப்ரெண்ட்ஸோட போனேன். அங்க தற்செயலா பாத்தேன்’ என்று நிறுத்தி, ‘ஆனா, அப்பப்ப போன்ல பேசிப்போம்’ என்றேன்.

‘சரிதான். என்ன பேசிப்பீங்க?’

எதற்காக பீடிகை போடுகிறார் என்று தெரியவில்லை. என்ன சொல்ல என்று யோசிப்பதற்குள் மீரா குறுக்கிட்டு, ‘ம்ம், ஜிசிபில மைக்ரோசர்வீஸ் இம்ப்ளிமெண்ட் பண்ணும் போது கண்டெய்னர் எப்படி யூஸ் பண்ணனும்றத பத்தி பேசிக்கிட்டிருப்போம். புரிஞ்சதா?’

‘சரிம்மா, உம்புருஷன்ட்ட நான் எதுவும் கேக்கல’

‘ஆச்சி புருஷன் இல்ல. எங்களுக்கு டிவொர்ஸ் ஆகிருச்சு’ என்றாள் சலிப்புடன்.

அவள் அம்மா குறுக்கிட்டு, ‘ஆமாடி.. ஒரு தண்டோரா எடுத்திட்டுப் போய் ஊரெல்லாம் சொல்லு எனக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சு டிவோர்ஸ் ஆயிடுச்சுனு. அது ஒண்ணும் பெருமை இல்ல. ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பதில் சொல்லி மாளல. அசிங்கமா இருக்கு’ என்றார்.

‘டிவோர்ஸ் ஆனதுல என்ன அசிங்கம்?’

‘டிவோர்ஸ் ஆனது அசிங்கம் இல்ல. ஒரு நல்ல காரணம் இருந்தாக் கூட பரவாயில்லை. மனசு ஒத்து வரலனா அதெல்லாம் ஒரு காரணமா? உனக்கெல்லாம் கல்யாணம் விளையாட்டாப் போச்சுல்ல. உன் விருப்பத்துக்கு மாறாவா கல்யாணம் பண்ணி வைச்சோம்? எல்லாத்தையும் உங்கிட்ட கேட்டுத்தான பண்ணோம். மூணு வருஷத்துக்குள்ள கல்யாணம் கசந்துபோச்சு. ஒரு கல்யாணம் பண்றது எவ்வளவு கஷ்டம்? மனசு கிடந்து அலைபாஞ்சா எல்லாம் தோணும்.’

‘இப்ப உனக்கென்ன ப்ராப்ளம். கல்யாணத்துக்கு செஞ்சதெல்லாம்தான் கணக்கா திருப்பி வாங்கியாச்சுல’ என்று லேசாக கோபமானாள் மீரா.

‘மீரா..’ என்று சமாதானப்படுத்த குறுக்கிட்ட என்னிடம் திரும்பிய அவள் அம்மா, ‘தெரியாமதான் கேக்குறேன். என் பொண்ணுக்கு என்னங்க குறைச்சல். அப்பா இல்லாம வளர்ந்த பிள்ளை. அவ இஷ்டப்படி வளர்ந்தா. ஆனா, ஒரு குறை சொல்ல முடியுமா? என்ன குறை கண்டீங்க தள்ளி வைக்க?’ என்றார்.

‘அம்மா, யாரும் யாரையும் தள்ளி வைக்கல. ஏதோ அவன் என்ன டிவோர்ஸ் பண்ண மாதிரி பேசாதம்மா. நாங்க ரெண்டு பேரும் பேசி தான்..’

‘சும்மா இருடி. உனக்கும் சேத்துதான் சொல்றேன். படிச்சிருக்கோம் வேலைக்குப் போறோமுன்னு திமிரு. கல்யாணத்துக்கு பாக்குறப்ப நெறைய பேர் தேடிவந்தாங்கன்னு மெதப்பு. இனி ஒருத்தன் வரமாட்டான்’ என்று சீறினார்.

அப்போது வீட்டுக்கு வெளியே யாரோ வருவதுபோல் சத்தம் கேட்டது. மீராவின் அம்மா வாசலில் எட்டிப்பார்த்துவிட்டு, ‘வாம்மா’ என்றார். வந்திருந்த பெண்மணிக்கு நாற்பது வயது இருக்கும். ஏதோ சீனி, பால் கடன் வாங்க வந்தவள் போல் தயங்கி வாசலிலேயே நின்றாள். 

‘மீராவுக்கு மாப்பிள்ளை பாத்துட்டிங்களாக்கும். விஜி வந்து கோவில்ல பாத்ததா சொன்னா’ என்றாள். சில வினாடிகள் எல்லோரும் அமைதியாகிவிட்டார்கள். மீராவின் அம்மா தயங்கி, ‘இல்ல டிவோர்ஸ் ஆச்சுல்ல அந்த மாப்பிள்ளைதான்.’ என்று என்னைப்பார்த்தார். ‘ஓ சரி சரி. மாப்பிள்ளை பாத்துட்டீங்களோன்னு நினைச்சேன். அதெல்லாம் சீக்கிரம் அமைஞ்சிரும். கவலைப்படாதீங்க’ என்றாள். 

‘எப்பா ஊரே எனக்கு கல்யாணத்த நடத்திப் பாத்திடனும்னு வெயிட் பண்ணிட்டிருக்கு’ என்றாள் மீரா கிண்டலாக. 

‘சும்மாக் கிட. உனக்கென்ன தெரியும்? பெத்தவங்களுக்குத்தான் அந்தக் கஷ்டம் தெரியும். அதெல்லாம் சீக்கிரம் அமைஞ்சிரும்.’ என்றாள் அந்தப் பெண்மணி. 

‘ஆமா அமையும். ஊர்ல இவள கல்யாணம் பண்ணனும்னுதான் எல்லாரும் கங்கணம் கட்டிட்டு திரியிரான். என்னதான் மனசுல நினைச்சுகிட்டிருக்கான்னு தெரியல. வயசும் ஏறிக்கிட்டிருக்கு. அவ பாட்டுக்கு யார் பேச்சையும் கேட்காமா டிவோர்ஸ் பண்ணிட்டு வந்துட்டா. இவ கூட கிடந்து மாரடிக்கனும்னு என் தலையெழுத்து’ என்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார் அவள் அம்மா.

எனக்கு என்ன செய்யவென்று தெரியவில்லை. விஷயம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. 

‘இந்தா செத்த சும்மாயிரு. நெதம் இதே ராகம்தான்’ என்று தடுத்தாள் ஆச்சி.

அவள் அம்மா சிறிது நேர அமைதிக்குப் பிறகு ‘ஒண்ணும் எனக்கு வெளங்கல. ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டிங்க. டிவோர்ஸ் வாங்கிட்டிங்க. அப்புறம் போன்ல பேசுறேன், சினிமாவுக்கு போறேன்னா எங்களப் பாத்தா எல்லாம் பைத்தியகாரங்களா தெரியுதா?’ என்றார்.

‘நாங்க என்னைக்கு சண்ட போட்டோம்?’ என்றாள் மீரா.

‘அதான் வெளங்கலன்னு சொல்லுதேன். சண்ட போடலன்னா எதுக்கு பிரியணும்?’

‘திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்காதம்மா’ என்று அவரை நிறுத்தினாள்.

எல்லோரும் அமைதியானோம். அந்தப் பெண்மணி வாசலில் வாயடைத்து நின்று கொண்டிருந்தாள். மீரா அவள் நின்ற இடத்திலிருந்து வந்து நான் உட்கார்ந்திருந்த சோபாவின் எதிரில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள். அவள் அம்மா இன்னும் அதே இடத்தில்தான் நின்று கொண்டிருந்தார். யார் உரையாடலை மீண்டும் தொடங்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஏனோ எனக்கு அந்தப் பெண்மணியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆனால், யார் தொடங்கினாலும் அதற்கு அடுத்த வாக்கியம் மீராவின் அம்மாவிடம் இருந்துதான் வரும் என்பது நிச்சயம்.

‘அவங்க பிரியணும்னு நினைச்சா நாம கோந்து போட்டு ஒட்டவா முடியும்? சண்டை சச்சரவு இல்லாம பிரிஞ்சிட்டாங்கன்றது கொடுப்பினைதான. எதுக்கு பல்ல கடிச்சிட்டு சேர்ந்து வாழணும்? ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு வாழறதும் சரி, பிரியறதும் சரி, சந்தோஷமான வாழ்க்கைதான். புரிஞ்சிக்காதவங்கள ஒரே வீட்டுல எத்தனை நாள் கட்டி வைக்க முடியும்? ஒண்ணொண்னும் ஒரு பக்கம் அத்துக்கிட்டுதான் போகும். ஆம்பள தொணை இல்லாம வாழறது நம்ம வீட்டு பொம்பளைகளுக்கு புதுசா?’ என்று ஆச்சி தொடங்கினார்.

‘கண்டதையும் பேசிகிட்டு’ என்று முணுமுணுத்தார் மீராவின் அம்மா.

‘தாத்தா உங்ககூட நல்லா சந்தோஷமாத்தான ஆச்சி இருந்தாங்க’ என்றாள் மீரா.

‘ஆமா இருந்தாக. அவக கட்சியதான கல்யாணம் பண்ணிருந்தாக. மனுஷனுக்கு சோறு தண்ணி எல்லாம் கட்சி வேலைதான். வீடு தங்கினதே இல்ல. எந்நேரமும் கட்சி ஆபீஸ்லதான் கிடப்பு. போராட்டம் பண்ணி ஜெயிலுக்குலாம் போயிட்டு வந்தாக. எங்க வீட்டு மூத்தவக கேக்கப்போய் தகராறு ஆயிப்போச்சு. வேணும்னா உம்ம தங்கய வீட்டுக்கு கூட்டிட்டு போ.. அத்துவிட்டுறேன்னுட்டார். அப்பறம் சமாதானப்படுத்தி வைச்சாங்க. என்னைக்கும் ஆசையா முகம் கொடுத்து நாலு வார்த்த பேசுனது கிடையாது. எங்கூர்ல்ல ஒவ்வொருத்திக்கும் குறைஞ்சது அஞ்சு பிரசவமாவது நடந்திரும். எனக்கு உங்க அப்பா மட்டும்தான். அதுவும் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சுப் பிறந்தான். அவனும் இல்லாம போயிருந்தா ஒத்தையா கிறுக்கால்ல ஆயிருப்பேன் ‘

‘உங்க அப்பா பிறந்தே நாளு மாசம் கழிச்சுதான் பாக்க வந்தாகளாமுல்ல. அதுவும் பிள்ளய தூக்கக்கூட இல்லியாமே’ என்றாள் அவள் அம்மா.

ஆச்சி மௌனமாக இருந்தாள்.

‘அப்ப ஆச்சி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தா நீயும் தாத்தாவ டிவோர்ஸ் பண்ணிருப்ப, இல்ல’

ஆச்சி சில கணங்கள் யோசனைக்குப் பிறகு, ‘நான் ஏன் பண்ணப்போறேன். அவகளுக்கு சனங்க மேல ப்ரியம். எதுனாலும் முன்னால போய் நிப்பாக. ஊர்ல ஒவ்வொரு வீட்டுலயும் பொண்டாட்டிக்கு அடி உதைதான். உங்க தாத்தா என்ன ஒரு தகாத வார்த்தை கூட பேசினது கிடையாது. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஊர்ல அவர் மேல அவ்வளவு மரியாதை. அப்பப்ப தோணும் நாலு அடி வேணா அடிச்சுட்டு ஆசையா பேசிருந்திருக்கலாம்னுட்டு. மனுஷன் மனசுல என்ன ஓடிக்கிட்டு இருந்துச்சோ?’

‘நான் தாத்தாவ பாத்திருக்கேனா ஆச்சி?’ என்று கேட்டாள் மீரா.

‘நானே அவங்கள பாத்ததில்ல’ என்றார் மீராவின் அம்மா.

‘உங்க அப்பாவுக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியே கிளம்பிப் போய்ட்டார். அதுவரைக்கும் கடவுள் இல்லனு சொல்லிக்கிட்டிருந்த மனுஷன் திடீர்னு ஒருநாள் காவியப் போட்டுக்கிட்டு காசிக்குப் போறேன்னு கிளம்பிட்டார். ம்ம்…கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த வாக்கும் எத்தன நாள் வரும்? அதுக்கப்புறம் அவர யாரும் பாக்கல.’

‘எல்லாம் பரம்பரை சாபம்’ என்று முணுமுணுத்தார் மீராவின் அம்மா.

மேல் வீட்டுப் பெண்மணி விழித்ததைப் பார்த்து அந்தக் கதையை சொல்லத் தொடங்கினாள் மீரா ‘எங்க தாத்தாவோட தாத்தா அவங்க ஊர் ஜமீன். அப்ப ஊர்ல நெறைய குழந்தைங்க நோய் வந்து இறந்துபோய்கிட்டு இருந்திருக்கு. அதுக்கு காரணம் ஊருக்கு வெளிய கூடாரம் போட்டு வாழ்ற பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி குடும்பங்கள்தான், அவங்களுக்கெல்லாம் பில்லி, சூனியம் தெரியும்னு செய்தி பரவ, அவர் ஆட்களுடன் போய் அவுங்கள எல்லாம் அந்த இடத்தை விட்டு விரட்டிருக்காங்க. ஆனா, அதில ஒருத்தன் அவுங்கள எதிர்த்து சண்டைபோட, அவுங்க அவனை அடிச்சே கொன்னுருக்காங்க. கைக்குழந்தையோட இருந்த அவன் வைஃப் ஒரு சாபம் கொடுத்திருக்கா. உங்க வாரிசுகளில் எந்த திருமண பந்தத்திலும் பெண்கள் என்னைப்போல் ஆண் துணையின்றி வாழ்ந்து சாவாள்னு. அதனால எங்கள் குடும்பத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களை குலதெய்வம் கோவிலுக்கு கூட்டிட்டுப்போய் வேற யாருக்கோ தத்துகொடுக்கும் பூஜை செய்வோம். இனிமே அவங்க எங்க வாரிசு இல்ல அப்படின்னு ஏமாத்துறதுக்காக. எப்படி ட்ரிக்?’

மீரா சிறுபிள்ளை போல் அந்தக்கதையைச் சொன்னாள். இந்தக் கதையை ஆச்சி கூறக் கேட்டிருக்கிறேன். அவள் சொல்லும் போது அவ்வளவு ஆவேசம் இருக்கும். ஏதோ அவளே அந்த நாடோடிப் பெண்ணாக மாறியது போல் அந்த ஜமீன் தாத்தாவின் மேல் உக்கிரமான கோபத்தோடு சொல்வாள்.

பின் மீராவே ஒரு கேள்வியோடு வந்தாள். ‘முதல் வாரிச வேறொரு குடும்பத்துக்கு தத்துக் கொடுத்துட்டோம்னா அடுத்த வர்ர வாரிசெல்லாம் அவங்க வாரிசுதான? நாம ஏன் எல்லாருக்கும் தத்துக்கொடுக்கும் பூஜை பண்ணனும்?’ என்றாள்.

‘ஹும்..உன் அளவுக்கு சாபத்துக்கு புத்தி இருக்குமா?’ என்றாள் மேல்வீட்டுப் பெண் கிண்டலாக.

‘உன் தாத்தா பரம்பரை சாபம்லாம் உங்கள ஒண்ணும் செய்யாது. கவலைப்படாத’ என்றாள் ஆச்சி எதையோ நினைத்தபடி.

மீராவும் அவள் அம்மாவும் ஆச்சியை மௌனமாகப் பார்த்தனர். ஆச்சி ஏதோ முனகியவாறு இருந்தாள்.

மேல் வீட்டுப் பெண்மணி ‘ஏ மணி அஞ்சாகப் போகுது. வேன் வந்திரும். இவனப் போய் கூப்பிடணும். ரியாவும் இந்த வேன்லதான வர்றா?’ என்றாள்.

‘ஆமாம். நான் போய் கூட்டிட்டு வாரேன்’ என்று மீரா அவள் இருந்த இடத்தை விட்டு எழுந்து என்னைப் பார்த்து, ‘வா. இனி நீ இங்க இருக்கிறது நல்லது இல்ல’ என்றாள்.

ஆச்சியிடம் எழுந்து சென்று காலைத்தொட்டு வணங்கி ‘நான் கிளம்புறேன் ஆச்சி. இன்னொரு நாள் வரேன்’ என்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டேன். ஆச்சி மீராவின் அம்மாவை திருநீறு எடுத்து வரச்சொல்லி எனக்கு நெற்றியில் பூசி விட்டாள். அவள் அம்மாவிடம் விடை பெற்ற போது ‘சரி’ என்பது போல் தலையை மட்டும் ஆட்டினார். மீராவும் நானும் கிளம்பி வெளியே வந்தோம். நான் எனது பைக்கை தள்ளிக்கொண்டே மீராவுடன் வேன் வந்து நிற்கும் இடம் வரை நடந்தேன்.

‘ஜமீன் பொண்ணு வெயில்ல நடக்கலாமா?’ என்றதும் சிரித்தாள்.

‘உங்க அம்மாவுக்கு இன்னும் கோவம் போல. இன்னும் நீ அவங்க கிட்ட காரணத்த சொல்லலயா?’ என்றேன்.

‘இல்ல.’

‘ஏன்?’

‘உங்கிட்ட கேட்டாங்கள்ல. நீயே சொல்லவேண்டியதுதானே?’

நான் அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. ‘நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் தெரியுமா?’ என்றேன்.

‘என்ன, எமோஷனல் ப்ளாக்மெயில் பண்றியா?’

‘இல்ல. இன்னும் உன் முடிவ புரிஞ்சிக்க முடியல. சினிமாவுலலாம் பாத்திருக்கேன். தன்னை அபியூஸ் பண்ணவன் மூலம் பிறந்த குழந்தையையே எந்த வித சங்கடமும் இல்லாம தன் குழந்தையா பொம்பளைங்க வளப்பாங்க. அப்போ பொண்ணுங்க குழந்தையை முழுக்க முழுக்க தன்னோட குழங்தையாத்தான் பாப்பாங்க. அது உன் குழந்தையும்தான்னு ஆணைப் பார்த்து சொல்றதெல்லாம் சண்ட போடறதுக்கான உத்தினுதான் புரிஞ்சிகிறேன். ஆனா, நீ ஏன் இந்த செயற்கை கருத்தரிப்புக்கு வேணாம்னு சொல்றனுதான் புரியல.’

‘நான் ஏற்கனவே சொன்னதுதான். என் குழந்தையோட அப்பாவ நான் காதலிச்சிருக்கணும். அண்ட் ஐ நீட் டூ நோ ஹிம் இன் அண்ட் அவுட். நான் அவசரப்படாம நிதானமாத்தான் இந்த முடிவ எடுத்தேன்.’

பலமுறை அவள் மீண்டும் மீண்டும் சொன்னதுதான். எவ்வளவு முறை முயன்றாலும் என்னால் அவளை மனம் மாற்ற முடியவில்லை.

‘சரி, அடுத்து கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சாச்சா?’ என்றேன்.

‘ஒரு ரெண்டு வருஷம் வாழ்க்கையை எஞ்சாய் பண்ணிட்டு அப்புறம் தேடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, அவ்வளவு நாளெல்லாம் காத்திருக்க முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிரனும். பெண் துணை இல்லாம ஆண் வாழுறது கஷ்டம்னு சொல்வாங்கள்ல? அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ஆனா, கண்டிப்பா ஆண் பாட்னர் இல்லாம வாழறது இந்த காலத்துல பொண்ணுக்கு ரொம்ப கஷ்டம்னு புரியுது. நான் பாதுகாப்பப் பத்தி சொல்லல. யூ நோ வாட் ஐ மீன். அதுவும் ஒரு ரிலேஷனுக்கு அப்புறம் எல்லாம் சான்ஸே இல்ல. பொண்ணுக்கு ஏதோ ஒரு வகையில அவளச் சுத்தி ஒரு ஆண் இருக்கணும். ஒரு வயசுக்கு மேல ஆயிட்டா இன்னொரு பொண்ணுகூட பேசுறதுக்கே எரிச்சலா இருக்கு. அதான் பொண்ணுங்க ப்ரெண்ட்ஷிப் எல்லாம் ஸ்ட்ராங்காவே இல்ல. உண்மைல பொண்ணுங்களுக்கு இடையில உண்மையான ப்ரெண்ட்ஷிப்னு ஒண்ணு இல்லவே இல்ல. அதான் நிஜம். ’

‘women are by nature enemies, men are by nature indifferent to each other ‘

‘ரைட். யாரு ப்ருஸ் லீ யா? போர்ட்ஸ் டோண்ட் ஹிட் பேக்’ என்று சிரித்தாள்.

‘தெரியல. யாரோ ஒரு Misogynist.’ என்று லேசாகச் சிரித்துவிட்டு ‘ஷொப்பனவர்னு நினைக்கிறேன். பாய் ஃப்ரெண்ட், லிவ்-இன்-ரிலேஷன் எதுவும் ஐடியா?’ என்றேன்.

‘எனக்கு இருபத்தொன்பது வயசு. ஐ ஆம் மெசூர்டு. ஐ டோன்ட் வாண்ட் டூ ஃபூல் அரௌண்டு. எனக்கு தேவை ஒரு ஹஸ்பண்ட். ஃபேமிலி. அப்படி எல்லாம் ஆரம்பிச்சேன்னா எங்க அம்மா சோத்துல விஷம் வச்சுரும்’.

தெரு முனையில் வேன் வளைந்து வருவது தெரிந்தது. ‘உன் அண்ணனும் உங்ககூடதான் இருக்கானா?’

‘இல்ல. ரியா ஸ்கூல் முடிஞ்சு இங்க வந்து இறங்கிருவா. அண்ணி வேலை முடிஞ்சு வரும்போது அவள வந்து கூட்டிட்டுப் போயிருவாங்க. ரியா அப்பப்ப உன்னைப் பத்தி கேப்பா.’ 

‘‘உங்க அண்ணன் அண்ணி ரிலேஷன் எப்படி?’ என்றேன்.

முகத்தைச் சுருக்கி என்னைப் பார்த்தாள். ‘ஸோ ஃபார் ஸோ குட். அந்த சாபத்தை எல்லாம் நம்புறியா என்ன? அதான் ஆச்சி அதப் பத்தி கவலைப்பட வேணாம்னு சொல்லிட்டாங்களே‘

‘இல்ல, சும்மா கேட்டேன்’

வேன் எங்கள் அருகில் வந்து நின்றது. நான் எனது பைக்கில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். முதுகில் புத்தகப்பை, கையில் சாப்பாட்டுக்கூடை சகிதம் ரியாவும் அவளை விட சற்றே பெரிய இன்னொரு சிறுவனும் இறங்கினார்கள்.

மீராவைப் பார்த்து சிரித்தவள் திரும்பி என்னைப் பார்த்ததும் வெட்கப்பட்டு வேகமாகச் சென்று அவளைக் கட்டிக்கொண்டாள். எனது அருகே நின்று கொண்டிருந்த அந்த சிறுவன் ரியாவை ‘ரியா கம் கம்’ என்று அழைத்துக் கொண்டிருந்தான்.

மீரா ரியாவிடம் என்னைக் காட்டி, ‘இது யாருன்னு தெரியுதா?’ என்றாள். 

நான் அவளைப் பார்த்து ‘ஹாய்’ என்றதும் அவள் மீராவிடம் மெதுவாக குழைவுடன், ‘நீங்க மறுபடியும் ஃப்ரெண்டா ஆயிட்டீங்களா?’ என்றாள். 

‘இல்லையே’ என்று மீரா சிரித்துக்கொண்டே எனது வயிற்றில் அவள் கையால் குத்துவது போல் பாவனை செய்தாள்.

*******

itz.gsekar@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button