இணைய இதழ்இணைய இதழ் 89கவிதைகள்

கே.பாலமுருகன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எதற்காக வந்தீர்கள்?

வாடகைக்கு வரும்
அனைவரிடமும் எதற்காக வந்தீர்களெனக்
கேட்கிறார்
ஒரு விநோதமான
பதிலுக்காகக் காத்திருந்தார்
அவருடைய செவிகள்
பெருத்து வீங்கியிருந்தன
நகரம் பதற்றமில்லாமல்
அன்றாடங்களை நேர்த்தியாகக் கக்குவது
வருவோர் அனைவரின்
கண்களிலும் பேச்சிலும் ஒளிர்ந்தது

எதற்காக வந்தீர்கள்?

தற்கொலை செய்து கொள்ள.
ஆயிரம் ரிங்கிட் தருகிறேன்
யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்சும்
அந்தக் கண்களில் உயிர் வாழ்வதற்குரிய
பிரகாசமான வெளிச்சம் தெரிந்தது

அன்றிரவு வரை
அமைதியாக இருந்த
எனது மௌனம்
கொடூரமான விலங்கின்
மூர்க்கத் தருணங்களால் நிறைந்திருந்தது

உடலை அகற்றிய பின்னர்
அந்த அறைக்குள் கடைசியாகச்
சென்றது நான்தான்
யாரிடமும் சொல்லி விடாதீர்கள்
இரவு பகலாக
இன்றும் கூட
அந்த ஆயிரம் ரிங்கிட்டைத்
தேடுகிறது மனம்.

****

தூரத்தில் தெரியும் அருகாமை

விசில் சத்தத்தை
எழுப்பிவிட்டு மறைகிறாள்
அறிமுகமில்லாத சிறுமி
அவளும் நானும்
அங்கு தனிமையில் இருந்தோம்
நான் வாடகை வண்டிக்கும்
அவள் பள்ளிப் பேருந்திற்கும் காத்திருந்தோம்
எங்களுக்குள் உறவேதும் இல்லை
உணர விரும்பாத ஒரு மதிய வெயிலிடம்
அவள் விளையாடிக் கொண்டிருந்தாள்
உடல் உண்டாக்கும் நிழலை
ஆட்கொள்ளத் தாவித் தாவிக் குதித்தாள்
அவளுடைய நிழலை என் பக்கமாக
அழைத்து வந்து வித்தை காட்டினாள்
நான் அவளுடைய நிழலிடம் கைகுலுக்கினேன்
எங்களின் சந்திப்பிற்கு யாருமற்றுக் கொதித்தெழும்பும்
மதிய வெயில் சாட்சியாக விரிந்து கொண்டிருந்தது.

****

உடைந்தெழும் மிச்சங்கள்

விளையாடிக் கைவிடப்பட்ட
பழைய பெட்டிக்குள்
அப்புவின் உடைந்த பொருட்கள்
அனைத்திலும் சப்தம் எழுந்தபடியிருந்தன.
பொம்மைகளின் கால்கள்
கார்களின் சக்கரங்கள்
பந்தயக் காரின் உடல் ஓடுகள்
காது வைத்துக் கேட்டேன்
அப்புவின் பிடிவாதங்கள்
இன்னும் உயிரோடிருந்தன
அழுகையின் கடைசி கேவல்
விம்மியபடி இருந்தது
கடைவரிசையின் தரையில்
கால்களை உதறும்போது உண்டாகிய
கிரிச்சொலிகளின் மிச்சம்
கேட்டப்படியிருந்தது.

*****

பேராசையின் பெருவெளி

வீட்டிலுள்ளவர்கள்
அனைவரையும் அழுதோ அழைத்தோ
வரவேற்பறைக்கு
இழுந்து வந்துவிடுவாள் குட்டி
எல்லோரும் அவள் பார்வையில்
இருக்க வேண்டுமென ஆணையிடுவாள்

குட்டியின் தட்டு எவ்வளவு
நிறைந்திருந்தாலும்
அம்மாவின் தட்டை
எட்டிப் பார்த்தபடிதான்
சாப்பிடுகிறாள்

வீட்டைவிட்டு வெளியேற முடியாமல்
தவிக்கும் அப்பாவின் கண்களில்
அவர் செல்லவிருக்கும் இடத்தினைக்
கண்டுபிடித்துவிடுகிறாள் குட்டி

அம்மாவின் கைலியிலிருந்து வடியும்
நீர்த்துளிகளைத் தொடர்ந்து சென்று
அவரிருக்கும் அறையை அடைந்துவிடுகிறாள்

கண்களில்லாத பொம்மைகளுக்குப்
பார்வையாக இருக்கிறாள்
தம்பியின் தொட்டில் ஆடும்
வேகத்தைக் கொண்டு அக்காள்
உறங்குகிறாளெனக் காட்டிக் கொடுக்கிறாள்

குட்டியின் பேராசைகளுக்குள்
நாங்கள் சிறுகுழந்தைகளாகிக்
கொண்டிருந்தோம்.

********

bkbala82@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button