கட்டுரைகள்
Trending

‘மாயாநதி’ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – முரளி ராமகிருஷ்ணன்

படம் – மாயாநதி

இயக்குநர் – ஆஷிக் அபு

காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு

என கவிஞர் ஆலங்குடி சோமு ஒரு பாடலில் எழுதி இருப்பார். காதல் வாய்க்கப்பெறுவது மட்டுமல்ல,இருவருக்கும் காதல் அரும்பி அந்தப் பயணத்தில் வரும் சிறுசிறு ஊடல் நிரந்தர பிரிவாகிவிடாமல் அதைக் கட்டிக்காப்பது என்பது கூட தேன்கூட்டைக் கட்டுவதற்கு ஒப்பானது.

எத்தனை விதமான படங்கள் வெளிவந்தாலும் காதல் படங்கள் ஆரம்பம் முதலே உலகெங்கும் கொண்டாடப்பட்டே வந்திருக்கின்றது.மக்களின் வாழ்வியலை அழகாகத் திரையில் கொண்டு வருவதில் மலையாளத் திரையுலகம் என்றும் முண்ணணியில் இருந்து வருகின்றது. ஆஷிக் அபு அவர்களின் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த “மாயாநதி” தற்காலத்திய காதலை கொஞ்சம் கூட பிசிரில்லாமல் சொன்ன படம் என்றால் மிகையாகாது என்று இயக்குனர் ப்ரியதர்ஷனே பாராட்டி இருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் நாயகிக்கும், எடுபிடி வேலைகள் செய்து கொண்டு இருக்கும் நாயகனுக்கும் காதல் உருவாகி ஒரு கட்டத்தில் சிறு பிரச்சனையால் நாயகனை விட்டுப் பிரிகிறார் நாயகி. அவ்வேளையில் எதிர்பாரா சம்பவத்தில் ஒரு காவலர் கொலையில் நாயகன் காரணமாகி தலைமறைவாகிறான். நாயகியை தேடிச் சென்று பிரிந்த உறவைத் தொடர முயற்சிக்கும் நாயகன் வெற்றி பெற்றானா, அவனைத் தேடி வரும் காவலர்கள் பிடியில் நாயகன் சிக்கினானா என்பது கதையின் இரண்டாம் பாதி.

கதையைப் பற்றி இங்கே அதிகமாகக் குறிப்பிடாததற்கு காரணம் இத்திரப்படத்தைக் கண்டு உங்களுக்கு ஏற்படப்போகும் உணர்வைக் குறைத்து விடக்கூடாது என்பதற்காகவே. பசி வந்தால் சாப்பிடுவது போன்றுதான் நாம் கொள்ளும் உடலுறவும் கூடஇருவருக்கும் உறவு நிகழ்ந்துவிட்டது என்பதற்காகவே திருமணம் அவசியமல்ல என நாயகி சொல்லும் காட்சியின் வழியே புதுமைப்பெண்,பெண்ணியம் என்றெல்லாம் வெளிக்காட்டாமல் தனக்குப் பிடித்த விஷயத்தை தான் விரும்பிய விதத்தில் ஒரு பெண் வாழ்வது எப்பொழுதும் தப்பில்லை என்று அழுத்தமாக இப்படம் பதிவு செய்கிறது.

தமிழ்த் திரைப்பட கலைஞர்களும் தமிழ் வசனங்களும் பெரும்பகுதி வருகின்றது. ‘முல்லைப்பெரியார்ல தண்ணி தொறந்து விடச் சொல்லுங்கண்ணே நாமளும் ரெண்டு வேளை குளிப்போம்ல’ போன்ற வசனமெல்லாம் மலையாளத் திரையுலகில் மட்டுமே சாத்தியம். பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல என வாதிடும் ஹரீஷ் உத்தமனிடம், நம் வாழ்க்கையில் என்ன அனுபவம் ஏற்படுகின்றதொ அதுவே நம் கருத்தாக உருமாறும் என இளவரசு சொல்லும் காட்சி, ONE OF THE BEST DIALOGUES AND SCENE’ என்று சொல்லலாம்.

ஒரு காதல் படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்று உணர்ந்து செயலாற்றி இருக்கும் ரெக்ஸ் விஜயன் மற்றும் நம் கண் முன்னே காட்சி நடப்பது போன்ற ‘மாயையை’ உருவாக்கிய ஒளிப்பதிவாளர் ஜயேஷ் மோகன் ஆகியோர் படத்திற்கு பக்கபலம். 

ஒரு ப்ரஞ்ச் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்படாலும் எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் & திலீஷ் நாயர் இதை தம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்திருப்பது படத்தின் பெரும் வெற்றிக்கு மற்றுமொரு காரணம். 

தவறவிடக்கூடாத காதல் படங்களில் ‘மாயாநதி’ மிகவும் முக்கியமானது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button