![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/04/Picsart_24-04-16_23-45-20-339-780x470.jpg)
« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொட முடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட? »
– ‘மானுடம் வெல்லும்’ நாவலின் தொடக்கம், ஆசிரியர் பிரபஞ்சன்
« அதொரு ஞாயிறு காலை. வருடம் 1920. அமெரிக்காவின் கிழக்கு பெனிசில்வேனியாவைச் சேர்ந்த மிடில் ஹோப் பகுதி. ஜோன் ரிச்சர்ட்ஸ் எழுந்திருக்க மனமின்றி மெத்தனமாகப் படுக்கையில் கிடந்தவள், நிதானமாக இமைகளை உயர்த்தி கண்களை முழுமையாகத் திறந்திருருந்தாள். பார்வை ஜன்னலில் சுள்ளென்று காய்ந்து கொண்டிருந்த ஜூன் மாத கதிரவனிடத்தில் இருந்தது. குப்பென்று ஒரு பரவசம் உடலுக்குள் பாய்ந்தது. கல்லூரியில் இறுதியாண்டு முழுக்க இனியும் தானொரு இளம்பெண்ணல்ல என்ற எண்ணத்துடனும் ஒரு முதிர்ந்த பெண்ணுக்குரிய வாழ்க்கையை எதிர்பார்த்தும் பதற்றமுடன் காத்திருந்தவள் அவள், திரும்ப தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு, வாழ்க்கையைத் தொடர வந்திருக்கிறாள். »
இது பெர்ல் – எஸ் – பக், என்ற படைப்பாளியின், ’The Time Is Noon’ (நண்பகல் நேரம்) என்கிற நாவலின் தொடக்கம் .
இரண்டு எழுத்தாளர்கள் இரு வேறு பண்புக்குச் சொந்தக்காரர்கள். இரு நிலம் சார்ந்த சமூகத்தின் பெண்களை அறிமுகபடுத்துகிறார்கள். இரு பெண்களும் நிலம், காலம், சமூகம், சமயம் ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். ஆனாலும் அடிப்படை மனித உணர்வில் வேறுபட்டவர்களல்ல. இருவருக்கும் தங்கள் வாழ்க்கை சார்ந்து சில உண்மைகளும் நம்பிக்கைகைகளும் இருக்கின்றன. இரு பெண்கள் ஊடாகவும் அவர்கள் சார்ந்த சமூகங்கள் ஊடாகவும் விதிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சொல்வதும் விமர்சனம் செய்வதும் நூலாசிரியர்களின் நோக்கம். இலக்கியங்களின் குறிக்கோள் அல்லது புதினத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்.
நண்பர்களே! உலகில் மிகவும் சிக்கலான நூல்கண்டு எது என்று என்னைக் கேட்டால் அது மனிதன் என்பேன். இப்பிரபஞ்சத்தில் மிகவும் மர்மமான பூமி அல்லது மர்மதேசம் என்று ஒன்றிருக்குமானால், அது மனிதர் வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். உடல் கண்ணாடியாக, தெளிவாகத் தன்னை விளங்க வைக்கும் பொருளாக இருக்குமெனில் எக்ஸ்ரேவோ பிற பரிசோதனைகளுக்கோ எந்த அவசியமும் இல்லை. மனிதரும் மனிதர் வாழ்க்கையும் அப்படிப்பட்டது. அதற்கும் எக்ஸ்ரே தேவைப்படுகிறது. பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இப்பரிசோதனை முடிவுகளே இலக்கியம். மனிதர் வாழ்க்கையை, மனிதரை எளிதாகப் புரிந்துகொள்ள முடியுமானால் இலக்கியத்திற்கான அவசியமே இல்லை. ’அதுதான் தெரியுமே!’ எனக் கடந்து போயிருப்போம்.
கலையும் இலக்கியமும் மனிதரை மகிழ்விக்கப் பிறந்தவை என்பதும் உண்மைதான். புலன்களைக் கடந்த இன்பத்திற்கு உரியவை. அவை எழுத்து, பேச்சு என எந்த வடிவத்திலும் இருக்கலாம். எழுத்தோ பேச்சோ இலக்கியம் ஆவது, காற்று தென்றலாவது போல நடபெறும் வினை. வீட்டில் அடைந்து கிடகும் மனதிற்கு வெளி உலகையும் புதிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் கலை. பல ஆயிரம் மைல்கள் பயணித்து பல நாடுகளுக்குச் சென்று, பல காலம் பழகியும் புரிந்துகொள்ள இயலாத மனிதர்களை, அவர்களின் பண்பை, குணாதிசயங்களை சில மணிநேர வாசிப்பில் புரிய வைப்பது. அனைத்திற்கும் மேலாக நம்மை நாமே உரசிப் பார்த்து தெளிவுற உதவும் கட்டளைக்கல்.
நமது கதைசொல்லல் நம்முடைய குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்கிறது, குழந்தையின் வயதும், அவ்வயது அவர்களுக்கு அறிமுகப்படுத்திய காட்சிகள், ஓசைகள், சுவைகளுக்கேற்ப புனைவைக் கட்டமைக்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கென புனைவைத் தீட்டும் கதைசொல்லிகளுக்கு இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள உலகை அவ்வப்போது கண்டு வியக்கும் குழந்தை; அவ்வுலகில் நடமாடும் மனிதர்களையும் விலங்குகளையும் வைத்துப் பின்னப்படும் கதையூடாக உயிர் வாழ்க்கையெனும் விந்தை உலகிற்குள் குழந்தை பிரவேசிக்கிறது. தன்னை மடியில் வைத்து முத்தமிட்டு மகிழும் தாத்தாவும் பாட்டியும் கூறிய சிறுவயதுக் கதைகள் அனைத்துமே, உயிர் வாழ்க்கைக்குத் தந்திரங்களும் உபாயங்களும் தேவை என்ற அடிப்படை உண்மைகளை உணர்த்துவதற்குச் சொல்லப்படுபவை. உலக உண்மைகளை, நன்மை தீமையென இருவகையாகக் கண்டு, நமக்கெது மகிழ்ச்சியைத் தருகிறதோ, ருசிக்கிறதோ அதுதான் நன்மையென அவ்வயதின் தேடலுக்கேற்ப கதைசொல்லிகளான அக்குழந்தையின் நலன்விரும்பிகள், கதைகேட்கும் குழந்தையின் எளிய அறிவுக்கொப்ப ஒரு கட்டுக்கதையைத் அப்போது தேர்வு செய்கின்றனர்.
இங்கே, ‘அறிவுக்கொப்ப’ என்ற சொல் முக்கியம். இந்தக் கதையாடலில் கதை கேட்கும் சிறுமியும், சிறுவனும் கதைசொல்லியான தாத்தா, பாட்டிக்கும் அல்லது பெற்றோர்களுக்கும் அந்நியர்களல்லர், நன்கு அறிமுகமானவர்கள். நித்தம் நித்தம் தங்களின் எச்சங்களான சிறுவன் அல்லது சிறுமியைக் கைப்பிடித்து வீட்டிலும் வெளியிலும் இவ்வுலகின் காட்சிகளை, ஓசைகளை அறிமுகம் செய்து; அவற்றைக் கேட்டும் கண்டும், அவ்வயதுகேற்ப புரிதலில் குழந்தைகள் திளைத்து இன்புற்று வியக்க, கதைசொல்லிகளான இம்மனிதர்களுக்கு அதைக் காண்பதில் மகிழ்ச்சி. இப்புரிதலில் அறிவு, புல்ன்களைக் காட்டிலும் கூடுதல் பங்கு வகிக்கிறது. அதாவது, குழந்தைகள் தஙகள் கண்களால் பார்க்காததும், காதுகளால் கேட்காததும்; தாத்தாவும் பாட்டியும் சொல்லும் கதைகளில் உள்ளதென நம்புகிறார்கள்; அந்த நம்பிக்கைக்கு வித்திடுவது அக்குழந்தைகளுடைய அறிவு. அவர்கள் வளர்ந்த பின் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். காணும் காட்சிகளும், கேட்கும் ஓசைகளும் கிடைக்கும் அனுபவங்களும் வேறு. இப்போது பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் இடத்தில் கதைசொல்லிகள் வருகிறார்கள். இக்கதைசொல்லிகள், இப்பிள்ளைகளுக்கு முன் பின் அறிந்திராத அந்நிய மனிதர்கள்; இந்த வளர்ந்த பிள்ளைகளின் தேவையையும், ருசிகளையும், விருப்பு வெறுப்புகளையும் இப்புதிய கதைசொல்லிகள் துல்லியமாக அறிந்தவர்களில்லை, ஆயினும் இவர்கள் தாங்கள் காணும் சமூகத்தை, அதன் நிறை குறைகளை உயர்வை இழிவை வழக்கம்போல் கேட்பவரின் அறிவுக்குகந்த மொழியில், ஆர்வத்துடன் கேட்கின்ற வகையில் சொல்கிறார்கள்.
கதையாடல் என்பது புராணிகம் ஐதீகம் காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் அகம் புறம் என்ற இரண்டையும் பேசுவது. ஆரம்ப காலங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் நலனைப் பொதுநெறியாகக் கொண்டு இணக்கமான, அமைதியான வாழ்வு என்பதை நோக்காக அமைத்து நற்குடி பிறப்பு, பருவ வயதை அடைந்ததும் மணமுடித்தல், மக்கட்பேறு, பொருளீட்டல், வறியவர்க்கு உதவுதல், இறுதியில் இறைவன் அடி சேர்தல் என்ற வரிசையில் அமைத்துகொண்ட கதையில் பொதுநலனுக்கு எதிரானவற்றைத் தீயவை எனச் சித்தரித்து, அவ்வழியில் செல்கிறவர்களை தீயமனிதர்களாக அடையாளமிட்டு அவர்களுடைய அவல முடிவைக் கூறி, புனைவுகளில் சமூக அறத்தை உயர்த்திப் பிடித்தார்கள். இணக்கமான அமைதியான வாழ்வு தசரதராமன் அரச குடும்பத்திற்கு மட்டுமல்ல, அய்யோத்திக் குடிமக்களுக்கும் தேவை என்பதை காலம் போதிக்க, கதைசொல்லலில் மாற்றம் நிகழ்ந்தது. பொதுபுத்திக்கான சமூகம் என்பதை உப களமாக, துணை நிலமாக வடித்துக்கொண்டு இன்று தனி மனிதனின் புறத்தைக் காட்டிலும் அகவாழ்க்கை, அதன் சிக்கல், அவன் நெஞ்சில் பிடிவாதமாக உட்கார்ந்திருக்கிற ஊமுள் சாக்குபோக்குகள் ஆகியவற்றை முன்நிறுத்தி, இன்று கதைசொல்லிகளின் திறனுக்கேற்ப கதை கேட்கிறவர்களின் ஞானத்திற்கேற்ப புனைவுகள் படைக்கப்படுகின்றன. மரபும், இயற்கையும், வாழ்க்கை முறையும் நமது உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன, சுவையைத் தீர்மானிக்கின்றன. காவிய கதையாடலுக்கான இடம் இன்றில்லை, சகமனிதனின் அகமும் புறமும் இன்று பாடும்பொருளாக, எழுதும் பொருளாக இருக்கிறது,
இந்த இலக்கியத்திற்குப் பல முகங்கள் இருக்கின்றன. எல்லா மனிதர்களும் அடிப்படைப் பண்பில் ஒன்றுபோலத் தோற்றம் தரினும் பூகோள இருத்தல், காலம், அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்கேற்ப, சமூகச் சூழலுக்கொப்ப சில பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். மனிதரையும் மனிதர் வாழ்க்கையைப் பேசுகிற இலக்கியத்திலும் இந்த ஒன்றும் பலவும் உண்டு. நிறத்தால், சமயத்தால், இனத்தால், பிறந்த மண்ணால், எந்தப் பெயரில் வாழ்ந்தாலும், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதருக்குப் பசியுண்டு. காதலுண்டு. மனிதர்கள் அனைவரிடமும் காணக்கூடிய அடிப்படைப் பண்பு இது. இதுவரை பிரச்சனைகளில்லை. ஆக மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை இருக்கிறது. தேவை தீர்வுக்கான பொருள்களிலும், அதனைத் தேடும் வழிமுறைகளிலும் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். இலக்கியத் தேடுதலிலும் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை இருப்பினும் அதைத் தேடுகின்ற வகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளால்தான் சொந்தமொழியில் வாசித்தது போக மொழிபெயர்ப்புகளையும் தேடி வாசிக்கிறோம். பிற மனிதர்களிடம் கை குலுக்குகிறோம், அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.
ஒருபடித்தான உருவங்கள், காட்சிகள் அலுத்துவிடும், குழப்பம் தரும். மனிதர்கள் அனைவரும் நகல் எடுத்தது போன்று நூறுகோடி பேரும் சின்னசாமி ஆகவோ பெரியசாமி ஆகவோ இருந்தால் என்ன நடக்கும், யோசித்துப் பாருங்கள். ஆக அகத்திணையில் ஒற்றுமையும் புறத்திணையில் வேற்றுமையும் இருக்கிறது. காலம், அரசியல், சமூகம், இயற்கை, தட்பவெப்பநிலைக்கேற்ப உயிர் வாழ்க்கை அமைவது போல மனிதனையும் மனிதர் வாழ்க்கையையும் பேசும் கலை இலக்கியமும் காலம், அரசியல், சமூகம் சூழலுக்கொப்பத் தன்னை எழுதிக்கொள்கிறது.
இலக்கியம் படைத்தல் என்பது ஓர் அறிவு சார் தொழில். பாரதி, ’சுடர் மிகு அறிவு’ என்கிறான். இப்படித்தான் எழுதவேண்டுமென மொழி நதிக்கு இலக்கணம் கரையிடுகிறது, அம்மொழி நதியை சுதந்திர வெள்ளமாகப் பாய்ந்தோடச் செய்வது இலக்கியம். புனைவிலக்கியம் அதிலொன்று. படைப்பாளி கோவலனுக்கு வாய்த்த மாதவி அவள், ஊடலுமுண்டு, கூடலுமுண்டு. சிறுகதையாக முடிந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள அனுமதியும் தரலாம். பெருங்கதையாக நீண்டு வேர்வையும் சிந்தலாம்.
புனைவு என்பது இட்டுக் கட்டுவது ஆயினும், இட்டுக் கட்டியதை உண்மையென நம்பும்படிச் செய்வது புனைவிலக்கியத்திற்கான அறம். எழுத்தின் தொனி, இலை மறை காயாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள், கதைசொல்லி, கதைமாந்தர்கள், கற்பனை என்ற பெயரில் முன்வைக்கப்படும் உண்மைகள் அல்லது பொய்கள் அனைத்தும் நாம் அறிந்த அல்லது அறியாத மனிதர்களை நாமாகவும், அவர்களின் வாழ்க்கையை நம்முடையதாகவும் நம்ப வைக்கும் தந்திரத்தில் புனைவெழுத்தின் வெற்றி அடங்கியுள்ளது. கண்ணகியையும் கோவலனையும், ரோமியோவையும், ஜூலியட்டையும் இன்று வரை நினைவுகூர முடிகிறதெனில், நம்பகத்தன்மையை வாசிப்புதோறும் ஏற்படுத்துவதால்தான். இந்த நம்பகத்தன்மையே புனைவிலக்கியத்தின் பிற பண்புகளை கூடுதலாக சிலாகிக்க உதவுகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவையெல்லாம் அந்தந்த நில மக்களின் தனித்தன்மையான பண்பாட்டைக் கூடுதலாகப் பேசின. இன்றைய புனைவிலக்கியங்களில் ஒரு பன்முகப் பண்பாடு கலந்திருக்கிறதென்பது வெளிப்படை.
கீழை நாடுகள் தொடக்கத்தில் அவற்றுக்கென தனி பண்புகளைக் கொண்டே இருந்திருக்கின்றன. சீன இலக்கியம் ஆறாம் நூற்றாண்டிலும் ஜப்பானியர் இலக்கியம் 11 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாக இலக்கிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய ஐம்பெரும் காப்பியங்களைப் போல இவை சமயம், புத்த பிட்சுகள், துறவிகள், அறம் என்று பேசின. உரைநடை இலக்கியத்தை அவை நமக்கு முன்னதாகக் கண்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. புனைவிலக்கிய அணுகுமுறைகளில் புதிய புதிய கலை நுட்பங்களைப் புகுத்தி வியப்பில் நம்மை ஆழ்ந்துவது மேற்குலகம் என்கிறபோதும் முதல் உரைநடைப் புதினத்தை ஜப்பானியர்கள் படைத்தார்கள் என்கிற தகவல் கீழைதேயத்தவர்களுக்குப் பெருமை தரும் செய்தி. நூலின் பெயர், ’கெஞ்சியின் கதை’. நூலாசிரியர் ஒரு பெண், பெயர் முராசாகி ஷிக்கிபு. இன்றைய நவீன படைப்பில் காணக்கூடிய பல்வேறு அம்சங்களை ஆசிரியர் கையாண்டிருப்பதும், மேட்டுகுடியினர் பின்புலத்தைக் கொண்ட ஆசிரியரே பிரபுக்களின் இழிவான நடவடிக்கைகளை விமர்சிப்பதும் நாவலின் சிறப்பு. காரணம் படைக்கப்பட்ட காலம் பதினோறாம் நூற்றாண்டு
ஓநாயொன்று ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஊருக்குள் நுழைந்து மனிதரையும் கடித்தது போல, இன்று உலகமயமாதல் என்ற ஓநாய், புறவுலகைக் கடித்த காலம் போய் மனித இனம், தமது நிலம், தட்பவெப்பம் சார்ந்து வகுத்துக்கொண்ட அறத்தை, பண்பாட்டை, ஒழுக்கத்தைக் கடிக்கின்ற காலம். மனித குலம் அவரவர் மண் சார்ந்து, பின்பற்றிய பண்பாடுகளில் கூட ஒருவகையான மரபணு மாற்றத்திற்குட்பட்ட அக்கறை சீமை வாழ்க்கைமுறை. இம்மாற்றம் நம்முடைய எழுத்துக்களிலும் இன்றில்லாவிடினும் நாளை எதிரொலிக்கவே செய்யும்.
படைப்பிலக்கியத்தில் அதிகம் ஆராதிக்கபடுகிற அல்லது புதியவகை படைப்பு முறையை அதிகம் அறிமுகப்படுத்தியவர்களென நம்பப்படுகிறவர்கள் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகள். எனவே பிரெஞ்சு இலக்கிய உலகின் தற்போதையை படைப்புகள் எது பற்றிப் பேசுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, ஒருவகையில் மேற்குலக இலக்கியவெளியைப் புரிந்துகொள்ளும் முயற்சி. பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகள் தொன்மையில் தமிழுக்குப் பிந்தியவை. சங்கத் தமிழ் கோலோச்சிய காலத்தில், மேற்குலக மக்கள் தங்களுக்கான மொழியைச் செம்மைபடுத்தப் போராடிக் கொண்டிருந்தார்கள். எனினும் நாம் யாப்பிலக்கணத்தைக் கொண்டு கவிதைகள், நாடகங்கள், காப்பியங்களை எழுதிக் கொண்டிருக்க, மேற்குலகவாசிகள் செக்குமாடுகள் வாழ்க்கையில் அலுத்து அறிவியல் தேடலுடன் தங்கள் தினசரிகளைப் புதுப்பித்துக்கொண்டது போல இலக்கியத்திலும் தேடலில் இறங்கினார்கள். பானை,சட்டியிலிருந்து குக்கருக்கும், கட்டுமரத்திலிருந்து கப்பலுக்கும் இலக்கியத்திலும் அவர்களால் தாவ முடிந்தது. மானுடவியல், பிளேயாது(Pléade), பரோக், செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம் எனப் பல மைல்கற்களைக், கடந்து இன்று வேறு தேடலில் மேற்குலகு இறங்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழிலும் நிகழ்ந்திருக்கலாம், அது முளையிலேயே கிள்ளப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புண்டு. நம்முடைய அறிவுப்புலம் குரு சிஷ்யர்கள் உறவு சார்ந்தது இல்லையா? பாரதிக்கு முன்பாக, ஒரு பாரதி ‘சொல் புதிது பொருள் புதிது’ என நினைத்து, எழுதியதை தனது குருவிடம் காட்டி, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற நினைத்திருக்கலாம். குரு என்ன சொல்லியிருப்பார்( ஒரு கற்பனைதான்) ”போடா அதிகப்பிரசங்கி, இப்படியெல்லாம் எழுதப்படாது” என எச்சரித்து அவனது ஓலை நறுக்கை அக்கினிக்குத் தானம் செய்திருக்கலாம்.
ஔவை சொல்லாததை, காக்கைப் பாடினியார் எழுதத் தயங்கியதை இந்த நூற்றாண்டு தமிழ்ப் பெண் படைப்பாளிகள் துணிச்சலாகப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். கலை இலக்கியத்தில் மயக்கத்திற்கு இடமுண்டென்கிறபோதும், அது தெளிதலுடன் பிறருக்கு இலை போடுகிறது. படைப்புகள் நாம் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்த விருந்தாளிகளைக் குறிவைக்கும் சிறுவிருந்தல்ல, ஆயிரக்கணக்கான நாம் அதிகம் அறிந்திராத மனிதர்களுக்குப் படைக்கின்ற பெருவிருந்து; அறுசுவைக்கும் அங்கே இடமுண்டு. விருந்துண்டதும் கதைசொல்லியான சமையற் கலைஞரை தேடிச் சென்று பாராட்டும் நல்விருந்தாகவும் அது அமையுமாயின் கூடுதல் சிறப்பு.
(’பேராசிரியர் பஞ்சாங்கம் பெற்றோர் நினைவு அறக்கட்டளை’ சார்பில் 16 பிப்ரவரி 2024 அன்று புதுச்சேரி காஞ்சி மாமுனி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம் இது.)
********