இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

ராணி கணேஷ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஆச்சியின் பேச்சு

அன்றாட வேலைகளுக்கு நடுவே
அலைபேசியில் அழைத்தபோது
ஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்…
முதல் ஐந்து நிமிடங்கள்,
‘ஏன் இத்தனை நாளாய் பேசவில்லை,
உடம்புக்கு முடியலையா?,
அலுவல் அதிகமா?
பிள்ளைகள் சுகம்தானே?’
என கேள்விகளை அடுக்கிச் சென்றாள்.
அதன்பின்னான நிமிடங்களில் தொடர்ச்சியாய்
பேசிக்கொண்டே இருந்தாள்…
ஆச்சியின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
பாதி அறிந்த விடயங்கள்தாம்,
இரண்டு நாட்கள்
முன்பே கூறியதை மறந்திருக்கக்கூடும்…
என் பதில்கள் எதையும் காதில் வாங்க
அவகாசம் இல்லாதவளைப் போல
ஆச்சி பேசிக்கொண்டே இருந்தாள்.
ஒரு மணிநேரத்திற்கு பின்
‘என்ன லைனில் இருக்கியா? வைச்சிட்டியா? ‘
என்று என் இருப்பை சரிபார்த்தவள்
‘என்ன போனோ ஒன்னுமே கேட்க மாட்டிக்கு’
என அப்படியே விட்டு சென்றாள்…
நான் இப்போது
அவளுடனான அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
ஆம்
ஆச்சி பேசிக்கொண்டே தான் இருக்கிறாள்.

குழந்தையாகும் ஆச்சி

சிறுபிள்ளைக்கு ஸ்லேட்டில் குச்சி பிடித்து
எழுத சொல்லிக்கொடுப்பது போல
ஸ்மார்ட் போன் உபயோகிக்க பழக்கியிருந்தேன்!
இருந்தாலும் ஒவ்வொருமுறையும்
ஐந்தாவது அழைப்பில் தான்
சரியாக உயிர்ப்பிக்கிறாய் அலைபேசியை.
வீடியோ காலில் உன் முகம் தவிர
சுற்றம் முழுவதும் உலா வருகிறது
சமயத்தில் உன் காதுகளும்!
நித்தம் உன்னிடம் பேசிய பழக்கத்திற்கு இங்கு
எல்லோரிடம் அதிசத்தமாய் பேசுகிறேன்.
ஆயிரமாயிரம் கதைகளை
கடல்கடந்து சொல்லிக்கொண்டே இருந்தாய்.
திடீரென்று ஒருநாளில்
மனிதர்களை எல்லாம் விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து போகும் மயில்களை பற்றி கதை சொல்கிறாய்
நான் காட்சிகளை காணாமலேயே
மயிலின் அழகில் மயங்குகிறேன்.
வண்ணங்களால் வார்த்தைகளை கோர்க்க
இப்படித்தான் கற்றுக்கொண்டேன் உன்னிடமிருந்து.

ஆச்சி எனும் ஆசான்

சித்திரைக்கு அவல் நனைக்கவும்
தீவாளிக்கு பலகாரம் செய்யவும்
பொங்கலுக்கு பொருமா குழம்பு வைக்கவும்
ஆச்சியிடம் எல்லா வருடமும் கேட்கிறேன்
முழு செய்முறையும் விளக்கிவிட்டே
ஆச்சியும் கேட்கிறாள்,
“என்ன நம்ம வீட்ல செய்வோம்லா
மறந்துட்டியாங்கும்” என்று.
மறக்கமுடியாமல் தானே ஒவ்வொரு வருடமும்
மீட்டெடுக்கிறேன் ஒவ்வொரு பண்டிகையிலும்
நம் வீட்டு நினைவுகளை…
உளுந்தங்களி கிண்ட ஓராயிரம் விளக்கம்
இணையத்தில் கிடக்கே என்ற மாமாவிடம்,
ஆச்சி பக்குவம் வராது என்ற ஒற்றை பதிலை
தவறாமல் சொல்லுகிறேன்.
இன்றும்கூட பொடி நல்லாயிருக்கு எனும் நண்பர்களிடம்,
“ஆச்சி செய்த எள்ளு மிளகாய்ப்பொடி போல வரவில்லை
அடுத்தமுறை ஆச்சி பொடியைக் கொண்டு வருகிறேன்”
என்றே சொல்லிச் சிரிக்கிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button