சிறார் இலக்கியம்
Trending

புலி வருது! புலி வருது!

கன்னிக்கோவில் இராஜா

ஏய்! என்னைப் பிடி! என்னைப் பிடி! என்றச் சத்தத்தைக் கேட்டு குளத்தில் இருந்த மாரி ஆமை வெளியே வந்து பார்த்தது.

மூங்கில் மரத்தின் அருகே முயல், அணில், வெள்ளை எலி அனைத்தும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அவர்கள் விளையாடுவதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாரி ஆமை தானும் அவர்களோடு விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டது.

மெதுவாக அவர்களை நோக்கி நடந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தது.

நண்பர்களே! என்னையும் உங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்நானும் உங்களோடு விளையாடு ஆர்வமாக இருக்கிறேன் என்றது.

என்னது உன்னை ஆட்டத்தில் சேர்த்துக்கணுமா? என்று கேட்டு சிரித்தது முயல்.

முயல் சிரிப்பதைப் பார்த்த வெள்ளை எலியும், அணிலும் சேர்ந்து சிரித்தன.

எதற்கு இப்படி சிரிக்குறீங்க. நான் விளையாடத்தானே என்னோட விருப்பத்தைச் சொன்னேன் என்றது மாரி ஆமை.

நீ விளையாட ஆசைப்பட்டதெல்லாம் சரிதான். ஆனால் எங்களுடன் விளையாட ஆசைப்பட்டதுதான் தவறு என்றது வெள்ளை எலி.

ஆமாம்.  இது ஒருவரை ஒருவர் தொட்டு விளையாடும் விளையாட்டு. இதற்காக வேகமாக ஓட வேண்டி இருக்கும். இதில் எப்படி உன்னை சேர்த்துக் கொள்ளமுடியும்? என்றது அணில்.

அது மட்டுமா? இங்கே திடீரென்று புலியோ, சிறுத்தையோ வந்தால் நீ வேகமாக ஓடமாட்டாய், உன்னால் நாங்களும் மாட்டிக் கொள்வோம் என்று கேலி செய்தது முயல்.

அமைதியாக நின்றது ஆமை.

இப்படி எதுக்கும் சரிபட்டு வராத நீ, எப்படி எங்களோடு விளையாட விரும்பினாய் என்று மறுபடியும் கேலி செய்தது முயல்

அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

சரி! சரி! குளம் ஏறி வந்துவிட்டாய். நாங்கள் ஆடுகிற விளையாட்டையாவது பார்த்துவிட்டுப் போ என்றது வெள்ளை எலி.

மிகுந்த வருத்தத்துடன் அருகில் இருந்த பூவரசு மரத்தின் நிழலில் ஒதுங்கியது ஆமை.

ஒதுங்கும் ஆமையைப் பார்த்து மீண்டும் சிரித்த அணில், சரி! சரி! நாம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். இப்ப வெள்ளை எலிதான் நம்மைப் பிடிக்கணும் என ஆட்டத்தில் கவனத்தை ஏற்படுத்தியது.

ஏய் என்னைப் பிடி! என்னைப்பிடி! என்று ஆட்டம் காட்டியது முயல்.

இப்ப என்னைப் பிடி பார்க்கலாம் என மரத்தில் ஏறி இறங்கி பழிப்பு காட்டியது அணில்.

ஆட்டம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. இதை கொஞ்ச நேரம் ரசித்த மாரி ஆமைஏதோ சத்தம் கேட்கிறதே எனத் திரும்பிப் பார்த்தது.

ஒரு பெரிய புலி இரைத் தேடி முயல்களைப் பார்த்து பதுங்கிக் கொண்டிருந்தது.

ஆட்டத்தின் உற்சாகத்தில் இருந்த விலங்குகள் புலியைக் கவனிக்கவில்லை.

மெது மெதுவாக ஒவ்வொரு அடியாக விலங்குகளை நோக்கி புலி தவழ்ந்து வந்தது.

அடடா! இப்படி புலி வருவதைக் கவனிக்காமல், நண்பர்கள் விளையாடிக் கொண்டிக்கிறார்களே.. என்று நினைத்தவுடன் புலி! புலி! நண்பர்களே புலி வருது! ஓடுங்க என எச்சரிக்கை குரல் கொடுத்தது.

ஆனால் விளையாட்டின் உற்சாகத்தில் இருந்த நண்பர்கள், என்ன ஆமையே! விளையாட்டில் சேர்க்கவில்லை என்பதற்காக புலி வருது என்று பயமுறுத்துகிறாயா என மீண்டும் கேலி செய்தன.

ஐயையோ! உண்மையிலேயே புலிவருது! அங்கே பாருங்கள்! என்று மீண்டும் குரலை உயர்த்தி புலி வந்த திசையைக் காட்டியது.

ஆமைக் காட்டிய இடத்தைப் பார்த்த அணிலில் உடல் வெடவெட என நடுங்கியது. நண்பர்களே! ஓடுங்க! ஓடுங்க! புலி! புலி! என குரல் கொடுத்தபடி மரத்தில் தாவி வேகவேகமாக ஓடியது. வெள்ளை எலி அருகில் இருந்த பொந்துக்குள் அவசர அவசரமாக நுழைந்தது. முயலோ வெகு வேகமாக தனது குழிக்குள் சென்று பதுங்கியது.

ஏமாற்றம் அடைந்த புலி, கோபமாக ஆமையை நோக்கி பாய்ந்தது.

ஆமையும் தனது தலையையும், கால்களையும் தன் ஓட்டிற்குள் நுழைத்துக் கொண்டு பாதுகாப்பானது.

பாய்ந்து வந்த புலி, ஆமையின் ஓட்டைக் கடித்தது. ஓடு மிக உறுதியாக இருந்ததால் உடையவில்லை. ஆனால் புலியின் பற்களில் வலி ஏற்பட்டது. இன்னும் கோபம் அதிகமானது. தனது கூரிய நகங்களால் கீறியது. ஆனாலும் ஓட்டிற்கு ஒன்றுமே ஆகவில்லை.

கொஞ்ச நேரம் யோசித்தது. பிறகு ஆமையின் ஓட்டை ஒன்றும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டு, ஓட்டைத் திருப்பிப் போடடது. இப்போது என்ன செய்வாய் ஆமையே? என்று கேட்டு காடே அதிரும்படி சிரித்தது புலி.

அணில், முயல் எலி என எல்லாரும் என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்தன. ஆமையை புலி துன்புறுத்துவதைக் கண்டு வருந்தின.

ஓடு திரும்பிய ஆமையின் அடிப்பாகத்தைக் கடித்தது புலி. இப்போது பற்கள் தான் வலித்தன. இப்படி பல முறைக் கடிக்க முயற்சி செய்ய, முயற்சி செய்ய வலிதான் அதிகமானது. என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நினைக்காதே! இன்னொரு சந்தர்ப்பத்தில் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றது புலி.

புலி சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட அணில் மரத்திலிருந்து கீழே இறங்கியது. தனது நண்பர்களை அழைத்தது. அனைவரும் வந்து தலைகீழாய் இருந்த ஆமையை நிமிர்த்தின.

அப்போதுதான் தன் ஓட்டிலிருந்து தலையையும், கால்களையும் வெளியே எடுத்து என்ன புலி போயிடுச்சா என்று கேட்டது ஆமை.

“…ம்புலி போயிடுச்சு என்று சொன்ன அணில், ஆமை நண்பா! நீ எச்சரிக்கை செய்ததால்தான் நாங்கள் தப்பித்தோம். நீ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்திருந்தால், அந்தப் புலி எங்களில் யாரையாவது இரையாக்கி இருக்கும். எங்களைக் காப்பாற்றிய உனக்கு நன்றி என்றது.

ஆமாம் ஆமையே! நாங்கள் உன்னை விளையாட்டில் சேர்க்கவில்லை என்பதை மறந்து எங்களைக் காப்பற்றினாய். ஆனால் உன்னை அதிகமாக கேலி செய்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடு என்றது வெள்ளை எலி.

இனி யாரிடமும் இதுபோல நடந்து கொள்ள மாட்டோம். புலி வந்தவுடன் பயந்து ஒளிந்து கொண்டோம். ஆனால் நீ இருந்த இடத்திலேயே அதனை சமாளித்து ஓடச் செய்துவிட்டாய். நீதான் எங்களைவிட பலசாலி என்று புகழ்ந்தது முயல்.

நண்பர்களே! மன்னிப்பு எதற்கு? புகழ்ச்சி எதற்கு? நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பலசாலிகள் தான். அதனை உணர்ந்து கொண்டால் போதும். மற்ற குறைகள் நமக்கெதற்கு என்றது ஆமை.

ஆமையே! இனி நீயும் எங்களுக்கு நண்பன்தான். இனி நாம் அனைவரும் ஒன்றாகவே விளையாடுவோம் என்றன அணிலும் முயலும்.

சரி. சரி. அப்ப வாங்க எல்லோரும் குளத்தில் நீந்தியபடியே பிடிக்கிற ஆட்டம் ஆடலாம் என்று அழைத்தது ஆமை.

ஆமாம். அதுவும் சரியான விளையாட்டுதான். நீச்சல் அடிக்க பழகினால் உடலில் சோர்வு மறைந்து உற்சாகம் பெருகும் என்று சொல்லியபடி குளத்தை நோக்கி ஓடியது அணில்.

வழக்கம்போல மெதுவாக நடந்தது ஆமை.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button