இணைய இதழ்இணைய இதழ் 54கட்டுரைகள்

புகைந்து தணிந்த சுருட்டும் சில கொலை சம்பவங்களும்! – ராம் முரளி

கட்டுரை | வாசகசாலை

ர்மத் திரைப்படங்களுக்கென்று எப்போதுமே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரையிலும் பார்வையாளர்களின் கூருணர்வைத் தூண்டிவிட்டு, அவர்கள் எதிர்பார்க்கின்ற திருப்பங்களையெல்லாம் நிகழாதவாறு திறம்பட திரைக்கதை எழுதி, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்வது மிகுந்த சவாலுக்குரிய காரியமாகும். பார்வையாளர்களின் பங்களிப்பு முழுமையாக நிகழுகின்ற சந்தர்ப்பங்கள் மர்மத் திரைப்படங்களில்தான் உண்டாகின்றன. உலகளவில், இந்த வகைப்பட்ட திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்றிருப்பவர் ஆல்பிரெட் ஹிட்ச்காக். கிட்டத்தட்ட அறுபது திரைப்படங்களும், சில தொலைக்காட்சி தொடர்களையும் அவர் இதே சஸ்பென்ஸ் பாணியிலேயே உருவாக்கி பெரும் புகழ் பெற்றிருக்கிறார். உளவியல் ரீதியில் பார்வையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடைய உணர்வுகளுடன் இவ்வகை திரைப்படங்கள் பகடை ஆடுகின்றன. “பார்வையாளர்களின் நம்பிக்கையின் மீதிலான விளையாட்டு” என இச்செயல்பாட்டை வரையறை செய்கிறார் ஹிட்ச்காக்.

தமிழில், அவ்வப்போது சில மர்மத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், தனியொரு வகைப்பாடாகப் பெரியளவில் மர்மத் திரைப்படங்கள் இங்கு உருவாக்கப்படவில்லை. வணிகச் சாரம்சங்களையும், நாயகனை மையப்படுத்தியே கதைகளை உருவாக்குதலும், அந்த நாயகனின் சுய ஒழுக்கம், குடும்ப பாசம், சமூக உணர்வு, முன்னேற்றம் போன்ற கூறுகளின் மூலமாகவே காலகாலமாகக் கதையாடல்கள் உருவாக்கப்பட்டு வருகின்ற தமிழ் சூழலில், நாயகனைக் கடந்தும் திரைக்கதையின் ஆழம் பார்க்கும் மர்மத் திரைப்படங்கள் வெகு அரிதாகவே வெளிவந்திருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்டவையிலும் பெரு வெற்றி பெற்றவை குறைந்த அளவிலான படங்கள்தான். அமானுட உருவங்களை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட திகில் கதைகளை இதில் நாம் சேர்க்க வேண்டிய தேவையில்லை.

மர்மத் திரைப்படங்களின் பிரத்யேகமான தனிப் பண்புகளில் ஒன்று, அதனது திரைப்பட ஆக்க முறையும், திரைக்கதையும். புதிர்களைத் திரைக்கதையின் போக்கில் மறைத்து வைப்பது, அதனை யூகிக்க இயலாதபடி கதாபாத்திரங்களின் மிகைப் பதற்றங்களின் மூலமாகக் குழப்பத்தை விளைவிப்பது, மையக் கதாபாத்திரம் ஒன்றைப் படைத்து அதன் மூலமாகச் சாமர்த்தியமாகப் புதிர்களை விடுவிப்பது என்பதோடு, காட்சிரீதியிலான அணுகுமுறையும், பின்னணி இசையும்கூட ஒரு மர்மத் திரைப்படத்துக்கு அதி முக்கியமானவை. கதாபாத்திரங்களின் முக அசைவுகள் எவ்வகையில் படமாக்கப்படுகின்றன, ஒளியில் படரும் நிறங்களின் அசைவுகள், காட்சி சட்டகத்தில் உருவாக்கப்படுகின்ற ஆழம், சப்தம், ஒருவித விசாலத்தன்மை போன்ற பல கூறுகள் இறுக்கத்தையும், புதிர்மையையும் படத்தில் படியச் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த வரையில் கறுப்பு வெள்ளையில் சில மர்மத் திரைப்படங்களைக் கலை நேர்த்தியோடு உருவாக்கியவர் வீணை எஸ்.பாலசந்தர். அவரது பொம்மை, நடு இரவில் மற்றும் அந்த நாள் அதுவரையிலான தமிழ் திரைப்படப் போக்கில் புதிய முயற்சிகளாகவே கருதப்படுகின்றன. அதிலும், அந்த நாள் திரைப்படத்தில் முதல் காட்சியிலேயே மையக் கதாபாத்திரம் கொலை செய்யப்படும். அதனை யார் செய்தார்கள் எனும் விசாரணையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் உரையாடல்களும், அவர்களிடம் நடத்தப்படும் குறுக்கீடுகளும்தான் அதன் திரைக்கதை. அப்போதைய காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் ஒரு தமிழ் திரைப்படத்தை உருவாக்குதல் என்பது எவரும் எண்ணிப் பார்த்திட முடியாத முயற்சியாகவே இருந்திருக்கும். சிறுவயது முதலே, பல்வேறு இசைக் கச்சேரிகளில் கலை பங்களிப்பு செய்திருக்கின்ற வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் பாடல்களே இடம்பெறவில்லை என்பது, திரைக்கலையின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த புரிதலையே காட்டுகிறது.

ரோஷோமான் பட பாணியில், ஒரு நிகழ்விற்குப் பல கோணங்கள் இருக்கின்றன எனும் கருத்தைப் பிரதிபலிக்கும் திரைப்படமாக அந்த நாள் உருவாகியிருந்தது. The Women in Question எனும் ஆங்கிலப் படத்தை தழுவி இதன் கதையை ஜாவர் சீத்தாராமன் எழுதியிருக்க, திரைக்கதையை பாலசந்தர் புதுமையாக அமைத்திருந்தார். படத்தின் இறுதியில், வீணை எஸ். பாலசந்தரே அரைகால் டவுசருடன் திரையில் தோன்றி, இப்போது நீங்கள் பார்த்த படத்தில் பங்கேற்றவர்கள் என நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகம் செய்து வைப்பார். நானறிந்த வரையில் இப்படியொரு அறிமுகம் வேறெந்த படத்திலும் கொடுக்கப்பட்டதில்லை. இயக்குநர் பணிக்குப் பெரும் கெளரவத்தையும், அது எவ்வளவு ஆளுமைமிக்கது என்பதையும் உணர்த்தும் முயற்சியாகவே வீணை எஸ். பாலசந்தரின் அச் செயல் இருக்கிறது.

“இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நான் பெருமை கொள்கிறேன்” என்று சிவாஜிகணேசன் ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். எனினும், இத்திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ரஞ்சன் எனும் கதாபாத்திரத்திற்கு முதலில் எஸ்.வி.சகஸ்ரநாமமும், அவரது நடிப்பு இயக்குநருக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பின்னர் ‘கல்கத்தா’ விஸ்வநாதன் எனும் மற்றொரு நடிகருமே தேர்வு செய்யப்பட்டிருந்தவர்கள். ஆனால், ரஞ்சன் கதாபாத்திரம் சிவாஜிகணேசனின் கைக்கு வந்திருந்தது.

முதல் காட்சியிலேயே கொலை செய்யப்படுகின்ற, பின் கதையில் துரோகச் செயல் புரிகிறவனாக அவப்பெயர் சூட்டப்படும் அக்கதாப்பாத்திரத்தில் சிவாஜிகணேசன் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது திரையுலக வாழ்க்கையில் உண்மையாகவே, காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படியான படங்களில் அந்த நாளும் ஒன்று என்றால் அது மிகையல்ல. வீணை எஸ். பாலசந்தரின் பொம்மை திரைப்படமும், இதேபோல, வெடிகுண்டை சுமந்திருக்கும் ஒரு பொம்மை எப்படி பல்வேறு நபர்களின் கைகளுக்கு மாறியபடியே இருக்கிறது என்பதாக அமைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ் வகைப்பட்ட திரைப்படமே. அதில் இடம்பெற்றிருக்கும் “நீயும் பொம்மை நானும் பொம்மை” எனும் தத்துவார்த்தமான பாடல் பெரும் புகழ்பெற்றிருக்கிறது. ஜேசுதாஸ் பாடிய முதல் பாடல் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

வீணை எஸ்.பாலசந்தரின் வருகைக்கு முன்பாகவும், பின்பாகவும் சில மர்மத் திரைப்படங்கள் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், தனிச் சிறப்புகளுடன் காலத்தை வெல்லும் ஆற்றலும், தகுதியும் பெற்றிருப்பவை மிக சொற்பமானவைதான். அதில், மிகுதியான வரவேற்பையும் போற்றல்களையும் பெற்றிருக்கும் மற்றொரு திரைப்படம் என்றால் 1967-ல் ஏவிஎம் தயாரிப்பில், வெளிவந்த அதே கண்கள் திரைப்படத்தைச் சொல்லலாம். முதலில் பார்த்த “அந்த நாள்” திரைப்படமும் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதே என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். ஏ.வி.மெய்யப்பருக்கு ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் மீதும், ஹாலிவுட் திரைப்படங்களின் மீது பரிட்சயமும் விருப்பமும் இருந்திருக்கிறது. நல்ல திரைக்கதை அம்சதோடு, தன்னை அணுகப்படுகின்ற மர்மத் திரைப்படங்களைத் தயாரிக்க அவர் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார். அப்படியான சூழலில்தான் இயக்குநர் திரிலோகசந்தர் அதே கண்கள் படத்தின் கதையை விவரிக்க, உடனடியாக அதன் தயாரிப்புப் பணிகள் துவங்கியிருக்கின்றன.

“அந்த நாள்” திரைப்படம் ஒரு புதிய முயற்சி என்பதையும், அதனது முக்கியத்துவத்தையும் தனியடையாளத்துடன் நாம் போற்ற வேண்டும் என்றாலும், மிகுதியான பார்வையாளர்களை சென்றடைந்திருக்கும் மர்மத் திரைப்படம் என்றால் எவரொருவரும் முதலில் அதே கண்களைதான் சொல்வார்கள். “அந்த நாள்” பிரத்யேகப் பார்வையாளர்களுக்கான திரைப்படம் என்று நிலைபெற்றிருக்க, “அதே கண்களோ” வெகுஜனத்தின் மத்தியில் பெரிதும் கொண்டாட்டப்பட்ட படமாகவே இருக்கிறது. ஒரு மர்மத் திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் செறிவாக கொண்டிருந்த மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டிருந்த திரைப்படம் அது. 

எனது சிறுவயதில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஒரு தினத்தில் தொலைக்காட்சியில் அதே கண்கள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. நான் வீடடைந்த தருணத்தில் சரியாக விசாலமான வெளிகளைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பங்களாவில் நிகழும் அதன் இறுதிக் காட்சியின் விவாதம் அரங்கேறியது. ஏதோ ஒரு கொலை தொடர்பான விவாதம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த வயதில் எனக்கு பழைய திரைப்படங்களில் பெரியளவில் விருப்பமெல்லாம் இருந்ததில்லை. எனினும், அந்த குறிப்பிட்ட காட்சியும், அது படமாக்கப்பட்டிருந்த விதமும், கதாபாத்திரங்களின் முகத்தில் படர்ந்திருந்த பதற்றமும் எனது கவனத்தை முழுமையாக ஈர்த்துவிட்டன. படத்தின் நாயகனும் ஒரு முதியவரும் கொலைக்காரன் யாராக இருக்கலாம் என்று அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள். உடனடியாக எதையோ உணர்ந்துக்கொண்டவனாக நாயகன், அங்கிருக்கும் மற்ற கதாப்பாத்திரங்களின் முகத்தில் ஒரு கருப்பு துணியை வைத்து, அவர்களது கண்களை மட்டும் ஆராய்வான். அந்தக் கண்களில் ஏதோவொன்றுதான் கொலையாளியை வெளிக்கொணரப் போகிறது என்பதை என்னால் அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. தொடர்ந்த உரையாடல்களும், இறுதியில் அந்த கொலையாளி யாரெனும் புதிர் விலகும் சமயமும் பெரும் திடுக்கிடலை என்னுள் உண்டுபண்ணியது. முற்றிலுமாக அந்த தருணத்தில் கொலையாளியை நான் கணித்திருக்கவே இல்லை. வேஷம் கலையும் அக்காட்சி பலநாள் என்னை அச்சுறுத்தியிருக்கிறது. பின்னர் பல்வேறு தருணங்களில், தொலைக்காட்சியில் அந்த படத்தை முழுமையாகப் பார்த்திருக்கிறேன் என்றாலும் இன்னமும் அதன் மீதிலான வசீகரம் குறைந்திருக்கவில்லை.

அதற்கான காரணமாக நான் கருதுவது, அந்த திரைப்படத்தின் வலுவான திரைக்கதை அமைப்பு. கொலையாளியை அருகிலேயே வைத்திருந்தாலும் எவரொருவராலும் யூகிக்க முடியாதபடி அவனது அசல் தோற்றத்தை பார்வையாளர்களின் கவனிப்பில் இருந்து பதுக்கி வைத்திருப்பது. அடுத்தது, அவனது அடையாளத்தை மிகச் சரியான தருணத்தில், அதாவது கொலைக்கான காரணங்கள் இன்னதுதான் என்று முழுமையான சித்தரிப்பைக் கொடுத்துவிட்டு, படம் நிறைவடைய ஒரு சில நிமிடங்களே மீதமிருக்கும் தருணத்தில் கொலையாளியை அடையாளம் காண்பிப்பது. பொதுவாக, மர்மத் திரைப்படங்களில் கொலையாளியை அல்லது கதையில் மர்மத்தை தோற்றுவிப்பவரை அறிமுகப்படுத்தியதற்கு பிறகு, அவர் மூலமாகவே ‘முன்கதை’ பாணியில் குற்றத்தின் காரணங்களும் அவர் தரப்பு நியாயங்களும் விவரிக்கப்படும். ஒருசில திரைப்படங்கள் இந்த பாணியில் இருந்து விலகி நிற்கின்றன. அதில் அதே கண்களும் ஒன்று. அடுத்ததாக, கதையின் பெரும்பகுதி நிகழும் அந்த பங்களாவின் விசாலத்தன்மையும், அதனுள் வாழும் மனிதர்கள் எல்லோரையுமே கிட்டதட்ட பகைமையுடன் தனியர்களாக உணரும்படி காட்சிப்படுத்தியிருப்பது.

முதல் காட்சியில் கொலை செய்யப்படும் மனிதருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அதோடு, முதல் காட்சியில் கொலை செய்யப்படும் மனிதரின் மனைவியின் மீதும் கொலை முயற்சி நடக்கிறது. ஆனால், அவள் மயக்கமுற்று விழுவதை கொலைகாரன், மரணம் உறுதியாகிவிட்டது என்று தவறாக கணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறான். அதன்பிறகு அவ்வீட்டிற்குள் நுழையும் அவர்களது மகள் உறவுடைய காஞ்சனா மற்றும் அவளது தோழிகள். அங்கு வாழும் ஒரு மலையாளி சமையல்காரன் மற்றும் வயது முதிர்ந்த ஒரு வைத்தியர். வெளியிலிருந்து அவ்வப்போது வரும் அந்த குடும்பத்துடன் நெருக்கமான உறவு பூண்டுவரும் மருத்துவர் இவர்கள் தான் அந்த வீட்டுடன் பிரத்யேகமான தொடர்பில் இருக்கும் மனிதர்கள். ஆனால், இவர்கள் எல்லோரும் தனித்தனி மனிதர்களாக, பிறரது இருப்பும் மரணமும் தங்களை பெரிதளவில் பாதிக்காது என்கிற தன்மையிலேயே வலம் வருகிறார்கள். அதோடு, ஒவ்வொருவரும் தமக்கென தனித்த ரகசியங்களை உடையவர்களாவும் இருக்கிறார்கள்.

திரைக்கதை இந்த ரசியங்களின் மீதும், தனித்திருத்தலின் மீதும்தான் நகர்ந்தபடியே இருக்கிறது. இவர்களில் யார் வேண்டுமென்றாலும் கொலையாளியாக இருக்கலாம் எனும் உணர்வு பார்வையாளர்களுக்கு உண்டாகிறது. ஒரு கொலைக் கதையின் விசாரணையில் முக்கிய அங்கம் வகிப்பது, Motto என்று சொல்லப்படும் நோக்கம்தான். இந்தத் திரைப்படத்தில் சொத்துரிமை, சொகுசு வாழ்க்கை, ஆடம்பரம், பெண்ணுரு என்பவைகளைப் பிரபலிக்கும் அந்த வீட்டில் வசிக்கும் எவருக்கும் ஒருவரை மற்றவர் கொல்வதற்கான வாய்ப்பு சமவிகிதத்தில் இருக்கவே செய்கிறது. இந்தக் கொலை நிகழ்வுக்கு எல்லாம் அப்பால் வைத்து பார்க்கக்கூடிய காஞ்சனாவுக்குக் கூட அவளது பெரியப்பாக்களைக் கொலை செய்வதற்கான காரணங்கள் இருக்கவே செய்கிறது. ஏனெனில், மற்ற பெரியப்பாக்கள் எல்லோருமே வாரிசு இன்றி தனி நபர்களாக வாழ்பவர்கள். இப்படியாக, அவ்வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு இடையிலான பிணைப்பு பெரும் குழப்பத்துடனும், விலகல்தன்மையுடனும் கையாளப்பட்டிருப்பதால், இயல்பாகவே திரைக்கதையில் சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது.

மற்றொரு காரணமாக நான் கருதுவது, ரவிச்சந்திரனின் பாத்திர வார்ப்பு. கிட்டதட்ட ஒரு அண்டர் ப்ளே போல, கதாபாத்திரத்தை மீறாத குணவியல்புடன் ரவிச்சந்திரன் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவரையிலான கதையில் எவ்வகையிலும் தொடர்பே இல்லாமல் ஒரு சைக்கிளில் “பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி” பாடலில் அறிமுகமாகும் காட்சியில் இருந்து இறுதியில் கொலையாளியின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற தருணம் வரையிலும் எங்கும் எதிலும் சிறு மிகையும் இல்லாமல், கதையுனூடாக தோய்ந்துபோய், கதையாடலுக்கு வெளியில் பிதுங்காமல் அற்புதமாக தனது பங்களிப்பை அவர் செய்திருக்கிறார்.

அதேப்போல, மர்மத் திரைப்படத்துக்கு உரிய சில திகில் நிறைந்த தருணங்களை உண்டாக்குவதில் அதே கண்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. உதாரணமாகக் கொலைகாரனால் காஞ்சனாவுக்குக் கொலை மிரட்டல் விடப்படும் தருணத்தில், அவளைப் பத்திரமாக வெளியேற்றிவிட்டு, அந்தப் பங்களாவில் ரவிச்சந்திரன் இருக்கும் காட்சி ஒன்று இருக்கிறது. அந்த வீட்டில் வியாபித்திருக்கும் வெறுமையும், அந்த வெறுமையில் புதைந்திருக்கும் கொலைக்கான எத்தனிப்புகளும் பெரும் பீதியை மனதில் தோற்றுவிக்கும்படியாக உணர்வாகின்றன.

அதுபோலவே, கொலையை செய்திருப்பதாக சந்தேகப்படும் நபர்களை படத்தின் இரண்டாம் பாதியில் பின் தொடரும் காட்சிகள். இதில் சில நகைச்சுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும், பின்தொடர்தலை அமைத்திருக்கும் விதம் செறிவானது. புராதான கட்டிடம்போல இருக்கும் ஒரு ஹோட்டலில் காஞ்சனாவின் சித்தப்பாக்களில் ஒருவர் (நடிகர் ராம்தாஸ்) நுழைந்து போன் பேசுவதும், பின் மீண்டும் அங்கிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி காரில் பயணிப்பதும், அதனையெல்லாம் நாகேஷ் பின் தொடர்வதும் ஜேம்ஸ் பாண்ட் பட இசை பின்னணியாக அமைய சாகச காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல அசோகன் கதாபாத்திரத்தை ரவிச்சந்திரன் பின் தொடர்வதும், அதன் தொடர்ச்சியாக ஒரு சவுக்கு மரத் தோப்பில் சண்டை நிகழுவதும் திறம்படவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

அன்றைய காலத்தில், கும்நாம் எனும் துப்பறியும் திரைப்படம் ஒன்று சென்னையில் வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு, ஏ.வி.மெய்யப்பர் அதனது வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் என்று அலசியிருக்கிறார். பாடல்கள், நடனக் காட்சிகள், நகைச்சுவை, துயரச் சூழல்கள், மர்மம் ஆகியவையே அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்பது பதிலாகக் கிடைத்திருக்கிறது. உடனடியாக, அப்போது முன் தயாரிப்பில் இருந்த அதே கண்கள் திரைப்படத்திலும் இந்த அம்சங்கள் எல்ல்லாவற்றையும் சேர்க்கும்படி ஏ.வி.மெய்யப்பர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதன்படியே, அதே கண்களில் கடும் உழைப்பை செலுத்தி ஒவ்வொரு அம்சங்களையும் தனித்தனியே சீராக வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

இளமை ததும்பும் அற்புத நடிகர்களான ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சனா, நகைச்சுவைக்கு நாகேஷ், பதற்றச் சூழல்களின் பிரதிபலிப்புகளாக அசோகன் மற்றும் ராம்தாஸ், காவல் அதிகாரியாக மேஜர் சுந்தராஜன், மருத்துவராக பாலாஜி போன்றவர்கள் தேர்ந்தெடுத்து சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இசையைப் பொருத்தவரையில், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான வேதா இசை அமைத்திருக்கிறார். இவர் அக்காலத்தில் இந்தியில் பல பாடல்களை தழுவி தமிழில் மெட்டமைத்திருப்பவர். அதே கண்களில் இடம்பெற்றிருக்கும் ‘பூம் பூம் மாட்டுக்காரன்’ கூட ஆங்கிலத் திரைப்படமான Mary Poppinsல் வருகின்ற ‘Chim Chim Cher-ee’ எனும் பாடலின் தழுவலே. எனினும், ஒரு கொண்டாட்ட மனநிலையை எளிதில் இப்பாடல் உருவாக்கிவிடும். அந்த பாடலின் உட்கட்டமைப்பிலும்கூட இனம்புரியாத ஒரு மர்மம் இழையோடியே இருக்கிறது என்று நினைக்கிறேன். அதோடு, மேள தாளங்களோடு வீச்சுகள் ஒவ்வொன்றும் துள்ளலூட்டுவதாகவே இருக்கும். இதே படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு அற்புதமான பாடல், “ஓஹ் ஓஹ் எத்தனை அழகு இருபது வயதினிலே..”. பெரிய பூங்காவொன்றில் நடன நடிகர்களுடன் இப்பாடல் படமாக்கப்பட்டிருக்கும். படத்தில் இருந்து விலகி, எனக்கு எப்போதும் பிடித்தமான தனிப்பாடல்களில் இதுவும் ஒன்று. கூடுதலாக, இப்படத்தில் ஒரு புத்தாண்டு கொண்டாட்டக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கிறது. பாடல் இல்லாமல் வெறும் இசைத் துணுக்கு மட்டுமே ஐந்து நிமிடங்களுக்கு நீளும் அதில் ரவிச்சந்திரன், காஞ்சனா உள்ளிட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்று ஆடுவார்கள். பாரிஸில் நிகழ்ந்த ஒரு நடன நிகழ்ச்சியை நேரில் கண்டு, அதன் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதே கண்கள் படத்தில் அதுபோன்ற நடன இசைக் கோர்வையை புகுத்தியதாக ஏ.வி.எம் குமரன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சைக்கோ எனும் புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட ஹிட்ச்காக் அதனை படமாக்க முடிவு செய்த உடனேயே, திரைப்படமாக்கலுக்கான உரிமத்தைப் பெற்று, கடைகளில் அந்த புத்தகம் விற்கப்படுவதைத் தடுத்தார். அதன் மூலமாக, சைக்கோ திரைப்படத்தின் இறுதி முடிவை எவரும் முன்னதாகவே அறிந்திருக்கக்கூடாது என்பது அவரது திட்டவட்டமான எண்ணமாக இருந்தது. சைக்கோவை போலவே, படத்தின் இறுதி சில நிமிடங்களில் புதிர்கள் அவிழ்க்கப்படும் அதே கண்கள் திரைப்படத்திலும், முதல் பிரேமாக, “நண்பர்களே வணக்கம். படத்தைப் பாருங்கள். ரசியுங்கள். உங்களைப் போல உங்கள் நண்பர்களும் மற்றவர்களும் படத்தை ரசிக்க வேண்டுமல்லவா? எனவே கதையின் முடிவை தயவுசெய்து யாரிடமும் சொல்லாதீர்கள். நன்றி” என்று பின்னணி குரல் ஒலிக்க எழுத்தாகவும் திரையின் மீது இச்சொற்கள் பதியப்பட்டிருக்கும். 

திரைப்படம் வெளியான சமயத்தில் ஒருமுறை திரையரங்கில் நண்பர்கள் இருவருக்குமிடையில் ஒரு மோதலே இதனால் உருவாகியிருக்கிறது. முன்னதாகவே ஒருமுறை அதே கண்களை பார்த்துவிட்ட ஒருவர், தனது நண்பருடன் இரண்டாம் முறை படம் பார்க்க வந்திருக்கிறார். அப்போது முதல் கொலை நிகழ்ந்து முடிந்ததும் வருகின்ற விசாரணை காட்சியின்போது, கொலையாளியை விரல் நீட்டி அவர்தான் கொலைகாரன் என்று சொல்லிவிட்டாராம். கோபமடைந்த அவரது நண்பர், “இதை யூகித்து தெரிந்துகொள்ளதானே படம் பார்க்க வந்தேன். அடப்பாவி, எல்லாவற்றையும் குழப்பிவிட்டாயே” என்று சொல்லி அவரை பளாரென்று அறைந்துவிட்டாராம். இருவருக்குமிடையில் பெரும் சலசலப்பு அன்று நடந்திருக்கிறது. ஒரு மர்மத் திரைப்படத்தில் பார்வையாளர்களின் பங்கேற்பு என்பது இவ்வகையில்தான் ஆர்வத்துடன் நிகழ்ந்தேறுகிறது.

இறுதியாக, இந்த திரைப்படத்தின் பெரு வெற்றிக்கு காரணமான மற்றொரு அம்சமாக நான் கருதுவது, தொடர் கொலைக்கான காரணத்தை அழுத்தமாக உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்திருந்த சில தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட மர்மத் திரைப்படங்களில்கூட காட்சிகளும், பதற்றச் சூழல்களும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், இறுதியில் மர்மத்துக்கான மூலக் கதைகளில் பெரும்பாலும் அத்தனை திரைப்படங்களுமே உப்புசப்பு இல்லாத காரணத்தைப் புனைந்து வைத்து பார்வையாளர்களை வெறுப்பேற்றின. அதேபோல, மர்மச் சூழலை உருவாக்கவும், தொடர்ச்சியாக படம் நெடுகிலும் வளர்த்தெடுக்கவும் பெரும் சிரமங்களை மேற்கொண்டிருப்பதை உணர முடிகிறது. கொலையாளியை துப்பறிதல் எனும் செயலாக்கத்திலும் பல பல குளறுபடிகளும் செயற்கையான உட்புகுத்தல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதே கண்களில் கொலையாளி விட்டுசெல்லும் ஒரேயொரு துருப்புச் சீட்டு என்ன தெரியுமா? சுருட்டு ஒன்றுதான். கொலை நிகழும் அனைத்து இடங்களிலும் குறிப்பிட்ட வகையிலான ஒரு சுருட்டு கிடக்கிறது. உண்மையில், இந்த சுருட்டு புதிர்களை விடுவிப்பதில் எந்தவொரு பங்களிப்பையும் செய்யவில்லை. நிகழும் அனைத்திற்கும் ஒருவனே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக புகையும் சுருட்டு படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தானாக தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடும் குணம் கொண்ட, தனது திட்டங்களில் தெளிவுற சுய சிந்தனையுடன் இருக்கின்ற கொலையாளி அந்த சுருட்டையும்கூட தனது Signature என விட்டுச் செல்வதாக அர்த்தப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. சுருட்டைத் தவிர எந்தவொரு பிற அடையாளமும் கொலையாளியை பற்றி படத்தில் இருப்பதில்லை. ரவிச்சந்திரனால் ஒரு சந்தர்ப்பத்தில் அண்மையில் பார்க்கப்படும் அவனது தீவிரத்தன்மை படந்த தகிக்கின்ற கண்கள் மட்டுமே அவனது வேடங்களை கலைக்க உதவுகிறது. அதற்கும் முன்னதாகவே, முன்பே குறிப்பிட்டபடி அவனது பழிவாங்குதல் நோக்கத்திற்கான காரணமும் தெளிவாக விளக்கப்படுகிறது. ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கிறது.

இத்தனை இத்தனை தொழிற்நுட்ப உபகாரணங்கள் பெருகிவிட்ட நிலையில், அயல் மொழி திரைப்படங்களோடு தொடர்பேற்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் அதிகரித்துவிட்ட நிலையிலும், சமீப காலத்தில் வெளியான மிக நல்ல மர்மத் திரைப்படம் என்று எதனையும் நம்மால் முன்மொழிய முடியாது. ஒரு சில வாரங்களில் படம் பற்றிய அத்தனை எண்ண குமிழிகளும் கரைந்துவிடும் அளவில்தான் இப்போது மர்மத் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதிலும், மர்மத்திற்கான நோக்கங்கள் சரிவர இருப்பதில்லை. அல்லது கொலையாளியின் நடத்தையில் அவனது செயல்களில் குழப்பம் நேர்கிறது. துளி பிரயோஜனமும் இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் பழிவாங்குதல் என்று ஊரில் திரிகின்ற எவர் எவரையோ சம்பந்தமில்லாமல் கொலை செய்து, அவன் மீதிலான பயத்தை கிளர்த்திவிடுவது என்றிருக்கும் இத்திரைப்படங்களில், தெளிவான கூருணர்வுமிக்க மர்மத் திரைப்படங்கள் என சொல்லிக்கொள்ளும்படியாக சமீபத்தில் எதுவுமே இல்லை. 

சமீபத்தில் என்று அழுத்திச் சொல்ல காரணம் இன்றைய திரைப்படத்துறையில் வணிக அம்சங்களை கணக்கிட பெரும்பாலும் இரண்டு வகையிலான கதைகள்தான் தேர்வு செய்யப்படுகின்றன. ஒன்று நகைச்சுவை. மற்றொன்று மர்மத் திரைப்படங்கள். விதிவிலக்காகச் சில திரைப்படங்கள் வருகின்றன என்றாலும், பொதுவாக லாபநோக்கோடு அணுகப்படுகின்ற கதைகள் இந்த இரண்டு வகையறாக்களில் இருந்தே உருவாக்கப்படுவதை உணர முடிகிறது. அவ்வகையில், அழுத்தமே இல்லாமல் செயற்கையாக உண்டாக்கப்படும் தருணங்களையும், மூல காரணங்களையும் மட்டுமே கொண்டு மர்மத் திரைப்படங்களை வடிவமைப்பதைவிட, வெளி மொழிகளில் அதற்கான காட்சிகளையும், கதைகளையும் தேடித் திரிவதைவிடவும், நமது முன் காலத்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வகைப்பட்ட திரைப்படங்களை அலசி ஆராய்ந்து பயில்வது நல்ல விளைவுகளை உண்டுபண்ணும் என்று கருத வேண்டியிருக்கிறது. 

ஒரு நகைச்சுவையை உருவாக்க, ஒரு பூங்காவும், காவலதிகாரியும் ஒரு அழகான பெண்ணும் இருந்தால் போதுமானது என்றார் சாப்ளின். ஒரு மர்மச் சூழலை உருவாக்க புகைந்து தணிந்த சுருட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருந்தால் போதுமானது என்று மெய்ப்பித்திருக்கிறது தமிழ் சினிமாவில் பெரும் சலனத்தை ஏற்படுத்திய மர்மத் திரைப்படமான அதே கண்கள்.

*****

raammurali@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button